9 விமலையார் இலம்பகம்
தோள் மேல் தோள் வைத்துத் தோழனாகப் பழகியவனிடம் இப்பொழுது தம்மை அறியாமல் ஆண்டான் அடிமை என்ற முதலாளித்துவத் தொழிலாளி உறவு அமைந்தது. தெய்வமும் அடியாரும் என்ற நிலை என்று சொன்னால் ஓரளவு அதை உயர்த்தியதாக அமையும். ‘தலைவரே’ என்று புதிய அரசியல் மொழியில் சொன்னால் அதைவிடப் பொருத்தமாக அமையும். ‘அண்ணாச்சி’ என்று இதுவரை அழைத்து வந்தவனை என்னாச்சு என்று கேட்க முடியாமல் கண்ணியத்தோடு பழக வேண்டி நேர்ந்தது. அது அவனுக்குத் தலைவலியாக இருந்தது.
அவனுக்கு வாள் பாய்ச்சமுடியாத கவசம் மாட்டினர். ஏனெனில் அது தற்காப்புக்குத் தேவை என்பதால். கருங்கல் என்று நினைத்து வந்தது வைரக் கல்லாக
மாறிவிட்டது. அதைக் காக்கும் பொறுப்பு அவன் நண்பர்களுக்கு மிகுதியாகிவிட்டது.
அனைவரும் விசயையின் தவப்பள்ளியை அடைந்தனர். “செவ்வி அறிக” என்று செப்பிச் செல்வன் பது முகனை முன்னால் அனுப்பி வைத்தனர்; துறவிகள் குடில் என்பதால் அங்கே காவல் காக்கக் காவலர்யாரும் நிறுத்தி வைக்கப்படவில்லை. எனினும் அமைதியே அந்தச் சூழ் நிலையைக் காத்து வந்தது.
அன்புக்கடல் இரண்டும் சங்கமம் ஆகும் சந்திப்பை அவர்கள் கண்டனர். பேழையில் விட்டது பெரும் பிழை அல்ல என்று குந்தி தேவி அறிந்தாள்; தன் முன் ஏழ்மையைக் காணவில்லை; தோழமை மிக்க இளைஞருடன், சீவகன் நிற்பதை விசயமாதேவி கண்டு மகிழ்ந்தாள்.
கட்டியங்காரன் பாண்டியன் நெடுஞ்செழியன் அல்ல; கண்ணகியாக நின்று வழக்காட, அதனால் அவள் ஆறி அடங்க வேண்டியதாக ஆயிற்று, நீறு பூத்த நெருப்பாக இருந்தாள். பெற்ற மகனைப் பெரியோன் ஆக்கினாள். அவனை வைத்துக் கொடியோனை ஒழிக்க உருவாக்கிக் கொண்டாள். எனவே அவனைப் பார்த்தபோது கொள்ளி வைக்க ஒரு மகன் கிடைத்தான் என்று பெருமகிழ்வு கொண்டாள்; தனக்கு அல்ல; தன் பகைவன் கட்டியங்காரனுக்கு.
காதல் திருமகளாகக் காட்சி தந்து சச்சந்தன் ஆட்சி யின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தவள் வீரத்திருமகளாக மாறினாள். கண்ணகி போல கொதித்து எழாவிட்டாலும் சாணக்கியனைப் போல அறிவோடு பேசினாள்; அறிவின் சிகரத்தை அவள் எட்டிப் பிடித்தாள்.
கன்னனைக் கண்ட குந்தியின் தனங்களில் தாய்மை முதிர்ந்து நனைத்தது. தாய்மை அவனைத் தாலாட்டியது. அன்பு மழையில் சீவகன் நனைந்து விட்டான். தாய்ப் பசுவை முட்டிப் பால் அருந்தும் பசுங்கன்று ஆனான்; குழைந்தான்; மனம் விழைந்தான் “அம்மா” என்று இனிய கீதம் அவன் நாதத்தில் எழுந்தது.
