="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

8 கனகமாலையார் இலம்பகம்

7. கனகமாலையார் இலம்பகம்

அவன் ஒரு நாட்டை விட்டு மற்றொரு நாடு அடைகின்றான் என்றால் இடையில் ஏதாவது ஒரு காடு இடையிட்டது; அவன் நடைப் பயணத்துக்கு யாராவது சோணகிரி பேச்சுக்குத் துணை கிடைத்து வந்தான்.

இப்பொழுது கிடைத்தவன் இந்த நாட்டுத் தத்துவ நூல்களை அதிகம் படித்துவிட்டுத் தன்னடக்கம் கொண்டவனாக விளங்கினான். கிழக்கிலிருந்து மேற்குச் செல்லக் கூடிய தத்துவங்களில் முக்கியமானது புலனடக்கம்; இதை அடக்கி விட்டால் உலகத்தையே வென்று விடலாம்; அடுத்த உலகத்துக்கும் பதிவு செய்து வைக்கலாம் என்பது போன்ற சிந்தனைகள் அவனிடம் குடி கொண்டிருந்தன.

விஞ்ஞானம் வளராத காலம்; அதனால் இந்த ஞானங்கள் அவர்களிடம் மிகுந்து இருந்தன. ஒருவகையில் இந்தத் தத்துவங்கள் தன்னைக் காத்துக் கொள்ளப் பயன் பட்டன. கிடைத்ததைச் சுருட்டிக் கொள்ளாமல் விரட்டி அடிக்கும் நல்லியல்புக்குத் துணை செய்தன.

இந்தத் தத்துவ மேதை ஒரு பெண்ணிடம் அகப்பட்டுக் கொண்டான். அவள் தன் பெயர் அநங்கமா வீணை என்றாள்; கொஞ்சம் சுமாராக இருந்தாள்;
தளதளத்த மேனி; பளபளத்த முகம்; கலகலத்த பேச்சு; அவளுக்குத் தீராப்பசி; கட்டான உடல்; தொட்டால் சுகம் தரும் வடிவம்; அணைத்துச் சுகம் காணத்தக்கவள்; நிறம் அதுவும் பிரமாதம்தான்; மாஞ்சிவப்பு; அது அவள் கவர்ச்சிக்குத் துணை செய்தது.

“சற்றே திரும்பிப் பார் பிள்ளாய்” என்றாள்.

“சந்நிதானம் தரிசிக்கலாம்” என்று தொடர்ந்து பேசினாள்.

அவளை நிதானமாகப் பேசும்படி கேட்டான்.

“நான் ஒருத்தி நிற்கிறேன். உன்னைப் பார்க்கிறேன்; உனக்காகக் காத்துக் கிடக்கிறேன்; நீ பார்த்துக்கொண்டே இருக்கிறாய்; அது உன்னால் எப்படி முடிகிறது” என்று கேட்டாள்.

மாயப்பிசாசு தன்னை மருட்டுவதாக நினைத்தான்.

“இதோ பாரு; இங்கே யாரும் இல்லை; நீயும் நானும் தான்; பயப்படாதே; வெளியே சொல்ல மாட்டேன்!” என்றாள். அவன் கற்ற கல்வி, பெற்ற ஞானம் அவனைத் தடுத்தன.

“உன்னைப் போல் ஏமாளியை நான் பார்த்ததில்லை; மேல் விழுந்து நெருங்குகிறேன்; நீ ஒதுங்கி ஒதுங்கி ஒடுங்குகிறாய்; ஆள் அழகாக இருந்து பயன் இல்லை; ஆண்மையும் இருக்க வேண்டும்” என்றாள்.

‘ஆண்மை’ என்ற சொல் அவனைத் துண்டி விட்டது செயல்பட அல்ல; தான் கற்ற கல்வியை அவளிடம் எடுத்துப் பேச.

“ஆண்மை என்பது எது? வீரம் தான் ஆண்மை; தன்னடக்கம் தான் பேராண்மை, ஒழுக்கம் அது விழுப்பம் தரும். எளிது என்று மற்றொருவன் மனைவியை அடைகிறவன் தீராப்பழிக்கு ஆளாவான்; நீ பிறன் மனைவி;
உன்தாலி அது காட்டுகிறது. அந்த வேலியைத் தாண்டும் கேலிக் கூத்து என்னிடம் காண முடியாது. பிறன் மனைநயவாமை தான் ஆண்மை; அது தான் அறம், ஆன்ற ஒழுக்கமும் ஆகும்.”

“அது மட்டுமன்று; கன்னி ஒருத்தியைக் காமத்தியில் கலக்கியவன் குட்ட நோயில் விழுவான்; நீ கன்னி அல்ல இருந்தாலும் முன் பின் அறியாத வழிப்பயணி, உனக்குப் பாதுகாப்புத் தர வேண்டியவன் நான்; நானே உன் மடியில் கைவைத்தால் அது கீழ்மையாகும்.”

“எங்கள் நாட்டு அறிவு மேதை ஒருவர் சொல்கிறார். இந்த இளைஞர்கள் கவிஞர்களின் வருணனைகளுக்கு அடிமையாகிறார்கள். ஆசைகளை வளர்த்துக் கொள் கிறார்கள்; பெண் அதில் ஏதோ புதையல் இருப்பதாகக் கருதுகிறார்கள். இன்பம் அவளிடம் புதைந்து கிடக்கிறது. என்று சொல்லிச் சொல்லிப் பழக்கி விட்டிருக்கிறார்கள். அதனால் தான் இந்த மயக்கம் ஏற்படுகிறது என்றார் அவர்.”

