="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

13 செயற்கை முறைக் கடவுள் வரலாறு

11. செயற்கை முறைக் கடவுள் வரலாறு

கடவுள் தோற்றம் பற்றிய இயற்கை முறை வரலாறு இதுகாறும் கூறப்பட்டது; அஃதாவது-தொடக்க கால மக்கள் இயற்கைப் பொருள்களைக் கடவுளாகக் கற்பனை செய்தனர்-இயற்கைப் பொருள்களிலே கடவுள் தன்மை என்னும் ஒருவகை ஆற்றல் இருப்பதாகக் கருதினர் என்ப் தான வரலாறு தரப்பட்டது. கடவுள் தோற்றம் பற்றிய இயற்கை முறை வரலாறு இருப்பது போலவே செயற்கை முறை வரலாறும் உண்டு. மாந்தர்க்குள்ளேயே அரும் பெருஞ் செயல்கள் ஆற்றிய பெரியோர்களைத் தெய்வமாகக் கருதி வழிபடுவதும் செத்தவர்களைத் தெய்வமாக மதித்து வழிபடுவதும் செயற்கை முறை வரலாறுகள் ஆகும். இவ்விரண்டினுள் செத்தவர்களையெல்லாம் தெய்வமாகக் கருதி வழிபடுவது மிகப் பெரிய அளவில்பரந்த அளவில் நடைபெறுகிறது.

செத்துத் தெய்வமாதல்:

நல்லவர்கள் ஆயினும் – தீயவர்களாயினும் – இறந்தவர்கள் அனைவரையும் அவரவர் உறவினர்கள் தெய்வ மாகக் கருதி வழிபடுதல் மரபாயிருக்கிறது. அவர் செத்துத் தெய்வமாகப் போய்விட்டார்’ என்று கூறுவது
உலகியல் வழக்கு. செத்துப் பிணம் கிடந்த இடத்தில் படைப்பதும், பிணத்தைப் புதைத்த இடத்தில் (சமாதி மேடையில்) படைப்பதும், செத்த பின்னர் இறுதிச் சடங்கு நடக்கப்போகும் கடைசி நாள் வரையும் நாடோறும் படைப்பதும் மரபு. ஆண்டுக்கு ஒரு முறை வரும் இறந்த நாளில் நினைவு நாள் (திவசம்) கொண்டாடிச் சிறப்பாகப் படையல் செய்வதும் தொன்றுதொட்ட மரபாகும். உலகெங்கும் உள்ள கிறித்தவ சமயத்தினர், “கல்லறைத் திருநாள் (All Souis Day) என ஒரு நாள் குறிப்பிட்டு, அந்நாளில், செத்தவர்களைப் புதைத்துள்ள கல்லறைகளுக்குச் சென்று மலர் வளையம் வைத்தும், சாம்பிராணி புகைத்தும், மெழுகுவத்தி ஏற்றியும் வழிபாடு செய்வது மரபு. செத்தவர்கள் எத்தகையவராயினும், அவர்கள் தெய்வமாகிக் கடவுள் உலகத்தில் போய்க் கலந்துவிட்டனர் என்னும் பொருளில், அவரவர் உறவினர்கள், அவரவர் மதத்தின் மரபுக் கேற்ப, சிவலோக பதவியடைந்தார்-வைகுண்ட பதவி எய்தினார்-திருநாடு (மோட்ச உலகம்) அலங்கரித்தார் பரமபதம் சேர்ந்தார்-பரமண்டலம் அடைந்தார்-என்றெல்லாம் கூறுவது மரபு. இருப்பவர்களை நல்லபடி யாக வைக்கவேண்டும் என, இறந்தவர்களை நினனந்து இருப்பவர்கள் வேண்டிக்கொள்வதும் உண்டு. இச்செய்திகளால், செத்தவர்கள் தெய்வமாகிவிட்டனர் என மற்றவர்கள் எண்ணுகின்றனர் என்னும் கருத்து கிடைக்கிறது.

நடுகல் வழிபாடு

மறப்போர் புரிந்து மாண்ட வீரர்க்கும், வடக்கு இருந்து மாண்ட மாண்பினர்க்கும், கற்பிற் சிறந்த மகளிர்க்கும், அரும்பெருஞ் செயல் புரிந்த ஆன்றோர்க்கும் அவர்தம் நினைவாக அவர்கள் பெயரால் கல்நட்டு அக்கல்லைக் கடவுளாகக் கருதிப் பூசை செய்து வழி
படுவது நடுகல் வழிபாடு’ எனப்படும்; இற்றைக்ரு (1988) இரண்டாயிரத்தைந் நூறு ஆண்டுகட்கு முற்பட்ட தாகக் கருதப்படும் தொல்காப்பியம் என்னும் நூலில் ஆசிரியர் தொல்காப்பியனார் நடுகல் வழிபாட்டை ஆறு துறைப்படுத்திக் கூறியுள்ளார். அவை: காட்சி, கால் கோள், நீர்ப்படை, நடுதல், பெரும்படை, வாழ்த்தல் என்னும் ஆறுமாகும்.

ஃ காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்
சீர்த்தகு சிறப்பின் பெரும்படை வாழ்த்தல் என்று
இருமூன்று வகையிற் கல்லொடு புணர…’

என்பது தொல்காப்பிய நூற்பாப் பகுதி. அவற்றுள், காட்சி என்பது, கற்கள் நிறைந்த பகுதியிலிருந்து குறிப்பிட்ட நல்ல ஒரு கல்வினைக் கண்டு தெரிவு செய்த லாகும். கால்கோள் என்பது, தேர்ந்தெடுத்த கல்லினைக் கொண்டு வந்து வழிபாட்டுக்கு உரிய செயலைத் தொடங்குதலாகும். நீர்ப்படை என்பது கல்லினை நீரில் இட்டு வைத்தோ-நீர் விட்டோ தூய்மை செய்தலாகும். நடுதல் என்பது, கல்லிலே போர் மறவனது பெயரும் பெருமையும் பொறித்து, அவன் இறந்த இடத் திலோ அல்லது அவனது உடலைப்புதைத்த இடத்திலோ நட்டு, மயில் பீலியும் (தோகையும்) மாலையும் அணிவித்து ஊன்றச் செய்தலாகும். பெரும்படை என்பது, இக் காலத்தில் கோயிலில் செய்யும் குடமுழுக்கு (கும்பா பிஷேகம்) போன்ற சிறப்புக்களைச் செய்து படையல் போட்டுப் பெருமைப் படுத்தலாகும். வாழ்த்தல் என்பது, நட்ட கல்லைக் கடவுளாக மதித்து வணங்கி வாழ்த்துதல் ஆகும். இவ்வாறாக, செத்துப் போன வீர மறவர் தெய்வமாக்கப்பட்ட வரலாறு தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது.
இற்றைக்குச் சுமார் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகட்கு முற்பட்டவராகக் கருதப்படும் ஐயனாரிதனார் என்பவர் புறப் பொருள் வெண்பாமாலை என்னும் தமது நூலில் இது பற்றி விரிவாகக் கூறியுள்ளார்.


