2 நாமகள் இலம்பகம்
சீவகனின் தந்தை சச்சந்தன் ஆவான்; அவன் ஆண்ட நாடு ஏமாங்கத நாடு ஆகும்; தென்னையும், கமுகும், மாவும், பலாவும், வாழையும் செழித்து வளர்ந்தன. வானம் பொய்க்காததால் தான தருமங்கள் சிறந்து ஓங்கின. கல்வி கற்ற சான்றோர்கள் நாட்டுக்கு அறிவொளி பரப்பினர். செல்வம் ஈட்டிய வணிகர்கள் தாம் ஈட்டிய செல்வத்தைப் பகுத்து அறம் வளர்த்தனர். கலைகளில் வல்ல காரிகையர் ஆடலும் பாடலும் நிகழ்த்தி மக்களை இன்பமுறச் செய்தனர்.
உழவர்கள் கள்ளுண்டு களித்துப் பள்ளுப் பாட்டுப் பாடி மகிழ்ந்தனர். நெல்லை மேய வந்த புள்ளினத்தை ஒட்டுவதற்கு அவர்கள கல்லைத் தேடவில்லை; காதில் அணிந்திருந்த குழையைக் கழற்றி அவற்றின் மீது வீசினர் என்றால் அவர்கள் செல்வச் சிறப்புக்கு இதைவிட வேறு ஒர் எடுத்துக்காட்டுத் தர இயலாது.
சச்சந்தன் ஆண்ட நகரம் இராசமாபுரம் ஆகும். அகழிகளும், மதில்களும் அந்நகரைச் சுற்றி வளைத்துத் தக்க அரண்களாக அமைந்தன. நால்வகைப் படைகளுடன் நானிலம் போற்றும்படி அவன் ஆட்சி செய்து வந்தான். கட்டிளங் காளையான சச்சந்தன் தன் மாமன் மகளை மணம் செய்து கொண்டான்; அவள் உருவில் ஊர்வசியை நிகர்த்து இருந்தாள். எழில் நிறைந்த இப்பேரழகியை மணந்தவன்; அவளைப் பொழில்களுக்கு அழைத்துச் சென்று இடையறா இன்பம் நுகர்ந்தான். அவன் மனம்
ஆட்சியில் செல்லவில்லை; அதனால் தன் நம்பிக்கைக்கு உரிய அமைச்சன் கட்டியங்காரனை விளித்துச் சிறிது காலம் ஆட்சிப் பொறுப்பை அவனிடம் தருவது என்று தீர்மானித்தான்.
கட்டியங்காரன் அழைப்பிக்கப்பட்டான். “நீ இதற்கு அட்டி ஒன்றும் கூறக்கூடாது” என்று முன்னுரை கூறினான்.
“அவ்வளவு மட்டி அல்ல நான்; நான்கு தலைமுறைகளாக அமைச்சியல் அறிந்த குடும்பத்தில் பிறந்தவன்; எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் தான் மெய்ப்பொருள் என்று சொல்லிப் பழகியவன் யான்; சொல்லுங்கள் கேட்கிறேன்” என்றான்.
“சுமை என்றாலும் அது அமையும் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்; ஒய்வில் செல்ல விரும்புகிறேன். சாய்வதற்கு நீ உதவ வேண்டும்; நான் வந்து பொறுப்பேற்கும் வரை இந்த ஆட்சியை நீ ஏற்றுத் தாங்கி நடத்தவேண்டும்; நம்பிக்கை நட்சத்திரம் நீ; அதனால் தம்பி என உன்னை மதித்துத் தருகிறேன்; ஏற்று நடத்துக” என்றான்.
ஆட்சி அவனிடம் தரப்பட்டது. அவன் வேண்டா விருப்போடு பதவியை ஏற்றுக்கொண்டான். அந்தப் பூனை பால் குடிக்காது என்று நம்பினான். சச்சந்தனை இல்லற இன்பம் ஈர்த்தது; நாட்டின் நல்லறத்தை மறந்து விட்டான். தோள்வலி காட்டி ஆட்சியைச் சுமக்க வேண்டியவன் வளையலுக்கு வளைந்து தாழ்ந்து விட்டான்.
கதைகள் பல பேசினர்; விடுகதைகள் பல விடுத்து வினாக்கள் தொடுத்தனர். நாடகம் நயந்தனர்; இன்னிசைப் பாடல் கேட்டனர். அந்தப்புரத்தில் சுந்தரிகள் வந்து அவனைச் சந்தித்து அரசியைப் புகழ்ந்து வந்து உரையாடினர். சிலம்பு ஒலியும், வளையல் ஒலிகளும், மேகலை ஒலியும் செவிகளில் விழுந்து இனிய சங்கீதத்தைத் தந்தன.
