="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

7 கடவுள் அவதாரங்கள்

5. கடவுள் அவதாரங்கள்



அடுத்துப் படைப்புக் கொள்கையின் சார்பாகக் கடவுள் அவதாரங்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது. உலகத்தைப் படைத்த கடவுளால் மேலுலகத்திலிருந்தபடியே ஆட்சி செய்ய முடியாமற்போகிறது போலும் – சமாளிப்பது கடினமாயிருக்கிறது போலும். எனவே சில பல ஆண்டுகள் இடைவிட்டு இடைவிட்டுப் பூவுலகில் கடவுள் வந்து மனிதராய்ப் பிறக்கிறார்; மாந்தரைத் திருத்தவும் அவர்கட்கு நன்மை உண்டாக்கவும் வீடுபேறு கிடைக்கச் செய்யவும் அவர்களுள் தாமும் ஒருவராய் உடன் வாழ்கிறார்; அவர்கள் படுவது போன்ற பாடுகளை அவர்களுக்காகத் தாமும் படுகிறார் என்பதாக- இன்னும் பலவிதமாகப் பல மதத்தினரும் கூறிக்கொண்டிருக்கின்றனர்.

உலகில் கொடுமைகள் நிறைந்துவிட்டபோது மக்களைத் திருத்துவதற்காக- அவர்களை ஆட்கொள்வதற்காகக் கடவுள் மேலிருந்து கீழே வந்து அவதரிக்கிறார் என்னும் கருத்தே கடவுள் ஆட்சியின் இயலாமையைக் காட்டுகிறது. கீழே வந்த அவர் மக்களைப் போலவே தாமும் ஏன் பாடுபட வேண்டும்? மக்களின் நன்மைக்காகத்தான் கடவுள் தாமும் துன்பப்படுகிறார் என்று கூறுகின்றனர்; இதுபோன்ற பொறுப்பற்ற பேச்சு—
அறியாமைப் பேச்சு-ஏமாற்றுப் பேச்சு வேறொன்றும் இல்லை எனலாம். இவர் ஏன் அதற்காகக் கொடிய துன்பங்களைத் துய்க்கவேண்டும்? தாம் துன்புறாமலேயே மக்களைத் திருத்தலாம்-அவர்கட்கு நன்மை உண்டாக்கலாம். சேயின் நோயைத் தீர்க்கத் தாயும் அந்த நோயைக் கொள்ள வேண்டுமா என்ன? நோயாளர்களின் நோய் தீர்க்க மருத்துவர்களும் (டாக்டர்களும்) அந்நோய்களை அடைய வேண்டுமா என்ன? வாந்தி பேதி என்னும் (Cholera) காலரா நோயைப் போக்க முயலும் மருத்துவர்க்கும் காலரா வரவேண்டுமா என்ன? கொடியவர்களை ஒறுக்கும் (தண்டிக்கும்) நீதிபதிகளும் அரசர்களும் தாங்களும் அத்தகைய ஒறுப்புகளைப் (தண்டனைகளை)பெற வேண்டுமா என்ன? சேயின் நோயைப் போக்க, அச்சேய்க்குப் பால் கொடுக்கும் தாய் தானும் பத்தியம் பிடிக்கிறாள். தாயின் பாலைக் குடிக்கும் சேய்போல, மக்கள் கடவுளின் பாலைக் குடிக்கிறார்களா என்ன ? சேய்க்குத் தன் மார்பகத்துப் பாலை ஊட்டாத தாய் சேய்க்காகப் பத்தியம் பிடிப்பதில்லையே. இன்னும் கேட்டால், தாய்மார்கள் சிலர், தம் நோய்கள் குழந்தைகளுக்குத் தொற்றாமல் இருப்பதற்காகப் பாலை மறக்கடித்துவிட்டுத் தாங்கள் பத்தியம் பிடிக்காமல் இருக்கின்றார்களே ! எனவே, மக்களின் துன்பத்தைப் போக்குவதற்காகக் கடவுள் தாமும் அவர்களைப்போலவே துன்பப்படுகிறார் என்று கூறுவது, பொறுப்பற்ற-பகுத்தறிவற்ற மடமைப் பேச்சு – ஏமாற்றுப் பேச்சு என்பது எளிதில் புலப்படும். மக்களுக்காக மக்களாய்ப் பிறந்து துன்புறும் கடவுள் மற்ற உயிரிகளுக்காக என்ன செய்கிறார்?-ஏதாவது செய்கிறாரா? மற்ற அஃறிணை உயிரிகளைப்போன்ற உருவங்களுடன் அவற்றிடையே பிறந்து, அவற்றிடையே வாழ்ந்து அவற்றுக்காகத் துன்புறுகிறாரா?-என்பது ஈண்டு எண்ணத்தக்கது.
அவதார வரலாறு:

மேற்கூறியவற்றின் பிழிவாக – பிழிவு தெளிந்த சாறாக நாம் எடுததுக் கொள்ள வேண்டியதாவது: கடவுள் மனிதர்களோடு தாமும் வாழ்ந்து அவர்களுக்காகத் தாமும் துன்பப்படுகிறார் என்பது நூற்றுக்கு நூறு பொய்க் கூற்று. அங்ஙனமெனில், இதில் உள்ள உண்மையாவது: மக்களுள் விரல்விட்டு எண்ணத்தக்க சிலர், மிகவும் உயர்ந்தவராக-சிறந்த மனிதத் தன்மையின் பேரெல்லைக் கோட்டில் நிற்பவராக – மாண உயர்ந்த மக்கட் பண்பாம் மலையின் கொடு முடியில் வீற்றிருப்பவராக அவ்வப்போது காணப்பட்டனர். இவர்கள் மற்ற மாந்தரைப் போல மனிதத் தாயின் வயிற்றில் மனிதராய்ப் பிறந்தும், மிகவும் உயர்ந்த பண்பாளராய்த் திகழ்ந்து, பிற உயிர்களின் நன்மைக்காக அரும்பாடுபட்டுப் பெரிய சாதனைகளாம் பணிகள் பல புரிந்து, மெழுகுவர்த்திபோல் தம்மையே அழித்துக் கொண்டனர்-அர்ப்பணித்து விட்டனர்.

இந்த மாபெருஞ் சாதனைப் பணிகள் மற்ற மாந்தர்களால் எளிதில் நிகழ்த்த முடியாதனவாய்த் தென்பட்டன. இந்த அருமைப்பாட்டைக் கண்ட சிலர், இந்தப் பெரியார்கள் மற்றவர்களைப் போல் மனிதராய் இருக்க முடியாது; கடவுளே இந்த மனிதப் பெரியார்களாகப் பிறந்து இவ்வளவு அரியபெரிய சாதனைகளைப் புரிந்திருக்க வேண்டும்- என்ற முடிவுக்கு வந்தனர்; எனவே, கடவுளே இந்தப் பெரியார்களாய் வந்து அவதரித்தார் என்று கற்பனை செய்தனர்; பின்னர் இந்தக் கற்பனையின் அடிப்படையில் பற்பல புளுகு மூட்டைக் கதைகளைக் கட்டிவிட்டனர். அவதார்த்தின் வரலாறு இதுதான்!
தந்தை யில்லாத அனாதைகள்:

அவதாரக் கொள்கையினர், இந்தப் பெரியார்கள் கடவுளின் அவதாரங்களே என்பதை வலியுறுத்த-மனிதர்களினும் இவர்கள் வேறானவர்கள் என்பதைப் பிரித்துக் காட்ட முயன்றனர். ‘அம்முயற்சியிள் ஒரு கூறாகப் பின்வரும் கருத்தினை வெளியிட்டு விளம்பரமும் செய்துகொண்டிருக்கின்றனர்; அஃதாவது; மனிதத் தந்தையின் தொடர்பில்லாமலேயே கடவுள் நேராக வந்து மனிதத் தாயின் வயிற்றில் புகுந்துவிட்டார் என்பது கட்டு கதையாளரின் ஒரு கூறாகும். ஒரு தாய் வேள்வியில் விளைந்த பாயசத்தைச் சாப்பிட்டதன் வாயிலாகக் கடவுளைத் தன் வயிற்றில் கருவாகக் கொண்டாள் என்பது ஒரு கதை, கடவுள் சோதிவடிவமாக தாயின் வயிற்றில் புகுந்தார் என்பது மற்றொரு கதை இவ்வாறு பல கதைகள் எழுந்தன. கடவுளே வந்து பிறந்தார் என்பவர் ஒரு சாரார்; கடவுள் தம் மைந்தனை அனுப்பினார் என்பவர் மற்றொரு சாரார்; கடவுள் தம் தூதரை அனுப்பினார் என்பவர் வேறொரு குழுவினர். இவ்வாறாகப் பல கற்பனைகள் கிளைத்த்ன. இவ்வாறு அவதார மாந்தர்களைத் தந்தையில்லாத அனாதைகளாக-தந்தைக்குப் பிறந்தும் வேறு வழியில் பிறந்தவராக ஆக்கிக் காட்டியிருப்பது கொடுமையினும் கொடுமைபாவத்தினும் பெரிய பாவம்! அவதார மாந்தர்கள் புரிந்துள்ள தியாகங்களுக்கு மதவாதிகள் கொடுக்கும் பரிசு இதுதானா? அந்தோ கொடுமை! –

யான் எந்த மதத்தினரையும் குறிப்பிட்டுக் கூறவில்லை. பொதுவாகச் சொல்வதற்கே என்மேல் சிற்றம் கொள்வர்; வெளிப்படையாகக் குறிப்பிட்டுச் சொல்வேனேயாயின் என்பாடு பெரும்பாடுதான். பூமி தட்டையானது என்று எண்ணிக் கொண்டிருந்தவர்களிடையே, பூமி உருண்டையானது என முதல் முதல் கூறினவர் உதை
வாங்கினதாகக் கூறப்படும் வரலாறு பலரும் அறிந்ததேசிறையிலும் அடைக்கப்பட்டனர் அவர்கள்.