“இந்த யாக்கை நரம்பினால் கட்டப்பட்டது. இதன் சேர்க்கை விரும்பத் தக்கது அன்று; இது எல்லாம் வெறும் மாயை, அது மட்டுமல்ல, ஒரு மயக்கம்.”

“கரிக்குருவிக்குக் காக்கை பொன்னிறமாகத் தோன்றும்; காமத்தில் கரிகட்டை போல் இருக்கும் ஒரு நரிக்குறத்தி கூட அவனுக்கு ஒரு ரதிதேவியாகி விடுவாள்.”

“நான் விரத ஒழுக்கம் உடையவன்; என் சரிதமே வேறு. நான் வழக்கமாக இந்த வழி நடக்கும் காட்டு வழிப்போக்கன்; அழகிய தமிழில் சொன்னால் வனசரிதன்” என்றான்.

“அடி முட்டாளாக இருக்கிறாயே! உன்னை நான் கட்டிக் கொள்ளச் சொல்லவில்லை. ஒரு சின்ன
விளையாட்டு; அவ்வளவு தான்; அதற்கப்புறம் நீ யாரோ நான் யாரோ! வாய்ப்பைத் தவறவிடுகிறாய்.”

“அதற்கு வேறு ஆளைப் பார்க்கலாம்.”

“வேறு ஆள் என்னைப் பார்த்து அதற்கப்புறம் தான் இங்கு வந்திருக்கிறேன்; வித்தியாதரன் கேள்விப்பட்டிருக்கிறாயா! விண்ணில் ஊர்பவன்; அவன்தான் என்னைக் கவர்ந்து இழுத்துச் சென்றான்; அந்தப் பாவி காரியம் முடிப்பதற்குள் அவன் மனைவி வந்து தடுத்து விட்டாள். அவளால் என்னைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை; “முதலில் அவளை விட்டுவிட்டுவா” என்று ஒரே கத்தல்; அதனால்தான் அவன் என்னை இங்கே விட்டு இந்தச் சிக்கல்” என்றாள்.

“அதெல்லாம் மேலிடத்து விஷயம்; என்னிடம் சொல்லாதே; இங்கு நில்லாதே” என்று விசுவாமித்திரனாக நின்றான்; ஆனால் மேனகையைக் கெடுக்கவில்லை.

சீவகன் இவனைப் பார்த்தான்; இவன் ஒரு தனிமனிதன். இப்படி நடந்து கொண்டதற்குக் காரணம் என்ன? இப்படியும் ஒரு சிலர் ஒழுங்காக இருப்பதால்தான் ஒழுக்கம் என்ற சொல்லுக்கே மரியாதை மதிப்பு ஏற்படுகிறது என்பது அறிந்தான்.

“சபாஷ் பாண்டியா” என்று பாராட்டினான். தத்துவங்கள் பயன் உடையவை. அதனால்தான் மனிதர்கள் தவறு செய்வதில்லை என்று தெரிந்து கொண்டான். இது இந்த மண்வாசனை, காலம் காலமாக வரும் ஒழுக்கக் கட்டுப்பாடுகள்; கற்பு என்பது பெண்ணுக்குமட்டும் உரிய கட்டுப்பாடு; கடமைப்பாடு அன்று, ஆண்களுக்கும் உரிய நல்லொழுக்கம் என்று முடிவு செய்தான். பிறன்மனை நயவாத பேராண்மையைப் பாராட்டினான்.

“தம்பி! உன்னைப் பாராட்டுகிறேன். இக் கால இளைஞர்களுக்கு நீ வழி காட்டி, வாய்ப்பைத் தவற
விடக்கூடாது என்று தவறுகிறவர்களுக்கு நீ கை காட்டி: பெண் மட்டுமல்ல; பொருளிலும் இந்த ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தால் நாடு முன்னேறும். எளிது எனப் பிறர் பொருள் நச்சி ஊழல் செய்கின்ற அதிகாரிகள் இதை உணர வேண்டும். நாட்டின் அரசியல் கேட்டுக்கு இந்த ஊழல்தான் நச்சு மரம்; இதை அடியோடு ஒழிக்க வேண்டும்” என்று எல்லாக் காலத்துக்கும் ஏற்ற கருத்துகளை அவனிடம் எடுத்து உரைத்தான்.

இவனைச் சந்தித்த சில விநாடிகளுக்குள் இவனுக்கு எதிர்மறையாக மற்றொருவனைச் சந்தித்தான். அவன் மனைவியை இழந்தவனாகப் பிரலாபித்துக் கொண்டிருந்தான்.

“ஐயா! என் மனைவி அழகாக இருப்பாள். கண்ணுக்கு இனியவள்; பண்ணுக்கு உரியவள்”

“என்னய்யா ஏலம் போடுகிறீர்”

“ஒலம் இடுகிறேன்”

“வழி தவறிவிட்டாள்; என் விழிகள் அவளைத் தேடிக் கொண்டிருக்கின்றன” என்றான்.

சீவகனுக்குத் தெரிந்தது; வழி தவறியவள் யார் என்று.

“அவள் எப்படி இருப்பாள்?”

“எங்கே பிரிந்தாய்? என்ன ஆனாள்” என்று கேட்டான்.