மாலைப்பொழுது ஆடவேண்டிய விளையாட்டை இடைவேளையிலும் தொடர்ந்தனர். கவலை என்பது என்ன என்று தெரியாமல் அவளை அவன் இன்புஊட்டி வந்தான்; அவளும் அவன் மீட்டும் கீதத்துக்கு யாழின் நரம்புகளாகச் செயல்பட்டாள்; நாதம் ஒலித்துக்கொண்டே இருந்தது. இடையில் நரம்பு அறுந்து விட்டது போன்ற கீறல் உண்டாகியது.
“என்ன ஏதோ மாதிரியாக இருக்கிறாயே ?” என்றான்.
“எனக்கு ஏதோ புதிய அச்சம் தோன்றுகிறது; ஏன்? எதற்கு? என்று தெரியவில்லை.”
“காரணம் ?”
“நீங்கள் கவலை இல்லாமல் வெய்யில் படாமல் குளிரில் உறைந்து கிடைக்கின்றீர். எந்தக் கடமையிலும் நாட்டம் இல்லாமல் இங்கு வாட்டமின்றி இருக்கின்றீர்; ஏதோ எங்கோ ஒட்டை விழுந்துவிட்டது போல் தோன்றுகிறது.”
“கோட்டை விடுவேன் என்று நினைக்கிறாயா”
“செல்லும் கோடு நேர்க்கோடாக இருப்பது போல் தெரியவில்லை.”
“கலைகள் அறிந்த உனக்குக் கணக்குக் கூடத் தெரியுமா?”
“கனவு சாத்திரம் கற்றிருக்கிறீர்களா?” என்றாள்.
“ஒய்வாக இருக்கும்போது அதையும் கற்றிருக்கிறேன்.”
“யான் கண்ட கனவு; அதன் பலன் கூற முடியுமா?”
“விடுகதை விடுத்த எனக்கு இந்த இடுகதை விடுவிக்க இயலும்” என்றான்.
“அசோகமரம் ஒன்று நன்கு செழித்து வளர்ந்தது; திடீர் என்று அது பட்டுப்போகிறது; அடிமரம் காய்ந்து
விடுகிறது. அந்த இடத்தில் புதிய செடி ஒன்று முளைக்கிறது. அதன் தலை முடியில் எட்டு மாலைகள் விழுந்து அதை அழகு செய்கின்றன. இது நான் கண்ட கனவு” என்றாள்.
“பழமை அழிகிறது; புதுமை தோன்றி வளர்ந்து சிறப்படைகிறது. இதுதானே வாழ்க்கை நியதி” என்று விளக்கினான்.
“உங்களை இது எந்த அளவில் பாதிக்கும்?” என்று கேட்டாள்; அவளுக்கு மேலும் விளக்கம் தர அவன் விரும்ப வில்லை.
“கனவுகள் பலிப்பதும் உண்டு; பலிக்காமல் போவதும் உண்டு” என்று மழுப்பினான். “சோதிடம் போன்றதுதான் இது” என்று அமைதிப்படுத்தினான், நாட்கள் சென்றன; உழுதவன் நிலத்தின் விளைச்சலைக் காண்கிறான்; அவளோடு கழித்த நாட்கள் பழுது ஆகவில்லை; கன்னிமை கனிந்து தாய்மையாகிறது; பெண்மையின் உயர்வுக்குக் காரணமான தாய்மை அவளை வந்து அடைந்தது; வெறி கொண்டு விலங்காக வாழ்ந்தவன் நெறிகாண முயன்றான். புலன் இன்பம் நுகர்ந்தவன் தன் புலன் அறிவு செயல்படத் தொடங்கியது; அவள் உருமாற்றம் அவன் உள்ளத்தைத் திருத்தியது.
அவள் தோள்கள் மெலிந்தன; வாய் விளர்த்தது; கண் பசந்தது. முலைக்கண் கரிந்தது; செப்புப் போன்ற அவள் கொங்கை பால் சுமந்தது. இடை பருத்தது: சூல் உற்றாள்; அதனால் அவள் இள நலம் தொலைந்தது. அவனுக்கும் கவர்ச்சி குறைந்தது. அவள் வயிற்றை அவ்வப்பொழுது உதைத்து உயிர்த் துடிப்பைக் காட்டி வந்த மதலையின் எதிர்காலம் அவன் கண்முன் நின்றது.
