="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

11 மண்மகள் இலம்பகம்

10. மண்மகள் இலம்பகம்

கந்துக்கடன் வீட்டில் அழுகைக்குரல் கேட்டது; அக்கம் பக்கம் வந்து துக்கம் விசாரிக்கக் கூடி விட்டனர்.

யாராவது அவர்களுக்காகவாவது செத்துத் தீர வேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டது.

“கந்துக்கடன்தான் ஈமக்கடனுக்கு ஆளாகிவிட்டான்” என்று வந்து விசாரித்தனர்.

அவன் கொழுக்கட்டைபோல் இருப்பதைப் பார்த்து அவன் மனைவி சுநந்தைதான் கண்மூடி இருக்கவேண்டும் என்று முடிவு செய்தனர். விசாரிப்பதற்கும் எளிமையாகி விட்டது.

“நேற்றுவரை நன்றாக இருந்தார்களே! பட்டுப் புடவை உடுத்திக் கோயிலுக்கு வந்தார்களே; பொட்டும் பூவும் வைத்த அவர்களைப் பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருப்பார்களே” என்று அவர்கள் தோற்றத்தை ஏற்றமுடன் பேசினார்கள்.

“போகும்போது நம்மிடம் சொல்லி விட்டா போகிறார்கள்” என்று முன்னுரை கூறினான் கந்துக்கடன்.

“ஏனுங்க அப்படிச் சொல்றீங்க?”

“நேற்றுக் கோயிலுக்குப் போனதாகச் சொன்னார்கள் என்னிடம் சொல்லிவிட்டா போனார்கள் என்று கேட்டேன். அவ்வளவு தான்.”

“சொல்லாமல் போயிட்டாங்களா?”

“போகலை, வீட்டிலே இருக்கிறார்கள்” என்றான்.

யார் போய்விட்டார்கள் என்று கேட்பது அநாகரிகமாக இருந்தது. அவர்கள் வீட்டைத் துருவித்துருவிப் பார்த்தனர்.

“என் தந்தைக்கு இன்று திதி; அவர் சென்றது இந்தத் தேதி, அது அவர் விதி, அவரை நினைத்துக் கொண்டு அழுதோம்” என்றனர்.

பழைய செய்தி இதில் எந்த சுவாரசியமும் காணவில்லை.

“இவ்வளவு தானா!”

“அதுக்குத்தான் அழுதோம்”

“எங்களால் அழமால் இருக்க முடியவில்லை.”

கந்துக்கடனின் கடமையுணர்வையும் தந்தையின் பால் அவர் வைத்திருந்த மரியாதையையும் பற்றிப் பேசி வியந்து சென்றனர்.

இந்த அழுகைக்குக் காரணம் என்ன? சீவகனின் தலைத் தோற்றம்; அவன் வீட்டுக்கு வந்ததும் சுநந்தை வாய்விட்டு அழுதுவிட்டாள். துக்கம் தாளவில்லை. ஒருவர் அழுதால் அதற்குக் காரணமே தேவை இல்லை; மற்றவர்கள் கண்ணிர் விடுவது வழக்கம். இந்த வியாதியால் எழுந்த அவலக்குரல் அது, இது வெளியே தெரிந்தால் சீவகன் வந்து விட்டான் என்பது கட்டியங்காரனுக்குத் தெரிந்து விடும்; பிடி ஆணை அவனுக்காகக் காத்துக் கிடக்கிறது; அரச விருந்தினனாகச் சகல மரியாதைகளோடு வந்து அழைத்துச் சென்று விடுவர்.

அதனால் தான் அழுகைக்குக் காரணத்தை வெளியே சொல்லமுடியாமல் ஒரு பொய்யை அவிழ்த்து விட வேண்டி நேர்ந்தது. கந்துக்கடன் ஒரு வியாபாரி, அதனால் இது அவனுக்குச் சொல்லித் தரத் தேவை இல்லை; தப்புவதற்கு இது உபாயமாக உதவியது.

குணமாலை சிறிது நேரம் பேசாமல் ஒதுங்கி இருந்தாள். நீண்ட நாள் பிரிந்திருந்த் குழந்தை பிகு செய்து கொண்டு தாயை அடைவதைப் போல அவள் ஒதுங்கி நின்றாள். அவனைப் பார்ப்பதிலேயே அவள் நேரம் பாதி கழிந்தது. அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது. எனினும் அழுவதற்குச் சுநந்தைக்கு முன்னுரிமை கொடுத்து விட்டதால் அதனை அடக்கிக் கொண்டாள்.

