3 கோவிந்தையார் இலம்பகம்
ஆசிரியர் அச்சணந்தி அகன்றபின அவர் காட்டிய வழியே மேலும் கல்வியும் கலைகளும் கற்று எல்லாத் துறைகளிலும் வல்லவனாக விளங்கினான்; வீணை வித்தகனாகத் திகழ்ந்தான். ஞானம், அழகு, வீரம் மூன்றும் அவனிடம் முழு அளவு நிலவின.
சுநந்தைக்கு மற்றொரு மகன் நந்தட்டன் என்பான் பிறந்து இவனுக்கு உற்ற துணைவனாகச் செயல்பட்டான். இராமனுக்கு வாய்த்த இலக்குவனாக அவன் நிழற்போல அவன்பின் தொடர்ந்தான்; கந்துக்கடனுக்கு வாழ்க்கைத் துணைக்கு சுநந்தையும், சுகத்துக்குச் சில கணிகையரும் வாய்த்தனர்.
வெள்ளைக் கணக்கில் கட்டிய மனைவி என்றால் கருப்புக் கணக்கில் விருப்பமுள்ள மாதர்களாக இவர்களை வைத்துக் குடும்பம் நடத்தினான்; விளைவு நபுலன் விபுலன் என்ற நன்மக்கள் இருவர் அவன் பெயரைச் சொல்லினர்.
இராம காதையில் இராமனுக்கு வாய்த்தது போல் தம்பியர் மூவர் வாய்த்தனர். பதுமுகன் என்பவனும் புத்திசேனன் என்பவனும் இவனது வலது கரமாகச் செயல்
பட்டனர். தம்பியரும் தோழர்களும் அறிவு மிக்க அமைச்ச ராகவும், செயலாற்றும் வீரர்களாகவும் செயல்பட்டனர். வேளைக்குச் சோறு, துணிமணிகள்; அடிதடி, நாளைக்கு ஒரு நாடகம்; கவலையில்லாத கட்டவிழ்ந்த வாழ்வு இவர்களைக் கவ்வியது.
இராசமாபுரத்தில் பேசுவதற்கும், பேசிச் சிந்திப்ப தற்கும், சிந்தித்துச் செயல்படுவதற்கும் அவ்வப்பொழுது ஏதோ சில நிகழ்ச்சிகள் தோன்றாமல் இல்லை. தோட்டத்துக்குக் காவல் இல்லையென்றால் பூப்பறிக்க யார் வேண்டுமானாலும் வரலாம்; காய்த்து முதிர்ந்த கனிகளைப் பறித்துச் சென்றால் தடுத்து நிறுத்த ஆள் இல்லாத அலங்கோல ஆட்சியாகக் கட்டியங்காரன் ஆட்சி இருந்தது.
கொள்ளையடித்துக் குட்டி அரசு நடத்தும் வேடுவர்கள் சிலர் இந்த இராசமாபுரத்தைச் சூழ்ந்தனர்; நகரின் புறப்பகுதிகளில் காட்டில் புல்லை மேய்வதற்கு ஊர் எல்லை கடந்து இடையர்கள் தம் மாடுகளை ஒட்டிச் சென்றனர். வேடுவரை எதிர்க்கும் ஆற்றல் அவர்களிடம் இல்லை. அந்த மாடுகளை அவ்வேடுவர்கள் வளைத்துக் கொண்டனர். போரில் இளைத்து ஊர் திரும்பியவர்கள் அப்பசுக்களின் உரியவரிடம் வந்து செய்தி அறிவித்தனர். வீட்டுக்கு வரும் ஆநிரைகளை எதிர்பார்த்துக் குரல் கொடுத்து ஏங்கும் கன்றுகளை வீட்டு மகளிர் கட்டிக் கொண்டு அழுது ஆறுதல் கூறினர்.
