11 உலகமே உண்மைப் பொருள்
சைவ சித்தாந்தக் கொள்கையினர் கூறும் கடவுள், உயிர், உலகம் என்னும் முப்பொருள்களுள் கடவுள் என’ ஒரு பொருளும் உயிர் என ஒரு பொருளும் தனியே இல்லை-அவை ஒருவகை ஆற்றலே என்பது இதுகாறும் நிறுவப்பட்டது. அடுத்து உலகத்தை எடுத்துக்கொள்ளலாம். கட் புலனாலும் மற்ற பொறி புலன்களாலும் நேராக தெளிவாக அறியப்படுவதால், உலகம் என்பது உண்மைப் பொருளாகும். உலகம் என்பதில். நாம் வாழும் பூவுலகமேயன்றி, மற்ற கோள்கள் (கிரகங்கள்), உடுக்கள் (நட்சத்திரங்கள்) போன்று-பொறி புலன் கட்குப் புலனாகும் அனைத்தையும் அடக்கிக் கொள்ளலாம்.
ஐந்து முதற் பொருள்கள்
உலகம் என்பது, ஐந்து முதற் பொருள்களால் (பஞ்ச பூதங்களால்) ஆனது- ஐம்முதற் பொருள்களின் சேர்க்கை எனப்படும். அப்பொருள்கள், விண், காற்று, தீ, நீர், மண் என்னும் ஐந்துமாகும். கடவுளையும் உயிரையும் ஒத்துக் கொள்ளாமல் உலகத்தை மட்டும் ஒத்துக்கொள் பவர்கட்குள்ளேயே ஒருசில கொள்கையினர், ஐம்பொருள்களுள் விண் என்பது தனியே தெளிவாகப் பொறி புலன்
களால் உணரப்படாமையால் விண்’ என்னும் ஒரு பொருளை ஒத்துக் கொள்ளாமல் மற்ற நான்கு பொருள் களை மட்டுமே ஒத்துக்கொள்கின்றனர். ஆயினும், மற்ற நான்கு பொருள்களும் இருக்கும் வெற்றிடத்தை ‘விண்’ என்னும் ஒரு பொருளாகக் கொண்டு, மூலப் பொருள்கள் (Elements) ஐந்து என்றே சொல்லலாம். சில கோள்களில் இந்த ஐந்து பொருள்களும் உள்ளன எனக் கூற முடியாது. இப்போது (1888 வரை) அறிந்துள்ள அறிவியல் ஆராய்ச்சியின்படி, நிலாவில் (சந்திரனில்) காற்றும் தண்ணிரும் இல்லையல்லவா? ஞாயிறு போன்ற நெருப்புக் கோளங்களில் தண்ணீர் என்னும் தனிப் பொருள் பற்றி நினைக்கவே வேண்டியதில்லை. விண் வெளியில் பொறிபுலன்கள் உணரும்படியாக உள்ள பல் வேறு உலகப் பகுதிகளுள் சிலவற்றில் காற்று தீ, நீர், மண் ஆகிய நான்கு பொருள்களும் இருக்கலாம்; சிலவற்றில், இந்நான்கு பொருள்களுள் சில குறைந்தும் இருக்கலாம்.
மக்களாகிய நம் உடம்பும் சரி-அஃறிணைகளின் உடம்பும் சரி-இந்த ஐம்பொருள்களால் (பஞ்ச பூதங்களால்) ஆனவையேயாகும். உடம்பைப் பஞ்ச பூத பரிணாம சரீரம்’ என சம்சு கிருத மொழியில் கூறுவர் இதனை ஐம்பொருள் திரிபு உடல்’ எனத் தமிழில் வழங்கலாம். இதற்குச் சிறிது விளக்கம் தேவை அரிசியும் வெல்லமும் திரிந்து பண்ணியம் (பணியாரம்)என்னும் தின்பண்டமாக மாறுகின்றன. சோறு, உப்புமா,இட்டலி, தோசை, அப்பம், கொழுக்கட்டை, பிட்டு முதலிய உணவுப்பொருள்கள் அரிசியின் திரிபே (பரிணாமமே) ஆகும். பரிணாமம் என்றால், ஒன்று திரிந்து மற்றொன் றாக ஆவதாகும். இவ்வாறே, ஐம்பொருள்களும் (பஞ்ச பூதங்களும்) திரிந்து உடம்பாக மாறின. அதனாலேயே உடம்பு ஐம்பொருள் திரிபு (பஞ்ச பூத பரிணாம சரீரம், எனப்படுகின்றது.