அவதார மாந்தனரப் பெற்ற தாய், தன் சொந்தக் கணவருடன் உடலுறவு கொள்ளாமல் பிள்ளை பெற்றாள் என்பது நூற்றுக்கு நூறு பொய்க்கூற்று. தன் சொந்தக் கணவருடன் உடலுறவு கொண்டே, அவதார மாந்தர் எனப்படும் உயர்ந்த பிள்ளையைத் தாய் பெற்றாள் என்பதே நூற்றுக்கு நூறு உண்மை. ஊசி மருந்து மூலம் கருவுறச் செய்வது இந்தக் காலத்து அறிவியல் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்பா யிருக்கலாம்; ஆனால் இந்தகைய அறிவியல் முன்னேற்றம் அந்தக் காலத்தில் இல்லையே. அவதார மாந்தர் எனப்படும் உயர்ந்த பிள்ளையைத் தாம் தம் மனைவியோடு உடலுறவு கொண்டு பெற்ற தந்தையார் இப்போது உயிரோடு இருப்பாராயின், தாம் உடலுறவு கொண்டதால் அப்பிள்ளை பிறக்கவில்லை என்று கூறும் மதவாதிகளை மிகவும் கண்டிப்பார். எனவே. அவதார மாந்தர்க்குத் தெய்வத் தன்மை ஊட்டுவதற்காக, அவரைப் பெற்ற உண்மைத் தந்தையாரை அத்தொடர்பினின்றும் விலக்கி வைப்பது மன்னிக்க முடியாத மாபெருங் குற்றமாகும். என்மேல் சினங்கொள்ளாமல் அறிவியல் அடிப்படையில் சிந்திக்க வேண்டும்; இனிமேலாவது இந்த மாபெருந் தவறைத் திருத்திக் கொள்ளவேண்டும்.

மனிதத் தந்தையின் தொடர்பில்லாமல், கடவுளே மனிதத் தாயின் வயிற்றில்வந்து புகுந்து மனிதக் குழந்தையாக அவதாரம் செய்து, அரும் பெரும் செயல்கள் பல புரிந்தார் என்று கூறுவதால் மக்கள் இனத்திற்கு இன்னொரு பெருங்கேடு-பேரிழப்பு உள்ளது. இதற்கு விளக்கம் வருமாறு:
அவதார நம்பிக்கையினால், – சாதாரண மக்களுக்கு எந்தவித ஆற்றலும் இல்லை-அச்சாதாரண மக்களால் எந்த அரும்பெருஞ் செயலும் ஆற்ற முடியாது. கடவுள் மனிதராய் வந்தால்தான் பெரிய அற்புதங்களை நிகழ்த்த முடியும்-என்பதாக, தன்னம்பிக்கையில்லாத ஒரு வகை மனப்பான்மை மக்கள் இனத்தில் குடிகொள்ளும்; அதனால், அரும்பெருஞ் செயல்கள் புரியக் கூடிய ஆற்றல் உடையவர்களும், நாம் கடவுளா என்ன நம்மால் பெருஞ்செயல் எதுவும் புரியமுடியாது எனச் சோர்வுறக் கூடும். கடவுள் வந்து எந்த அற்புதங்களும் நிகழ்த்தவில்லை – அவதார மாந்தர் எனப்படுபவர் நம்மைப் போன்ற சாதாரண எளிய மனிதரேயாவார்- எனவே, நாமும் முயன்றால் அற்புதங்கள் பல நிகழ்த்த வியலும்-என்ற தன்னம்பிக்கை மக்கள் இனத்தின் மனத்தில் வேர் ஊன்றினால்தான், அந்த நம்பிக்கையின் அடிப்படையில், யாரும் முயன்று எந்த அற்புதமும் நிகழ்த்த முடியும். இதனால், அவதார மாந்தர் எனப்படுபவர் போன்ற பெரியார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு போகும். இதனால் மக்கள் இனம் முழுவதும் விரைவில் மாண்புற முடியும். அறிவியல் அடிப்படையில் பகுத்தறிவு கொண்டு சிந்திக்கின் இதன் உண்மை விளங்கும்.

License

கடவுள் அவதாரங்கள் Copyright © by manarkeni. All Rights Reserved.