“அவள் உயர்குடிப் பெண்; பிறந்த வீடும் செல்வம் மிக்கது; புகுந்த என் வீடும் வசதி மிக்கது; சோமவார விரதம் முதல் எல்லா விரதங்களையும் விடாமல் பூஜை வழிபாடுகள் தவறாமல் செய்யும் உத்தமி அவள்” என்றான்.

அவன் அறியாமை கண்டு வியந்தான்.

“காசு பத்து நீட்டினால் இந்திரன் மகளும் சுந்தரன் பின்னால் போய்விடுவாள்; இதுதான் பெண்ணின் இயல்பு” என்றான் சீவகன்.

“பத்தினிப் பெண் அப்படிப்பட்டவள் அல்ல; தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகை சான்ற சொல் காத்துச் சோர்வில்லாதவள்.”

“கணவனுக்காக அவள் உயிரையும் விடுவாள்” என்றான் அவன்.

“சரி என்ன ஆயிற்று? என்ன நடந்தது?”

“நாங்கள் இருவரும் ஒன்றாகத்தான் வந்து கொண்டிருந்தோம்: தண்ணிர் வேண்டும் என்றாள் குடிக்க.”

“இதோ வருகிறேன்; இருக்க” என்று சொல்லிவிட்டுப் போனேன்.

“வந்து பார்க்கிறேன் அவள் நிழல் கூட அங்கு இல்லை.”

“நீ படித்தவனாக இருக்கிறாய்; இப்படிக் கலங்குவது சரியல்ல” என்று கூறினான்.

“உன் மனைவிதானே உனக்கு வேண்டும்! நான் ஒரு வழி சொல்கிறேன் கேள்” என்றான்.

“என்ன சொன்னாலும் செய்கிறேன்”

“அவள் பெயர் என்ன?”

“அநங்கமா வீணை” என்றான்.

யார் அவள் என்பதைச் சீவகன் அறிந்தான்.

“அந்தப் பெயரை உச்சரித்துக் கொண்டு கண்மூடிக் கொண்டு நில்; அதுவே தாரகமந்திரம்; தானாக அவள் வந்து நிற்பாள்” என்றான்.

இவன் இந்தப் புதிய நாம மந்திரத்தைச் செபித்துக் கொண்டு இருந்தான்.

வைராக்கியம் உடையவனைச் சந்தித்துத் தோல்வி கண்டு அதனால் சோர்வு கொண்டிருந்த அந்த வழிப்போக்கியைப் பார்த்துச் சீவகன் விளித்தான்.

இவன் அழகன்; அதனால் மதிப்புத் தந்தாள்; ஒரு முறை பாடம் கற்றுக் கொண்டாள்; அதனால் அவள் சீவகனிடம் வாலாட்டாமல் குழைந்து நின்றாள்.

“யார் நீ? அந்தப் புதிய ஆளிடம் பேசிக் கொண்டிருந்தாயே எதற்காக?”

“அவர் என் கணவரின் நண்பர்; அவரை எங்காவது பார்த்தீர்களா என்று விசாரித்தேன்.” என்று நடித்தாள்.

“உன் கணவனை நான் காட்டிக் கொடுக்கிறேன்” அவிழ்த்துவிட்ட எருதுகளை மறுபடியும் வண்டியில் பூட்டி விட்டான். வாழ்க்கை என்ற வண்டியை மறுபடியும் இருவரும் சேர்த்து இழுக்கத் தொடங்கினர்.

அவன் இவனைக் கையெடுத்துக் கும்பிட்டான்; வழி தவற இருந்தவள் விழிபெற்று உயர்ந்தாள்.

இப்படியும் சில மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை அவன் கண்டு தெளிந்தான்.

அடுத்த இடம் மத்திமதேயம் என்று அறிய முடிந்தது. ஏமாமாபுரத்தை அடைந்தான். அவன் அங்கே அந்த ஊர்ப் புதுமாப்பிள்ளை என்று தெரிந்தது; அந்த ஊரைப்பற்றித் தனக்குத் தேவையானவற்றை மட்டும் தெரிந்து வைத்திருந்தான். தன்னோடு கல்யாணச் சாப்பாடு சாப்பிட சீவகனை அழைத்தான்.

“அது உடம்புக்கு ஒத்துக்காது” என்று சொல்லி விட்டான்.

“ஏன்?” என்றான்.

“வீட்டு உணவு உண்டுதான் பழக்கம்; அடிசிற்கு இனியாள்; படிசொற் கடவாத பாவை; அவள் வடித்துக் கொட்டிப் பரிமாற உண்டு பழக்கம்; தாய்க்குப் பின் தாரம்; மற்றவர்கள் எல்லாம் நமக்குப் பாரம்; அவர்களுக்கு உறவு என்பது ஒரு வியாபாரம். உன்னோடு வந்தால் இவன் ஏன்
வந்தான் என்று கேட்காமல் இருக்கமாட்டார்கள்; வெள்ளையும், சள்ளையுமாக இருக்கிறான். ஒசி சாப்பாடு; என்று ஏசாமல் இருக்கமாட்டார்கள்” என்றான்.

“இந்த ஊரில் என்ன விசேஷம்?” என்றான் சீவகன்.

“பெண்கள் கொஞ்சம் அழகாக இருப்பார்கள்”

“கொஞ்சம் தானா?”

“மற்றவர்களைவிடக் கூடுதலாக இருப்பார்கள் என்று சொன்னேன்” என்றான்.