கட்டியங்காரன் ஆட்சியைத் தராவிட்டால், எதிரியாக மாறிப் போர் தொடுத்தால் அந்த நினைவு அவனை அலைக்கழித்தது. தான் அழிந்தாலும் தன் மனைவியையும் வயிற்றில் உருவாகும் உதயகுமரனையும் அப்புறப்படுத்த வேண்டும்; அவர்கள் தப்பித்துச் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்து அதற்கேற்ற உபாயத்தைத் தேடினான்.
மயனுக்கு நிகரான தச்சனை அழைத்து மயிற் பொறி ஒன்று செய்து தருமாறு வேண்டினான். அது பறக்கும் தட்டாக இருக்கவேண்டும் என்று விரும்பினான். சிற்ப நூல் வல்லவன் தன் கற்பனை கொண்டு ஒப்பனை மிக்க மயிற் பொறி ஒன்றைப் பழைய கந்தல் துணிகளையும், பருத்தியையும், அரக்கையும், நூலையும், பிசினையும், மெழுகையும் வைத்து நன்கு பக்குவமாகச் செய்து தந்தான். அதை இயக்குவதற்குத் தக்க விசைப்பொறிகளையும் அமைத்துக் கொடுத்தான். அதனை மேலே செல்லவும் கீழே இறக்கவும் திருகுவதற்கு வேண்டிய கருவிகளைப் பொருத்தி வைத்தான். ஏழே நாளில் இதை அழகுறச் செய்து முடித்தான். அதில் ஏறி மேலே செல்லவும், விண்ணில் பறக்கவும், கீழே இறங்கவும் தக்க பயிற்சியும் தந்தான்; ஆபத்துக் காலத்தில் தப்பித்துச் செல்ல அவளைத் தகுதி படைத்தவள் ஆக்கி வைத்தான்; அவளுக்கு அது உல்லாசப் பயணமாகவும் இருந்தது.
கட்டியங்காரன் அமைச்சர் அவையைக் கூட்டினான். அவர்கள் ஆமோதிப்பு உரையை எதிர்பார்த்தான். ஆட்சியைச் சில நாள் ஏற்று நடத்தினான். அதில் கிடைக்கின்ற ஆதாயங்களை அறியத் தொடங்கினான். ஏன் இதைத் தானே தொடர்ந்து நடத்தக்கூடாது என்ற யோசனை தோன்றுகிறது. நீர் வெள்ளத்தில் நீந்திச் சுகம் காணும் வேந்தன் நிச்சயம் கரை ஏறித்தான் ஆகவேண்டும். அக வாழ்க்கையில் அகப்பட்டவன் புறப்பொருள் பற்றிச் சிந்திக்காமல் இருக்கமாட்டான்; வந்து திரும்பக் கேட்டால்
என்ன சொல்வது? “உங்கள் கருத்து யாது?” என்று கேட்டான். “இல்லை என்று மறுத்துச் சொன்னால் என்ன?” என்று துணிந்து கேட்டான்.
“இதனை நாட்டு மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்; நிழல் நிஜமாக ஆக முடியாது; சட்டம் இடம் தராது; அது மட்டுமல்ல; இது நம்பிக்கைத் துரோகம். மனைவியைப் பாதுகாத்துக் கொண்டிரு என்று சொன்னால் அவளை உடன் பிறந்த சகோதரியாக நினைக்க வேண்டும். அன்றி அவளை ஏன் தன் இன்பத்துக்குத் துணையாக ஆக்கிக் கொள்ளக்கூடாது என்று நினைப்பது தவறு. தீட்டிய மரத்தையே கூர்பார்ப்பது போன்ற செய்கை இது; நீதி நூல்கள் இதற்கு இடம் தராது; பிறன் மனைவியை நினைப்பவன், கன்னியைக் காமத்தில் கலக்கியவன், நன்றி கொன்றவன், அரசனுக்குக் கேடு சூழும் அமைச்சன் இவர்கள் எல்லாம் இம்மையில் குட்ட நோயில் கெட்டு அழிவார்கள். இறந்த பின் நரகத்தில் இடர்ப்படுவார்கள்” என்று அறிவுரை கூறிப் பார்த்தனர்.