இனி. உடம்பில் ஐம்பொருள்களும் உள்ளவாற்றினை நோக்கலாம். விண்: உடம்பினுள் காற்றும் நீரும் தடை படாமல் போய் வரும் பகுதிகளை விண்ணின் கூறு எனலாம். எடுத்துக்காட்டாக. மூக்கின் இரு வாயில் களிலும் வெற்றிடமாகிய விண்ணின் கூறுஅமைந்துள்ளது எனக் கொள்ளலாமன்றோ? அடுத்தது காற்று: மூக்கின் வழியாகக் காற்று போய் வருவது தெரிந்ததே, வாய் வழி யாகக் காற்று போவதும் உண்டு; வெற்று (காலி) வயிற்றில் காற்று இருக்கும்; இந்த அமைப்பால்,உடம்பில் காற்றின் கூறு இருப்பது அறியப்படும்.
அடுத்தது தீ: எவ்வளவு தீனி போட்டாலும் எரித்து விடுகிறது என்று சொல்வது உலக வழக்கு; சில நேரத்தில் உடம்பைத் தொட்டால் கொதிக்கிறது; சில சமயம் மூக்கிலிருந்து வெப்பக் காற்று வருகிறது; சில நேரத்தில் கழிக்கும் சிறுநீர் சுடுகிறது. நாற்காலியில் சிறிது நேரம் அமர்ந்திருந்து எழுந்ததும் அமர்ந்திருந்த இடத்தைத் தொட்டுப் பார்த்தால்; சுடுகிறது; நீண்ட நேரம் படுத் துறங்கிய இடத்திலே காலை வைத்தால் சுடுகிறது; உடம்பில் கட்டிய ஈரத்துணி உடம்பின் வெப்பத்தால் காய்ந்து விடுவதுண்டு; உடம்பில் எப்போதும் குறிப்பிட்ட அளவு வெப்பம் இருந்தால் தான் உயிர் வாழமுடியும்உடம்பில் வெப்பம் இல்லாவிடின் நேர்வது இறப்பே; எனவே, இவற்றைக் கொண்டு தீயின் கூறு இருப்பது அறியப்படும்.
நான்காவது நீர் : உடம்பில் நீர் இருக்கிறது என்ப தற்கு மிகுதியாகச் சான்று வேண்டா. உடம்பு முழு வதும் குருதி இருக்கிறது-அதில் நீர் இருக்கிறது. வாந்திபேதி (காலரா) நோயுற்றவரின் குருதியில் உள்ள நீர், குருதியினின்றும் பிரிந்து கழிச்சல் என்னும் பேருடன் வெளியேறுகிறது; அதை ஈடுகட்டவே.
அந்நோயாளிக்கு ஊசி மூலம் நீர் ஏற்றப்படுகிறது; இல்லா விடின், குருதியோட்டம் தடைபட-அடைபட நோயாளி இறந்து போக நேரிடும். தண்ணிர் வெளியிலிருந்து வாய் வழியாகக் குடிக்கப்படுகிறது; வியர்வையாகவும் சிறு நீராகவும் தண்ணிர் வெளிவருகிறது. ஒரு பிடி பொரி மரவை வாயில் போட்டால், அதை அரைத்துக் கரைத்து உள்ளே அனுப்ப வாயிலிருந்து எவ்வளவோ நீர் சுரக்கிறது; உணவுப் பொருளைக் கண்டதும் நாக்கில் நீர் ஊறுகிறது என்று சொல்வதும் உண்டு. எனவே, இவற் றைக் கொண்டு, உடம்பில் நீர்க்கூறு உள்ளமை தெளிவாகும்.