பசுவை இழந்த இடையர் அரசனிடம் சென்று அவன் கடை வாயிலில் நின்று முறையிட்டனர்; குறை கேட்டவன் படைகளை அனுப்பி நிரை மீட்டு வருக என்று ஆணையிட்டான். அவன் மைத்துனன் மதனன் தலைமையில் அரசனின் படை வீரர்கள் திரண்டு சென்றனர். முரட்டு வேடுவர்களை விரட்டி அடிக்க முடியாமல் அவரவர் தம் உயிரைப் பெரிதாக மதித்து உடம்புக்கு ஊறு இன்றி ஊர் திரும்பினர்.
பசுக்களைப் பறி கொடுத்தவர்கள் செய்வது அறியாது கலக்கம் அடைந்தனர்; இடையர்களின் தலைவனாகிய நந்தகோன் அவற்றை மீட்கும் பொறுப்பைத் தான் ஏற்றுக் கொண்டான்; ஊரில் இந்தச் சோம்பேறி இளைஞர்கள், “மாடு போனால் மறுபடியும் ஈட்டிக் கொள்ளலாம். இதற்காக யார் போரிடுவது” என்று சோர்ந்துவிட்டனர். நந்தகோனின் மகள் அழகில் மிக்கவள். அவளை அடைவதற்கு அந்தச் சேரியில் இருந்த இளைஞர் ஆர்வம் கொண்டிருந்தனர்.
‘எருதுகளின் கூரிய அம்பினை அஞ்சுபவனை இடையர் பெண் விரும்பமாட்டாள்’ என்று அவர்கள் வீரம் மதிக்கப்பட்டது. வீரத்திருமகனையே இடைப் பெண்கள் விரும்பினர். “வீரம் மிக்கவனுக்கு அவள் தாரம் ஆவாள்” என்று நந்தகோன் பறையறைவித்தான். ஆநிரையை மீட்டுக் கொண்டு வரும் வீரத்திருமகனுக்குத் தன் மகள் உரியள் எனவும், அவளோடு வரிசை என்ற பேரால் பசுக்கள் ஈராயிரமும் பொற்பாவைகள் ஏழும் தருவதாகவும் உரைத்தான்.
அந்த ஊர் இளைஞர்கள் செய்தி கேட்டார்கள். “கோவிந்தை” என்ற அந்தப் பெண்ணைக் கட்டிக் கொள்ளக் காத்திருந்தவர்கள் எல்லாம் காத தூரம் ஓடினார்கள். “கட்டி வெண்ணெய் போன்ற காரிகை கோவிந்தையானாலும் சரி, கொட்டிய முல்லை போன்ற நிறம் உடைய அரமகளிர் ஆயினும் சரி; வெட்டி வீழ்த்தும் செயல் உடைய வேடுவரை எதிர்க்க நம்மால் முடியாது” என்று விதிர்விதிர்த்து ஒடுங்கினர்.
சீவகனின் தோழர்களும், தம்பியரும் இச்செய்தி கேட்டனர். புதுமுகம் என்றால் நகைமுகம் காட்டும் பதுமுகன் சீவகனிடம் வந்து போர் தொடுப்போம் என்று துண்டினான். “நம்மால் இயலுமா” என்று சிந்தித்துப் பார்த்தனர். “அழகி ஒருத்தி கிடைப்பாளே” என்று
அங்கலாய்த்தான் பதுமுகன். “அதற்காக நாம் வைரக் கத்தியில் கழுத்து அறுத்துக் கொள்ள முடியுமா? யோசித்துச் செயல்படுவோம்” என்றான் புத்திசேனன்.
அரச இரத்தம் சீவகன் உடம்பில் ஓடியது; குடி மக்கள் அவலம் தீர்ப்பது தன் கடமை எனக் கருதினான். “அந்நியர்கள் வந்து சூறையாட தந்நிலை மறந்து அடி பணிவதா? இது நம் ஆண்மைக்கு இழுக்கு” என்று கூறிப் படை திரட்டினான்.