முதலில், சோகத்திலேயே அவள் சுயசரிதம் தொடங்கினாள்.
“வாள் ஏந்திய மன்னனைக் களத்தில் இழந்தேன்; காட்டிலே உன்னை உய்த்தேன்; நான் பிறப்பால் என் செய்கையால் கயமை அமையவில்லை. சூழ்நிலை என்னைக் கயத்தி என்று பேசும்படி ஆக்கிவிட்டது.
பெற்றவள் பாசம் இன்மையால் உன்னைத் துறக்க வில்லை; கற்றவர் கையில் நீ சென்று உற்ற கலைகளை அறிந்து வீரத்திருமகனாக வளரவேண்டும் என்று பிரிந்தேன்; நற்றவம் நாடி நற்பேறு அடைய இத் தவப் பள்ளியை யான் நாடவில்லை; காலம் வரும்வரை காத்திருப்போம் என்றுதான் இந்தச் சூழ்நிலையை நாடினேன். எனக்கு இது ஆறுதல் இல்லமாக அமைந்தது.
என் வாழ்க்கை இரண்டும் கெட்ட நிலையில் ஆகி விட்டது. பகையையும் முடிக்கவில்லை; என் வாழ்நாள் மிகையையும் முடிக்கவில்லை. செய்வது யாது? வகை தெரியாது தவிக்கின்றேன். இடை மகன் வெட்டிப் போட்ட பச்சைமரம் என் வாழ்க்கை; அது சாகவும் செய்யாது; தழைக்கவும் செய்யாது” என்று கூறினாள்.
ஊர்வசியாக இராசமாபுரத்து அந்தப்புரத்தில் அடி யெடுத்தவள் தவசியாக இங்கே இருந்து அறிவுரை கூறி னாள். அரசு பின்னணியும், தவத்தின் அறிவு மாட்சியும் இயைந்து அவளை ஒரு ராஜரிஷியாக ஆக்கியது கண்டு வியந்தான்.
அவள் அறிவுரைகள் ஒவ்வொன்றும் முத்துகளாக ஒளி விட்டன.
அவன் தன் மாமன் மகளை மணக்கவேண்டும் என்று கூறினாள். உறவுக்காக அல்ல; அவள் அழகுக்காகவும் அல்ல; வலிமைக்காக தன் தமையன் கோவிந்தன் ஒரு சிற்றரசன்; அவனிடம் தக்க படைத் துணை இல்லா விட்டாலும் அது தொழில் தொடங்குவதற்கு உதவும் மூலதனம் என்பதை அறிந்து இவ்வாறு கூறினாள்.
அடுத்தது ஒற்றரைக் கொண்டு உற்றநிலை அறிய வேண்டும் என்று கூறினாள். முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்; வஞ்சனையைச் சூழ்ச்சியால்தான் வெல்ல வேண்டும் என்று உரைத்தாள்.
அருள் நெறி கண்ட அவள் பொருள் நெறி அறிந்து பேசினாள்; பொருள் இல்லார்க்கு இவ் உலகம் இல்லை என்பதை வற்புறுத்திக் கூறினாள். “பொருள்தான் பொருளல்லவரையும் பொருளாகச் செய்யும். பொன் இருந்தால் பொருபடை திரட்டலாம்; படை இருந்தால் பகையை வெல்லலாம்; பகை வென்றால் எல்லா நன்மையும் அடையலாம்; இடமும் காலமும் ஆராய்ந்து தக்க துணையோடு சென்று கட்டியங்காரனை வீழ்த்துக” என்று ஆணையிட்டாள்.
பிறந்த மண்ணைக் காணச் சிறந்த தன் தோழர்களோடு விரைந்தான். தன்னை வளர்த்த தாயையும் தந்தையும் கண்டு அவர்கள் துயர் தீர்த்தற்கு இராசமாபுரம் ஏகினான்.
தனக்கு அடைக்கலம் தந்து ஆறுதல் இல்லமாக விளங்கிய தவப்பள்ளியை விட்டு விசயை தன் பிறந்த வீடு நோக்கிச் சென்றாள்.