இறுதியானது மண் ; உடம்பின் தசைப் பகுதிகள் மண்ணின் கூறு எனலாம். மண்ணில் என்னென்னவோ முளைக்கின்றன; அதுபோல, நகமும் மயிரும் முளைத்து வளர்வதைக் கொண்டு உடம்பில் மண்ணின் கூறு இருப்பது தெளியப்படும். அவ்வளவு ஏன்? உடலை (பிணத்தை) மண்ணுக்குள் புதைத்தால், அது மக்கி மண்ணோடு மண்ணாய் விடுவது கண் கூடாகும். –
மேற்கூறிய விளக்கங்களால், உடம்பு ஐந்து முதல் (மூலப்) பொருள்களின் திரிபு என்பது விளங்கும். இது சார்பான குறிப்பு ஒன்றைக் குடபுலவியனார் என்னும் தமிழ்ப் புலவரும் ஒரு பாடலில் கூறியுள்ளார். அப் பாடல் புறநானூறு என்னும் தமிழ் நூலில் உள்ளது. ‘தண்ணிர் இன்றி உடம்பு இல்லை; உடம்புக்கு இன்றி யமையாததான உணவு தந்தவர் உயிர் தந்தவராவர்; உணவு எனப்படுவது மண்ணும் தண்ணிரும் சேர்ந்தது; அந்த மண்ணும் தண்ணீரும் கலந்தவரே உடம்பும் உயிரும் பெற்றவர் ஆவார்’-என்பது புலவரின் பாடல் கருத்து:
‘நீரின்று அமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத் தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப் படுவது கிலத்தொடு நீரே
நீரும் கிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே’.
என்பது அந்தப் புறநானூற்றுப் பாடல் (18) பகுதி ‘மண்ணும் நீரும் கலந்ததே உடம்பு’ என்னும் குறிப்பு இதனால் கிடைக்கிறது.
உடம்பின் பொல்லாமையையும் நில்லாமையையும் கூறும் வகையில் சித்தர்கள் பாடியுள்ள பாடல்கள் சிலவும் உடம்பின் பரிணாமக் கொள்கைக்குத் துணை செய் கின்றன. பாடல் பகுதிகள் சில வருமாறு:
‘ஊத்தைக் குழியிலே மண்ணை எடுத்தே
உதிரப் புனலிலே, உண்டை சேர்த்தே
வாய்த்த குயவனார் பண்ணும் பாண்டம்
வரகோட்டுக்கும் ஆகாதென் றாடாய்:பாம்பே’
‘ இருவர் மண் சேர்த்திட ஒருவர் பண்ண
ஈரைந்து 10)மாதமாய் வைத்த சூளை
அருமையா யிருப்பினும் அந்தச் சூளை
அரைக்காசுக்கு ஆகாதென் றாடாய் பாம்பே’
(மேலுள்ள இரண்டும் பாம்பாட்டி சித்தர் பாடல்கள்)
‘காயமே இது பொய்யடா
காற்று அடைத்ததோர் பையடா
மாயனாம் குயவன் செய்த
மண்ணுப் பாண்டம் ஒடடா’’ .
“நந்த வனத்தில் ஓர் ஆண்டி-அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தான் ஒரு தோண்டி-அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தான்டி”
- (நால்+ஆறு மாதம் = பத்து மாதக் கரு)
என்பன சித்தர் பாடல் பகுதிகள். மண், புனல் (நீர்), காற்று என்னும் மூலப் பொருள்களின் பரிணாமமே உடம்பு என்னும் குறிப்பு, இப்பாடல் பகுதிகளில் பொதிந்து கிடக்கிதது.
