="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

9 உயிர் என்பதன் விளக்கம்



7. உயிர் என்பதன் விளக்கம்

உயிர் என்பது என்ன? – என்பதைக் காண வேண்டி யது ஈண்டு மிகவும் இன்றியமையாதது.

சைவ சித்தாந்தக் கொள்கையினர் கூறும் கடவுள், உயிர், உலகம் என்னும் முப்பொருள்களுள் கடவுள் என ஒன்று இல்லையே! அடுத்து உயிர் என்பது என்ன என்று திட்டவட்டமாக இன்னும் கூறமுடியவில்லை. உயிர் எனத் தனியே ஒன்று இருப்பதாகவே பெரும்பாலான மக்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். பிணத்தால் சிறிதும் இயங்க முடியவில்லை; எனவே, பிணமாகிய உடலுக்குள் இருந்த ஏதோ ஒரு பொருள் உடலினின்றும் வெளியேறிவிட்டது; அதனால்தான் உடலால் இயங்க முடியவில்லை; வெளியேறிய பொருள்தான் உயிர் என்பது-எனப் பலரும் நம்பிக்கொண்டுள்ளனர். காட்சியளவையாக (பிரத்தியட்சப் பிரமாணமாக) உயிரைத் தனியே பிரித்துக் கண்ணால் காண முடியாவிடினும், இயங்கும் உடல், இயங்காத பிணம் என்னும் இரண்டையும் காட்சியளவையாகக் கொண்டு, அவ்வளவையின் உதவியால், இயங்கும் உடலில் உயிர் என ஒன்று இருக்கவேண்டும்-இயங்காத பிணத்தினின்றும் அவ்வுயிர் வெளியேறிவிட்டிருக்க வேண்டும்-எனவே, உயிர் என்னும் ஒரு பொருள் இருப்பது உறுதி எனக் கருத்தளவையாக (அனுமானமாக) முடிவு எடுத்துள்ளனர்.
ஈண்டு மிகவும் நுட்பமாகச் சிந்திக்கவேண்டியுள்ளது. உயிர் என்னும் ஒன்று வெளியேறி விட்டதனால் உடல் இயங்காமல் பிணம் எனப்பட்டதா? அல்லது, உடல் இயங்க ஒத்துழைக்காமையால், உயிர் என்னும் ஒன்று வெளியேறிவிட்டதா? இதற்குச் சரியான விடை வேண்டும். எனவே இது சிந்தனைக்கு உரியதாகும். இதற்குவிட்ையும் கூறவியலும், உயிர் போய்விட்டதனால் உடல் இயங்கவில்லை-பிணமாய் விட்டது’ என்று கூறுவது பொருந்தாது. உடல் இயங்க முடியாமற் போனதால்தான், உயிர் என்னும் ஒன்று வெளியேறி விட்டதாகக் கருதுகின்றனர்-என்று கூறுவதே சாலப் பொருந்தும். இதற்கு இன்னும் விளக்கம் வேண்டுமெனில். இதோ-

உடல்-உடலுறுப்புகள் சரியான நிலையில் இருப்பவர் நீண்ட காலம் வாழ்கிறார்; உடல்-உடல் உறுப்புகள் பிணியினாலோ வேறு காரணங்களாலோ கெட்டுப் போனவர் செத்துப் போகிறார்; நூறு ஆண்டுகளும் அதற்கு மேலும் வாழ்பவர்கள், உடல் உறுப்புகள் தேய்ந்து போவதால்-மிகப் பழமையாகி ஆற்றல் இழந்து போவதால் உடல் இயங்க முடியாமல் செத்துப் போகிறார்கள்; இதிலிருந்து தெரிவதாவதுஉடல் இயக்கத்தைக் கொண்டு உயிரே தவிர, உயிர் இயக்கத்தைக் கொண்டு உடல் இல்லை என்பதாகும். கட்டான இளமையுடனும் நல்ல தூய உடல் நிலையுடனும் வாழும் இளைஞர் ஒருவர், தூக்கில் இடப்பட்டாலோ – கழுத்து வெட்டுண்ணப் பட்டாலோ, எதிர்பாராத இடையூற்றில் (விபத்தில்) சிக்கிக் கொண்டாலோ, உடனே இறந்து போகிறார். இந்நிலைகளில் அவர் உயிர் போனதால் இறக்கவில்லை-அஃதாவது; மாறாக, உடலுக்கு
ஊறு நேர்ந்ததனால்தான் இறந்து போனார்; எனவே, ‘இறப்பு என்பதற்கு, உடலிலிருந்து ஏதோ உயிர் என ஒன்று போய் விட்டதாகப் பொருள் சொல்லலாகாது; மாறாக, உடல்-குறிப்பாக இதயம் இயங்க முடியாமற் போவது தான் இறப்பு என்றே பொருள் கொள்ள வேண்டும். ஈண்டு திருமூலர் தமது திருமந்திரம் என்னும் நூலில் கூறியுள்ள ஒரு பாடலின் கருத்து ஒப்பு நோக்கத் தக்கது. பாடல் வருமாறு:

“உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

                திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
            உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
                 உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”

(மூன்றாம் தந்திரம்-காயசித்தி உபாயம்-724)

என்பது பாடல். உடம்பு கெடின் உயிர் போய் விட்ட தாகப் பொருளாகும். எனவே, பேணும் முறையறிந்து உடம்பை வளர்த்தலே உயிரை வளர்த்தல் ஆகும்என்னும் குறிப்பு இப்பாடலில் பொதிந்துள்ளமையைக் காணலாம். முறையறிந்து உடம்பை வளர்த்ததனால், திருமூலர் நீண்ட நெடுங்காலம் உயிர் வாழ்ந்தார் என வரலாறு வழங்கப்படுகின்றது.

உறுப்பு மாற்று மருத்துவம்

பல்வேறு பொறிகளின் (இயந்திரங்களின்) உறுப் புகள் அனைத்தும் சரியான நிலையில் இருந்தால்தான் பொறிகள் இயங்கும்; உறுப்புகள் தேய்ந்து விடின்-பழு தடைந்து விடின்-மாறுதல் பெற்று விடின் பொறிகள் இயங்க மாட்டா. உடலும் ஒருவகையில் இத்தகையதே. மக்களின் படைப்பு இயந்திரங்கள்; இயற்கையின் படைப்பு உடல்கள் இயந்திரத்தின் உறுப்புகளுள் ஒன்று பழுதுபட்டால், அதற்குப் பதிலாக, நல்ல நிலையில் உள்ள
வேறோர் உறுப்பைப் போட்டு இயந்திரத்தை இயங்கச் செய்கிறோம்; அதே போல, மனித உறுப்புகளுள் ஒன்று பழுதுபடின், அதற்குப் பதிலாக, வேறு மனித உறுப்பு ஒன்றையோ-அல்லது விலங்கு உறுப்பு ஒன்றையோஅல்லது பிளாஸ்டிக்கால் (Plastic) செய்த உறுப்பு ஒன்றையோ-இன்னும் இரப்பர் போன்றவற்றால் செய்த உறுப்பு ஒன்றையோ இணைத்து உடலை இயங்கச் செய்வது இன்றைய அறிவியல். மக்கள் உடலில் கெட்டுப் போனவற்றிற்கு மாற்றாக, கண், இதயம், குண்டிக்காய் (Kidney) முதலியன பொருத்தப்படுகின்றன. செயற்கைக் கை கால்களும் வேறு செயற்கை உறுப்புகளும் பொருத்தப்படுகின்றன. குருதியே (இரத்தமே) புதிதாகச் செலுத்தப்படுகிறது.