சுநந்தை கொட்டில் நாடி வரும் கன்றுக்குட்டியை அணைக்கும் பசுவானாள். முன்னைவிட அதிகம் வளர்ந்து பசுமையாக இருப்பதாகப்பட்டது. எவ்வளவோ கேள்விகள் கேட்க விரும்பினாள். அவளால் ஒன்றும் கேட்க முடியவில்லை. விசயையைப் பார்த்த பிறகு அவனை
அறியாமலேயே பாசம் சிறிது குறைந்தவனாகக் காணப் பட்டான். வளர்ந்து விட்டவன்; அதனால் ஏற்பட்ட மாறுதல் என்று அவள் நினைத்துக் கொண்டாள்.

மூத்த மகன் என்பதால் அவனுக்குத் தனி மரியாதை, அந்த மரியாதை கந்துக் கடனால் சீவகனுக்கு அளிக்கப் பட்டது. தத்தை ஆரவாம் செய்யாமல் தன் மகிழ்ச்சியை அவள் அணிந்திருந்த புத்தாடையிலும் அணிகளிலும் காட்டினாள். மணப்பெண் போலக் காட்சி அளித்தாள். வீட்டைப் பெருக்கிக் கோலமிட்டுச் சீர் செய்து அழகு காட்டினாள். நாமகள் என்று சொல்லும்படி அவள் நா இனிய சொற்களை மிழற்றிக் கொண்டு இருந்தன. வந்தவர்களை வருக என்று கூறி அளவோடு சிரித்து அகமகிழ வைத்தாள்.

குணமாலை சந்திக்கத் தத்தை வாய்ப்பு அளித்தாள்.

“என்னால் தான் உங்களுக்கு இந்த விளைவு” என்று வளைத்துப் பேசினாள் அவல அழகி.

“உன்னால் தான் இவ்வளவும்; நான் அடைந்த சிறப்புகளுக்கே நீ தான் காரணம். கட்டியங்காரன் என்னைச் சிறைப் பிடிக்க முயலாவிட்டால் நான் என் தாயைக் கண்டிருக்க முடியாது. புதுப் புது மலர்களைப் பறித்து அழகு பார்த்து இருக்க முடியாது. படைவன்மை மிக்கவனாக வளர்ந்திருக்க முடியாது” என்று கூறினான். “அதனால் உன்னை மிகவும் மதிக்கிறேன். துன்பத்தைத் துடைப்பதற்கு எழுகின்ற போராட்டம் தான் வாழ்க்கையின் உயிர்த் துடிப்பு” என்றான்.

அவள் நாள் ஒற்றித் தேய்ந்த விரலைப் பார்த்தான்; சித்திரம் எழுதும் கோல் போல் அது தேய்ந்து கிடந்தது.

“உங்களை நினைத்து ஒவியம் எழுதிக் கொண்டிருந்தேன்” என்றாள்.

அதில் சிறப்பான சித்திரமாக யானையைச் சீவகன் அடக்கி அவளைக் காத்தது இருந்தது. அதை வீட்டு முகப்பில் பெரிதாக்கி மாட்டி வைத்திருந்தாள். இதுதான் நான் எழுதும் உங்கள் கதைக்கு முகப்பு அட்டை என்றாள்.

கற்பனை மிக்க அவ்வோவியம் ஒப்பனை மிக்கதாக இருந்தது; நூலுக்கே முகப்பு ஓவியம்தான் அழகு தருவது என்று பாராட்டினான்.

அவளிடம் விடை பெற்று அவளை அட்டில் களத்துக்கு அனுப்பிவிட்டுத் தத்தையின் கட்டில் அறைக்கு வந்தான்.

“துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து வலிமை கூட்டினாய். அந்த இன்ப இசையில்தான் திக்கு விசயம் செய்து பக்கத் துணைகளைச் சேர்த்தேன்” என்றான்.

“இனிமேல்தான் உம் கடமை இருக்கிறது. கட்டியங் காரனை ஒழித்து வாகை சூட வேண்டும்” என்றாள்.

அவன் சுற்றுப் பயணத்தில் சுக அனுபவங்களைப் பேசாமல் ஏனையவற்றை மட்டும் எடுத்துக் கூறினான். மற்றும் நெருக்கமானவரிடம் ஒன்று இரண்டு உரையாடி அவர்களை மகிழ்வித்தான். இவனை எடுத்து வளர்த்த செவிலியர் அவர்கள் குடும்ப நலனைக் கேட்டு அறிந்தான்.

அவன் தோழர்களோடு சின்ன வயதில் சுற்றி விளையாடிய ஆலமரத்தைச் சென்று பார்த்து விட்டு வந்தான்; படித்த பள்ளியிடம் பாசம் காட்டுவதுபோல அது இருந்தது.