கட்டியங்காரனது படைவீரர்களை அடித்துத் துரத்திய வேடுவர் சீவகன் தனி ஒருவன் தானே இவனை வெல்வது எளிது என்று துணிந்து முன் வந்தனர்; அவர்கள் தமக்கு நிகரற்றவர் என்பதால் அவர்களை அச்சுறுத்தி அடிபணிய வைத்தான். கத்தியின்றி இரத்தமின்றிச் செய்த யுத்தமாக அது இருந்தது. அவர்கள் உயிர் பிழைத்தது போதும் என்று சொல்லி, பிடித்து வைத்த பசுவின் கூட்டத்தைக் கொண்டு வந்து விட்டனர்.
அவர்கள் தம் பகைவர்கள் அல்ல என்பதால் அவர்களை மன்னித்து விட்டான்.
அவர்கள் அது முதல் அந்த நகர் இருக்கும் திசை நோக்கித் திரும்பிப் பார்ப்பதைத் தவிர்த்தனர். கொள்ளையடிக்கப்பட்ட பசு நிரைகள் கொண்டு வந்து சேர்க்கப்பட்டன; அவை தம் கன்றுகளை நினைத்துக் கொண்டு மடியில் நிறைத்திருந்த பாலை அடி வயிற்றில் சுமந்து அவற்றிற்கு ஊட்ட விரைந்தன. அவற்றைக் கண்ட பாவையர் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டு சீவகனைப் பாராட்டினர்.
நந்தகோன் மகிழ்ச்சி இரட்டிப்பு ஆகியது; ஊரவர் ஆநிரைகள் வந்து சேர்ந்தமை, மற்றும் அரமகள் அனைய தன் மகளுக்கு உகந்த கணவன் நேர்ந்தமை, இவ்விரண்டும் காரணம். அவன் உள்ளக் குமுறலைச் சீவகன் முன் அள்ளிக் கொட்டினான்.
“தம்பீ! இதைக்கேள்; கேட்டபின் மறந்துவிடு; உன்னிடம் சொல்லத் தேவையில்லை; எனினும் சொல்லாமல் இருக்க முடியவில்லை; நாங்கள் கொடுங்கோன்மை மிக்க கட்டியங்காரன் ஆட்சியில் அகப்பட்டுக் கொண்டோம். பால் பொங்கிய இந்த நாட்டில் இப்பொழுது வறுமை குடிகொண்டுவிட்டது; நீர் நிறைந்த நாடு இது, அதனை வளைப்பதே நியதியாகக் கொண்டு வாழ்கிறான். இந்தக் கட்டியங்காரன், சச்சந்தன் அவன் ஒரு அரிச்சந்திரன்; அவன் மனைவி சந்திரமதி சுடுகாட்டில் தன் மகனை விற்று விடடு யாருக்காவது அடிமையாக இருக்க வேண்டும். அந்தச் சுந்தரி பெற்ற சுதந்திரன் இன்று எங்காவது வளர்ந்து கொண்டு இருக்க வேண்டும்; உன்னைப் பார்க்கும்போது அவன் நினைவுதான் எங்களுக்கு வருகிறது; ஏறக்குறைய உன் வயதுதான் இருக்கும் என்று நினைக்கிறோம். நிச்சயம் அவன் வளர்ந்து தந்தை இழந்த நாட்டை மீண்டும் பெறுவான் என்று நம்புகிறோம். அவன் ஒருவன்தான் இவனை வெல்ல முடியும். ஏன் என்றால் அவனுக்கு நாட்டு மக்கள் தக்க ஒத்துழைப்புத் தருவார்கள். அவர்களுக்கு எல்லாம் இந்த நம்பிக்கை இருக்கிறது; காரிருள் என்றும் வானத்தை மூடிக் கொண்டு இருக்க முடியாது. கொடுங்கோல் மன்னர்கள் நீடித்து இருந்தார்கள் என்று சரித்திரம் பேசியதே இல்லை; ஏதோ உன்னைப் பார்த்ததும் இந்த எண்ண அலைகள் எழுந்து மோதுகின்றன. உன்னிடம் இதைச் சொல்ல வேண்டும் போல் இருந்தது; ஏன் இவன் இதெல்லாம் பேசுகிறான் என்று நினைக்கலாம்; மன்னித்துவிடு; அதிகம் பேசி இருந்தால். இது பொது விஷயம், நாட்டு அரசியல்; இனிச் சொந்த விஷயத்துக்கு வருகிறேன்.”