“எதை வைத்து இப்படிச் சொல்லுகிறாய்? என்று கேட்டான்.

“அதனால்தான் இங்கே வந்து பெண் எடுத்து இருக்கிறேன்” என்றான்.

அதிலே அவனுக்கு ஒரு மனநிறைவு இருப்பது உணர்ந்தான்.

அழகிய மனைவி வாய்த்தாலே அது ஒரு பெருமைக்கு உரியது என்பதை அவன் பேச்சில் இருந்து தெரிந்து கொண்டான்; இவன் தொட்ட இடமெல்லாம் அழகின் உறைவிடம் என்று எண்ணும்போது இவனும் பெருமை அடைந்தான்; இவனுக்குள்ளேயே ஒரு ஆய்வை மேற்கொண்டான்; வீணை வித்தகி தத்தை; பண்பின் உறைவிடம் குணமாலை; புதுமை தந்தவள் பதுமை; செல்வமகள் கேமசரி இவர்களில் யார் பேரழகி என்று ஆராய்ந்து பார்த்தான்; ஆனால் முடிவு செய்ய இயலவில்லை. அவன் எப்படித் தன் மனைவி அழகி என்பதை முடிவு செய்தான் என்பதை அறிய ஆவல் கொண்டான்.

“எதை வைத்து உன் மனைவி அழகி என்று முடிவு செய்தாய்?” என்று கேட்டான்.

“மனத்துக்குப் பிடித்து இருந்தது” என்று பதில் சொன்னான்.

“அனைவரும் அழகிகளே” என்று இவன் முடிவுக்கு வந்தான்.

இப்படி அழகைப் பற்றி இவன் விசாரணையில் இறங்கியவனாய்த் தென்றல் வீசிய இளஞ் சோலைக்குச் சென்று அங்கே எதிரே இருந்த தடாகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மனத்திரையில் காவியத்தின் ஒவியம் ஒன்று நிழலாடியது.

இராமன் சீதையுடன் வனவாசம் சென்றான்; வாசம் மிக்க மலர்கள் சூடிய சீதையுடன் பொழிலின் நீர்த்துறை அருகே நடந்து சென்றான். இலக்குவன் அங்கு இல்லை அவர்கள் தனிமையைக் கெடுக்க அன்னம் ஒன்று சீதையின் நடை கண்டு ஒதுங்கியது; அதைக் கண்டு புதியதோர் முறுவல் பூத்தான். அந்த அழகிய காட்சியை நினைத்தான்; தன் மனைவியர் அழகில் அவன் நாட்டம் செலுத்தினான்.

கவிதையில் படித்த அன்னத்தை நேரில் கண்டான்; அது அவ்வனிதையரின் நடையை நினைவுக்குக் கொண்டு வந்தது. அதைவிட அதன் தொடர்ந்த காட்சி அவன் உணர்வுகளைத் துண்டியது.

அன்னம் ஒன்று நீர்த்துறையை நாடியது; அதன் பக்கத்தில் ஒரு மீசை வைத்த அன்னம் அதன் கணவன் என்று சொல்லத்தக்க வகையில் அதன் முன்தானையைப் பிடித்துக் கொண்டிருந்தது.

நீரின் நிழலில் வேறு ஒரு அன்னத்தின் பெடையைப் பார்த்தது; அதை இந்த மீசை வைத்த அன்னம் பிடித்து இழுப்பதைப் பார்த்து விட்டது. வந்ததே கோபம்.

அங்கே தத்தை, குணமாலை, பதுமை, கேமசரி அவர்கள் எல்லாம் வந்து நின்றுவிட்டார்கள்.
“என்னய்யா! உனக்கு ஒரு சின்னவீடு கேடா! நீரில் ஒளித்து வைத்தால் எனக்குத் தெரியாது என்று நினைத்துக் கொண்டாயா” என்று உருமியது அந்தப் பெண் அன்னம்.

“அது உன் நிழல்” என்றது.

ஊடல் தீர்ந்தது; கூடல் நாடகத்தில் அவை இணைந்தன.

அதற்குமேல் அவனால் தனிமையைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை. பிரிவு அவனை வாட்டியது.

தத்தையைவிட குணமாலைதான் அவனை மிகவும் வாட்டி விட்டாள்.

அது ஏன் என்று அவனுக்கே தெரியவில்லை.

தாய்க்கு அழும் குழந்தையைத் தான் எடுத்துக் கொள்ளத் தோன்றும்; தத்தை பிரிவைத் தாங்கிக் கொள்வாள்; குணமாலை வயதில் இளையவள்; அழுகை அவள் முத்திரை; பானை கண்டு மருண்டபோது அவலம் தான்; தொடர்ந்து ஒப்பாரி தான்; அவளை நினைக்கும்போது இவன் மனம் மிகுந்த வேதனையை அடைந்தது.

விரகதாபம் அன்று; ஆன்ம நேயம் என்றால் அது அதிகமான வார்த்தை; இணைப்பிணைப்பு: உள்ளம் உறவாடியது; இவன் நினைவு ஒரு உரு எடுத்து அவள் அருகில் செல்கிறது; பின்புறம் அணுகிச் சென்று மெல்ல நீவி அவளைத் தொட்டு அதிர்ச்சி அடையாதபடி அவளை மெல்ல அணைக்கிறான்; அது வெறுங்கனவு ஆகிவிடுகிறது.

சற்றுமுன் கற்ற இளைஞனுக்கு இவன் ஆறுதல் கூறி இருந்தான்.