அதன்பின் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு தன் தோழருடன் பயணத்தைத் தொடர்ந்தான். மாமன் கோவிந்தனைக் காண்பதற்கு விதேய நாட்டுக்குச் சென்றான்.

அங்குச் செல்வதற்கு மற்றும் ஒரு காரணம் இருந்தது. தன் மாமன் கோவிந்தன் தன் மகனுக்கு இளவரசு பட்டம் சூட்டி அவனிடம் ஆட்சி ஒப்புவிக்கப் போவதாகவும் செய்தி வந்தது. மாமன் உறவு தனித் தன்மை வாய்ந்தது தான். அந்த உறவை வளர்க்க ஆசைக்கு ஒரு மகளும் பெற்றிருந்தான். இந்த ஆசை என்பது யாரைக் குறிக்கும்? விளக்கம் இதுவரை யாரும் கூறவில்லை; தான் ஆசைப் படுவதற்கு ஒரு மகள் மாமன் பெற்றிருந்தான் என்று அவன் கணக்குப் போட்டான்.

விதேய நாட்டில் முதல் விழாவாகக் கோவிந்தன் தன் மகனுக்குப் பட்டம் சூட்டினான். அவ்விழாவில் பட்டத்து மன்னர்கள் பலர் வந்து கலந்து கொண்டனர். மட்டற்ற மகிழ்ச்சியில் நாடு திளைத்துக் கொண்டிருந்தது. அவ்விழாவிற்கு நேரில் வர இயலாதவர்கள் வாழ்த்துச் செய்திகள் அனுப்பி இருந்தார்கள். அவற்றுள் முதற் செய்தியாகக் கட்டியங்காரன் அனுப்பிய ஒலை வாசிக்கப்பட்டது. அதை கோவிந்தன் மிகப் பெருமையாகக் கொண்டான்; சீவகன் ‘அதைப் படிக்கக்கூடாது’ என்று மறுப்புத் தெரிவித்தான்.

“இது என்னுடைய விழா; உன் மறுப்பை ஏற்க முடியாது; பொறுப்பாக நடந்து கொள்” என்றான்.

அவன் தன்னை அவமதித்ததாக நினைத்தான்; அந்த விழாவில் அதிக ஈடுபாடு காட்டவில்லை.

அந்தக் கடிதம் படிக்கப்பட்டது; இரைச்சலில் முழுச் செய்தி அறிய முடியவில்லை. சில வரிகள் மட்டும் தெளிவாகக் கேட்டனர்.

“சச்சந்தன் சாவுக்கு நான் தான் காரணம் என்று மற்றவர்கள் நினைக்கிறார்கள்; அது உண்மையல்ல அரச யானை மதம் கொண்டு கட்டு மீறியது; அதைக் கட்டி அடக்க ஆள் இல்லை; அவசரப்பட்டுச் சச்சந்தன் அதன் போக்கினை மாற்ற அதனோடு முரண் கொண்டான்; அது
தன் தலைவன் ஆயிற்றே; தன் வாழ்வுக்கு அவன்தான் காரணம் என்பதையும் மறந்து நன்றி கொன்றது. அதை நான் எப்படிச் சொல்வேன்? மரணம் சம்பவித்தது. ஆட்சிக்கு ஆள் தேடினேன்; அரசி காற்றில் விடும் பட்டம் ஆயினாள்; மயிலுர்தியில் எங்கோ சென்று விட்டதாகக் கூறினார்கள்.”

“அவர்களுக்கு ஒரு மகன் அல்லது மகள் இருக்க வாய்ப்பு உண்டு. அவர்களிடம் ஆட்சியை ஒப்புவிக்கக் காத்திருக்கிறேன். அவர்கள் அடிச்சுவடே தெரியவில்லை.”

“விசயமா தேவி அங்கு வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அவர்களுக்கு என் வணக்கத்தை இயம்புக; பாவம் அவர் பெற்ற குழந்தை என்ன ஆயிற்றோ! தனியாகத்தான் வந்திருக்கிறார்கள் என்று ஒற்றர் வந்து உரைத்தனர். அவர்களுக்கு என் அனுதாபச் செய்தியைச் செப்புக.”

“உம் மகனின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை. இனி நாம் நல்லிணக்கத்தோடு அரசியல் உறவு கொள்வோம்; திறைப்பொருள் தந்து என் இறை யாண்மை ஏற்றுக் கொள்” என்று எழுதியிருந்தது.

“அவ்வாறே செய்வோம்” என்று அவை அறியக் கூறினான்; ‘கப்பம் கட்டுவதே செப்பம் உடையது’ என்று வந்த தூதுவரிடம் சொல்லி அனுப்பினான்.