‘கற்காண் டல்லே கற்கோள் நிலையே
கல்நீர்ப் படுத்தல் கல் நடுதல்லே
கன்முறை பழிச்சல் இல்கொண்டு புகுதல்’

எனச் சிறிது மாற்றத்துடன் இவரும் ஆறு துறைகளாகக் கூறியுள்ளார். ஒவ்வொரு துறையினையும் இரண்டடி கொண்ட வெண்பா ஒன்றாலும் லிரிவாக விளக்கியுள் ளார். அவை அனைத்தையும் ஈண்டு விரிப்பின் பெருகும். கற்கண்டால் என்பது தொல்காப்பியத்தில் குறிப்பிடப் பட்டுள்ள காட்சியாகும். கற்கோள்நிலை என்பது கால் கோள் ஆகும். கல் நீர்ப்படுத்தல் என்பது நீர்ப்படை யாகும்; ஐயனாரிதனார்.

கல்நீர்ப் படுத்தல் என்னும்துறையில், கல்லை நீரிலிட்டுத் தூய்மை செய்தல் என்னும் விளக்கத்துடன். இறந்து போன ஒவ்வொரு வீரரின் அடக்கத்துக்கு (சமாதிக்கு) நேராக ஒவ்வொரு கல்லை ஒழுங்கு செய்து வைத்தல் என்னும் விளக்கத்தையும் சேர்த்துக் கொண்டுள்ளார். கல்நடுதல் என்பது நடுதல் ஆகும். கல்முறை பழிச்சல் என்னும் துறையில், தொல்காப்பியர் கூறியுள்ள பெரும் படை, வாழ்த்தல் என்னும் இரண்டு துறைகளையும் அடக்கி விட்டார். இலர் ஆறாவதாகக் கூறியுள்ள ‘இல் கொண்டு புகுதல்’ என்பது தொல்காப்பியத்தில் இல்லாத ஒன்றாகும். இல் என்பதற்குக் கோயில் (கோ இல்) என இவர் பொருள் செய்துள்ளார்; எனவே,
‘இல் கொண்டு புகுதல் என்றால், வீரனது நடுகல்லைச் சுற்றிக் கோயில் கட்டி உள் சென்று வழிபடுதல் என்று பொருளாகும். இவ்வாறாக, மாண்டு போன மற வர்க்குக் கல்நட்டுக் கோயில் கட்டி அவர்களைக் கடவு ளாக்கிய வரலாறு புறப்பொருள் வெண்பா மாலை என் னும் நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

தொல்காப்பியமும் புறப்பொருள் வெண்பாமாலை யும் இலக்கண நூல்களாகும். இவற்றில் சொல்லப் பட்டுள்ள இலக்கணச் செய்திகளுக்கு, அகநானூறு, புற நானூறு, திருக்குறள் முதலிய (இலக்கிய) நூல்களில் உள்ள சில பாடல்கள், இலக்கியங்களாகத் திகழ்கின்றன. தொல்காப்பியத்தின் உரையாசிரியராகிய நச்சினார்க் கினியர் என்பவர் நூல்களின் பெயர்களைக் குறிப்பிடா மலேயே பல பாடல்களை இந்த ஆறு துறைகளுக்கும் இலக்கியமாக எடுத்துக் காட்டியுள்ளார். அவற்றை விரிப்பின் பெருகும்.

ஈண்டு, மதுரை மருதனிள நாகனாரால் எழுதப்பட்டு அகநானூற்றில் சேர்க்கப்பட்டுள்ள பாடல் பகுதியொன்றின் கருத்தைக் காணலாம்: போர் மறவர்களின் பெய ரும் பெருமையும் பொறித்து வழிதோறும் நடுகற்கள் நடப்பட்டுள்ளன; அவற்றின் மேல் மயில் பீலி (தோகை) மாலைபோல் சூட்டப்பெற்றுள்ளது; ஒல்வொரு கல்லின் முன்னும் வேல் ஊன்றி அவ்வேலின் மேல் கேடகப் பலகை சார்த்தப்பட்டுள்ளது; வீரனும் வேலும் கேடகமு மாகக் காட்சி யளிக்கும் அந்த இடம், ஒரு போர்க்களம் போல் தோன்றி அச்சம் தரத்தக்கதாக உள்ளதாம். இதோ அப்பாடல் பகுதி: –

‘ஆடவர் பெயரும் பீடும் எழுதி அதர் தொறும்
பீலி சூட்டிய பிறங்குகிலை நடுகல்
வேலூன்று பலகை வேற்று முனை
கடுக்கும் வெகுவரு தகுங் கானம் … ’

என்பது பாடல் பகுதி. நடுகல்லின் முன் வேலை ஊன்றி அவ்வேலின்மேல் கேடகப் பலகை சார்த்தப்பட்டிருப்ப தாக உரையாசிரியர்கள் உரை கூறினர்.

இதற்கு நாம் வேறு விதமாகவும் பொருள் கூறலாம். வீரன் வேலும் எதிரியின் வேலைத் தடுக்கும் கேடகப் பல கையும் ஏந்திக் கொண்டிருப்பது போல் சிலை செய்து நடப்பட்டுள்ளது-என்பதுதான் அந்தப் புதிய பொருள் . இப்பொருளால், வெற்றுக் கல்லை நடும் வழக்கம் மாறிச் சிலையாகச் செய்து நடும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்னும் கருத்து கிடைக்கிறதன்றோ? இப்பாடல் பகுதி யின் கருத்து பட்டினப்பாலை என்னும், நூலிலும் (78-79) உள்ளது.

அடுத்து, புறநானூற்றிலிருந்து இது தொடர்பான சில செய்யுட் பகுதிகளையும் கருத்துக்களையும் காண்போம் : முதலில், போரில் மாண்டு நடுகல்லாகிவிட்டபெரிய வள்ளலும் சிற்றரசனுமாகிய அதியமான் நெடுமான் அஞ்சி’ என்பவனைக் குறித்து ஒளவையார் பாடியுள்ள புறப்பாடல் (புறம்=புறநானூறு) பகுதி (232) வருமாறு :

‘இல்லா கியரோ காலை மாலை

அல்லா கியர்யான் வாழு நாளே
நடுகல் பீலி சூட்டி நாரரி
சிறுகலத் துகுப்பவும் கொள்வன் கொல்லோ!’

என்பது பாடல் பகுதி. கருத்து:- அதியமான் இல்லாத காலையும் மாலையும் எனக்கு இல்லை யாகுக! என் வாழ் நாளும் முடிவதாகுக! அவனது நடுகல்லிலே மயில் பீலியை சூட்டி, நாரால் அரித்து வடிகட்டப் பெற்ற மதுவைச் சிறிய கலத்தில் ஊற்றி அவனது நடுகல்லின்

  • அகநானூறு-மணிமிடை பவளம்-(131).

