="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

6 ஊழ் வினை

4. ஊழ் வினை

இந்தச் சிக்கல்களிலிருந்து கடவுளைக் காப்பாற்ற ‘ஊழ்வினை’ என்னும் படைக்கலம் பயன்படுத்தப்படுகிறது. நல்லவர் துன்புறுவதையும் தீயவர் இன்புறுவதையும் உலகியலில் கண்ணெதிரில் காண்கிறோம். இவ்வாறு நிகழக் கடவுள் உடன்படலாமா என்பது ஒரு வினா. தமிழர்களின் தலைமகனாரும் உலகப் பெரும் புலவரும் ஊழ்வினையில் நம்பிக்கை உடையவருமாகிய திருவள்ளுவரே இத்தகைய வினா ஒன்றுக்கு விடை யிறுக்க முடியாமல் திக்குமுக்காடியுள்ளார். அஃதாவது, தீய நெஞ்சத்தானது வளர்ச்சியும் நேர்மையாளனது கேடும் இயற்கைக்கு மாறாதலின் ஆராயப்பட வேண்டியவை யாகும் என்று தமது திருக்குறளில் ஓரிடத்தில் கூறியுள்ளார்.

“அவ்விய கெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்” – (169)

என்பது பாடல். இதனை முற்பிறவியில் செய்த ஊழ் வினையின் பயன் என்று பலரும் கூறுவர். குழந்தை பிறக்கும்போதே கடவுள் தலையில் எழுதியனுப்பு வாராம். முற்பிறவியில் நல்லன செய்த உயிர் அடுத்த பிறவியில் நல்லனவே பெறும்; முற்பிறவியில் தீயன
செய்த உயிர் அடுத்த பிறவியில் தீமையே அடையும் என்பது ஊழ்வினை நம்பிக்கையாளரின் கருத்து. முற்பிறவிச் செயல்களுக்கேற்ப இப்போது எடுக்கும் பிறவியில் இன்னின்ன பயன் கிடைக்கும் என்று குழந்தையின் தலையில் எழுதியிருக்கும் என்ற நம்பிக்கையாளர் இதற்குத் ‘தலை எழுத்து’, ‘தலை விதி’ என்னும் பெயர்கள் வழங்குகின்றனர். ஆங்கிலத்தில் இது ‘Fate’ எனப் படுகிறது. இந்தத் தலை எழுத்தை மாற்றுவது கடவுளுக்கே கடினமாம். ‘அன்று எழுதியனுப்பியவன் இன்று மாற்றி எழுத முடியுமா?’ என்பது உலகியல் பேச்சு. அங்ஙனமெனில், இதில் இனிக் கடவுளுக்கே வேலையில்லை; அவரை வேண்ட வேண்டியதும் இல்லை. அவராலேயுந்தான் இதை மாற்ற முடியாதல்லவா?