சீவகன் அக்கூற்றை ஏற்பதாக இல்லை; அவ்வளவும் பொய் என்று தனியே பேசி இருவரும் வாதிட்டுக் கொண்டனர்.

“நீ வயதில் சிறியவன், கேட்பார் பேச்சுக் கேட்டு நீ தவறாக எதையும் நினைக்கிறாய்; ஏன் அப்படி நடந்திருக்கக் கூடாது? கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்; பழமையைப் பற்றி நாம் ஏன் ஆராயவேண்டும்; அவனிடம் உறவு கொள்வதுதான் நமக்கு ஆதாயம்; அதுதான் ஒப்புக்கொள்ளும் இந்தச்
சமுதாயம். பகைகொண்டு உன் தந்தை அழிந்ததைப் போல் எங்களையும் அழியச் சொல்கிறாயா? நாம் அவனை எதிர்க்க முடியுமா! அவன் பெருநிலம் ஆளும் வேந்தன்; யான் சிற்றரசர்களில் ஒருவன்; எதிரியின் வலிமை நம் வலிமை இவற்றைச் சீர்தூக்கித்தான் செயல் பட வேண்டும். இன்று இந்த நிலையில் அவனோடு நல்லுறவு கொள்வது தான் நயக்கத் தக்கது” என்று கூறினான்.

சீவகன் ஆத்திரப்படவில்லை; கருத்து வேறு பாட்டுக்கு மதிப்புத் தந்தான். பொறுத்திருந்து பார்ப்பது தக்கது என்று அடங்கினான்; அன்னை விசயமாதேவியின் அறிவுரைக்குக் காத்திருந்தான்.

அரச அவை நீங்கி அரண்மனை வந்து சேர்ந்தான். அவன் தாயை விட அவன் வருகைக்கு, ‘அவன் எதிர்காலம்’ காத்திருந்தது. தன் அண்ணனின் முடிசூட்டு விழா நடந்ததும், தனக்கு மாலை சூட்டும் விழா நடக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் அவன் மாமன் மகள் இலக்கணை.

அவளைப் பார்த்ததும் அவனுக்குப் புது ஆசை கிளம்பியது. அது அவனுக்கு உரிய தனி இயல்பு; அழகி என்றால் அவன் ஆராதனை செய்து பழகியவன்; விழாவிற்கு அவளும் வந்திருந்தாள்; அவள் கோலம் மணப் பெண்ணை நினைவூட்டியது.

“என்னப்பா பார்க்கிறாய்!” என்றாள் விசயை.

“மாமன் மகள்; அதனால்தான்” என்றான்.

“என்ன பார்க்கிறாய்?” என்று மறுபடியும் கேட்டாள்.

“நெடுமரமாக வளர்ந்திருக்கிறாளே அதனால்தான் பார்க்கிறேன்” என்றான்.

“என்னைப் பனைமரம் என்கிறார். அத்தான்” என்று குழைந்தாள் கோவிந்தன் மகள் இலக்கணை.

“படிக்கத் தெரியுமா?” என்று கேட்டான்.

“ஏன் கேட்கிறாய்?”

“நெடுமரமாக நிற்கிறாளே அதனால்தான்” என்றான்.

“நீட்டு ஒலை வாசிக்கா விட்டாலும் வீட்டு வேலை ஒழுங்காகச் செய்வாள்” என்றாள்.

“அவள் உனக்கு ஒர் இலக்கியமாக இல்லா விட்டாலும் வாழவேண்டிய வழிகள் அறிவிக்கும் இலக்கணமாக இருப்பாள்” என்றாள்.

இலக்கணை என்பதன் பொருள் விளங்கியது.

“இலக்கணத்தையே இலக்கியமாக்க முடியும் சுவை கூடினால்” என்று கணக்குப் போட்டான்; அவளை அடைவதைப் புது இலக்காகக் கொண்டான்.

அதற்குள் மாமன் கோவிந்தன் அங்கு வந்தான்.

“மருமகனுக்கு என்மேல் கோபம்” என்று சொல்லிக் கொண்டே வந்தான்.

“நீர் இவ்வளவு கோழையாக நடந்து கொள்வீர் என்று எதிர்பார்க்கவில்லை”

“ஏழைகளிடம் கோழமை அமைவது இயற்கை; அதை மாற்ற முடியாது” என்றான் கோவிந்தன்.

“நீ உன் வீரத்தைக் காட்டு; இங்கே இலக்கணையை வேட்டு இங்குக் குழைந்து கொண்டிருந்தால் பயன் இல்லை” என்றான் மாமன்.