“நாங்கள் இடையர் குலத்தில் பிறந்தவர்கள்; கண்ணன் யாம் வழிபடும் கடவுள்; அவனுடைய பெயரைத் தான் எனக்கு வைத்தார்கள். கோவிந்தன் என்று என்னை
அழைப்பார்கள். எனக்கு வாய்த்த மனைவி மகா குணவதியாவாள்; நான் கிழித்த கோட்டை அவள் தாண்டியது இல்லை; பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாதிருத்தல் என்பார்கள்; அதற்கு அவள் இலக்கணமாக விளங்குவாள். பையன் பிறப்பான் என்று தான் எதிர்பார்த்தேன். பெண் பிறந்து விட்டாள், பையன் பிறந்திருந்தால் அவன் இந்தச் சொத்துகளுக்கெல்லாம் வாரிசாக வந்திருப்பான். பெண் என்றதும் என் மனைவி மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள்; திருமகளே எங்கள் வீட்டில் குடி பெயர்ந்ததுபோல இருந்தது. அவள் பிறந்ததும் எங்களுக்கு எல்லா வகையிலும் நன்மைகளே வந்தன. இன்றைக்கு இதே ஊரில் பெரும் புள்ளியாக நான் இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் என் மகள்தான். அவள் பிறந்த அதிருஷ்டம்; சிரித்த அவள் முகத்தைப் பார்த்துவிட்டுப் போனாலே தொட்ட இடம் எல்லாம் பொன்னாக விளைந்தது. இரு நூறு பசுக்கள் என் பாட்டனார் வைத்திருந்தார். என் தந்தை இரண்டாயிரமாகப் பெருக்கினார்; இப்பொழுது என்னிடம் இருபதினாயிரம் பசுக்கள் உள்ளன. மாடு தான் செல்வம். நிலம் நீர் இவற்றில் விளையும் பயிர்கள் ஒரு நாட்டின் அடிப்படைச் செல்வம். மாடுகள் அதற்கு அடுத்ததாகக் கூறலாம். பொன்னும் மணியும் இல்லாமல் இருந்தாலும் உயிர் வாழ்ந்து விடலாம். பாலும் சோறும் இல்லாமல் இருந்தால் யாரும் வாழ முடியாது.”
“இவ்வளவு செல்வம் இருக்கிறது. இந்த ஊரிலேயே நான்தான் இடையர்களின் தலைவன். என் ஒரே மகளைத் தக்கவனுக்கு மணம் முடித்துத் தர விரும்புகிறேன்.”
“என் மகளைப் பற்றிச் சொன்னால்தான் உங்களுக்குத் தெரியும். வெண்ணெய் போன்று இனியள்; பால் போல் தீஞ்சொல்லினள், வெண்ணெய் உருக்கிய பசு நெய்போல் தளதளத்த மேனியள். கரும்பு வில் பார்த்திருக்கிறாயா? அதைப் பார்க்கவே வேண்டியதில்லை;
அவள் இரு புருவங்களைப் பார்த்தால்போதும். கயல் விழி என்று கேள்விப் பட்டிருக்கிறாயா? சிலர் அவளைக் ‘கயல்விழி’ என்றே கூப்பிடுகிறார்கள். கட்டமைந்த மேனி, தொட்டால் துவண்டு விடும் இடை, அழகுக்காகவே அவளை ஆராதிக்கலாம்; கோயில் சிலைபோல அவள் வடிவம் இருக்கும். இதெல்லாம் நான் சொல்லக்கூடாது. என்றாலும் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. இந்தப் பேரழகியை நீ மணந்தால் அவள் பெருமகிழ்வு கொள்வாள்; என் மனைவி கோதாவரி அவள் அப்படியே உடம்பு பூரித்து விடுவாள். பெண்ணைப் பெற்ற பயன் அவள் அடைந்தவள் ஆவாள்.”