முன்னே வைத்தால், அதை அவன் எடுத்துப் பருகு வானோ-மாட்டானோ என்பது கருத்து. இந்தப் பாடலால், நடுகல்லின் முன் மது முதலியவற்றை வைத்துப் படைக்கும் மரபு உண்டு என்னும் செய்தி கிடைக்கிறது. அடுத்து, வடமோதங் கிழார் என்பவர் பாடிய புறப்பாட்டுப் (260) பகுதி வருமாறு :

‘உயரிசை வெறுப்பத் தோன்றிய பெயரே
மடஞ்சால் மஞ்ஞை அணிமயிர் சூட்டி
இடம் பிறர் கொள்ளாச் சிறுவழிப்
படம்செய் பந்தர்க் கல்மிசையதுவே”

என்பது பாடல் பகுதி. கருத்து:- பலரும் இருக்க இடம் கொள்ளாத சிறிய இடத்தில் வீரனுக்குக் கல் நடப் பட்டுள்ளது; அதில் அவனுடைய புகழ் வாய்ந்த பெயர் பொறிக்கப்பட்டுள்ளது; மேலே மயில் பீலி அணியப் பட்டுள்ளது; கல்லின் மேலே நிழலுக்காகத் துணியால் பந்தர் (பந்தல்) போடப்பட்டுள்ளது’- என்பது கருத்து. இந்தப் பாடலால், நடுகல்லின் மேலே நிழலுக்காகப் பந்தல் போடப்பட்ட புதுச்செய்தி கிடைக்கிறது. பந்தல் போடுவது என்பது, கோயில் கட்டுவதின் தொடக்கச் செயலாகும். அடுத்து ஆவூர் மூலங்கிழார் பாடிய புறப்பாட்டுப் (261) பகுதி வருமாறு:-

‘நடுகல் ஆகிய
வெல்வேல் விடலை இன்மையின் புலம்பிக்
கொய்ம்மழித் தலையொடு கைம் கமையுறக் கலங்கிய
கழிகல மகடூஉ ….. ..

என்பது பாடல் பகுதி. கருத்து. மறவன் இறந்து நடுகல் ஆகிவிட்டமையால், அவனுடைய மனைவி. அணிகலன்களையும் கூந்தலையும் களைந்து மொட்டைத் தலையுடன் கைம்மை நோன்பு கொண்டுள்ளாள்’ என்பது கருத்து.
அந்தோ கொடுமை! அடுத்து, பெயர் அறியப்படாத புலவர் ஒருவர் பாடிய புறப்பாட்டுப் (263) பகுதி வருமாறு:-

‘இரும்பறை இரவல சேறி யாயின்
தொழாதனை கழிதல் ஒம்புமதி வழாது . .
கொல்புனல் சிறையின் விளங்கியோன் கல்லே”

என்பது பாடல் பகுதி. கருத்து: ‘பறை கொட்டும் கலைஞனே! வீரனது நடுகல் இருக்கும் வழிப் பக்கம் செல் வாயாயின், அந்நடுகல்லைத் தொழாமல் விட்டுவிடாதே; தவறாமல் தொழுது செல்வாயாக’, என்பது கருத்து. இது, கலைஞன் ஒருவனுக்கு வேறொருவர் அறிவுறுத்துவது போல் அமைந்துள்ளது இப்பாடலால், நடுகல்லை, அவ்வழியே போபவர் வருபவர் எல்லாரும் தொழுவது வழக்கம் என்னும் செய்தி கிடைக்கிறது. அடுத்து, உறையூர் இளம் பொன் வாணிகனார் பாட்டு (264) வருமாறு:


“பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி
மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு
அணிமயில் பீலி சூட்டிப் பெயர் பொறித்து
இனிகட் டனரே கல்லும் கன்றொடு
கறவை தந்து பகைவ ரோட்டிய
நெடுந்தகை கழிந்தமை அறியாது
இன்றும் வருங்கொல் பாணரது கடும்பே”

என்பது பாடல். கருத்து: ‘வீரன் போர் புரிந்து மாண்டான்; அவனுக்குப் பருக்கைக் கற்கள் கலந்த மணல் குன்றின் மேல் கல் நட்டனர்; கல்லில் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது; மேலே மரல் கீறித் தொடுத்த சிவந்த மலர் மாலையும் மயில் பீலியும் அணியப்பட்டுள்ளன. ஆனால்

இந்த வீர வள்ளல் மாண்டு நடுகல்லானதை அறியாமல் யாழ்ப் பாணரது சுற்றத்தார் இவனிடம் பரிசு பெற இன்றும் வருவார்களோ? – என்பது கருத்து. இப்பாட லால், வீரர்களும் வள்ளல்களாய் விளங்கியமை புல னாகும்; இத்தகையோர்க்குக் கல் நடுவது பொருத்தமே. கற்கள் கலந்த மணல் குன்றின் மேல் கல் நட்டமை, மலைக் கோயில்கள் உருவாக அடிகோலியதாகும். குன்றுதோறாடும் குமரனைப் பற்றிய செய்தி திருமுரு காற்றுப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து, அள்ளூர் நன் முல்லையார் பாடிய புறப்பாடல் (306) பகுதி வருக :


“அரிதுண் கூவல் அங்குடிச் சீறுார்
ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை
நடுகல் கைதொழுது பரவும் ஒடியாது”

என்பது பாடல் பகுதி. கருத்து : சிற்றுாரில் உள்ள பெண், நாளும் தவறாது நடு கல்லைக் கையால் தொழுது வழிபடுவாள்’- என்பது கருத்து. இதனாலும் நடுகல்லை வழிபடும் செய்தி பெறப்படுகிறது. அடுத்து, மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் பாடிய புறப்பாடல் (329) பகுதி வருமாறு :

“இல்லடு கள்ளின் சில்குடிச் சிறுர்ப்
புடைாடு கல்லின் நாள்பலி ஊட்டி
நன்னீ ராட்டி நெய்ந்கறைக் கொளீஇய
மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்”

என்பது பாடல் பகுதி. கருத்து:- “சிற்றுாரின் அருகில் உள்ள நடுகல் நாள்தோறும் நல்ல நீரால் தூய்மை செய்யப்படுகிறது; காலையில் பலி உணவு படைக்கப் பெறுகிறது; நெய்விளக்கு ஏற்றி வைக்கப்படுகிறது; அந்நெய் விளக்கின் புகை, முகில் (மேகம்)போல்
மேலெழுந்து தெருவெல்லாம் நறுமணம் வீசுகிறதுஎன்பது கருத்து. கோயில்களில் கடவுள் சிலையை நீராட்டி (அபிஷேகம் செய்து) நெய்விளக்கு ஏற்றி உணவு (நைவேத்தியம்) படைக்கும் இக்காலப் பழக்கம், அக்கால நடுகல் தெய்வ வழிபாட்டிலேயே தொடங்கப் பெற்று விட்டது என்னும் அரிய செய்தி இப்பாடலால் பெறப்படு: கிறது. அடுத்து, மாங்குடி கிழார் பாடிய புறப்பாடல் (335) பகுதி வருமாறு :

“ஒளிறேந்து மருப்பின் களிறெறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல்லுகுத்துப் பரவும் கடவுளும் இலவே.”