அவனுக்கு மாமன் மீதும் வெறுப்புத் தோன்றியது; இதுவரை யாரும் தன்னை எதிர்த்துக் கூறியது இல்லை.

தருமன் போர்க்களத்தில் அருச்சுனனைக் கடிந்து கொண்டான், “நீ கைகட்டிக் கொண்டிருந்தால் வெற்றி தானாக உன் காலடியில் விழும் என்று எதிர்பார்க்கிறாயா?
உனக்குக் காண்டீபம் எதற்கு” என்று அவசரப்பட்டுக் கேட்டு விட்டான்.

தன்னை இகழ்ந்தாலும் அவன் கவலைப்பட்டிருக்க மாட்டான்; தன் வில்லை இகழ்ந்தது அவனால் பொறுக்க இயலவில்லை.

உடனே வில்லின் அம்பு குறி வைக்கத் தருமன் மீது பாய்ந்தான்.

கண்ணன் அவனைத் தடுத்து நிறுத்தினான். இது பாரதக் கதை.

அதே வேகம் சீவகனுக்கு வந்துவிட்டது.

“இப்பொழுது சொல் அந்தக் கட்டியங்காரன் தலையை அறுத்து உன் காலில் வைக்கிறேன்” என்று முழக்கம் செய்தான்.

“அந்த வீரத்தைத்தான் உன்னிடம் எதிர்பார்க்கிறேன்; அவசரப்படுவதில் பயனில்லை.”

“என் மகளை உனக்கு மணம் முடிக்க விரும்பவில்லை;” என்றான்.

ஆறியவன் சீறும் நிலையில் நின்றான்.

அவள் நினைவுகள் பழமைக்குச் சென்றன.

சின்ன வயதில் யாராவது நீ யாரைக் கட்டிக் கொள்ளப் போகிறாய் என்று அவளைக் கேட்டால் ‘மாமன் மகனை’ என்று மனப்பாடம் வைத்துச் சொல்லிக் கொண்டிருந்தாள். அன்று பொம்மை வைத்து விளையாடிய நாட்களில் அந்தப் பொய்மை வடிவங்களில் ஒன்றில் தன்னை வைத்துக் கண்டாள். மற்றொன்று சீவகனை வரித்தாள். அவள் தாவணிக் கனவுகளில் அவனைத் தவிர வேறு யாரும் இடம் பெற்றதில்லை.

ஆற்றங்கரையில் மணலில் வீடுகட்டி விளையாடிய நாட்களில் இரண்டு வடிவங்களை மணலில் செய்து வைத்தாள். ஆற்றின் அலை ஒரு வடிவைக் கலைத்து விட்டது. அங்கேயே உட்கார்ந்து கொண்டு அழுது ஒலமிட்டாள்.

“ஏன் அழுகிறாய்?”

“மாமன் அவனைத் தண்ணிர் அடித்துக் கொண்டு போய் விட்டது” என்று கண்ணிர் விட்டிருக்கிறாள்.

தன் தோழிப்பெண்களுடன் கூடல் இழைத்தல் என்ற விளையாட்டை விளையாடிய போது எல்லாம் “அவனை அடைய முடியுமா” என்று கூடல் இழைத்து விளையாடி இருந்தாள்.

தான் கேட்ட கதைகளில் எல்லாம் அது வீரப் போர் என்றால் அதில் அவனையே வைத்துக் காணுவாள்; அவன் நிச்சயம் வெற்றி பெறுவான் என்று நம்பிக்கை கொள்வாள்; அவன் வெற்றி பெற வேண்டும் என்று கதை முடியும் வரை காது கொடுத்துக் கேட்பாள்.

தத்தையைச் சீவகன் யாழில் வென்ற செய்தி கேட்ட போது அதே போலத் தன்னை வெல்லவும் தன் மாமன் மகன் வருவான் என்று கனவு கண்டவள்; அப்பொழுது அவன்தான் சீவகன் என்பது அவளுக்குத் தெரியாது.

மாமி வந்ததும் சிவகாமி சரிதத்தை அவள் வாயில் கேட்டிருக்கிறாள். அந்தக் கதையில் வரும் சிதம்பரம் அவன் தான் என்று எண்ணிக் கற்பனையில் ஆழ்வாள். சீவகனைப் பற்றி விசயமாதேவி பேசும் போது எல்லாம் அவள் பதுமையாகி இருக்கிறாள். அவனை அடைய வேண்டும் என்பதில் அவள் கொண்ட ஆசையைக் கொள்ளை ஆசை என்றுதான் கூறவேண்டி இருந்தது.