“சாதி இடை நிற்கும் என்று நினைக்கிறாயா? அவள் உன் பெண் சாதியாகிவிட்டால் அப்புறம் சாதியைப் பற்றியே பேச இருக்காது. நாம்தான் சாதிகளைப் பற்றிப் பேசுகிறோம்; கடவுள்கள் எங்கே சாதியைப் பாராட்டுகிறார்கள். வள்ளியின் கணவன் பேரைச் சொன்னால் உள்ளம் குளிர்வது இயற்கை முருகன் குறமகளை மணந்து கொண்டானே அந்த உறவைக் கண்டித்துப் பார்வதி ஒரு வார்த்தையும் சொன்னதில்லையே! உனக்குத் தெரியும் தேவேந்திரன் மகள் தெய்வயானையை அவன் ஏற்கனவே மணந்திருக்கிறான்; அவளை விட வள்ளியின் மீது தான் முருகனுக்குக் கொள்ளை ஆசை, நப்பின்னை கேள்விப்பட்டிருக்கிறாய்; அவள் எங்கள் சாதிப் பெண்தான்; கண்ணன் அவளை மணந்து சுகப்படவில்லையா? சாதிகள் இல்லை என்று சொல்வதற்கு ஒரு பாரதி தேவை இல்லை; முக்கியமாகப் பெண் பிடித்து விட்டால் அப்புறம் எதைப் பற்றியும் யோசிக்க வேண்டாம்; நீ ஒரு முறை அவளை வந்து பார்த்தால் அதற்கு அப்புறம் நீ மறுக்க மாட்டாய்” என்று தொடர்ந்து பேசினான். தொடர்ந்து பேசுவது கேட்பதற்கு இனிமையாக இருந்தது. தான் அரசமகனாக இருந்து அவசரப்பட்டு முதல் தேர்வு கோனாரின் மகளையா மணப்பது என்று எண்ணினான். மற்றொன்று சேலை கட்டி
விட்டாலே அவளுக்குத் தாலி கட்டிவிடலாம் என்ற வெறி அவனிடம் இல்லை; காதலித்தவளையே மணம் செய்து கொள்ள வேண்டும் என்று தமிழ்க் காதலை அவன் அறிந்தவன். அதனால் அவளை ஏற்க அவன் இசையவில்லை. அதை எப்படி நாகரிகமாகச் சொல்வது?
“ஐயா! என் நண்பன் பதுமுகன்; அவன் உன் மகளைப் பார்த்து இருக்கிறான்; அவளை மணப்பதற்கு அவன் ஆசைப்படுகிறான். பையன் அழகாக இருப்பான்; சொன்ன பேச்சுக் கேட்டு நடப்பான்; வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கத்தக்கவன்; அந்த மாதிரி இடம் வேண்டுமென்று அவன் என்னிடம் பலமுறை சொல்லி இருக்கிறான்; பணக்கார வீட்டு மாப்பிள்ளையாக வேண்டும் என்பதில் அவனுக்கு நீண்ட நாள் ஆசை; அவள் சொன்னால் கேட்பான்; என் தந்தை கந்துக்கடன் கொஞ்சம் பிற்போக்குவாதி; செட்டிக் குடும்பத்திலேயே செட்டாக நகைபோட்டு வரும் திட்டமிட்ட சொத்து உடைய பெண்ணைத்தான் கட்டி வைக்க விரும்புவார்; அம்மா சம்மதிக்க வேண்டும். அவர்கள் பார்த்து வைக்கும் பெண்ணையே நான் மணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை உடையவர்கள்; சொத்துக் கணக்குகள் போட்டால் இந்தச் செட்டிமார்களோடு இடையன்மார்கள் நீங்கள் போட்டி போட முடியாது; உழவர்கள் நெல் விளைவிக்கலாம்; நீங்கள் பால்பண்ணை வைக்கலாம்; எனினும் இடைத் தரகர்களாக இருக்கும் வணிக மக்கள் தாம் பணக்காரர் ஆகி வருகிறார்கள். அவர்களோடு நீங்கள் போட்டி போடமுடியாது.