விதி விலக்கு

ஆனால் சில சமயம் கடவுள் இதற்கு விதிவிலக்கு அளிப்பாராம். இது சார்பான கதைகள் சில வழங்கப் படுகின்றன. எடுத்துக் காட்டுக்கு ஒரு கதை வருக; மார்க்கண்டேயன் என்பவன் பதினாறு ஆண்டு காலமே வாழ்வான் என அவன் பிறக்கும்போதே ‘சிவன்’ என்னும் இந்து மதக்கடவுள் எழுதியனுப்பி விட்டாராம்; பதினாறு ஆண்டுகள் முடிந்ததும் எமன் மார்க்கண்டேயனது உயிரைப் பிடிக்க வந்தானாம்; அப்போது மார்க்கண்டேயன் சிவனது உருவமெனச் செதுக்கி வைக்கப்பட்டிருந்த கருங்கல் சிலையைக் கட்டிப் பிடித்துக் கொண்டானாம்; உடனே எமன் சிவனது உருவச் சிலையோடு சேர்த்துக் கயிற்றைப் போட்டு இழுத்தானாம்; சினம் கொண்ட சிவன் உண்மை உருவத்தோடு தோன்றி எமனைக் காலால் உதைத்துத் தள்ளி மார்க்கண்டேயனது உயிரைக் காப்பாற்றினாராம். மார்க்கண்டேயன் அன்று முதல் என்றும் பதினாறு அகவை (வயது) இளைஞனாகவே இருக்கின்றானாம். இது புராணக் கதை. இப்போது
மார்க்கண்டேயன் பதினாறு அகவையுடனேயே எங்கே இருக்கின்றான் என்பது தெரியவில்லை. அவனைக் கண்டுபிடிக்கும் வேலையைத் துப்பறியும் துறையினரிடம் விட்டுவிட வேண்டும். இந்தக் கதை நிகழ்ச்சி உண்மையாயின், பலருக்கும் ஒருவிதமாகவும் ஒருவர்க்கு மட்டும் வேறு விதமாகவும் நடந்து கொண்டதான-நடுநிலைமை பிறழ்ந்த குற்றம் கடவுளைச் சாரும் என்பதில் ஐயமில்லை.

ஊழ்வினை பிறந்த வரலாறு

ஊழ்வினை என்னும் ஒன்று இருப்பதாக எப்போது யாரால் ஏன் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டிருக்கக் கூடும் என ஆய்வு செய்ய வேண்டும். மிக மிகப் பழங்காலத்தி லேயே மக்களுள் சிலர் உலகியல் நிகழ்ச்சிகளை உற்று நோக்கியிருப்பர். வாழ்க்கை முழுதும் நல்லனவே செய்யும் சிலர் துன்பம் உறுவதையும் வாழ்க்கை முழுவதும் தீயனவே செய்யும் சிலர் இன்பமாக வாழ் வதையும் கண்ட அறிஞர் சிலர், இந்த எதிர்மாறான அமைப்புகளுக்குக் காரணம் என்ன என்று துணுகிச் சிந்தித்திருக்கக் கூடும். அவர்கட்குத் தக்க நேரடியான பதில் கிடைத்திருக்காது.

நெல் விதைத்தவன் நெல்லைத்தான் அறுவடை செய்யமுடியும்-மாறாகத் தினையை அறுவடை செய்ய முடியாது; அதுபோலவே, தினை விதைத்தவன் தினையைத் தான் அறுவடை செய்ய முடியும்-மாறாக நெல்லை அறுவடை செய்ய முடியாது. இஃது இயற்கை விதி. இவ்வாறே, நல்லன. செய்தவன் நன்மையே பெற வேண்டும்-மாறாகத் துன்பமுறக் கூடாது; தீயன செய்தவன் துன்பமே படவேண்டும்-மாறாக இன்பம் எய்தலாகாது. ஆனால், இந்த இயற்கைப் பொது விதிக்கு மாறாக உலகியல் நிகழ்ச்சிகள் சில அமைவ
தற்குத் தக்க காரணம் ஏதாவது ஒன்று மறைவாக இருக்கத்தான் வேண்டும் என அவர்கள் எண்ணினர். அதற்குரிய காரணமாக அவர்கள் உய்த்துணர்ந்துயூகித்துக் கண்டதாவது:-