அவன் தன் அன்னையின் அரிய செயலை நினைத்துப் பார்த்தான்; கணவனை இழந்த கைம்பெண்கள் நடந்து வந்த பாதையை அவள் பின்பற்றவில்லை. அறுத்து விட்டு அமங்கலமாக வாழ்வில் பொலிவிழந்து மேலும்
நலிவு அடைவதற்குத் தாய் வீடு போய்ச் சேரவில்லை. தான் எடுத்த கொள்கை செயல்படும்வரை தவப் பள்ளியில் இருந்து சிந்தித்துப் பொறுமையாகச் செயல்பட்ட தாயின் பேருள்ளத்தை வியந்தான்.
அறுத்து விட்டதாலேயே அனைத்தையும் இழந்து விட்டதாக நினைக்கப் பழக்கப்படுத்தப்பட்ட இந்த நாட்டில் அது ஒரு இழப்பே தவிர அதுவே பிழைப்பு அன்று என்று அறிந்து அவள் நடந்து கொண்டாள். இத் தனி நிலை பாராட்டத்தக்கது என்று மதிப்பிட்டாள். கணவன் மனைவி இவர்கள் வாழ்க்கைத் துணைவர்களே அன்றி அவர்களே வாழ்க்கை அல்ல; இந்த வகையில் விசயை உலகுக்குப் புது வழி காட்டியவளாய்த் திகழ்ந்தாள்.
தேநீர் குடிக்க வெளியே செல்லவில்லை; பொழிலில் அவர்களை இருக்கவைத்து அவன் ஊரைச் சுற்றிவரச் சென்றான்.
புத்திசேனன் சீவகன் அரசமகன் ஆதலின் அவனைத் தனியே அனுப்புவது தக்கது அன்று என்று நினைத்தான்; பதுமுகன் அவன் மெய்க்காவலன் ஆகச் செயல்பட்டான்.
“நீ தனித்துப் போவது சரி இல்லை” என்றான் பதுமுகன்.
“எனக்கு அந்த உரிமை இருக்கிறது” என்றான்.
“நீ அரசமகன் என்று அறிந்த பிறகு அந்த உரிமையை இழக்க வேண்டியதுதான்”
“அப்படி என்றால் இந்த அரசப்பொறுப்பே வேண்டாம்” என்றான்.
“மழைவளம் கரப்பின் வான்பேர் அச்சம்; பிழைஉயிர் எய்தின் பெரும் பேர் அச்சம்; அதனால் இது விரும்பத்தக்க பதவி அல்ல” என்றான்.
“மற்றவர்களுக்காவே வாழ வேண்டியிருக்கிறது; தனி மனிதன் சுதந்திரம் பறிபோகிறது” என்றான்.
“பதவி; அதன் தண்டனை இதுதான்” என்றான் பது முகன்.
“நான் இப்பொழுது அரசன் இல்லை; உம்முடைய தோழன். அந்தக் காலத்தில் நான் ஆடமுடியாது; இப்பொழுது சிறிது விளையாடி விட்டு வருகிறேன்” என்றான்.
ஏதோ விளையாட்டு அரங்கத்திற்குச் செல்வதுபோல இவன் காதல் சந்திப்புகள் நிகழ்ந்து கொண்டே இருந்தன. சில நாட்களாக அவன் மனநிலை சரியாக இல்லை. அன்னையைப் பார்த்த பிறகு மிக நல்லவனாக இறுகி விட்டான்.
சிரிக்கும் சந்தர்ப்பங்களும் குறைந்துவிட்டன; கல கலப்பு அவனை விட்டு அகன்று விட்டது.
குடிகாரனுக்கு வேட்கை வெறி வந்து விட்டால் எங்கே சரக்குக்கிடைக்கிறது என்பதை அவன் தேடாமல் இருப்பது இல்லை. இளமை முறுக்கு; கிறுக்குகள் அவனுக்குத் தேவைப்பட்டன.