என்பது பாடல். கருத்து: “எதிரியின் யானைகளைப் போரில் வெட்டி வீழ்த்தித் தானும் மாண்டுபோன மறவனது நடுகல்லை வழிபடுவதைத் தவிர, நெல் இட்டுப் படைத்து வழிபடும்படியாக வேறு கடவுள் இந்த ஊரில் இல்லை”- என்பது கருத்து ஊரில் கடவுள் என்பது, மாண்டவர்க்காக நட்ட நடுகல் மட்டுமேயாகும்; கடவுள். வழிபாடு என்பது நடுகல் வழிபாடு ஒன்றுமே யாகும்என்னும் கருத்து இப்பாடலால் பெறப்படுகிறது.

இவ்வாறு நடுகல் பற்றிய செய்தி உள்ள பாடல்கள் புறநானூற்றில் இன்னும் சில உள. விரிவு அஞ்சி விடுப்பாம். ஈண்டு இது தொடர்பான திருக்குறள் பா ஒன்றை மறக்க முடியாது. போர் மறவன் ஒருவன் பகைவரை நோக்கித் தன் தலைவனது மறப் பெருமை. யைப் புலப்படுத்துவதாக உள்ளது அப்பாடல்.

“என்னைமுன் கில்லன்மின் தெவ்விர் பலர்என்னை
முன்னின்று கல்கின்ற வர்’ (771)”

என்பது பாடல். கருத்து :- என்-ஐ என்னை= என் தலைவன்) பகைவர்காள்! என் தலைவன் முன்னே நிற்கவுஞ் செய்யாதீர்கள்; என் தலைவன் முன் எதிர்த்து நின்று இறந்து நடுகல்லாய் நின்றவர் பலர்- என்பது கருத்து. இப்பாடலில் உள்ள இலக்கியக் கலைநயம் இன்பம் ஊட்டுகிறது. அந்நாளில் போரில் மாண்ட மறவர்கள் அனைவர்க்கும் நடுகற்கள் எடுக்கப்பட்டன என்பது இப்பாடலால் புலனாகிறது. மற்றும், இரணிய முட்டத்துப் பெருங்குன்றுார்ப் பெருங்கெளசிகனார் பாடிய மலைபடு கடாம் என்னும் நூலில் நடுகல் பற்றியுள்ள பகுதி மிகவும் சுவை பயப்பதாயுள்ளது. அப்பகுதி.

‘நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்

செல்லா நல்லிசைப் பெயரொடு நட்ட
கல்ஏசு கவலை எண்ணுமிகப் பலவே (387-89)

என்பது பாடல் பகுதி. கருத்து: புறமுதுகு காட்ட நாணி மறப்போர் புரிந்து மாண்டு புகழ்ப் பெயருடன் நடுகல்லில் தெய்வமாய் நிற்பவர்கள், போரில் புறமுதுகிட்டு அவ்வழியே ஒடும் கோழைகளைப் பார்த்து, இவர்கள் நம்மைப்போல் மறப்போர் புரிந்து மாளாமல் போருக்கு அஞ்சிப் புறமுதுகுகாட்டி ஒடு கின்றனரே என்று எள்ளி நகையாடுவர்’- என்பது கருத்து. நடுகற்கள், தோற்று ஒடுபவரைப் பார்த்து இகழும் அளவுக்கு உயிர்ப்பு (தெல்வத்தன்மை) உடையன என நம்பத்தக்கனவாயுள்ளன என்னும் செய்தி இப் பாடல் பகுதியால் பெறப்படுகிறது.

இதுகாறும் மேலே எடுத்துக்காட்டப்பட்டுள்ள பன்னுாற் பாடல்கள், நடுகற்கள் கடவுளாகக் கருதி வழி படப்பட்டன என்னும் செய்தியை விவரித்தன. நடு , கல்லைக் கடவுள்’ என்னும் சொல்லாலேயே சுட்டியுள்ள
பாடல் ஒன்று அகநானூறு என்னும் நூலில் உள்ளது. அப்பாடலைப் பாடியவர் அம்மூவனார் என்பவர். அப் பாடலின் நடுகல் பற்றிய பகுதி வருமாறு :

[1] *

‘வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்

வல்லாண் பதுக்கைக் கடவுள் பேண்மார்
நடுகல் பீலி சூட்டித் துடிப்படுத்துத் –
தோப்பிக் கள்ளொடு துருஉப்பலி கொடுக்கும்
போக்கருங் கவலைய புலவுகா றருஞ்சுரம்’

என்பது பாடல் (35) பகுதி கருத்து :- மறப்போர் செய்து மாண்டு மணல் குன்றின்மேல் நடுகல்லாய் நிற்கும் மறக் கடவுளை வழிபடுவதற்காக, அந்நடுகல்லின் மேல் மயில் பீலியை அழகாக அணிவித்து, துடி என் னும் பறையை முழக்கி, நெல்லிலிருந்து செய்யப்பெற்ற தோப்பி என்னும் கள்ளை வைத்து, செம்மறியாட்டைப் பலி கொடுத்துப் படையல் போடுவர்-என்பது கருத்து. நாட்டுக் கார்த்திகை நாளிலும் மாட்டுப் பொங்கல் நாளிலும், காத்தவராயன் படையல் என்னும் பெயரில் ஒரு தனியிடத்தில் மதுவும் ஆட்டுக்கறிச் சமையலும் வைத்துப் படையல் போடும் வழக்கம் இக்காலத்திலும் நடைபெறுகிறது என்னும் செய்தி முன்பே ஓரிடத்தில் விவரிக்கப்பெற்றுள்ளமை ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது, இப்பாடலில், நடுகல் மறவர், கடவுள்’ என்னும் பெயரா லேயே சுட்டப்பட்டுள்ளமை எண்ணத்தக்கது. துடி கொட்டுதலும் தோப்பிக் கள்ளொடு துருப் பலிகொடுத் தலும் இப்பாடலால் பெறப்படும் புதிய செய்திகளாகும், குன்றின்மேல் கோயில் எழுந்த வரலாறுக்கும் இப்பாட லில் அடிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பதிற்றுப் பத்து நூலின் ஐந்தாம் பத்தின் பதிகத்தில், கண்ணகிக்கு உரிய சிலைக் கல்,

‘கடவுள் பத்தினிக் கற்கோள் வேண்டி’ (அடி-3)

எனக் கடவுள் கல்லாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மணிமேகலையிலும் கண்ணகிக் கல் தெய்வக் கல்’ (26-89) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றும், அகநானூற்றில் நடுகல்தொடர்பான சுவை யான செய்திகள் மேலும் சில உள. அவை வருமாறு :

“செக்காய் வருந்து பசிப் பினவொடு.
எழுத்துடை நடுகல் இன்னிழல் வதியும் அருஞ்சுரக் கவலை ..”