உலகமும் உடம்பும்
ஈண்டு, “அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும்” – என்னும் முதுமொழி எண்ணத் தக்கது. அண்டம் என்றால் உலகம்; பிண்டம் என்றால் உடம்பு. உலகத்தில் உள்ள- உலகமாக உள்ள ஐந்து முதற் பொருள்களுமே (பஞ்ச பூதங்களுமே) உடம்பிலும் உள்ளன, என்பது இம். முதுமொழியின் கருத்தாகும். இதை நிறுவும் வகையில் உள்ள சம்சுகிருதப் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. காதல் முற்றி முதிர்ந்து சாதல் கட்டத்துக்கு வந்துவிட்ட ஒருவன் கூறியதாக உள்ளது அந்தப் பாடல். ஈண்டு அதன் கருத்து வருமாறு:-
“யான் என் காதலியைப் பெறுவதற்கு முன்பே இறந்து போவேனே யாயின், என் உடம்பில் உள்ள ஐந்து முதற் பொருள்களும் அவள் வாழும் இடத்தில் உள்ள ஐந்து முதற் பொருள்களோடு கலந்து போவன வாகுக! என் உடம்பில் உள்ள விண் பகுதி, அவள் வாழும் இடத்தில் உள்ள விண்வெளியோடு கலப்பதாகுக! என் உடலுக்குள் உலவும் காற்றுப் பகுதி, அவள் வாழும் இடத்தில் வீசும் காற்றோடு கலப்பதாகுக! என். உடம்பின் நெருப்புப் பகுதி, அவள் பார்க்கும் முகக் கண்ணாடி ஒளி
யுடன் ஒன்றுவ தாகுக! என் உடம்பில் இருக்கும் நீர்ப் பகுதி, அவள் நீராடும் பொய்கையில் போய்ச் சேர்வ தாகுக! என் உடம்பின் மண் பகுதி, அவள் நடமாடும் இடத்தில் உள்ள மண்ணோடு மண்ணாய் மறைவ தாகுக!-என்பது அந்தச் சம்சு கிருதப் பாடலின் கருத் தாகும்.
ஐந்து முதற் பொருள்களும் உடம்பில் உள்ளன என்னும் கருத்தைத் திருவள்ளுவனாரும் தெரிவித்துள் ளார். மனத்தில் வஞ்சகம் உடையவன் வெளியில் உண்மையானவன் போல் நடிக்கும் பொய் நடத்தையைக் கண்டு, அவனது உடம்பில் ஒன்றியிருக்கும் ஐந்து முதற் பொருள்களும் (பஞ்ச பூதங்களும்) உள்ளே எள்ளி நகையாடும்’-என்பது அவரது திருக்குறள் பாடல் கருத்து.
‘வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே ககும்’. (271)
(அறத்துப்பால் – துறவறவியல் – கூடாவொழுக்கம்) என்பது அவரது பாடல்.
வள்ளுவர் குறட்பாவில் கூறியுள்ள இக் கருத்தினைப் பொதுமக்களின் வழக்காற்றிலும் கேட்கலாம். என் அஞ்சு பஞ்ச பூதத்துக்குச் சரியாகச் சத்தியமாகச் சொல்கிறேன்” என்றும், எதிராளியை நோக்கி ‘உன் அஞ்சு பஞ்சபூதத்திற்குச் சரியாக சத்தியம்செய்து சொல்வாயா?” என்றும், தத்தம் உடம்பில் உள்ள பஞ்ச பூதங்களின் மேல் ஆணையிட்டுப் பொதுமக்கள் ஒருவர்க்கு ஒருவர் உரையாடிக் கொள்வது வழக்கம். இந்த வழக்காற்றை, தமிழ்நாடு-தென்னார்க்காடு மாவட்டம், கடலூர் வட்டாரத்தில் யான் பலமுறை கேட்டிருக்
கிறேன். பொருள் புரிந்தோ-புரியாமலோ, பொதுமக்கள் இவ்வாறு பேசுவது, வழி வழி மரபாய் விட்டது.
மேற்கூறியவற்றால், சைவ சித்தாந்த சமயத்தினர் கூறும் கடவுள், உயிர், உலகம் என்னும் முப்பொருள்களுள் கடவுளும் உயிரும் உண்மையல்ல; உலகம் ஒன்று மட்டுமே உண்மைப் பொருளாகும் என்பது தெளிவு. இளமையில் ஆழ்ந்த கடவுட் பற்றுடையவனாக இருந்த யான், பிறர் கூறியதைக் கேட்டோ, பிறர் எழுதியதைப் படித்தோ இந்த முடிவுக்கு வரவில்லை; உலக நடைமுறைகளை உற்று நோக்கிப் பல்லாண்டுகள் ஆழ்ந்து சிந்தித்ததனால் ஏற்பட்ட அனுபவ அறிவின் காரணமாகவே இப்போது இம்முடிவுக்கு வந்துள்ளேன்.