அவன் தேறுவதாக இல்லை; அவன் மைத்துனன் மதனன் கண் சிவக்கப் பேசினான்; “பண் மிகுக்க எங்களுக்கு ஏற்பப் பாட வேண்டியவர்கள் நீங்கள், அறம் சிறக்கப் பேசுவது தகாது; ஆண்டவர்கள் நாங்கள்; எங்கள் சொற்களைத் தாண்டிப் பேசுவது ஏற்க முடியாது; படை எடுத்துப் பாரைக் கட்டிக் காப்பது எம் திட்டம்; அதனால் சச்சந்தன் அடையப் போவதும் கட்டம்; இது எங்கள் இட்டம்” என்று கூறி முடித்தான். அவர்களைத் தடுக்க முடியாமல் போய்விட்டது அந்த அமைச்சர் வட்டம்.
போர்முரசு கொட்ட வைத்தான்; இரு திறத்துப் படைகளும் திரண்டன; அரசன் இருந்த அந்தப்புரத்தையும் அதைச் சுற்றி இருந்த அரணினையும் சூழ்ந்தனர். புகையைக் கண்டு நெருப்பு அணுகிவிட்டது எனச் சச்சந்தன்
அறிந்தான். விசயையின் வயிற்றில் வளரும் மாணிக்கத்தைக் காக்கும் பொறுப்பினை உணர்ந்தான். வாள் கொண்டு போருக்குப் புறப்பட்டவன் ஆள் அனுப்பி விசயையை மயிற் பொறியில் ஏறிச் செல்லுமாறு அறிவித்தான். விசயை மயிலேறிச் செல்லும் முருகன் ஆனாள்; அது பறக்கும் தட்டாகப் பறந்து சென்றது; அக நகர் விட்டு விண் நோக்கிப் புறநகர் நோக்கிச் சென்றது; போர் மூண்டுவிட்ட செய்தியை அங்குச் செவியில் வந்துவிழுந்த பேர் ஒலி அறிவித்தது; அது அவலக் குரலாக மாறியது; அரசன் இறந்துவிட்டான் என்பதை அவளால் அறிய முடிந்தது. விசையை முடுக்க மாட்டாமல் விசயை அசைவற்றுப் போனாள்; பொறி தானாகக் கீழே இறங்கியது.
கதிரவன் கால் சாய்ந்து காரிருளைத் தோற்றுவித்தது. இருள் சூழ்ந்த சூழல்; தெரு விளக்குகளுக்குப் பதிலாக ஈம எரி ஒளி தந்து கொண்டிருந்தது. அழகியர் ஆடல்களைக் கண்ட அவள் பேய்கள் கூத்தினைக் கண்டாள். அவற்றின் நிழல்கள் எங்கும் அசைந்து ஆடிக் கொண்டிருந்தன; ஆந்தைகள் அலறின; கோட்டான்கள் கூவின; நரிகள் ஊளை இட்டன; அதனால் அந்த இடம் வாழ்க்கைப் பயணத்தின் முடிவிடம் என்பதை அறிந்தாள்; முற்றிய கரு வயிற்றில் இருக்க விரும்பவில்லை; மருத்துவர் உதவி வந்தால்தான் வெளியே தலை காட்டுவேன் என்று அது வேலை நிறுத்தம் செய்யவில்லை. இந்த உலகத்தைக் கண் திறந்து பார்க்க நினைத்தது.
அங்கேயே அவள் அக்குழந்தையைப் பிரசவித்தாள்; அதன் அழுகுரல் கேட்டு அவள் அகம் மலர்ந்தாள்.
அந்த இடுகாட்டில் நடு இரவில் அவளுக்குப் பக்கத்துணை யாரும் இல்லை என்பதைத் தெய்வமே தாங்கிக் கொள்ள விரும்பவில்லை. புறங்காட்டில் காவல் தெய்வமாக இருந்த பெண் தெய்வம் ஒன்று சண்பகவல்லி
என்ற பெயரில் கூனி வடிவில் அங்கு வந்து உதவியது. பழகிய முகம் போல் இருந்தது; அது தெய்வம் என்பதை விசயை அறிந்திலள்.