இலக்கணைக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. ஆற்றங் கரையில் நீர் அலை தான் கட்டி வைத்த கோட்டையைக் கலைத்து இழுத்துச் சென்றது மறுபடியும் நினைவுக்கு வந்தது, அந்த நீர் அலை இன்று தந்தையின் சொல் அலை.

விசயை குறுக்கிடவில்லை; அது பெற்றவன் உரிமை என்று மதிப்புத் தந்தாள்.

அவள் தாய் கொதித்தாள்; பானையில் இருந்த தட்டை மாமன் அகற்றினான்; கொதி அடங்கியது.

“என் தங்கையை உறவு கருதி உன் தந்தைக்குக் கொடுத்தோம்; அதே தவறு மறுபடியும் செய்ய விரும்பவில்லை. என் மகள் வீரன் ஒருவனுக்கே உரியவள்; திரிபன்றி ஒன்று இலக்காக வைப்பேன்; நீ விசயனாக விளங்க வேண்டும்”

சீவகனுக்கு அது பெருமையாக இருந்தது.

“தத்தையை எப்படி மணந்தாய்?” என்றான் மாமன்.

“வீணையில் வென்று”

“குணமாலையை?”

“யானையை அடக்கி”

“இவற்றைத்தான் நாட்டிலே இப்பொழுது கதையாகப் பேசுகிறார்கள்; நீ பந்தாடியவளையும், தோட்டத்தில் சந்தித்தவளையும், காதல் கொண்டவளையும் மணந்தது சரித்திரம் அல்ல; அவை உன் தனிப்பட்ட சாதனை, பெருமை சேர்ப்பவை அல்ல” என்றான்.

அவளைக் குதிரைமீது வைத்து இழுத்துச் சென்று சமியுக்தையாக ஆக்க நினைத்தான். இது அவன் முயற்சியைக் கைவிடும்படி செய்தது. மாபெரும் கவிஞனைப் பார்த்து நீ ஒரு வீரகாவியம் பாடு என்றால் அவன் எப்படி மகிழ்வு கொள்வானோ அத்தகைய மகிழ்ச்சி கொண்டான்.

“இந்தச் சுயம்வரத்தை உன் பிறந்த மண்ணில் ஏற்பாடு செய்வேன்; கட்டியங்காரனுக்கு ஒலை எழுதி அவனைக் கொண்டே தக்க ஏற்பாடுகள் செய்வேன்; அவன் தலைமையில்தான் இந்த விழா நடக்கும்” என்றான்.

சிந்தித்துப் பார்த்தான்; அந்தச் சிறிய நரியை அங்கே சந்திக்கமுடியும் என்ற ஆவேசம் அவனை ஆட்கொண்டது. அவளை மாலையிட்டு மணப்பதைவிட அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி இரணியனைக் கொல்லும் நரசிம்மமாக மாறலாம் என்று உள்ளுக்குள் எண்ணிக் கொண்டான்.

கோவிந்தன் சுயம்வரத்துக்கு மன்னர்களுக்கு ஒலை அனுப்பி வைத்தான்;
கட்டியங்காரனுக்கும் அனுப்பி வைத்தான்.

கட்டியங்காரனுக்குத் தனக்கு ஒரு நிறைவு விழா நடத்துவது போன்ற உணர்வு ஏற்பட்டது. கோவிந்தன் தன்னை மதிக்கிறான் என்றால் அதனால் நாட்டின் உள்பகை, எதிர்ப்புகள் மறையும் என்பதால் அவன் மகிழ்ச்சி மிகுந்தது. வசிட்டர் வாயால் மகரிஷி பட்டம் பெறக் காத்திருக்கும் விசுவாமித்திரன் ஆனான்.

மன்னர் திரண்டனர்; சுழலும் பன்றியின் உருவினை அவர்கள் வில்லின் அம்பு வீழ்த்தத் தவறிவிட்டது. தோல்வியை அவர்கள் மடியில் கட்டிக் கொண்டனர். ஏற்கனவே தத்தையின் போட்டிக்கு வந்து திருப்பதிக்குச் சென்று மொட்டை அடித்துக் கொண்டவர்கள் மறுபடியும் ஒரு தோல்வி, கட்டியங்காரன் மீது அவர்கள் வெறுப்புக் காட்டினர். அவன் வீர உரைகளுக்குச் செவி சாய்க்க அவர்கள் காத்திருக்கவில்லை.

யானையின் மீது சீவகன் வந்தான். அது அரச யானை அசுவனிவேகமாக இருந்தது. அது இவனிடம் விசுவாசம் காட்டியதைக் கட்டியங்காரனால் நம்பவே
முடியவில்லை; அதனை அடக்கி அதன்மீது இவன் வந்தது அதிர்ச்சியாக இருந்தது; என்றாலும் சினத்தைக் காட்ட வில்லை.