“பிரிந்தவளை நினைத்து வேதனைப்படுகிறாய்; நீ படித்தவனா” என்று கேட்டான்.

அதே கேள்வியைத் தனக்குத்தானே கேட்டுக் கொள்கிறான்.
“அஞ்சனக் கோல் கண்ணுக்கு மைதீட்டுமே யன்றி அது தன்னை அழகுபடுத்திக் கொள்ளத் தெரியாது. அறிவுரையும் அப்படித்தான்; மற்றவர்களுக்குச் சொல்லப் பயன்படுமே தவிர அது தனக்குப் பயன்படாது” என்று தெளிந்தான்.

அச்சணந்தி ஆசிரியர் கையில் பிரம்பு வைத்துக் கொண்டு தன்னை அதட்டுவது போல் இருந்தது. “தம்பி; இன்னும் சில மாதம் பொறுத்துக் கொள்” என்று சொல்வது போல இருந்தது.

அச்சணந்தி பார்த்திபனுக்குத் தேரில் இருந்து கீதை மொழி கூறிய கண்ணனாகக் காணப்பட்டார்; ‘கடமை பெரிது; அதற்கு முதலிடம் தருக’ என்று கூறுவது நினைவுக்கு வந்தது.

பார்த்திபன் மறுபடியும் கடமை வீரனாக மாறினான். தானும் ஒரு மனிதன்தான்; நினைவுகள் வருவது இயல்பு தான் என்று கூறி அந்தக்காதல் நினைவுகளுக்கு இறக்கைகள் பூட்டி அவற்றை மனம் போன போக்கில் பறக்க விட்டான்.

சின்ன வயதில் அவன் மற்றவர்களோடு மாந்தோப்புக்குச் செல்வது உண்டு; உரியவர்களுக்குத் தெரியாமல் மரம் ஏறிக் காய் பறித்ததும் உண்டு; அப்பொழுது அகப்பட்டுக் கொண்டு திண்டாடியதும் உண்டு; மற்றவர்கள் அவனை மாட்டி விட்டு வேடிக்கை பார்த்ததும் உண்டு; கந்துக்கடன் மகன் என்பதால் அவர்கள் மன்னித்தது மட்டும் அல்ல, மடி நிறையப் பழங்கள் கட்டித் தந்து ‘அப்பாவிடம் கொடு’ என்று சொல்லி அன்பு காட்டிய நிகழ்ச்சியும் உண்டு; வேண்டுமென்றால் அடிக்கடி வந்து போ என்று சொல்லி அனுப்பி இருக்கிறார்கள்; விலகி நின்றவர்களுக்கு அது வியப்பைத் தந்தது.

“ஏண்டா மரம் ஏறினால் அவர்களே மடி நிறையக் கட்டிக் கொடுப்பார்களா?” என்று கேட்டனர். பார்த்தால் தெரியவில்லையா?” என்று பதில் சொன்னான்.

மறுநாள் அவர்கள் முயன்று பார்த்தார்கள்; சரியாக மாட்டிக் கொண்டார்கள்.

“நேற்று என்னைவிட்டு ஓடிவிட்டீர்களே! அதற்கு இது ஒரு பாடம்” என்று சொல்லி அவன் முன் இருந்து அவர்களை விடுவித்தான்.

இங்கே அந்த ஊர் அரச புத்திரர்கள் உச்சிக் கிளையில் ஒதுங்கி இருந்த கனியை நச்சியவர்களாய்க் குறி வைத்துக் கல் எறிந்து கொண்டிருந்தனர்; வைத்த குறிகள் அத்தனையும் தப்பி விட்டன. சீவகன் சென்றான்; ஒரே அடியில் அது அவர்கள் மடியில் விழும்படிச் செய்தான். ‘வைத்த குறி தப்பாத வைத்தியலிங்கம்’ என்று அவர்கள் பாராட்டத் தொடங்கினார்கள். அருகில் வந்ததும் அவர்கள் குரல் கம்மியது; மராமரம் ஏழினையும் வீழ்த்திய இராமன் என்று அவர்கள் அவன் மதிப்பை உயர்த்தினர்.

இவன் விற்பயிற்சி உடைய விசயனோ என்று வியந்தனர். இவனைச் சந்தித்தவன் பெயரும் விசயன் ஆகும். இவன் பெரிய வீட்டுப்பிள்ளை என்பதை அறிந்தான்; தன் இளமை நாட்களை அவன் கவனத்துக்கு வரப் பேச்சுத் தொடுத்தான்.

“எந்த ஊர்?”

“இராசமாபுரம்”

“சீவகனைத் தெரியுமா?

“அவன் என் நண்பன், நாங்கள் இருவரும்தான் அச்சணந்தி ஆசிரியரிடம் விற்பயிற்சி பெற்றோம். அவன் கந்துக்கடன் மகன்; அவர் வீட்டில்தான் அச்சணந்தி தங்குவார்.”

“துரோணனுக்கு ஒரு அருச்சுனன்போல சீவகன் அவருக்கு நான் ஒரு ஏகலைவன்; ஒருமுறை கற்றுக் கொடுத்தால் அப்படியே பிடித்துக் கொள்வேன். அவருக்கு என்
மேல் மிகுந்த பிரியம்; எங்காவது போய் விற்பயிற்சி கற்றுக் கொடுத்துப் பிழைத்துப் போ என்று வாழ்த்தி அனுப்பினார். என் கட்டை விரலை அவர் வாங்கவில்லை; அவர் பெயரைச் சொல்லிக் கொண்டு அங்கங்கே புதிய புதிய நகரங்களுக்குச் சென்று மன்னர் மக்களுக்கு விற்பயிற்சி பயிற்றுவிப்பேன்; இது என் தொழில்” என்றான்.