இருண்ட அவள் வாழ்வில் மின்னல் கீற்றுப்போல அந்தச் சின்னகுழந்தை அவளுக்கு ஆறுதல் தந்தது. வாழ்க்கையில் ஒளி கிடைத்தது போல இருந்தது; நாட்டைப் பிரிந்தாள்; கணவனை இழந்தாள்; துயரத்தில் உழந்தாள்; அந்த நிலையில் அவனைக் கண்டு மகிழ்ந்தாள்; கேட்டது தரும் கற்பகத்தரு போலவும், வேட்டது கொடுக்கும் காமதேனு போலவும் நல்கும் ஒளிமிக்க சிந்தாமணியாக அவன் அவளுக்கு விளங்கினான். கண்ணே மணியே என்று கொஞ்சாமல் தன் வாழ்க்கைக்கு ஒளி காட்டும் சிந்தாமணியே என்று அழைத்து மகிழ்ந்தாள். கொஞ்சும் சூழ்நிலையில் அவள் இல்லை; அஞ்சும் சூழ்நிலையில் அவள் கிடந்தாள்.
உதவிக்கு வந்த தெய்வம் அவளுக்கு வழி காட்டியது. அலமந்து நடந்து செல்வதற்கு அல்ல; அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதை அறிவிக்க.
“அரச மகன் பூமித்தாய் பெற்ற திருமகனாக அவதரித்துள்ளான்; முடிவிடத்தை முதலிடமாகக் கொண்டான். பிறப்பினால் ஒருவர் உயர்வு அடைவதில்லை. வளரும் சிறப்பினால்தான் அவன் மேன்மை அடைவான். இங்கே வெட்டிக்குப் போட்டு வைத்தால் இங்கே காவல் காக்கும் வெட்டியான்தான் எடுத்துச் சென்று வளர்ப்பான்; அதிகமாகப் போனால் அவன் ஒரு அரிச்சந்திரன் ஆக முடியும்; நீ அவனை எப்படி வளர்க்க முடியும்? கட்டியங்காரன் அறிந்தால் முளையிலேயே களைந்து விடுவான். அதனால் அவனைத் தக்கவரிடத்து விடுவதுதான் நீ செய்யத்தக்கது” என்று கூறினாள்.
அறிவு மிக்க அன்னையாகையால் குழந்தையைச் செல்வச் செருக்கு மிக்கவரிடம் ஒப்படைக்க ஒருப்பட்டாள். பேழையிலே வைக்கப்பட்ட கன்னனைப் போல் அவன் அங்கே கிடத்தப்பட்டான். தேர் ஒட்டி எடுத்து கன்னனைப் பேரும் புகழும் வாய்த்த மன்னன் ஆக்கினான்; அதே போலக் கந்துக்கடன் என்னும் வணிகன் ஒருவன் தன் மகவைப் பறி கொடுத்துவிட்டுத் தறிகெட்டு வந்து கொண்டிருந்தவன் அங்கே கிடத்தப்பட்ட குழந்தையைக் கண்டான்; வறியவனுக்குத் தனம் கிடைத்தது போலவும், விழியற்றவனுக்கு ஒளி கிடைத்தது போலவும் அவன் மகிழ்ந்தான்; தன் மனைவி சுநந்தையிடம் தந்து அவள் சிந்தையில் தோன்றிய துயரைத் துடைக்க முடியும் என்று முடிவு செய்தான்.
அந்தக் குழந்தை கையில் அரச மோதிரம் இருந்தது; அதை அவன் அன்னை போட்டு வைத்தாள். கள்ளக் காதலில் உள்ளம் பறிகொடுத்தவள் சுமக்க மாட்டாமல் இறக்கி வைத்த சுமை அல்ல அது; அரச மகனாகத் தான் இருக்க வேண்டும் என்பதையும் அறிந்து கொண்டான்.
அந்தக் குழந்தையை அவன் கையில் எடுத்த போது அது தும்மியது; அப்பொழுது கம்மிய குரலில் ‘சீவ’ என்று மறைந்திருந்த விசயை வாழ்த்திய ஒலியைக் கேட்டான். சீவன் இழந்த அவளுக்கு இவன் சீவனாக அமைந்தான்.
இறந்த மகவைப் புதைக்க வந்தவன் அதைப் புதைத்து விட்டுப் புதையல் கிடைத்ததைப் போல இப்புதியவனை எடுத்துக்கொண்டு வீடு நோக்கி விரைந்தான். பத்து மாதம் வயிற்றில் சுமந்து காத்த மகவை இறக்கி வைத்து அதைக் கண்டு மகிழ வேண்டியவள் அதனை மார்போடு அணைத்துப் பாலூட்டக் காத்திருந்தவள். வாய் திறந்து அழாத அந்தக் குழந்தையைச் சடமாகக் கண்டவள்; இப்பொழுது மனம் திடப்படுத்திக்கொள்ளப் புதிய செய்தி கொண்டு வந்தான்.