இந்தப் பிறவியில் நன்மை செய்பவர்கள் துன்பமுறுவதற்குரிய காரணம், அவர்கள் முற்பிறவியில் செய்த தீவினையாகத்தான் இருக்கவேண்டும்; இந்தப் பிறவியில் தீமை செய்பவர்கள் இன்பம் எய்துவதற்குரிய காரணம், அவர்கள் முற்பிறவியில் ஆற்றிய நல்வினையாகத்தான் இருக்க வேண்டும்-என்பதுதான் அவர்களின் உய்த்துணர்வு. இவ்வாறு முற்பிறவியில் செய்த வினைக்கு ‘ஊழ்வினை’ என்னும் பெயர் வழங்கப்படுகிறது. சிக்கலுக்குத் தீர்வு காண இந்த உய்த்துணர்வைத் தவிர அவர்கட்கு வேறு வழி புலப்பட்டிலது. எதிர்மாறான வினைவுகட்குச் சரியான காரணம் கண்டுபிடிக்க முடியாத முன்னோர்கள் இப்படியாவது ஒரு காரணம் கண்டுபிடித்ததில் வியப்பில்லை. உலகியலில் நேருக்கு நேர் தீமைசெய்தவன் அரசால் கண்டுபிடிக்கப்பட்டு ஒறுக்கப்படுகிறான்-இது அரசநீதி! தீமையே செய்யாதவனும் சில நேரத்தில் துன்புறுகிறான்-இஃது ஊழ் வினைப் பயன்-என்பதாகத் கருதிய முன்னோர்கள்,”அரசன் அன்று கொல்லும்; தெய்வம் நின்று கொல்லும்”- என்னும் பழமொழியையும் உருவாக்கிவிட்டனர்.

ஊழ்வினை உண்மையா?

நடுநிலைமையுடன் பகுத்தறிவு கொண்டு அறிவியல் அடிப்படையில் ஆராயுங்கால் ஊழ்வினை என ஒன்று இருப்பதாக நம்புவதற்கில்லை. அந்த அந்தப் பிறவிகளில் செய்த வினைகளின் பயன்களை அந்த அந்தப் பிறவிகளிலேயே துய்க்கச் செய்வதுதான் கடவுளின் கடமை;
அதைவிட்டு அடுத்த பிறவிகளில் துய்க்கச் செய்வது. என்பது கட்டுக் கதையே. போன பிறவியில் இழைத்த வினையின் பயனைத்தான் இந்தப் பிறவியில் துய்க்கிறோம் என ஒருவர் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்? போன பிறவியில் எங்கே யாருக்கு என்ன செய்தோம் என்பது இந்தப் பிறவியில் அறியப்படவில்லையே! எனவே, ஊழ்வினை என்பது உண்மை யன்று; அறியாமையால் எழுந்த கட்டுக் கதையே. ஊழ் வினை என ஒன்று இருப்பதாக உலகப் பெரும் புலவராகிய திருவள்ளுவர் ஓரிடத்தில் தெரிவித்திருப்பினும் அதை ஒத்துக் கொள்வதற்கில்லை. தெய்வத்தால் (ஊழ்வினைப்படி) காரியம் கைகூடாவிடினும், உடல் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை முயற்சி கொடுத்தே தீரும்; விடாமுயற்சியுடன் வெற்றிச் செயல் புரிபவர் ஊழ்வினையையும் வென்று விடலாம்-எனத் திருவள்ளுவர் வேறு ஒரிடத்தில் தெரிவித் திருப்பது, ஒரளவு ஆறுதல் அளிக்கிறது;

“தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்”
(619)

“ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழா துளுற்று பவர்.”
(620)

என்பன திருக்குறள் பாக்கள். ஊழ்வினையில் நம்பிக்கை உடையவர்களும், துன்பம் வந்து உற்றக்கால் சோர்ந்து விடாமல் துணிவுடனும் நம்பிக்கையுடனும் எழுந்து நின்று செயலாற்றுவதற்கு இந்தத் திருக்குறள் பாடல்கள் ஓரளவேனும் உதவும். இல்லையேல், கடவுள் நமக்கு இட்டது இவ்வளவுதான் என்று சோர்ந்து மடிந்து போக நேரிடும். குருட்டுத்தனமான இந்த ஊழ்வினை நம்பிக்கையால் இரு பயன்கள் உண்டு எனலாம். முதலாவது: நாம் தீவினைகள் புரியின் இந்தப் பிறவியில் தப்பித்
துக் கொள்ளினும், அடுத்த பிறவியில் தப்பவே முடியாது என அஞ்சிச் சிலர் தீவினைகள் புரியத் தயங்கலாம்.