அவன் அவர்கள் தந்தை நரபதியிடம் அழைத்துச் சென்றனர்; விசயனைப் பார்க்கும்போது உலோகபாலன் நினைவுக்கு வந்தான். இங்கே ஒரு பதுமை ஏன் இருக்கக் கூடாது என்ற புதிய ஆசையும் கிளைத்தது. அமராவதி மாடத்தில் இருப்பதை இந்த அம்பிகாபதி பார்த்தான்; விட்டு இருந்தால் நூறு பாடல் பாடி இருப்பான்; அவ்வளவு அழகு; அவள் எங்கிருந்தோ கொள்ளையடித்துத் தன்னிடத்தில் வைத்திருந்தாள்.

“என்ன பார்க்கிறாய்” என்றான் விசயன்.

“மாடப்புறா” என்றான்.

“அது என் தங்கையோடு வந்து விளையாடும்” என்றான்.

“என் மக்கள் ஐவர்” என்றான் நரபதி.

“பஞ்சபாண்டவர்கள் போல் இருக்கிறது” என்று நகைத்துப் பேசினான்.

“அவர்களுக்கு விற்பயிற்சி தரும் துரோணராக இருக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான்.

ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை; மாடப்புறாவை அடிக்கடி அங்குச் சந்திக்கலாம்.

இங்கேயும் ஒரு தமிழ்க் காதல் ஏற்பட வாய்ப்பு உண்டு என்று நம்பிக்கை கொண்டான். பணக்காரப் பெண்ணைக் காதலிக்கின்ற கதாநாயகனை பங்களாவின் வெளிவீட்டில் தங்க இடம் கொடுப்பதைப் போல இவனைப் பூஞ் சோலைக்கு நடுவே ஒரு குடில் தந்து ஆசிரம வாசியாக ஆக்கி வைத்தனர். அதுவும் அவனுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. பூவையர் அங்கு வராமல் இருக்கமாட்டார்கள். அவர்களுள் இந்தப் பாவையும் வரலாம் என்ற நம்பிக்கை இருந்தது.

இவனால் சும்மா இருக்க முடியவில்லை; அந்தத் தோட்டத்துப் பூக்களை நோட்டம் விட்டான்; அவற்றைப் பறித்து வைத்துச் செண்டுகளையும் மாலைகளையும் தொடுத்துக் கொண்டிருந்தான். சேடி ஒருத்தி அவனைத் தேடிக்கொண்டு வந்து சேர்ந்தாள்.

“பூந்தோட்டக் காவல் காரா” என்று பாடிக் கொண்டே அங்கே வந்தாள். அவள் தன்னைத் தான் விளிக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்டான்.

“தங்கள் ஏவல் யாதோ?” என்றான்.

“இவ்வளவு அழகாகப் பூத் தொடுக்கிறாயே எப்படி?” என்று கேட்டாள்.

“பாவையர் பூச்சூடி வருவர். அவர்களைக் கவனிப்பதை விட இந்தப் பூக்களைத் தான் ரசிப்பேன், இராசமாபுரத்தில் காந்தருவ தத்தை என்ற வித்தியாதர மகள் இருக்கிறாள். அவள் சீவகனை மணந்தவள். அவன் என் அண்ணன் மாதிரி; அவளோடு அவள் தோழியர் பலர் வருவர். அவர்கள் வந்து என்னைச் சீண்டுவார்கள். நான் அவர்கள் சூடிய மலர்களைக் கீண்டுவேன்; அந்தப் பழக்கம்” என்றான்.

“என் தலைவி பூக்களை மிகவும் நேசிப்பாள்; அவளுக்குச் செண்டு கட்டித் தர முடியுமா?”

“இந்த அம்பிகாபதி பாமாலைகளைத் தொடுக்க அறியான்; பூமாலைகளைத்தான் தொடுப்பான்; அவற்றை நீ அவளுக்குப் பாமாலையாகக் கொடு” என்றான்.

அதனோடு அவளுக்கும் தெரியாமல் காதற் கவிதை எழுதிச் செருகி அனுப்பிவைத்தான்.

பதில் கடிதங்களும் அவள் கட்டி அனுப்பிய செண்டுகளில் வந்தன; இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர்.

வில் தொழில்பயிற்சி முடிந்ததும் அவர்கள் விற்பன்னர்கள் என்பதை நாடறிச் செய்ய விழா எடுத்தனர். அவர்கள் கற்ற வித்தைகளைப் பார் அறியக் காட்டி அரங்கேற்றினர்; அரங்கேற்றம் நடந்தது.

அரசன் நரபதி வில்லாசிரியனுக்குச் சொல்மாலை சூட்டினான். பாராட்டுரை தெரிவித்தான்; அவனுக்குக் ‘கனகமாலை’யைச் சூட்ட விரும்பினான்.

“இராசமாபுரத்து இளைஞன் நல்லாசிரியர்; இவருக்குப் பூமாலையை விடக் கனகமாலை சூட்ட விரும்புகிறேன்” என்று பார் அறியச் சொன்னான்.