“அவன் ஆயுள் கெட்டி; விழித்துக் கொண்டான்” என்று அவளிடம் சொல்லி அக்குழவியைக் கொடுத்தான். தன் மழலைச் செல்வம் தன்னிடம் சேர்ந்துவிட்டது என்பதால் அவள் மகிழ்ந்து அவனை வாரி எடுத்து அணைத்துக்கொண்டாள்.
செத்தவன் உயிர் பிழைத்தான் என்ற செய்தி வியப்பும் மகிழ்ச்சியும் விளைவித்தது. பறை அடித்த இடத்தில் முழவு ஒலித்தது. மகிழ்ச்சி ஆரவாரம் பெருகியது. கந்துக்கடன் மகன் பிழைத்தான் என்ற செய்தி கட்டியங்காரன் காதுக்கு எட்டியது. கந்துக்கடன் அவனுக்கு நெருங்கிய பந்துவைப் போலப் பழகியவன், நாமாவளி பாடி நல்ல பெயர் எடுத்தவன். அதனால் அவனும் பொன்னும், வாழ்த்துரையும் அனுப்பிவைத்துத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான். வந்தவர்க்கு எல்லாம் பொன்னும் பொருளும் வாரித் தந்து தன் மகிழ்ச்சி வெள்ளத்தைக் கந்துக்கடன் தெரியப்படுத்தினான்.
சிறையில் தேவகி வயிற்றில் பிறந்த கண்ணன் யசோதையால் வளர்க்கப்பட்டதைப் போல இடுகாட்டில் பிறந்த சீவகன் சுநந்தையால் எடுத்து வளர்க்கப்பட்டான். இராசமாபுரம் கோகுலம் ஆகியது, பிறக்கும் குழந்தை சிறப்படைய அதற்குப் பெயர் சூட்டி அவனைப் பெரியோன் ஆக்க விரும்பினர்; சீவகன் என்ற பெயரே சிறந்தது என்று கந்துக்கடன் கழறச் சுநந்தை அதற்குத் தடை சொல்லவில்லை; செல்வக்குடியில் அவன் வளர்ந்தமையின் செவிலித் தாயர் அவனைச் செம்மையாகச் சீராட்டிப் பாலூட்டி வளர்த்தனர்; செவிக்கு வீரம் மிக்க கதைகளைச் சொல்லி அவனைப் புவிக்கு நாயகன் ஆக்க வழி செய்தனர்.
தாலாட்டி வளர்த்தபோது அவனுக்கு இசைக் கலை அறிமுகம் ஆகியது. முக்கால் தேரைச் செலுத்த வைத்து அவனை நடைபயிலச் செய்தனர்; யானை, தேர், குதிரை
இவற்றின் பொய்ம்மை வடிப்புகளில் அவனை அடியெடுத்து வைக்கக் கற்றுத்தந்தனர். ஊர்திகளைத் தள்ளி உரம்கொண்ட நெஞ்சும் உடலும் பெற்றான்.
பூக்களில் தாமரை போன்றும், விண்மீன்களிடையே ஒளிவீசும் திங்களைப் போன்றும், அடர்ந்து எதிர்ப்பதில் சிங்கம் போன்றும் ஆற்றலோடும் வீரத்தோடும் தனித்துச் செயல்பட்டான். மழலை மொழி பேசி மகிழ்வித்த அவனுக்கு எழுதப்படிக்கக் கற்றுத்தர விரும்பினர். அவனை ‘மையாடுக’ என்று சொல்லி ஒலை தந்து எழுத வைத்தனர். ஆரம்பக்கல்வி ஆறாம் வயது வருவதற்குள் அவனுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அவன் வாழ்க்கையின் முதல் அத்தியாயம் நாமகள் இலம்பகம் ஆகியது. சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்; வைத்ததொரு கல்வியும் மனப்பழக்கம் என்பதற்கு ஏற்பத் தொடர்ந்து கல்வி கற்றான். ‘கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்னும் குறட்பாவின் கருத்துப்படி அவன் கற்கவேண்டிய நூல்களைக் குற்றமறக் கற்றான்; சான்றோர்கள் நூல் வழியாகத் தெரிவித்த அறக் கருத்துக்களை அவன் ஆழ்ந்து கற்று ஒழுக்கத்தால் சிறந்த நன்மகனாக வளர்ந்தான். கல்வி கேள்விகளில் சிறந்ததோடு ஆன்ற ஒழுக்கம் மிக்கவனாக வளர்ந்தான்.