ஊனுக்கு ஊன்

உறுப்பு மாற்று மருத்துவம் (Transplantation) இக்காலத்தில் மிகுதியாக நடைபெறுகிறது. ஆயினும், பழங்காலத்திலேயே இது பற்றிய அறிமுகம் இருந்ததாகவும்-இம்மருத்துவமுறை கையாளப் பட்டதாகவும் தெரிகிறது. கண்ணப்பர் என்னும் சிவனடியாரின் வரலாற்றில் இது பற்றிய குறிப்பு கிடைக்கிறது. இற்றைக்கு (1988) ஆயிரத்திருநூறு ஆண்டுகட்குமுன், தென்னிந்தியாவில்-தமிழ்நாட்டில் உடுப்பூர் என்னும் ஊரில் கண்ணப்பர் பிறந்தார். இவர் சிறுவயதிலேயே திருக்காளத்தி மலையில் உள்ள (கடவுள்) சிவனது திருமேனியை வழிபட்டார். கடவுள் சிலையின் கண்ணில் ஒரு நாள் குருதி வழிந்தது. அதைக் குணப்படுத்தக் கண்ணப்பர் பச்சிலை மருந்தைக் கொண்டு முயன்றார்; முடியவில்லை. ஊனுக்கு ஊன் தரின் குணமாகும் என அவர் முன்பே அறிந்திருந்த மருத்துவமுறை அப்போது நினைவுக்கு வந்தது. சிறு பிள்ளையாதலின், கடவுளின் கண் கற்சிலையில் உள்ளது என்பதையும் சிந்திக்காமல்,
அம்பால் தம் கண்ணைத் தோண்டிக் கடவுள் சிலையில் உள்ள கண்ணின்மேல் பதித்தார் என்பது வரலாறு: இந்த வரலாற்றைப் பற்றிச் சேக்கிழார் என்னும் பெரியார் பெரிய புராணம் என்னும் நூலில் பாடியுள்ளார். இவ்வரலாற்றுப் பகுதி அமைந்துள்ள பாடல்கள் வருமாறு :* [1]

“ மற்றவர் பிசைந்து வார்த்த மருந்தினால் திருக்காளத்திக்

        கொற்றவர் கண்ணில் புண்ணிர் குறைபடா திழியக்
கண்டும் இற்றையின் கிலைமைக் கென்னோ இனிச்செயல் என்று பார்ப்பார்
       உற்றநோய் தீர்ப்பது ஊனுக்கு ஊன் எனும் உரை முன் கண்டார்’

“ இதற்கிணி என்கண் அம்பால் இடங்தப்பின் எந்தையார் கண்,

         அதற்கிது மருந்தாய்ப் புண்ணிர் கிற்கவும் அடுக்கும் என்று.
மதர்த்தெழும் உள்ளத்தோடு மகிழ்ந்து முன்னிருந்து தங்கண்
         முதற்சரம் அடுத்து வாங்கி முதல்வர்தம் கண்ணில் அப்ப,


என்பன பாடல்கள். இதனால், ஊனுக்கு ஊன் என்னும் உறுப்பு மாற்று மருத்துவ முறையைப் பண்டைக் காலத்தினரும் அறிந்திருந்தனர் என்பது புலனாகலாம்.

ஊனுக்கு ஊன் தரும் முறை வேறு விதமாகவும் எளிய முறையிலும் செய்யப்படுவதும் உண்டு. இம்முறை பண்டு தொட்டு இன்று வரை பழக்கத்தில் உள்ளது. அஃதாவது :- ஒருவருக்குக் கால்கள் வலுக் குறைந்ததால்
நடக்கும் போது சோர்வுறின், அவருக்கு ஆட்டுக் கால் சாறு (Soup) சமைத்துக் கொடுக்கப்படுகிறது. வேறு உறுப்புகள் சோர்வுறினும் அஃறிணை உயிரிகளின் உறுப்புகள் இம்மாதிரி சமைத்துக் கொடுக்கப்படு கின்றன. இதனால் நேர்ப்பயன் உண்டோ-இல்லையோ! ஆக இந்தப் பழக்கம் நடைமுறையில் உள்ளது.