(அகம்-களிற்றியானை நிரை-53)

என்னும் சீத்தலைச் சாத்தனாரின் பாடல் பகுதியில், கோடையில்-பாலை நிலத்தில் ஆண் நாய் பெண் நாயு டன் நடுகல்லின் இனிய நிழலிலே தங்கியிருக்கும் செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது ‘நிழலின் அருமை வெயிலில் தெரியும்’ என்பது போல, கோடையில்-பாலை நிலத் தில் நடுகல்லின் நிழல் இனிமையாய் உள்ளதாம். அடுத்து,

‘சிலையே றட்ட கணைவீழ் வம்பலர்
உயர்பதுக்கு இவர்ந்த ததர் கொடி அதிரல்
நெடுநிலை நடுகல் காட்பலிக் கூட்டும் சுரன்’

என்னும் எயினந்தை மகன் இளங்கீரனார்’ என்கிற புலவரின் பாடல் பகுதியின் அகம் -.மணிமிடைப் பவளம் -289) கருத்தாவது:-கற்குவியலில் வீரர்கள் நடுகற்களாய் உள்ளனர், அந்த நடுகல் மறவர்கட்குக் காட்டு மல்லிகை மலர்கள் காலை வழிபாட்டுப் பலியாகப் பயன்படுத்தப் படுகின்றனவாம். அடுத்து,

‘கடுங்கண் மறவர் பகழி மாய்த்தென
மருங்குல் நுணுகிய பேஎழுதிர் நடுகல்
பெயர் பயம் படரத் தோன்று குயிலெழுத்து
இயைபுடன் நோக்கல் செல்லா தசைவுடன்
ஆறுசெல் வம்பலர் விட்டனர் கழியும் புறவு.’

அகம் மணி மிடை பவளம் 297)

என்னும் மதுரை மருதனிள நாகனாரின் பாடல் பகுதி யின் கருத்தாவது:-பெயரும் பெருமையும் பொறிக்கப் பட்டுள்ள நடுகற்களில், மறவர் சிலர். தம் அம்புகளைக் கூராக்கத் தேய்த்துத் தீட்டினராம்; அதனால், நடுகற். களில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்கள் பல தேய்ந்து மறைந்து விட்டனவாம். அதனால், அவ்வழியே செல்ப வர்கள், நடுகற்களில் பொறிக்கப்ப்ட்டுள்ள உரையை முழுதும் படித்துப் புரிந்து கொள்ள முடிய வில்லையாம். இச் செய்தியினால், வழியே போபவர் வருபவர்கன் நடு கல்லில் பொறிக்கப்பட்டுள்ளவற்றைப் படித்துப் பார்ப் பது வழக்கம்-என்பது புலனாகும். அடுத்து, அதே. ஆசிரியர் பாடியுள்ள.

“சினவல் போகிய புண்கண் மாலை.
அத்தம் நடுகல் ஆளென உதைத்த
கான யானைக் கதுவாய் வள்ளுகிர்
இரும்பனை இதக்கையின் ஒடியும் ஆங்கண்’

(அகம் நித்திலக் கோவை -365)

என்னும் பாடல் பகுதியின் கருத்தாவது:-இருள் தொடங்கிய மாலை நேரத்தில், ஒரு வழியே சென்று கொண்டிருந்த யானை ஒன்று, ஆங்கிருந்த நடுகல்லை ஆள் (மாந்தன்) என எண்ணிக் காலால் உதைத்ததால் கால் நகங்கள் ஒடிந்து விட்டனவாம். இச்செய்தியைக் கொண்டு, மாந்தர்-வடிவத்திலேயே மறவர்க்குச்
சிலைகள் செய்து வைக்கப்பட்டிருந்தன என்னும் குறிப்பு புலப்படலாம். அடுத்து அதே புலவர் பாடியுள்ள

“கிரைகிலை நடுகல் பொருந்தி இமையாது
இரைநசைஇக் கிடந்த முதுவாய்ப் பல்லி
சிறிய தெற்றுவ தாயிற் பெரிய
ஓடை யானை உயர்ந்தோ ராயினும்
நின்றாங்குப் பெயரும் கானம்”

(அகம்-நித் திலக் கோவை-387)

என்னும் பாடல் பகுதியின் கருத்தாவது:-வரிசையாக உள்ள நடுகற்களில் பதுங்கியுள்ள பல்லிகள் ஒலி எழுப்பு கின்றனவாம். அவ்வொலியைக் கேட்டுப் பெரும் படையு டைய பேரரசரும், நிமித்தம் (சகுனம்) சரியில்லை எனத் தம் ஊருக்குத் திரும்புவராம்.

இச் செய்தியால், பல்லிகள் தங்கும் அளவுக்கு நடுகற்கள் பழமை பெற்றிருந்தன என்பதும், அக்கால மக்களும் பல்லி சொல்லை நிமித்தமாக நம்பினர் என்ப தும் புலப்படும்.

வேண்டுதல்

இக்காலத்தில் மக்கள் தங்கட்கு இன்னது வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்வது போலவே, அக்காலத்தில் மக்கள் தங்கட்கு வேண்டியதை அருளுமாறு நடுகல்லாகிய தெய்வத்தைத் தொழுது வேண்டிக் கொண்டுள்ளனர். இதை அறிய, புறநானூற்றிலுள்ள ஒரே ஒரு பாடலை மட்டும் எடுத்துக் கொள்வோம்:

ஒரு சிற்றுாரில் இருந்த பெண் ஒருத்தி, போர் மறவனாகிய தன் கணவனும் அவன் தலைவனாகிய அரசனும் பகைவென்று நலம் பெற வேண்டும்-தான் விருந்து போற்ற வேண்டும்-இதற்கு அருள் புரிதல் வேண்டும்
என்று வேண்டி’நடுகல்லைக் கையால் தொழுது வணங்கினாளாம். பாடல் வருக:

களிறு பொரக் கலங்கு கழன்முள்வேலி

அரிதுண் கூவல் அங்குடிச் சீறுார்

ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை
நடுகல் கைதொழுது பரவும் ஒடியாது:
விருந்தெதிர் பெறுகதில் யானே; என்ஐயும்
ஓ·········· வேந்தனொடு
நாடுதரு விழுப்பகை எய்துக எனவே-(306)

இக்காலத்திலும், செத்துக் கிடக்கும் பிணத்தை நோக்கி, உறவினர்கள், எங்களை நல்லபடியாக வைப் பாயாக’ என்று வேண்டிக் கொள்ளும் செய்தி ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது.