சோலைகளுக்குச் சென்றால் மயில்கள் வந்து அங்குத் தோகை விரித்தாடும். அவற்றின் அழகைக் கண்டு ரசிக்கச் சோலைநோக்கிச் சென்றான். அதற்குள் சாலையில் ஒரு விஷயத்தைச் சந்திக்க வேண்டி இருந்தது. அவன் மனத் திரையில் தக்கநாட்டின் குரவ மரமும் அதைச் சுற்றிய வண்டுகளும் நினைவுக்கு வந்தன.
“அவையும் நம்மைப் போலத்தான்” என்று அவள் உரைத்த சொற்கள் நாத ஒலியாக ஒலித்துக் கொண்டு
“இந்த வண்டுகள் பூக்களைச் சுற்றுகின்றன. பூக்கள் ஏன் வண்டினை நாடுவது இல்லை” என்று சிந்திக்கத் தொடங்கினான்.
‘கற்பு’ என்ற வரையறையை இந்தப் பூக்கள் பின் பற்றுவதால் அவை தாமே தேடிச் செல்வது இல்லை; காதலன் வரவை எதிர் நோக்கி நிற்கின்றன. மனிதச் சட்டம் அங்கு விதிக்கப்படாததால் அவை திரெளபதிகள் ஆகச் செயல்படுகின்றன; வரையாது அள்ளி எடுத்துக் கொண்டு செல்ல அனுமதிக்கின்றன.
இந்தமானுடன் தான் இந்தக் கற்பு என்பதைப் பற்றிக் கழறுகின்றான்; அது அவன் உயர்ந்த மனோ நிலை என்று மதித்தான்.
தான் இப்படி இந்த வண்டுகளைப் போலப் புதிய புதிய மலர்களை நாடுவது தக்கதுதானா என்று சிந்திக்கத் தொடங்கினான். சட்டமும் சம்பிரதாயங்களும் தடுக்காத வரை அது தவறு இல்லை என்று முடிவுக்கு வந்தான்.
பந்து ஒன்று அவன் முன் வந்து விழுந்தது. யாரோ சிறு பிள்ளைகள் விளையாடுகிறார்கள் என்று அதை எடுத்தான் எடுத்துக் கொடுக்கலாம் என்று; பூப்பந்தாக இருந்ததால் அது பூவையர்க்கே உரியது என்று அறிந்தான்.
தோட்டத்தில் இருந்த பூங்கொடி ஒன்று அசைந்து வருவதைப் பார்த்தான். வந்த பூவிற்குச் சிறகுகள் முளைத்து விட்டன என்பதைக் கண்டான்; முதன் முறையாகப் பூ உலகில் இது ஒரு புரட்சி என்று நினைத்தான். வண்டை நோக்கிப் பூ வருவது புதுமையாக இருந்தது.
“வருக” என்றான்; அவனால் அவ்வாறு கூறாமல் இருக்க முடியவில்லை.
“தருக” என்று அவள் கேட்கவில்லை. கேட்டிருந்தால் கொடுத்திருப்பான்; அவள் மகிழ்ந்திருப்பாள்.
வேலியைத் தாண்டி வெள்ளாடு உள்ளே சென்று விட்டது; அதைப் பிடிக்க அவன் உடன் தாவவில்லை.
வாசல் வழியே போவதுதான் வழி என்று கொண்டான்.
அவள் அணிந்திருந்த நகைகள் அவள் வணிகன் மகளாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய உதவின; இவளும் ஒரு கேமசரிதான். முறைப்படி அணுகி னால் அவள் தந்தை உரைப்படி அவளை மணந்து அவளைத் தனியறையில் சந்திக்கலாம் என்று சிந்தித்தான்.
சோர்வோடு தினமும் வியர்வையைத் துடைத்துக் கொண்டு வெறுங்கையோடு வரும் கடை முதலாளி, விமலைக்குத் தந்தை நிப்புதியின் கணவர்; இன்று கையில் இனிப்பும், பையில் பூவும், கூடையில் பழமும், அவற்றோடு ஒரு பையனையும் பிடித்துக்கொண்டு வருவது புதுமையாக இருந்தது.