இரண்டாவது : எவ்வளவு விடாது மேன்மேலும் முயன்றும் காரியம் கைகூடாதபோது, [1] “கிட்டாதாயின் வெட்டென மற”-என்னும் ஒளவையின் அறிவுரைக்கு இணங்க, நமக்கு உள்ளது இவ்வளவுதான்- வருந்த வேண்டியதில்லை’ என மன அமைதி கொள்ளச் செய்வ தாகும். இதனை – ஒருவகை ஆறுதலாகக் கொள்ள வேண்டுமே ஒழிய, மற்று, ஊழ்வினையையே முழுதும் நம்பி, நமக்கு வரவேண்டும் என்று ஊழ்இருப்பின் தானே வரும் என்று எண்ணிச் செயல் ஒன்றும் புரியாது வறிதே சோம்பியிருப்பது மடமையினும் பெரிய மடமையாகும்:

ஊழ்வினைக்கு மாற்று

நல்லவர்க்குத் தீமையும் தீயவர்க்கு நன்மையும் ஏற்படும் எதிர்மாறான விளைவுகளுக்கு ஊழ்வினை என ஒன்று காரணமாக இருக்க முடியாதெனில், இதற்கு மாற்றுக் காரணம் உண்டா என ஆய்வு செய்யவேண்டும். மாற்றுக் காரணங்களாக என்னென்னவோ சொல்லலாம் எனினும் அவற்றை வகைதொகை செய்து நறுக்காக மூன்று காரணங்கள் உள எனலாம், அவை :-

(ஒன்று) சமுதாய அமைப்பின் சீர்சேடு; (இரண்டு) அரசு முறையின் குறை; (மூன்று) தற்செயலான சூழ்நிலை ஆற்றல்- என்பனவாம்.

சமூகச் சீர்கேடு

இவற்றிற்குச் சிறு சிறு விளக்கமாவது வேண்டி யுள்ளது. முதல் காரணத்தின் விளக்கம் : பலவகை
ஆற்றல் பெற்ற கொடியவர்கள்-தீயவர்கள், எளிய மக்களை ஏய்த்துக் கொடுமைப்படுத்தி மேலுக்கு வந்து விடுகின்றனர். இவர்களை யாராலும் ஒறுக்க முடியவில்லை; இவர்களை ஒறுக்க முயல்பவர்கள் இவர்களால் மீண்டும் ஒறுக்கப்படுகின்றனர்.

நல்லவர்கள் இயற்கையாகச் சிலவகை ஆற்றல்களைப் பெறாமையால், வாழ்க்கைச் சிக்கல்களையும் போட்டிகளையும் வென்று மேல்நிலைக்கு வரமுடியவில்லை. இவ்விரு திறத்தாரின் வாழ்க்கை நிலையைக் காண்பவர்கள், தீயவர் மேல் நிலையிலும் நல்லவர் கீழ் நிலையிலும் இருப்பதற்குக் காரணம் முற்பிறவியில் செய்த ஊழ்வினையேயாகும் என்ற முடிவுக்கு எளிதில் வந்துவிடுகின்றனர். மற்றும்-சாதி வேற்றுமைக் கொடுமைகள் உலகில் முதல் முதல் மக்கள் தோன்றிய தொடக்கக் காலத்தில் இல்லை. இவை இடையில் புகுந்தனவாகும்-புகுத்தப்பட்டனவாகும். மேல் சாதிக்காரராக ஆக்கப்பட்டவர்கள் மேல்நிலையில் நிமிர்ந்து நின்று பல நல்ல வசதி வாய்ப்புகளைப் பெற்று இன்பமாய் வாழ்கின்றனர்; அதே நேரத்தில், கீழ்ச்சாதிக்கார ராக ஆக்கப்பட்டவர்கள் கீழ்நிலையில் தாழ்ந்து குனிந்து நல்ல வசதி வாய்ப்புகள் கிடைக்கப்பெறாமல் துன்பத்தில் தோய்ந்து உழல்கின்றனர். இதற்கும் ஊழ்வினையே காரணமாகக் கற்பனை செய்யப்படுகிறது. ஒரு சாதியினர்க்குள்ளேயே-ஒரு தரத்தினர்க்குள்ளேயே ஒரு சிலர் ஏழையராகவும் வேறு சிலர் செல்வராகவும் இருக்கும் அமைப்பை எடுத்துக்கொள்ளினும் இதே நிலை தான். இவ்வாறு இன்னும் பல அடுக்கிக்கொண்டே போகலாம். இவற்றிற்கெல்லாம் சமுதாய அமைப்பின் சீர்கேடே காரணமாகும்; ஊழ்வினை என ஒன்று காரணமாகாது. முயன்றால் இத்தகைய சீர்கேடுகளை அகற்றிச் சமுதாய அமைப்பைச் செப்பம் செய்ய முடி
யுயும். சமுதாயத்தைச் செம்மை செய்து சமப்படுத்தும் பணி, இப்போது நாடுகளில் நடந்து வருவதாகத் தெரிகிறது. இதில் சமூகச் சீர்திருத்தக்காரர்களின் பங்கு பெரிது.