இவ்வாறு வீர நடுகல் வழிபாடு பற்றிய செய்திகள் இன்னும் பல தமிழ் நூல்களில் கூறப்பட்டுள்ளன. வேறு நாடுகளிலும் இத்தகைய வீரர் வழிபாடு உண்டு. விரிவு அஞ்சி அவற்றை விடுப்பாம். இந்த நடுகல் வழிபாட்டுத் தோற்றமும் கடவுள் பிறந்த வரலாறுகளுள் ஒருவகை யாகும்.

கல்லெடுப்பு

அந்தக் காலத்தில் முகத்திலும் மார்பிலும் புண் ப்ட்டுப் போரில் இறத்தலை உயர்ந்த சாவாக-சிறந்த பேறாகக் கருதினர். போரில் இறந்தவர்களைக் கல் நட்டுக் கடவுளாக்கினர். அரச மரபினரோ, போர் மறவர்களோ போரில் புண்பட்டு இறவாமல் நோய் வாய்ப்பட்டு இறப்பின் அந்த இறப்பு தாழ்வாகக் கருதப் பட்டது. அதனால், போரில் புண்பட்டு இறவாமல் வேறு விதமாய் இறந்தவர்களையும். மார்பில் கத்தியால்
கீறிக் காயம் உண்டாக்கிப் புதைத்து மேலேகல் நட்டனர். பண்டைக் காலத்தில் போர் அடிக்கடி நடைபெறும், அதனால், வீடுகள் தோறும் மறவர்கள் இருந்தனர். மாண்ட மறவர்க்குக் கல் நடும் பழக்கம், மற்றவர் அனைவருக்குமே கல் நடும் மரபாக மலர்ச்சி பெற்றது. அம்மரபு இந்தக் காலத்திலும் தொடர்கிறது. இப் போதும் இறந்து போனவர்க்கு இறுதிச் சடங்கு செய்யும் இடத்தில் ஒரு செங்கல்லோ மூன்று செங்கற்களோ நட்டுப் பொட்டு இட்டுப் பூச்சூட்டிப் படைக்கும் பழக்கம் பல குடும்பங்களில் உள்ளது. இதைத்தான் இக்கால மக்கள், கருமாதி-கல்லெடுப்பு என்கின்றனர். இம்முறையால், செத்தவர் எல்லாரும் தெய்வமாக்கப்படுகின்றனர் என அறியலாம்.

இத்தகைய கல் நாட்டு, கல்லெடுப்பு பற்றிய செய்தி. கள் இலக்கியங்களிலேயன்றிக் கல்வெட்டுகளிலும் கூறப் பட்டுள்ளன, வேண்டுமானால், இத்தகைய நடுகற் களைத் தமிழ்நாட்டில் தென்னார்க்காடு, வட ஆர்க்காடு சேலம், தருமபுரி முதலிய மாவட்டப் பகுதிகளிலும் மைசூர் மாநிலத்தின் சில பகுதிகளிலும் இன்றும் காணலாம்.

வடக்கிருந்தோர் நடுகல்:

போரில் மாண்ட மறவர்க்கு நடுகல் எடுத்தல் போலவே, சிறந்த குறிக்கோள்களுக்காக வடதிசை நோக்கியமர்ந்து உண்ணா நோன்பு கொண்டு உயிர் துறந்தோர்க்கும் கல் நடும் மரபு அக்காலத்தில் இருந்தது. அதற்கு ஒர் எடுத்துக்காட்டு : கோப்பெருஞ்சோழன் என்பவன், இற்றைக்குச் (1988) சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன், உறையூரைத் தலைநகராகக்கொண்டு சோழநாட்டை ஆண்ட சோழமன்னன். அவன் தன்
மைந்தருடன் மாறுகொண்டான். ஏதோ ஒரு குறிக் கோளுக்காக வடக்கிருந்தான். (வடக்கிருத்தல்=வட திசை நோக்கியமர்ந்து உயிர் போகும்வரை உண்ணா நோன்பு கொண்டிருத்தல்…) அவன்பால் பேரன்பு கொண்ட பொத்தியார் என்னும் புலவர் தாமும் அவ னுடன் வடக்கிருக்கச் சென்றார். அப்போது புலவரின் மனைவியார் நிறை சூல் கொண்டிருந்தார் போலும்! எனவே, பிள்ளை பிறந்த பின் வா எனக்கூறி மன்னன் புலவரை அனுப்பி விட்டான். பிள்ளை பிறந்தபின் புலவர் வருவதற்குள், மன்னன் மாண்டுவிட்டான். குறிக்கோள் வீரனான மன்னனுக்கு நடுகல் எடுக்கப்பட்டது. பொத்தியார் வந்து மன்னனது நடுகல்லைக் கண்டு தமக்கும் இடம் கேட்டார். நடுகல் சிறிது விலகிக் குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளேயே புலவர்க்கும் இடம் கொடுத்ததாம். அஃதாவது பிறகு புலவரும் வடக்கிருந்து உயிர் நீத்திருக்கவேண்டும்-அவருக்கும் சோழனது நடுகல்லின் அருகிலேயே நடுகல் எடுத்திருக்கவேண்டும் என்பது புலனாகும்.

இச்செய்தியைப் புறநானூற்றுப் பாடல்கள் (221, 223) புலப்படுத்தும். அவை முறையே வருக:

‘வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்

நனந்தலை யுலகம் அரங்தை தூங்கக்
கெடுவில் கல்லிசை சூடி
நடுகல் ஆயினன் புரவலன் எனவே (221)

‘பலர்க்கு கிழலாகி உலகமீக் கூறித்

தலைப்போ கன்மையிற் சிறுவழி மடக்கி
நிலைபெறு நடுகல் ஆகியக் கண்ணும்
இடங்கொடுத் தளிப்ப மன்ற உடம்போடு
இன்னுயிர் விரும்பும் கிழமைத்
தொன்னட்பு உடையார் தம்முழைச் செலினே (223)

என்பன பாடல்கள். குறிக்கோளுக்காக உயிர் நீத்த கோப்பெருஞ் சோழனுக்குக் கல் எடுத்ததல்லாமல், நட்புக்காக உயிர் நீத்த புலவர் பொத்தியார்க்கும் கல் எடுத்தமை குறிப்பிடத் தக்கது. பொத்தியாரைப் போலவே, கோப்பெருஞ் சோழன் மாட்டுப் பெரு நட்பு கொண்டிருந்த பிசிராந்தையார் என்னும் புலவரும் வடக்கிருந்து உயிர் நீத்ததாக வரலாறு கூறுகின்றது.