கந்துக்கடன் மகன் சீவகன் அங்கு எப்படி வந்தான் என்று வியந்தான். கூட இருந்தே மதனன் குழிபறித்து விட்டான் என்பதை உணர்ந்தான். தத்தையை மணந்தான்; குணமாலையை வனைந்தான்; இன்னும் எத்தனை பேரை இவன் மணப்பது? அநங்கமாலை இன்னும் படியவில்லை; கீழ்ப்படிய மறுத்துவிட்டாள்; அது வேறு இவனுக்குத் தாக்கம்.

செத்தவன் எப்படி உயிர் பிழைத்தான்? இவன் இத்தனை நாள் எங்கு இருந்தான்? எப்படி இங்கு வந்தான்? எல்லாம் புதிராக இருந்தன.

மதனன் பக்கத்தில இல்லை; பிறகு விசாரிக்கலாம் என்று ஒதுக்கிவைத்தான்.

“வணிகன் மகன் வனிதையை மணக்கலாமா” என்று ஒரு வினா எழுப்பினர்.

“சாதிகள் இல்லை; நீதிகள்தான் நிலவும்” என்றான் கோவிந்தன்.

திரிபன்றி வீழ்த்தப்பட்டது; கட்டியங்காரனின் ஆட்கள் சீவகன் மீது பாய்ந்தனர்.

அதற்குள் அங்கு அமர்ந்திருந்த ‘பொதுமக்கள்’ அவர்கள் மீது பாய்ந்தனர். அவர்கள் கையில் தக்க படைக் கருவிகள் வைத்திருந்தனர். “யார் இவர்கள்?” ஒன்றுமே புரியவில்லை கட்டியங்காரனுக்கு.

மக்கள் தனக்கு எதிரியாக மாறுவார்கள் என்று எதிர் பார்க்கவில்லை; புரட்சி ஓங்கியது.

விசயமாதேவி அரங்கில் தோன்றினாள்; மக்களுக்கு அது வியப்பைத் தந்தது.

சீவகன்தான் தன் மகன் என்பதை அறிவித்தாள்.

கட்டியங்காரன் தன் முன் சச்சந்தன் இருப்பதை அறிந்தான். தன் சரித்திரத்தை முடிக்க அவன் கையில் எழுத்தாணி இருப்பதைக் கண்டான்.

செய்ந்நன்றி மறந்த தனக்கு உய்தி இல்லை என்பதை அறிந்தான்.

கொடுங்கோலன் வீழ்ந்தான் என்ற ஆரவாரம் எங்கும் எழுந்தது. அவன் வஞ்சகம் நெஞ்சில் மறைந்திருந்தது; அதைத் தேடிச் சீவகனில் கை வேல் பாய்ந்து அவனைத் துளைத்தது.

மண்ணுக்கு வேந்தனாகச் சீவகன் முடிசூட்டப் பெற்றான். வாசகர்களுக்கு ஏன் கோவிந்தன் அவ்வாறு நடந்து கொண்டான் என்பது எப்படி விளங்க வில்லையோ அதே நிலைதான் சீவகன் அடைந்தான்.

அந்தக் கூட்டத்தில் கலுழவேகனின் ஆட்களும், உலோக பாலனின் ஆட்களும் எப்படி ஏன் திரண்டு இருந்தனர் என்பது விளங்காமலேயே இருந்தது. எப்படி அவர்கள் திடீர் என்று படை வீரர்களாக மாறினர் என்பதும் விளங்காமல் இருந்தது.

கட்டியங்காரன் எழுதிய கடிதத்தைக் கோவிந்தன் நம்பி விட்டானா! அல்லது அவன் பேசியது வெறும் நாடக உரையா என்பதும் விளங்காமல் இருந்தது.

“ஏன் தன்னிடம் அவன் மனத்தில் பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லி இருக்கக்கூடாது?” திட்டமிட்டுக் கட்டியங்காரனை வலையில் சிக்க வைத்துக் கொலை செய்தது போலத் தோன்றியது. இருந்தாலும் மாமன் செயல்கள் அத்தனையும் நன்மையில் முடிந்தன என்பதால் அவன் மீது கொண்ட சினம் தணிந்தவனாய்க் காணப்பட்டான்.

விசயமாதேவியை அணுகிப் பேசிய போதே விடுகதைகளுக்கு விடைகள் கிடைத்தன.

“முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்று முன் கூறி இருந்தேன்; இதைத்தான் நான் செய்தேன்; என் தமையனுக்கும் நான்தான் இந்தத் திட்டத்தை வகுத்துத் தந்தேன்; கட்டியங்காரன் அவன் அனுப்பிய ஒலை அது சூழ்ச்சி என்பது எங்களுக்குத் தெரியும்; பச்சைப் பிள்ளைகள் அல்ல நம்பி விடுவதற்கு.”