அரசின் குறை

அடுத்து, இரண்டாவது காரணமாகிய அரசியல் முறையின் குறைபற்றிப் பார்க்கலாம்: இந்தக் காலத்தில் அரசியல் கொடுமைகள் சில, பல நாடுகளில் காணப்படினும். பண்டைக் காலத்தை நோக்க, இக்கால அரசியல் முறை எவ்வளவோ சீர்திருந்தியுள்ளது எனக் கூறலாம்.

அந்தக் காலத்தில் ஊருக்கு ஊர் அரசர் இருந்தனர். ஒருவர்க்கொருவரிடையே எப்போதும் கெடுபிடி இருந்தது. அடிக்கடி போர்-கொலை-கொள்ளை-தீவைப்பு -கற்பழிப்பு-இப்படிப் பல கொடுமைகள் மாறி மாறி நடந்துகொண்டேயிருந்தன. தடி எடுத்தவர் எல்லாம் தண்டல்காரராய்க் காணப்பட்டனர். இந்நிலையில் மக்களின் வாழ்க்கையமைப்பு எத்தகையதாயிருந்திருக்கக்கூடும் என்று உய்த்துணர முடியும். அரசரைச் சார்ந்தோர்-அரசியலைச் சார்ந்தோர் வசதி பெற்றவராகவும், அல்லாதார் வசதி அற்றவராகவும் வாழ்ந்தனர். இந்தக் காலத்திலும் இப்படி ஒரு நிலைமை சில இடங்களில் காணப்படுகின்றதன்றோ? அந்தக் காலத்திற்குக் கேட்கவா வேண்டும்! அரசர்கள் சிலரை உயர்த்தினர்; பலரைத் தாழ்த்தினர். உயர் சாதிக்காரர் எனப்படுபவர் அரசர்களால் உயர்த்தப்பட்டனர்; பல வாய்ப்பு வசதிகள் அளிக்கப் பெற்றனர். கீழ்ச்சாதிக்காரர் எனப்படுபவர் அரசர்களாலும் அரசர்களின் ஆதரவு பெற்றவர்களாலும் ஒடுக்கப்பட்டனர்; இழிந்த வேலைகள் செய்யும்படி கட்டாயப் படுத்தப்பட்டனர். இவ்வாறாக,
அரசு முறையின் குறைபாட்டினால், ஆண்டான் – அடிமைகள், உயர்குலத்தார்-கீழ்க்குலத்தார், செல்வர் -வறியவர் என்ற மேடு பள்ளங்கள் மிகுதியாக உருவாயின. மேட்டுக் குடியினர் முற்பிறவியில் நல்வினை செய்தவராகவும் பள்ளப்பகுதியினர் முற்பிறவியல் தீவினை இழைத்தவராகவும் கருதப்பட்டனர். இங்கே ஊழ்வினைக் கொள்கை மிகவும் விளையாடியது. இந்நிலைக்கு இடமின்றி, அரசர்கள் மேடு பள்ளங்களை நிரவி ஆட்சி புரிந்திருந்தால் குடிமக்களுள் சமநிலை ஏற்பட்டிருக்கும். அப்போது ஊழ்வினைக் கொள்கைக்கு இடம் இராதன்றோ? இந்தக் காலத்திலும் எல்லா இடங்களிலும் இன்னும் மேடு பள்ளங்கள் நிரவப்படவில்லை. அந்தப் பணி இப்போதுதான் தொடங்கப்பெற்று மெல்ல மெல்லத் தளர்நடை போடுகிறது.