கற்புக் கண்ணகி வழிபாடு

வீரத்துக்காகவும் உயரிய குறிக்கோளுக்காகவும் மாபெரு நட்புக்காகவும் உயிர் நீத்தோர்க்குக் கல் எடுத்ததல்லாமல், மறக்கற்புடைய மகளிர்க்கும் சிலை வைத்துக் கோயிலெடுத்து வழிபட்ட வரலாறு பண்டே நிகழ்ந் துள்ளது. ஒர் எடுத்துக்காட்டு:- தமிழ்நாட்டில் குற்ற மற்ற தன் கணவன் கோவலனைக் கொலை செய்வித்த பாண்டிய மன்னனோடு வாதிட்டு வழக்கில் வென்று இறுதியில் சேர நாடு சென்று கணவனது பிரிவாற்றாது உயிர் துறந்து மறக் கற்புடைய மகளாய் விளங்கிய கண்ணகி என்பவளுக்குச் சேரன் செங்குட்டுவன் என்னும் மன்னன் சிலை செய்து வைத்துக் கோயில் கட்டி வழி பட்ட வரலாறு தமிழ் மக்கள் அறிந்ததே. இவ்வரலாறு, இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் என்னும் தமிழ்க் காப்பியத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இக் காப்பியத்தின் மூன்றில் ஒரு பகுதியும் இறுதிப் பகுதியும் ஆகிய வஞ்சிக் காண்டம் முழுவதிலும் கண்ணகி வழிபாட்டு வரலாறே இடம்பெற்றுள்ளது. மன்னன் செங்குட்டுவன், இமயமலையிலிருந்து கல்வெட்டிக் கங்கை -யில் நீராட்டி, தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகிய தனது சேர நாட்டிற்குக் கொண்டு வந்து சிலையாகச் செய்து நட்டுக் கோயில் எடுத்து வழிபட்டதாக வஞ்சிக் காண்ட வரலாறு கூறுகிறது. நடுகல் வழிபாடு தொடர்பாகத் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலில் கூறப்பட்
டிருப்பதற்கு உரிய இலக்கியம் போலச் சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்திலும், காட்சிக் காதை, கால்கோள் காதை, நீர்ப் படைக் காதை, நடுகல் காதை, வாழ்த்துக் காதை, வரம் தரு காதை (காதை-கதைப் பகுதி). என்னும் பகுதிகள் இடம் பெற்றிருப்பது எண்ணி இன்புறுதற்குரியது.

தமிழ் நாட்டில் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் கட்டி வழிபட்டது போலவே, வேறு சில நாடுகளிலும் கண்ணகிக்குக் கோயில் எடுத்தனராம். இலங்கையில் கயவாகு மன்னன் கண்ணகிக்குக் கோயில் கட்டி வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. இந்த நூலின் மேலட்டைப் படத்தின் சிலை, இலங்கையில் உள்ளது. எனில், கண்ணகி வழிபாடு இலங்கையில் மிகவும் பெரிய அளவில் நடைபெற்றிருக்கிறது என்பதை அறியலாம். கண்ணகி முழுக் கடவுளாகச் சிலம்புக் காப்பியத்தில் ஆக்கப்பட்டுள்ளாள். சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் கட்டி வழிபட்டது போலவே, தன் தாய்க்கும். கோயில் கட்டி வழிபட்டானாம். பெற்றோருக்கும் சிறப்புச் செயல் புரிந்த மற்றோருக்கும் அவர்களை அடக்கம் செய்த இடங்களில் சிறு சிறு கோயில்கள் கட்டி வழிபடும் முறை இக்காலத்திலும் நடைபெறுகிற தல்லவா?

திரெளபதி வழிபாடு

செங்குட்டுவ மன்னன் கண்ணகிக்குக் கோயில் எடுத்ததைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் ஊர்கள் பலவற்றிலும் கண்ணகிக்குக் கோயில் எடுத்து வழிபாடு செய்யப் பெற்றது. வட இந்தியாவிலிருந்து பாரதக் கதை தென்னிந்தியாவில் பரவப் பரவ, கண்ணகியின் இடத்தைத் திரெளபதி பற்றிக் கொண்டாள். நாளடைவில் கண்ணகி வழிபாடு குறைந்து-பிறகு மறைந்து திரெளபதி வழிபாடு தமிழ். நாட்டில் பெரிய அளவில் பரவிற்று. பண்டொரு காலத்
தில் வட இந்தியாவில் வாழ்ந்த பாண்டவ மன்னர்கள் ஐவர்க்கும் மனைவியாயிருந்தவள் திரெளபதி. அதனால் இவளை ஐவர்க்கும் தேவி அழியாத பத்தினி என்று கூறுவர். ஒரு பெண் வாழ்க்கையில் ஒருவனை மட்டுமே மணந்து கடைசி வரையும் கற்பு நெறி பிறழாதிருப்பதே தமிழ் நாட்டு மரபு. ஐவரை மணப்பினும் அழியாத பத்தினி என்னும் பெயர் பெறுவது வட இந்தியாவின் ஒரு பகுதி மரபு. தன் கணவன்மார் ஐவர்க்கும் பங்காளியும் பகைவனுமாகிய துரியோதனன் என்னும் பேரரசனை வீழ்த்தியதில் காட்டிய வீரம் பற்றியே திரெளபதி பத்தினித் தெய்வமானாள்; “திரெளபதி அம்மன்’ என்ற பெயருடன் கோயில் கட்டி வழிபடப் பெறுகிறாள். திரெளபதியம்மன் கோயில்கள் இந்தியாவில் ஏராளம்-ஏராளம். திரெளபதியம்மன் பெயரால் நடைபெறும் விழாக்கள் மிகப் பல. தெய்வம் பிறந்த வரலாறு இப்போது தெரியலாமே!