இயற்பொருள் வாதம்
உலகம் ஒன்று மட்டுமே உண்மையானது என்னும் கொள்கை புதிய தன்று; பண்டு தொட்டே பலரால் பின் பற்றப்பட்டு வரும் கொள்கையேயாகும். இந்தக் கொள்கையும் ஒரு மதம் போல் கருதப்படுகின்றது; இதற்கு உலோகாயத மதம் எனச் சம்சுகிருதத்திலும், ‘Materialism என ஆங்கிலத்திலும் பெயர்கள் வழங்கு கின்றன. சார்வாகர் என்பவர் இக்கொள்கையைப் பரப்பியதால் இதற்குச் சார்வாகம் (சார்வாக மதம்) என்னும் பெயரும் உண்டு. இதனை இயற் பொருள் வாதம் என அழகு தமிழில் அழைக்கலாம். பொறி புலன்களால் உணரப்படும் இயற்கைப் பொருளாகிய உலகத்தை மட்டுமே ஒத்துக் கொள்வதால், இயற் பொருள் வாதம் என்னும் பெயர் ஏற்புடைத்தே! இந்த உலோகாயத மதத்தின் கொள்கைகளாவன:
காட்சியளவையாக – பிரத்தியட்சமாக அறியப்படுவதே உண்மை. மூல முதற் பொருள்கள் (பூதங்கள்)
ஐந்து அல்ல-காற்று, தீ, நீர், மண் என நான்கேயாகும். உடலே (உடலின் இயக்கமே உயிர் ஆகும். மறுமை (மறு உலக வாழ்வு) இல்லை. கடவுள் என ஒன்றும் இல்லை-என்பன உலோகாயதக் கொள்கைகள்.
இதற்கு நேர்க்காட்சி வாதம் (Positivism) என்ற பெயரும் உண்டு. கண்டதே காட்சி – கொண்டதே கோலம் ஆகும். பொறி புலன்கள் வாயிலாகவோ அறிவியல் அடிப்படையிலோ அறிய முடியாதவை உண்மையல்ல-என்கிறது இக் கொள்கை. இத்தகைய கொள்கையினர் பற்றிய குறிப்புகள் தமிழ் நூல்களில் காணப்படுகின்றன. திருக்காளத்திப் புராணம், திருவாச கம் முதலிய நூல்களின் ஆசிரியர்கள் இக்கொள்கை யினரைக் கண்டித்துள்ளனர். உலோகாயத மதத்தானைப் பாம்பு எனவும் அவன்து கொள்கையை நஞ்சு எனவும் திருவாசகத்தில் மாணிக்கவாசகர் கூறிக் கண்டித்துள்ளார்.
“உலோகாயதன் எனும் ஒண்திறல் பாம்பின்
கலா பேதத்த கடுவிடம் எய்தி”
(போற்றித் திருவகவல்-56-57)
என்பது பாடல் பகுதி. தத்துவ லிங்கதேவர் என்பவர் ‘தத்துவ நிசானு போக சாரம்’ என்னும் நூலில் (பக்கம் -259), ‘தேகமே ஆன்மா என்பவன் சார்வாகன்’ எனச் சார்வாகனுக்கு இலக்கணம் கூறியுள்ளார். உடம்பின் இயக்க நடைமுறையைத் தவிர, மனம், உயிர் என ஒன்றும் இல்லை எனக் கூறுபவர்கள் நடத்தைவாதக் காரர்கள்’ (Behaviourists) என்னும் பெயராலும் சுட்டப் படுகின்றனர். இத்தகு உலோகாயத மதக் கொள்கையைப் பற்றி, மாதைத் திருவேங்கடநாதரின் பிரபோத சந்திரோதயம்’ என்னும் நூலில் விரிவாகக் காணலாம்,
உலகம் மட்டுமே உண்மைப் பொருளாகும் என்னும் கொள்கை பலரால் மறுக்கப்படினும், இக்கொள்கையே சரியானது என்னும் உண்மை, இது காறும் மேலே கூறப்பட்டுள்ள விளக்கங்களால் தெளிவாகும். உலகத்துக்கு உலகில் உள்ள பொருள்களுக்கு என்றும் அழிவு இல்லை. ஆனால், ஒன்று திரிந்து மற்றொன்றாகும்; இஃது அழிவு அன்று – திரிபே. எனவே, உலகம் உண்மைப் பொருள் என்பது வெளிப்படை.