சூழ்நிலை ஆற்றல் :

அடுத்து மூன்றாவது காரணம், தற்செயலான சூழ்நிலை ஆற்றல்’ என்பதாகும். அப்படி என்றால் என்ன? ஒருவர் தெருவழியே போய்க்கொண்டிருக்கிறார்; அவருக்கு முன்னாலிருந்தோ பின்னாலிருந்தோ ஒரு வண்டி வந்து அவர் மீது மோத அவர் கால் இழந்து போகிறார் அல்லது இறந்தே போகிறார். இதற்கு ஊழ்வினை என ஒன்று காரணமாக இருக்க வேண்டியதில்லை. எதிர்பாராமல் தற்செயலாய் ஏற்பட்ட அந்த நேரச் சூழ்நிலையின் வன்மையே அவரது முடிவுக்குக் காரணமாகும். இந்நிகழ்ச்சியோடு ஊழ்வினை என ஒன்றைக் கொண்டு வந்து முடிச்சு போடத் தேவையே இல்லை. “தற்செயலான சூழ்நிலை ஆற்றல்’ என்றால் இப்போது விளங்கலாம். முற்கூறிய சமூகச் சீர்கேடு, அரசு முறையின் குறை என்னும் இரண்டு காரணங்களையும்கூட இந்தச் சூழ்நிலை ஆற்றல்’ என்னும் காரணத்துள் அடக்கிவிடலாம். அவர் வண்டியில் அகப்பட்டு முப்பத்
தேழு வயதிலேயே முடிந்துவிடுவார் எனத் தலையில் எழுதியிருந்ததால் இவ்வாறு மடிந்து போனார் எனப் பொதுமக்கள் எளிதில் ஊழ்வினையின் மேல் பழி போட்டுப் பேசுவர். இவ்வாறு கூறுவது அறியாமையாகும்.

இவ்வாறு பல எடுத்துக்காட்டுகள் கூறிக்கொண்டே போகலாம். ஒருவருக்குக் குலுக்குச் சீட்டுப் பரிசுத் திட்டத்தின் (Lottery) வாயிலாகப் பத்து நூறாயிரம் ரூபாய் பரிசு கிடைத்தது என்றால், அது தற்செயலான வாய்ப்பேயாகும். சூதாட்டத்தில் ஒருவருக்குத் தாயம் விழுகிறது – இன்னொருவருக்கு விழவேயில்லை; ஒருவருக்கு நல்ல சீட்டுகளே விழுகின்றன – இன்னொருவர்க்குக் கெட்ட சீட்டுகளே விழுகின்றன. குதிரைப் பந்தயத்தில் ஒருவர் வெல்கிறார் – இன்னொருவர் தோற்கிறார். இவற்றையெல்லாம். ஏதோ ஊழ்வினை என ஒன்று காரணமாக இருந்துகொண்டு நடத்துகிறது என்று கூறுவது அறியாமை. இவையெல்லாம் எதிர்பாராத தற்செயலான நிகழ்ச்சிகளே.