மாரியம்மன் வழிபாடு

மாரியம்மன் என்னும் பெயரிலும் நாடெங்கும் கோயில்கள் உள. மாரியாத்தா என்ற பெயராலும் வழங்குவது உண்டு. அம்மன்-ஆத்தா என்றால் தாய் என்று பொருளாகும்; மாரி என்றால் மழையாகும். எனவே, மலழயைத் தந்து மக்களை வாழவைக்கும். தெய்வம் என்னும் பொருளில் மாரியம்மன், மாரியாத்தா என்னும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. மாரியம்மன் கோயில் விழாக்கள் நாட்டில் மிகவும் பெயர் பெற்றவை. கண்ணகியும் திரெளபதியும் போல மாரியம்மனும் மனிதப் பெண்ணே. திருவள்ளுவரின் மனைவிதான் மாரியம்மன் ஆனாள் என்பது ஒரு கதை. பிருகு முனிவரின் மனைவி நாகாவலி என்பவளே மாரியம்மன் ஆனாள் என்பது மற்றொரு கதை. சமதக்கிளி முனிவரின்
மனைவி இரேணுகா தேவி என்பவளே மாரியம்மன் ஆனாள் என்பது வேறொரு கதை. இரேணுகாவின் மகன் பரசுராமன் தாய் செய்த ஒரு பெருங்குற்றம் பற்றி அவளைத் தலை வேறாகவும் உடல் வேறாகவும் வெட்டி விட்டானாம்; எனவே சில இடங்களில் தலையை மட்டும் வைத்து வழிபடுகின்றனர். கழுத்து மாரியம்மன் தோன்றிய வரலாறுகளுள் இஃதும் ஒன்றாகும். இக்கதைகளை விரிப்பின் இன்னும் பெருகுமாதலின் இம்மட்டோடு விடுப்பாம் என்ன கதைகள் இவை! மழை தரும்படியாக வும் அம்மை (Small Pox) என்னும் நேர்யும் வாந்திபேதி ‘(cholera) என்னும் நோயும் வராமல் தடுத்துக் காக்கும் படியாகவும் மாரியம்மனை வேண்டி வழிபடுவது மக்கள் மரபாகும். மனிதர் தெய்வமாகும் வரலாற்றுக்கு இஃதும் ஒரு சான்றாகும்.

பூவாடைக்காரி வழிபாடு

திருமணம் ஆகிக் கழுத்தில் தாலி கட்டிக்கொண்டு கணவனுடன் வாழும் பெண்ணைக் கட்டு கழுத்தி’ (சுமங்கலி) எனல் தமிழர் மரபு. கணவனையிழந்த பெண்ணைக் கைம்பெண்’ எனல் மரபு. பெண் ஒருத்தி, கணவன் இருக்கும்போதே, கட்டு கழுத்தியாய் (சுமங்கலி யாய்) பூவுடனும் பொட்டுடனும் இறந்துவிடின், அவளுக்குப் பூவாடைக்காரி என்னும் பெயர் வழங்கிப் புதுப்புடவை எடுத்து வைத்துச் சிறப்பு உணவு வகைகள் செய்து ஆண்டுதோறும் படையல் போடுவது ஒரு சில குடும்பங்களின் மரபு. எங்கள் குடும்பத்தில் இஃது உண்டு. என் பாட்டியார் கட்டு கழுத்தியாய் இறந்து விட்டதால், அவருக்காக என் அன்னையார் ஆண்டுதோறும் ‘பூவாடைக்காரி வழிபாடு செய்து வந்தார்கள். பின்னர், என் தந்தையார் இறப்பதற்கு முன் அன்னையார் கட்டு கழுத்தியாய் இறந்துவிட்டதால் என் அன்னையாருக்காக
என் மனைவி ஆண்டுதோறும் பூவாடைக்காரி படையல் போட்டு வழிபடுவது எங்கள் குடும்பத்தில் இன்றும் நடை பெற்று வருகிறது. செத்தவர் தெய்வமாகிறார் என்னும் கொள்கைக்கு இஃதும் ஒரு சான்று.

மாதா கோயில் வழிபாடு

பெருமைக்குரிய பெண்டிர் இறந்து விடின், அவருக்குக் கோயில் கட்டி வழிபடும் மரபு இந்து மதத்தில் மட்டும் உள்ளதன்று; இது கிறித்தவ மதத்திலும் உண்டு. ஏசுநாதரின் அன்னையாராகிய மரி-மேரி (Mary) என்னும் அம்மையாரை உலகெங்கிலும் உள்ள கிறித்தவர்கள் வழிபடுவது கண்கூடு. கிறித்தவர்களின் கோயில் சர்ச்சு-church என ஆங்கிலத்தில் குறிக்கப்படுகிறது. ஆனால், தமிழ் நாட்டில் அக்கோயில் “மாதா கோயில்” என்னும் பெயரால் வழங்கப்படுகிறது. மாதா என்பது ஏசுநாதரின் அன்னையாரைக் குறிக்கிறது. கிறித்தவர்கள் ஏசுநாதரை வழிபடுவது போலஅவருடைய அன்னை யாரை வழிபடுவது போலஅவருடைய தந்தையாராகிய சூசையப்பரையும் வழிபடுகின்றளர். யோசேப்பு-ஜோஸப் (Joseph)-ழொசே என்றெல்லாம் மொழிக்கு மொழி வேறு வேறு விதமாக அழைக்கப்படுபவர் தமிழில் சூசை – சூசையப்பர் என அழைக்கப் பெறுகிறார். இந்து மதத்தினர் ஏதாவது எழுதத் தொடங்குமுன், முருகன் துணை-வேலு மயிலுந் துணை-சிவமயம்-பூரீ ராம ஜெயம் – என்றெல்லாம் தலைப்பில் எழுதுவது போல, தமிழ் நாட்டுக் கிறித்தவர்கள் தலைப்பில் சேசு மரி சூசை துணை’ என்று எழுதுகின்றனர். சேசு = ஏசு நாதர்; மரி = அவர் தாயார்; சூசை = அவர் தந்தையார்.

மக்கள் கடவுளாக மதித்த் வழிபடுகின்ற இராமன், கண்ணன், புத்தர், ஏசு நாதர் போன்றோர் எல்லாரும்
மக்களாய்ப் பிறந்து வாழ்ந்தவர் என்பதை மறந்துவிட முடியாது. இந்து மதத்தில், கன்னிமார், இயக்கி, காட்டேறி, இருசியம்மா-இருசியாத்தா, இரிசப்பன், சாத்தான், மாடசாமி, பாவாடை சாமி-பாவாடை ராயன் – பாவாடை, இடும்பன், மதுரை வீரன், முனியன், முனியண்டி-முனிசுவரன், மன்னார் சாமி, மாரி சாமி, காத்தவராயன் முதலியோர் சிறு தெய்வங்கள் எனப்படுவர். இவர்கட்கெல்லாம் சிலை வைத்தும் கோயில் எடுத்தும் வழிபாடு நடைபெறுகிறது. இவர்கள்,எல்லாரும் மக்களாய் வாழ்ந்து கடவுளாக மாறினவர்களே! மக்களாகிய இவர்கள் தெய்வங்களாக மாறினமை பற்றிய வரலாறுகன் பல உண்டு. ஈண்டு விரிப்பின் பெருகும். மதுரைவீரன் வரலாறு திரை ஒவியமாக (சினிமாவாக) எடுக்கப்பட்டிருப்பதைப் பார்த்த மக்கள், மனித வீரன் ஒருவனே ‘மதுரை வீரன்’ என்னும் தெய்வமானான் என்பதை நன்கறிவர்.


  1. அகநானூறு-களிற்றி யானை நிரை-35.

License

செயற்கை முறைக் கடவுள் வரலாறு Copyright © by manarkeni. All Rights Reserved.