பொன்னால் ஆனமாலை அவனுக்குக் காத்திருந்தது என்று அவையோர் கருதினர்; பூமாலையோடு அமராவதி அங்கு வந்தாள்.

வியப்புடன் விழித்தனர்; ‘கனகமாலையா’ என்று அவள் பெயரைச் சொல்லினர்.

சீவகனுக்கு இது புதுமையாக இருந்தது. எதிர்பாராத பரிசு அவனுக்குக் கிடைத்தது. தன் மாணவனே தனக்கு மைத்துனனாக வாய்த்தான்.

கற்றோர்க்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு, காளை சீவகனுக்குக் களிப்பு: எங்குச் சென்றாலும் இவனுக்கு ஒருத்தி மாலையிட்டு வரவேற்கக் காத்திருந்தாள்; வில் கற்றவன் அதனால் கிடைத்தது இந்தச் சிறப்பு.

எதிர்பாராது அங்கு அவன் தம்பி நந்தட்டன் வந்து சேர்ந்தான். இது அதைவிட இருந்தது மிக்க வியப்பு.

“எப்படி வந்தாய்?” என்றான்.

“செப்படி வித்தை”

“காந்தருவ தத்தை ?”

“அவர்கள்தாம் நீ இருக்குமிடம் காட்டினார்கள்” என்றான்.

தம்பியைக் கண்டு இராசமாபுரத்தையே கண்ட மகிழ்ச்சியை அடைந்தான்.
பெற்றோர்களைப் பற்றி விசாரித்தான். கந்துக்கடனும் சுநந்தையும் அடைந்த வருத்தம்; அதன் திருத்தம் இவைபற்றிப் பேசினான்.

“குணமாலை?”

“நாள் ஒற்றி அவள் விரல்கள் தேய்ந்து விட்டன. தினந்தோறும் சுவரில் தன் விரலில் மைதீட்டி அதில் ஒற்றி நாள் எண்ணுவாள்” என்றான்.

பால்காரி சாணம் கொண்டு பால் கணக்கு எழுதுவது போல் இருந்தது.

“காந்தருவ தத்தை ?”

“அவர்கள் கலங்குவதில்லை; கேட்டால் நெஞ்சத்தில் எம் காதலர் துலங்குகிறார் என்கிறார்”.

“அது எப்படி உனக்குத் தெரியும்?”

“சூடாக எது கொடுத்தாலும் சாப்பிட மாட்டார்கள். என் நெஞ்சில் அவர் இருக்கிறார் சூடு படக்கூடாது என்று கூறுவாள்” என்றான்.

அவள் ஒரு முடங்கலை எழுதி அனுப்பி இருந்தாள்; அதை அவன் தனித்து இருந்து படிக்கத் தொடங்கினான்.

“அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன். வடியாக் கிளவி மனம் கொளல் வேண்டும்.”
“என் தந்தை அனுப்பிய வரிசைச் சீர்கள் எழுத்தில் அடங்கா; அவை அத்தனையும் வீட்டில் அடக்கி வைத்துள்ளேன்.

பொன்னும் மணியும் ஆடை புதிது அடுக்கியவை பலப்பல; கொண்டு வந்த ஆள் தரன்; அவனிடம் இங்கே நடந்தது எந்தச் செய்தியும் எடுத்துரைக்கக் கூடாது என்று அவனுக்கு எடுத்துச் சொல்லி இந்தக் குடும்பப் பெருமையை விட்டுக் கொடுக்காமல் நடந்து கொண்டேன்.

“கட்டியங்காரன் அட்டுழியங்கள் எதையும் எடுத்துக் கூறாதே; அது பழிப்பும் இழிப்பும் தரும் என்று அவனிடம் கூறி அனுப்பினேன்.”

“குணமாலையைத் தணிப்பது ஒரு தனிக்கலை; அவள் பிரிவிற்கு ஆற்றாள்.

இருள் நீடிக்கிறது என்பாள்; திங்களைக் கடிவாள்;

பகலே நீ சிறியை என்று அதனிடம் கொள்கிறாள் இகலே;

மேகலை தான் அணியாமல் “ஏன் ஏகலை” என்று எடுத்தெறிவாள்.

அணிகள் எதையும் அவள் அணுகுவது இல்லை; அணிகலம் இல்லாத இயல்புநவிற்சியே அவள்; அதுதான் கவிதைக்கு ஒரு தனி அழகு; இதுதான் உண்மை.

அவள் முகம் மதி என்று நீ புகழ்ந்து இருக்கிறாய்; அது மழையும் பொழிகிறது; காரணம் அவள் கூந்தல் மேகம் என்று நீ கூறியதால்.

மார்பில் முத்துக்கள் அணிவது இல்லை; அவள் கண்ணர்த் துளிகள் அவளுக்கு அழகிய முத்தாரம்.

கண்கள் கருங்குவளை என்பாய்; அவை கசங்கி இருக்கும்போது செங்குவளையாகிச் சிவந்து அரி பரந்து விழிக்கின்றன.

நாளை வருவாய் என்று நாள்பல கடத்தினேன்; ‘நாளை என்பது ஏன் வருவதே இல்லை’ என்று கேட்கும் வினாவுக்கு இதுவரை விடைசொல்ல இயலவில்லை.

புதிது; புதிது கிளைப்பது மரத்துக்கு அழகுதான்; என்றாலும் கிளைத்துக் கொண்டே போனால் அடிமரம் இளைத்துப் போகும். அதனால் சுமக்க இயலாது.