வயதுக்கேற்பப் படிப்பும் கலைகளும் கற்றான்; வீரனாவதற்கு வேண்டிய வித்தைகளைப் பெற யானை ஏற்றம், குதிரை ஏற்றம், மற்போர், விற்போர் முதலிய படைக்கலப் பயிற்சிகளைக் கற்று நிகரற்ற வீரம் உடையவனாகத் திகழ்ந்தான். யாழ், குழல் முதலிய இசைக் கலைகளிலும் தேர்ந்தவனாக விளங்கினான்.
கல்வி நலனும் படைப்பயிற்சியும் கற்ற அக்காளையை அவன் ஆசிரியராக விளங்கிய அச்சணந்தி என்பார் அருகு அழைத்து அன்பு குழையப் பேசி எதிர்காலத்தை
வரைபடம் காட்டி அறிவுறுத்தினார். அவர் இராசமா புரத்தில் நீண்ட காலம் தங்கியவர்; அதனால் அவர் அங்கு நடந்தவை எல்லாம் கேட்டு அறிந்தவராக இருந்தார். கந்துக்கடன் இல்லத்துக்கு வந்தபோது சீவகனின் தாய் சுநந்தை அவரை இன்முகம் காட்டி நல்வரவு தந்து அவர் பசிக்கு உணவு அளித்துக் களைப்பைப் போக்கினாள்; பச்சிளம் குழந்தையாக இருந்த இந்தப் பவித்திரனைக் கண்டதும் அவர் இதுவரைதான் உழந்து வந்த யானைத் தீ என்னும் நோய் நீங்கப் பெற்றுப் பொலிவோடு விளங்கினார். அன்பும் பண்பும் மிக்க அந்தக் குடும்பத்தில் அடி எடுத்து வைத்தபோதே அவர் நோய் நொடி நீங்கி நலம்மிக்க யாக்கை பெற்றார். அது அவருக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் தந்தது.
காலைக் கதிரவனைப் போல ஒளி வீசிய அந்த வாலைக் குமரனுக்குத் தான் அறிந்த படைக்கலப் பயிற்சியைக் கற்றுத்தருவதில் பெருமை கண்டார். நாள் செல்லச் செல்லச் அவன் நாட்டு இளவரசன் என்பதையும். அறிந்து கொண்டார். எனவே அவனுக்குக் கல்வி கற்பிப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி கொண்டார்.
இதுவரை சீவகன் அறியாத சில உண்மைகளைக் கதை சொல்வது போல அவனுக்கு எடுத்து உரைத்தார்,
“நான் சொல்வதை நீ கவனமாகக் கேட்க வேண்டும். இந்த நாட்டின் ஆட்சி சீர்குலைந்து இருக்கிறது, காரணம் தெரியுமா? மன்னவன் மக்களுக்கு உயிர் போன்றவன்; அவன் வறியவன் காக்கும் வயல் போல மக்களைக் காக்க வேண்டும். நாடு என்பது நிலத்தால் சிறப்புப் பெறுவது இல்லை; அது மேடு ஆயினும் சரி, காடு ஆயினும் சரி; விளையும் நிலமாயினும் சரி; விளையாத கரம்பு நிலமாயினும் சரி; அதனால்மட்டும் மக்கள் வளமுடன் வாழ்வது இல்லை; அதை ஆளும் அரசன் நாட்டைச்
செம்மையாக ஆட்சி செய்தால்தான் செழுமை சேரும்; அறம் நிலைக்கும்; மக்கள் மக்களாக வாழ்வர்.”
“உண்பதற்கு உணவும், உடுக்க உடையும், வாழ வசதிகள் மட்டும் இருந்தால் போதுமா! மாந்தர் ஒழுக்கம் மிக்கவராக வாழ வேண்டும்; இன்று எந்த நிலையில் நாடு இருக்கிறது; தலைவன் ஒழுக்கக் கேடனாக இருக்கிறான். காமக் கணிகையரை ஏமமாக அடைந்து இன்பக் கேளிக்கையில் ஈடுபட்டு நாட்டுப் பொருளை நாசம் ஆக்குகிறான். நல்லோர் உரைகளை நாடாது அல்லோர் இழி சொற்களைக் கேட்டு நெறி தவறுகிறான்.”
“இந்த நிலை மாறவேண்டும். அப்பொழுதுதான் நாடு சீர்ப்படும்” என்று கூறினார்.
“அவன் நாட்டு அரசன் ஆயிற்றே, அவனை எப்படி அகற்றமுடியும்?”