அஸ்தி பஸ்பம்:
எனக்கு மூளையில் கட்டி (Brain Tumour) இருந்து குணப்படுத்தப்பட்டது. ‘என் மண்டைக்குள் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி (Pituitary Gland) சரியாக வேலை செய்யாததால் சிறிது சிந்தித்தாலும் சிறிது பேசினாலும் தலைவலி-தலைபாரம்-தலை சுற்றல் மயக்கம் எனக்கு உண்டு. ஆசிரியனாகிய யான் பேச முடியாமையால் சம்பள இழப்பு விடுமுறையில் பல திங்கள் வீட்டோடிருந்தேன். ஐரோப்பிய (Allopathy) மருத்துவம் பயன் அளிக்கவில்லை. இந்நிலையில், இந்தியச் சித்த மருத்துவர் ஒருவர் எனக்கு அஸ்தி பஸ்பம் என்னும் மருந்து கொடுத்தார். அஸ்தி என்றால் எலும்பு; பஸ்பம் என்றால் தூள். அஸ்தி பஸ்பம் என்பது, ஆட்டு மண்டை, மாட்டு மண்டை, மக்கள் மண்டை முதலியவற்றைத் தூளாக்கிப் பதம் பண்ணிச் செய்த மருந்தாகும். யான் இம்மருந்தை உண்டு, பேசினால் தலை வலிப்பது குணமாகி மீண்டும் ஆசிரியர் வேலையைத் தொடர்ந்தேன். அதன் பிறகு அலோபதி மருத்துவர் கொடுத்த டிரிப்ட னால் (Tryptanol) என்னும் மருந்து மேலும் பயனளித்தது. பேசினால் தலைவலிப்பதை முதலில் குணப்படுத்திய அஸ்தி பஸ்பம்’, ஊனுக்கு ஊன் தரும் மருத்துவ முறையைச் சார்ந்ததெனக் கருதுகிறேன். இந்த அஸ்தி பஸ்பம் பைத்தியத்தையும் குணப்படுத்துமாம். நல்ல வேளையாக எனக்குப் பைத்தியம் இல்லை.
இத்தகைய பல்வேறு மருத்துவ முறைகளால் மாந்தன் இயங்குகிறான்-வாழ்கிறான். இயந்திரங்களில் எல்லா உறுப்புக்களையும் மாற்றமுடிவதுபோல் மக்கள் உடலில் எல்லா உறுப்புக்களையும் மாற்ற முடியவில் லையே எனக் கேட்கலாம; மற்றும், பெரும்பாலான இயந்திரங்களை உறுப்பு மாற்று முறையில் இயங்கச் செய்வதுபோல, மிகுதியான மக்களை உறுப்பு மாற்று முறையால் பிழைக்கச் செய்ய முடியவில்லையே– எங்கேயோ ஓரிருவரைத்தானே இ ம் மு ைற யா ல் பிழைக்கச் செய்ய முடிகிறது என்றும் கேட்கலாம். இதற்கு இதோ பதில் : இயந்திரங்கள் மனிதனால் கண்டு பிடிக்கப்பட்டவை; அவற்றின் உறுப்பு ஒவ்வொன் றும் மனிதனால் பொருத்தப்பட்டது; எனவே, மனிதன் எளிதிலும் பெரிய அளவிலும் இயந்திரங்களைப் பழுது பார்த்து இயக்க முடிகிறது. ஆனால், மாந்தன் தன்னால் படைக்கப்பட்டவன் அல்லன்-இயற்கையால் படைக்கப் பட்டவன்; எனவே, இயற்கையின் மறைவுகள் (இரக சியங்கள்) அனைத்தையும் கண்டு பிடித்து, உறுப்பு மாற்று முறையால் பரந்த அளவில் மிகுதியாக மக்கள் உடலை இயங்கச் செய்வதற்கு இன்னும் போதுமான காலம் வேண்டும்.

மற்றும்,- மாந்தன் தன்னால் கண்டு பிடித்துச் செய்யப்பட்ட இயந்திரங்களைக் கூட, குறிப்பிட்ட காலம் வரையுமே உறுப்பு மாற்று முறையால் ஒட வைத்துக் கொண்டிருக்க முடியும். காலம் கடந்துபோன -மிகவும் பழமைப்பட்டுவிட்ட (obsolete) இயந்திரங்களை அவனால் ஒன்றும் திருத்த முடியாது; நிலை கடந்து விட்டது.(out of condition)எனக் கூறி அவற்றைத் தூக்கி எறிந்து விடுவான். அதேபோல, காலம் கடந்துபோன-மிகவும் சீர்கேட்டுப்போன மக்கள்
உடலையும் ஏதாவது.செய்து இயங்க வைக்க முடியாதுகைவிட்டு விட வேண்டியதுதான்!