“வஞ்சனையைச் சூழ்ச்சியால்தான் வெல்ல வேண்டும் என்று இந்த நாடகத்தை நடித்தோம்; கட்டியங் காரனும் மேடைக்குத் தக்க படையோடுதான் வந்திருந்தான்; என்னைச் சிறைப்படுத்தி இருப்பான்; திடீர் என்று நீ வந்து களத்தில் இறங்குவாய் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.”

“நாங்கள் சுயம்வரத்தை விதேய நாட்டில் உன் மாமன் ஊரில் நடத்தவில்லை; தெரிந்துதான் செய்தோம்; நாங்கள் அனுப்பிய ஒலைகள் திரிபன்றி எறிவதற்கு அல்ல; அந்த நன்றி கொன்ற மனிதப்பன்றியை அழிக்கத்தான்; காலம், இடம், தக்கதுணை மூன்றும் இருந்தால்தான் வெல்ல முடியும் என்று சொல்லி இருந்தேன். காலத்தையும் இடத்தையும் நாங்கள் வகுத்துக் கொண்டோம். நாம் மகள் கொண்ட அரசர் மூவருக்கும் படைகள் அனுப்பி வைக்க ஒலைகள் அனுப்பி வைத்தோம். அவர்கள் உருக்கரந்து மண்டபத்தில் அவனைச்சுற்றி இடம்பிடித்து இருந்தனர்.”

“உன்னிடம் ஏன் இவற்றை அறிவிக்கவில்லை என்று கேட்கலாம்; உன்னை நம்பாமல் அல்ல; உன் தனி ஒருவன் ஆற்றலுக்கும் வீரத்திற்கும் சுமை தரக்கூடாது என்பதால்தான். தனி ஒருவனாக நின்று பகையை முடிக்க முடியும் என்று நீ வீரம் பேசுவாய்; பாரதத்தில் கன்னன் மாவீரன் தான்; எனினும் அவன் தோல்வி அடைந்தது
ஏன்? தக்க துணையை அமைத்துக் கொள்ளாததனால், வீடு மரை இகழந்தான்; சான்றோரை அவமதித்தான்; தனி ஒருவனாக நின்றான்; உடன் இருந்த சல்லியனையும் இகழ்ந்தான்”.

“வாழ்க்கையில் நாம் தனி நின்று எதையும் சாதித்து விட முடியும் என்று நினைத்தால் தோல்விதான் நேரும். சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று கூறுவதை மறக்க முடியாது. நாட்டு மக்களையும் தூண்டி விட்டால் தான் உட்பகை எழாமல் தடுக்க முடியும்; அதற்காகத்தான் நான் மேடை ஏறினேன். வில்லம்பு மட்டும் வெற்றி தராது; சொல்லம்புக்கும் அத்தகைய ஆற்றல் உண்டு; நாம் நினைப்பதைத் தெளிவாக ஒழுங்குப்படுத்திப் பிறர் ஏற்கும் படிச் சொன்னால் இந்த ஞாலமே நம் பணியைக் கேட்கும்; நாநலம் என்பது நயக்கத்தக்கது. அதனை நான் மேற்கொண்டேன்”.

“பெண் களத்தில் இறங்காவிட்டாலும் அவள் கூரிய அறிவு செயலாற்றும்; கட்டியங்காரன் எனக்குப் பகைவன்; அவனை ஒழிப்பதில் எனக்கும் பங்கு உண்டு; அதைச் செய்து முடித்தேன்” என்றாள்.

‘கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து; மற்றதன் குத்து ஒக்க சீர்த்த இடத்து’ என்ற குறள்தான் அவன் நினைவுக்கு வந்தது.

தன் அன்னையின் உரை கேட்டு அவன் வியந்து போனான்; இது தன் வெற்றி என்ற ஆணவம் அவனை விட்டு மறைந்தது; போர் என்பதே கூட்டு முயற்சி; அதில் அனைவர்க்கும் பங்கு உண்டு என்று உணர்ந்தவனாய் வீரர்களுக்கு விருதுகள் தந்து பாராட்டினான். களத்தில் வடுப்பட்டவர்களுக்கு வாழ்வு அளிக்கத்தக்க உதவிகள் செய்தான்.

License

Icon for the Public Domain (No Rights Reserved) license

To the extent possible under law, manarkeni has waived all copyright and related or neighboring rights to மண்மகள் இலம்பகம், except where otherwise noted.

Share This Book