வாழ்க்கையில் நேரும் எல்லா வகையான நிகழ்ச்சிகளுமே இத்தகையனவே. ஒருவர் வாணிகம் தொடங்குகிறார் என வைத்துக் கொள்வோம். அவர் கடை உள்ள இடத்தின் தேர்ந்தெடுப்பு, கடை தொடங்கிய விழாக்காலம், அதனால் பெற்ற விளம்பரம், மக்களுக்கு இன்றியமையாத் தேவையான விற்பனைப்பொருள், அதன் தரம், விலையளவு, நாளடைவில் பெற்றுவிட்ட நல்ல பெயர் – முதலிய சூழ்நிலை ஆற்றல்கள் எல்லாம் சேர்ந்து அவரை மாபெருஞ் செல்வராக்கி விடுகின்றன, இன்னொருவர் இத்தகைய நல்ல சூழ்நிலை வாய்க்கப் பெறாமையால் வணிகம் தொடங்கியும் முன்னேற முடியவில்லை. நல்ல சூழ்நிலை வாய்ப்பினால் பெருஞ்
செல்வரான ஒருவரே, பின்னர்ப் பின்னர் அத்தகைய வாய்ப்புக் குறையக் குறைய வாணிகம் குன்றி ஏழையாகி விடுவதும் உண்டு. உலகியலில் பல துறைகளிலும் இது போன்ற நிகழ்ச்சிகள் பலவற்றைப் பார்க்கலாம்.

செல்வர்கட்கு யாராவது பிள்ளைகளாகப் பிறந்து செல்வத்தைத் துய்க்கத்தான் செய்கின்றனர்; முற்பிறவியில் நல்வினை செய்தவர்களாகப் பார்த்து இந்தச் செல்வர்கட்குப் பிள்ளைகளாக வந்து பிறந்தனர் என எந்தச் சான்று கொண்டு கூறமுடியும்? அது போலவே, ஏழைகட்கு யாராவது பிள்ளைகளாகப் பிறந்து ஏழ்மையை ஏற்கத்தான் செய்கின்றனர்; முற்பிறவியில் தீவினை செய்தவர்களே இங்கு வந்து பிறந்தனர் என்று எவ்வாறு கூற முடியும்? அவரவர் பிறந்த குடும்பச் சூழ்நிலையே அந்தந்த நிலைமைக்குக் காரணமாகும். இதற்கும் ஊழ்வினைக்கும் தொடர்பேயில்லை. ஊழ்வினை என ஒன்று இருந்தாலல்லவா தொடர்பு இருக்க முடியும்?

குடும்பச் சூழ்நிலையையடுத்து உடலமைப்புச் சூழ்நிலையை எடுத்துக் கொள்ளலாம். நல்ல உடலமைப்பு பெற்றவர் நன்கு செயல்பட முடிகிறது. அல்லாதவர் நன்கு செயல்பட முடியவில்லை. உடல் ஊனமுற்றோர் குறைபாடு உடையவராய் வருந்துவதைக் காணலாம். நாம் பயிரிடுகிறோம்-மரம் செடி கொடிகள் வைத்து வளர்க்கிறோம்; அவற்றுள் சில, குறைபாடு உடையனவாய் அமைந்துவிடுகின்றன – சில கெட்டும் போகின்றன. நாம் பல கருவிகள் செய்கிறோம் – பல பொம்மைகள் செய்கிறோம்; அவற்றுள் சில, குறைபாடு உறுகின்றன சில கெட்டும் விடுகின்றன. அவ்வாறே பிறக்கும் பிள்ளைகளுள்ளும் சிலர் குறைபாடு உடையவராய் – உடல் ஊனமுடையவராய்ப் பிறந்து விடுகின்றனர். எனவே, குறை
பாடுடைய பயிர்களுக்கும், கருவிகளுக்கும். பிள்ளைகளுக்கும் ஊழ்வினையே காரணம் என்று உளறுவதா? நல்ல மூளையமைப்பு உடையவர்கள் திறமை பல உடையவராயும் கல்வியறிவில் வல்லவராயும் கண்டு பிடிப்புகள் செய்வதில் கைதேர்ந்தவராயும் விளங்குகின்றனர்; அல்லாதவர்கள் அவ்வாறு விளங்க முடியவில்லை. இதற்கெல்லாம் ஊழ்வினை காரணமன்று; உடலமைப்புச் சூழ்நிலையே உண்மைக் காரணமாகும்.