“அதுதான் இல்லை; இதிலே ஒரு வரலாறே அடங்கி இருக்கிறது. இந்த நாட்டை ஆண்டவன் சச்சந்தன் என்பவன்; அவன் ஆட்சிக் காலத்தில் நாடு சீராக இருந்தது. அவன் வயதில் இளைஞன், அதனால் அவன் ஒரு தவறு செய்துவிட்டான். அவன் மாமன் மகளை மணந்து ஆட்சியை இந்தக் கட்டியங்காரனிடம் ஒப்புவித்துத் தன் புது மனைவியோடு இன்பமாகக் காலம் கடத்தினான். கட்டியங்காரன் அப்பொழுது அமைச்சனாக இருந்தான். அவன் அரசனைக் கொன்று ஆட்சியைத் தனது உடைமையாக்கிக் கொண்டான்.”
“அரசனுக்குப் பிள்ளை குட்டி எதுவும் பிறக்க வில்லையா?”
“புத்திசாலித்தனமாக மயிற்பொறி ஒன்றில் தன் மனைவியை ஏற்றி அனுப்பினான்; அது இடுகாட்டில் இறங்கியது; அங்கே அவன் மனைவி ஒரு மகனைப் பெற்றாள்.”
“அவன் உயிரோடு இருக்கிறானா? அவன் என்ன செய்கிறான்?”
“ஏறக்குறைய உன் வயதுதான் இருப்பான். அவன் எங்கே வளர்கிறானோ என்ன செய்கிறானோ அவன் தாய் என்ன ஆனாளோ எதுவும் தெரிய வாய்ப்பில்லை” என்றார்.
“ஐயா! அவன் இருக்குமிடம் சொன்னால் அவனை அழைத்து வருவேன்; இவனை எதிர்த்து ஆட்சியை அவனிடம் ஒப்புவிப்பேன்; மக்களைப் புரட்சி செய்யச் சொல்லித் துண்டி விடுவேன்” என்றான்.
“அவசரப்படாதே; இன்னும் ஒரு வருஷம் போகட்டும்; அதற்குப் பிறகுதான் இவனை எதிர்க்க முடியும்” என்றார்.
“முதலில் அவனை எப்படித் தேடுவது? அதைச் சொல்லுங்கள்” என்றான்.
“நீ நேரே வீட்டுக்குப் போ; நிலைக் கண்ணாடி முன் நில், அதில் ஒருவன் நிழலாடுவான். அவன்தான் அந்த இளைஞன், அரச மகன்; சீவகன்” என்றார்.
“அவசரப்படாதே; நீ இப்பொழுது கந்துக்கடனின் மகன்; பிறப்பால் அரசமகனாயினும் அதற்கு வேண்டிய சிறப்புகள் உன்னிடம் இல்லை; அதற்கு வேண்டிய தகுதிகளை உண்டாக்கிக் கொள்ள வேண்டும்; அரச மகளிரை மணந்து அவர்கள் துணை கொண்டு படை திரட்டி அவனை எதிர்க்க வேண்டும். நீ இப்பொழுது தனி மனிதன்; தனிமரம் தோப்பாகாது; படைத்துணை இல்லாமல் அவனை எதிர்க்க இயலாது; காலம், இடம், துணைவலி மூன்றும் சேரும்போது எதிர்க்கவேண்டும்” என்று அறிவுரை கூறி அவனை விட்டுப் பிரிந்தார்.
அவர் தம் வரலாற்றை அவனுக்கு எடுத்துக் கூறினார். வெள்ளிமலை என்னும் பகுதியில் வாரணவாசி என்னும்
ஊருக்கு அரசனாக இருந்தவர்; தவம் செய்ய வேண்டி நாட்டைத் தம் மகனிடம் ஒப்புவித்துத் தென்புலம் நோக்கி வந்தார். வரும்போது யானைத் தீ என்னும் நோய் அவரை வாட்ட அது தீரப் பல தலங்களும் சுற்றி வந்தார். இராசமாபுரம் வந்த பிறகு சுநந்தையின் கைச்சோறு உண்ட பின் தன் மெய்ச்சோர்வு நீங்கி நோயற்ற வாழ்வை அடைந்தார். அதற்குக் கைம்மாறாகவே சீவகனுக்குப் படைக்கலப் பயிற்சி அளித்தார். இவ்வரலாற்றைச் சொல்லிச் சீவகனிடம் விடைபெற்றார்.