ஆனால், நல்ல உடல் நிலையுடன் கூடியிருப்பவர், திடீரென ஏதாவது உறுப்புக்கோளாறால் இறந்து விடின், குறிப்பிட்ட நேரத்திற்குள் அவரது இதயத்தைப் பிசைந்து விட்டு இயங்கச் செய்து அவரைப் பிழைக்க வைக்கும் முறை இப்போது கையாளப்படுகிறது-ஒரு சிலர் மட்டில் வெற்றியும் கிடைக்கிறது. இந்தப் பழக் கத்தின் அடிப்படையில், பல நாள் நோயுற்றவர் இறந்து விடினும் இம்முறையைக் கையாளும் முயற்சி நடைபெறுகிறது. பிராண வாயு எனப்படும் உயிர்க்காற்று (Oxygen) கொடுத்து இறப்பைத் தள்ளிப்போடும் முயற்சி நடை பெற்று வருவதும் ஈண்டு எண்ண்த்தக்கது. இத்தகு அறிவியல் முயற்சிகள் பல, இன்னும் சில பல ஆண்டுகளில் பெரிய அளவில் வளர்ந்து மேன்மேலும் வெற்றிப் பாதையில் வீறுநடை போடலாம். எனவே, உயிர் எனத் தனியே ஒன்றும் இல்லை; உடம்பின் ஒருவகை இயக்க ஆற்றலே உயிர் எனப்படுகிறது என்னும் முடிவு கிடைக்கிறது.

சிலர் இன்னொன்று கூறலாம்: இயந்திரம் புதியதாய் அதன் உறுப்புக்கள் அனைத்தும் நல்ல நிலையில் இருந்தால் மட்டும் இயங்கிவிட முடியாது. அதற்கு எண்ணெயோ, கரியோ, எரி காற்றோ, மின்சாரமோ, அணு ஆற்றலோ, இன்ன பிறவோ கொடுக்கப்பட்டால் தான் அஃது இயங்கும். அதே போல, உடம்பு-உடலுறுப்புக்கள் நல்ல நிலைமையில் இருப்பினும் மாந்தன் இயங்கி விட முடியாது; உயிர் என்னும் ஒன்று இருந்தால்தான் அவன் இயங்க முடியும். எனவே, எண்ணெய் முதலியவை இயந்திரங்களினும் வேறுபட்டுத் தனித்திருப்பது போல, அஃறிணை உயிரிகட்கும் சரி-உயர்திணை உயிரிகட்கும்
சரி-உயிர் என்னும் ஒன்று, உடம்பினின்றும் வேறுபட்டுத் தனித்து உள்ளது-என்பதாகச் சிலர் கூறலாம். இக்கூற்று சரியானதன்று. உடலுக்கு உயிர் இயந்திரத்துக்கு எண்ணெய் போன்றதாகாது; உடலுக்கு உணவு-நீர்காற்று ஆகியவையே இயந்திரத்துக்கு எண்ணெய் போன்றனவாகும். எனவே, இயந்திரத்தின் இயக்க ஆற்றல் போன்றதான – உடலின் – குறிப்பாக இதயத்தின் ஒருவகை இயக்க ஆற்றலே உயிர் ஆகும் என்பது தெளிவு. ‘இயந்திர மூளை மனிதன் வந்து கொண்டிருக்கிறான் வந்து விட்டான் என்பதும் ஈண்டு நினைவு கூரத்தக்கது.


  1. பெரிய புராணம்-கண்ணப்ப நாயனார் 177-178:

License

உயிர் என்பதன் விளக்கம் Copyright © by manarkeni. All Rights Reserved.