இந்த அடிமரம் தாங்கள்தான்; கடமையை முடிக்கக் கடுக வந்து ஆவன செய்க, அதுதான் யான் வேண்டுவது; வணக்கம்” என்று எழுதி முடித்து இருந்தாள்.

கலையரசியின் விலையில்லா மாணிக்கத்தைக் கண்டு அதன் ஒளியில் தன் எதிர் காலத்தில் நாட்டம் காட்டி விரைவில் வீடு திரும்ப விழைந்தான்; சாதிக்க வேண்டியவை அவனுக்காகக் காத்துக் கிடந்தன.

நாட்டைக் கொள்ளையடிக்கச் சிற்றரசர் வந்து வளைத்துக் கொண்டதாக ஒரு செய்தி வந்தது; நந்தட்டனை அழைத்துக்கொண்டு போர்முனை சென்றான்.

எதிரே பதுமுகன் புத்திசேனன் மற்றும் அவன் தோழர்கள் இவனுக்கு எதிரிகளாக நின்றனர்; இவன் காலடியில் அம்பு ஒன்று அது வணங்கியது.

“நாட்டு அரசன் ஏமாங்கத இளைஞன் சீவகன் காண்க” என்று ஒலை ஒன்று அதனோடு ஒட்டிக் கிடந்தது. ‘பதுமுகன்’ என்று அவன் பெயர் அம்பில் பொறிக்கப்பட்டு இருந்தது. வெள்ளைக் கொடியை உயர்த்தி அவன் தோழர்கள் அமைதி விரும்புவதை அறிவித்தனர்.

ஏன் இவர்கள் நாடகப் பாங்கில் நடந்து கொண்டனர் என்பது விளங்கவில்லை.

“நேரே சொல்லிவிட்டு வந்திருக்கலாமே” என்று வினாவினான்.

“நீ இங்கே எந்தப் பெயரில் இருக்கிறாயோ விராட பருவத்துக் கதை வேறு விதமாக இருக்குமே என்று அஞ்சி இந்த உபாயத்தைத் தேடினோம்” என்றனர்.

“என்னை ஏமாங்கதத்து இளவரசன் என்று எப்படிக் கூறுகிறாய்” என்று கேட்டான்.

“உன் தாய் விசயமா தேவியைப்பற்றி என்றைக்காவது நீ கவலைப்பட்டது உண்டா?” என்று கேட்டனர்.

அவர்களுக்கு என்று இவ்வளவு செய்திகள் எப்படித் தெரியும் என்று வியந்தான்.
புத்திசேனன்தான் துப்புக் கண்டு இருக்க வேண்டும் என்று மதிப்பிட்டான்.

“துப்பறியும் சாம்புவே செய்தி என்ன?” என்று கேட்டான்.

“உன் தாயைக் கண்டோம்; உரையாடினோம்; தவப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறாள்” என்றான்.

பள்ளியில் தங்கி இருக்கிறாள் என்பதை அறிந்தான். “தண்ட காரணியத்தில்” என்றனர்.

அடுத்த கட்டம் தண்டகாரணியம் நோக்கி அனை வரும் பயணம் செய்தனர்; கனகமாலை விரும்பி அவனுக்கு விடை கொடுத்தாள். அவள் தந்தையும் எடுத்து வைத்த லாட்டரி சீட்டுக்கு ஏழு கோடி கிடைத்தது போலப் பெரு மகிழ்வு கொண்டார்; ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியருக்குப் பெண்ணைக் கொடுத்துவிட்டோம் என்ற சின்ன வருத்தம் இருந்தது; அவன் ஒரு நாட்டின் ஏக சக்கரவர்த்தி மகன் என்று அறிந்ததும் தனக்கு ஒரு கவுரவம் அடைந்தது குறித்துப் பெருமை கொண்டான்.

யாராவது கேட்டால் “என் பெண்ணை ஒரு பெரிய இடத்தில் கொடுத்திருக்கிறேன்” என்று சொல்லிக்கொள்வதற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. விசயனும் அவனை
விடை கொடுத்தனுப்பும்போது புதுச் சட்டை போட்டுக் கொண்டிருந்தான்.

“என்னடா புதுச்சட்டை?” என்று அவன் தந்தை கேட்டார்.

“மைத்துனரை வழி அனுப்புகிறேன்” என்றான்.

“பிரிவதில் கலக்கம். வீரன் மனைவி என்பதில் ஒரு விளக்கம், அவள் நிலை அந்தச் சூழ்நிலையில் மிக உயர்ந்து விட்டது. அவன் நினைவு வரும்போதெல்லாம் அந்தப் பூஞ் சோலைக்குச் சென்று அங்கு மகிழ்ந்து குலவி இருந்த பழைய நாட்களை எண்ணி மகிழ்ந்தாள். அந்தச் சோலை அவளுக்கு ஒரு சித்திரமாகத் தெரிந்தது; விரைவில் அவனைச் சந்திப்போம் என்ற நம்பிக்கையே அதற்குக் காரணம். கவிஞர்களை வைத்துச் சோகக்குரல் எழுப்ப முடியாத நிலையில் மிகவும் தெம்போடு இருந்தாள்.

License

Icon for the Public Domain (No Rights Reserved) license

To the extent possible under law, manarkeni has waived all copyright and related or neighboring rights to கனகமாலையார் இலம்பகம், except where otherwise noted.

Share This Book