அதைப்பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருக்க எனக்கு விருப்பம் இல்லை. நீங்கள் பேசுவதைக் கேட்டு அந்தப் பழக்கம் எனக்கும் வந்துவிட்டது. பதுமுகனுக்குத் தருவதாக இருந்தால் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி” என்றான்.
“பெண்ணை ஒரு சொல் கேட்க வேண்டாமா?”
“பசுக்களைக் கொண்டு வரும் வீரன் யாராக இருந்தாலும் ஒன்று தானே! அவள் வேறு எப்படி எதிர் பார்க்கமுடியும்? அவள் அப்பா சொற்படி கேட்டு நடக்கும் அடக்கமான பெண் தானே ! இதற்குமேல் உங்கள் விருப்பம்” என்றான்.
அவர் அவசரப்படவில்லை; மனைவி கோதாவரியைக் கருத்துக் கேட்டார்.
“அவளைக் கேளுங்கள்” என்று கை காட்டிவிட்டாள்.
“அம்மா! நீ என்ன சொல்கிறாய்?” தந்தையின் வினா இது.
“நான் அவரைப் பார்த்திருக்கிறேன்” என்றாள் மணப்பெண்.
“சிறுசுகள் நாம் எவ்வளவு அடக்கிவைத்தாலும் பெரிசுகளின் கட்டுதிட்டங்களுக்கு எங்கே கட்டுப்படுகிறார்கள்.”
“பிடித்திருக்கிறதா?”
“நாங்கள் ஏற்கனவே பலமுறை சந்தித்து இருக்கிறோம். காதலித்தும் இருக்கிறோம் என்று சேர்த்துச் சொல்லச் சொல்கிறீரா அப்பா”.
“வேண்டாம்”.
மணம் நிச்சயிக்கப்பட்டது. பதுமுகன் மறுப்புச் சொல்லவில்லை; நண்பன் விரும்பியபடி நல்ல மாப்பிள்ளையாக நடந்துகொண்டான்.
மணச்சடங்கு முடிந்தது; இருவரும் சந்தித்துக் கொண்டனர்.
“ஏற்கனவே என்னை நீ பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டான்.
“இல்லை; பொய் சொன்னேன். எனக்கு உங்களைப் பிடித்திருந்தது; அதனால் அப்படிச் சொன்னேன்” என்றாள். அவள் சுறுசுறுப்பை அறிய முடிந்தது அவனால்.
“நான் பார்த்திருக்கிறேன்; அதனால்தான் ஒப்புக் கொண்டேன்” என்றான் அவன். “நாங்களும் அப்படித் தான். பசுவைப் பார்த்துத்தான் விலை பேசுவோம்; மடியையும் தொட்டுப் பார்ப்போம்” என்று நகைத்தாள்.
ஏழு பொற்பாவைகளையும் இந்த நற்பாவைக்குச் சீதனமாகத் தந்தான். ஈராயிரம் பசுக்களை அவனுக்கு உரிமையாக்கினான். அவன் கோன் ஆகமுடியாவிட்டாலும் கோனார் ஆகும் சிறப்பினைப் பெற்றான்.
“என்னை உங்களுக்குப் பிடித்து இருக்கிறதா” என்று கேட்டாள். “இதோ என் கையில் உன்னைப் பிடித்து இருக்கிறேன்” என்று கூறினான். சிரிப்பு அலைகள் எழுந்தன.