மற்று,-உயிர்ப் பண்புச் சூழ்நிலையும் உடல் அமைப்புச் சூழ்நிலை போன்றதே! ஒருவர் பெரிய வள்ளலாய் வாரி வாரி வழங்குகிறார்; மங்றொருவர் கஞ்சக் கருமியாய், எச்சில் கையால் காக்கை ஓட்டாதவராய் ஈரக்கையை உதறாதவராய், பணத்தை இரும்புப் பெட்டியில் இறுக்கி வைக்கிறார்; இன்னொருவர் பிறரை ஏய்க்கிறார்; மாற்றார் பொருளைக் களவாடுகிறார். இவர்களுள் நற்பண்பு உடையவர்கள் போற்றப் பெறுகின்றனர்-தீய பண்புடையவர்கள் துாற்றப்படுகின்றனர். கடவுள் எழுதியனுப்பிய தலையெழுத்தின்படி சிலர் நல்லவராயும் சிலர் தீயவராயும் இருப்பதில்லை. அவரவர் பிறந்த மரபுவழிச் சூழ்நிலையும் சுற்றுச் சூழ்நிலையுமே இதற்குரிய காரணமாகும். இதை வலியுறுத்த இன்னும் எத்தனையோ எடுத்துக்காட்டுகள் தரலாம் – ஆயினும், இவை போதும். எனவே, ஊழ்வினை என ஒன்று இல்லை-அது வெறுங் கற்பனையே என்பது தெளிவு.

5. கடவுள் அவதாரங்கள்



அடுத்துப் படைப்புக் கொள்கையின் சார்பாகக் கடவுள் அவதாரங்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது. உலகத்தைப் படைத்த கடவுளால் மேலுலகத்திலிருந்தபடியே ஆட்சி செய்ய முடியாமற்போகிறது போலும் – சமாளிப்பது கடினமாயிருக்கிறது போலும். எனவே சில பல ஆண்டுகள் இடைவிட்டு இடைவிட்டுப் பூவுலகில் கடவுள் வந்து மனிதராய்ப் பிறக்கிறார்; மாந்தரைத் திருத்தவும் அவர்கட்கு நன்மை உண்டாக்கவும் வீடுபேறு கிடைக்கச் செய்யவும் அவர்களுள் தாமும் ஒருவராய் உடன் வாழ்கிறார்; அவர்கள் படுவது போன்ற பாடுகளை அவர்களுக்காகத் தாமும் படுகிறார் என்பதாக- இன்னும் பலவிதமாகப் பல மதத்தினரும் கூறிக்கொண்டிருக்கின்றனர்.

உலகில் கொடுமைகள் நிறைந்துவிட்டபோது மக்களைத் திருத்துவதற்காக- அவர்களை ஆட்கொள்வதற்காகக் கடவுள் மேலிருந்து கீழே வந்து அவதரிக்கிறார் என்னும் கருத்தே கடவுள் ஆட்சியின் இயலாமையைக் காட்டுகிறது. கீழே வந்த அவர் மக்களைப் போலவே தாமும் ஏன் பாடுபட வேண்டும்? மக்களின் நன்மைக்காகத்தான் கடவுள் தாமும் துன்பப்படுகிறார் என்று கூறுகின்றனர்; இதுபோன்ற பொறுப்பற்ற பேச்சு—


  1. கொன்றைவேந்தன் 16

License

ஊழ் வினை Copyright © by manarkeni. All Rights Reserved.