உள்ளே சென்று தன் மனைவியுடன் பேசினான்; மகள் ஒற்றுக்கேட்டாள்.
“விடாதீர்கள்” என்றாள் வீட்டுக்கு உரியவள்.
“யாரோ ஒரு திருடனைத்தான் அப்பா பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார். அதனால்தான் விடாதீர்” என்று சொல்வதாகக் கருதினாள்.
அவன் தன் உள்ளம் கவர்ந்த கள்வன் என்பது அவள் நேரில் பார்த்தபோது அறிந்தாள். வடிவுக்கரசியாக அவள் முன் நிறுத்தப்பட்டாள். அந்தப் புனைவுக்கு அவர்கள் இது வரை பூட்டிக் காத்த நகைகள்தான் வகை செய்தன.
‘மணப்பெண்’ என்றால் அவளுக்குச் சில சம்பிர தாயங்கள் பின்பற்றப்படுகின்றன. போருக்குச் செல்கிறவன் என்றால் காக்கிச் சட்டை அணிவது போல் பணக்கார
வீட்டுப் பெண்கள் பூண்களைத் தலையிலிருந்து கால் வரை மாட்டி வைக்க அவள் சுமக்கவேண்டியது ஆயிற்று.
பந்தாடிக் கொண்டிருந்த நிலையில் எல்லாம் இறுக்கக் கட்டப்பட்டுக் கோயில் தூணின் சிற்பம்போல் காட்சி தந்தாள். இப்பொழுது அம்மன் சந்நிதி தரிசனம் அவனுக்குக் கிடைத்தது. நெற்றியில் குங்குமம் அதற்குக் காரணம் ஆகியது.
வழக்கமான அறிமுகங்கள் நடந்தன; அது முன் நிகழ்ச்சியில் சிறிது மாறுபட்டு இருந்தது, “இவள் ஒரே மகள்; கொஞ்சம் விளையாட்டுப் புத்தி; பெரியவர்களைத் தாக்கிப் பேசுவாள், மேலாக்குப் போடுவது மூக்குத்தி இந்தமாதிரி இவளுக்குப் பிடிக்காது. வரைச் சித்திரம் போல் காட்சி அளிப்பாள்; கோடுகள் தெரிய வேண்டும் என்பதில் இவளுக்கு ஒரு ஆசை” இவை எல்லாம் அப்பா சொன்னவை அல்ல; அம்மாவின் திருவாயால் மலர்ந்தவை.
“சில விஷயங்களில் முனைப்பு” என்றாள். அது அவனுக்கு மட்டும் விளங்கியது.
அவள் விருப்பம்போல் ஆடைகள் குறைத்துக் கொள்ள அவன் அனுமதி வழங்கினான்.
அவன் அவளைப் பாராட்டினான். “நீயும் தவறு இல்லை; நின்னைப் பந்தாட விட்ட எவரும் தவறிலர் நீ வருவது முன் அறிவிப்புச் செய்யாத அரசனே தவறு உடையவன்” என்று அவள் முனைப்பைச் சுட்டிக் காட்டினான்.
“தெரிந்திருந்தால் என்ன செய்வீர்,” என்றாள்.
“அந்தப் பக்கம் தலைவைத்துப் படுத்திருக்க மாட்டேன்.”
“இப்பொழுது எந்தப் பக்கமும் தலைவைத்துப் படுக்கலாம்” என்றாள்.
“பந்துமட்டும் தெருவில் வந்து விழாமல் இருந்தால் நாம் சந்தித்திருக்க முடியாது” என்று அவன் பூப்பந்துக்கு நன்றி தெரிவித்தான்.
அங்கே அவள் விளையாடுவதற்குப் பந்து கிடைக்க வில்லை; ஊடலில் அவனை வைத்து விளையாடினாள்.