="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

4 உலகமும் உயிர்களும்

2. உலகமும் உயிர்களும்

ஏன் இந்த உலகம்?

ஏன் இந்த உலகம்? ஏன் இந்த உலகம்? ஏன் இந்த உலகம்………?……?

பதில் எளிதில் கிடைக்கவில்லையே! ஒருவேளை இதற்குப் பதிலே இல்லையா?

“ஏன் இல்லை; பதில்கள் நிரம்ப உள்ளனவே,” என்கின்றனர் பலர்.

“உயிர்கள் உய்வதற்காகக் கடவுள் இவ்வுலகத்தைப் படைத்தார்” எனப் பொதுவாகப் பலரும்- பல பிரிவினரும் கூறுகின்றனர். அவர்தம் கூற்றுகளுள் சில காண்பாம்:

கடவுள் ஒருவர் உள்ளார் என்பது எவ்லாரும் கூறுவது. இந்த எல்லாருள்ளும் ஒவ்வொருவர் ஒவ்வொரு கடவுளைக்குறிப்பிடுகின்றனர். அவ்வளவுகடவுள் பெயர்களையும் பட்டியல் படுத்தினால் அது மிகவும் நீளும். எனவே, கடவுள் என்னும் பொதுப் பெயரையே பயன்படுத்துவோம்.

படைப்பின் நோக்கங்கள்:

உயிர்களுக்காகக் கடவுள் இந்த உலகத்தைப் படைத்தார்; உலகில் பல பொருள்களையும் உண்டாக்கினார்
என்பர் சிலர். இதையே சிலர், கடவுள் உயிர்கள் உய்யத் தனு, கரண, புவன, போகங்களைக் கொடுத்தார்-என்பதாகக் கூறுவர். (தனு = உடம்பு; கரணம் = மனம் முதலிய உட்கருவிகள்; புவனம் = உலகம் ; போகம் = உயிர்கள் துய்க்கும் பல்வேறு இன்பங்கள்-இன்பப் பொருள்கள்.)

கடவுள் உயிர்களைப் பிறப்பிக்கிறார்; பின் காக்கிறார்; பின்பு அழித்து மறைக்கிறார்; பின் நல்லவர்களைத் தம்மோடு சேர்த்துக் கொள்கிறார்; நல்லவர் அல்லாதவரை நரகத்தில் தள்ளிக் கொடுமைகளைத் துய்க்கச் செய்து பின் மீண்டும் உலகுக்குக் கொண்டு வருகிறார்; பின்னர் அவர்கள் நல்லன செய்து நல்லவர்கள் ஆனதும் கடவுள் அவர்களையும் தம்மோடு சேர்த்துக் கொள்கிறார்- (அஃதாவது, மாணாக்கன் ஒருவன் மூன்றாண்டுகள் ஒரு வகுப்பிலேயே கிடந்து பிறகு நன்கு தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற்று மேல் வகுப்புக்கு மாறுவது போல-) என்பது ஒருவகைக் கருத்து.

தண்ணீர் கடலிலிருந்து ஆவியாக மேலெழுந்து முகிலாகிப் பின்னர் மழையாகப் பெய்து ஆறுகளின் வாயிலாக மீண்டும் கடலை அடைவது போல, உயிர்கள் கடவுளிடமிருந்து தோன்றி உலகில் உழன்று மீண்டும் கடவுளையே அடைகின்றன-என்பது ஒரு பெரிய நூற் கருத்து. (எந்த நூலையும்-யாரையும் எந்தப் பிரிவினரையும் குறிப்பிடாமலேயே இங்கே செய்திகள் தரப்படுகின்றன.)

கடவுள் உயிர்களைப் பிறப்பித்து அவற்றுக்காகத் தனு கரண புவன போகங்களைக் கொடுத்ததோடு மன நிறைவு கொள்ளாமல், இடைவிட்டு இடைவிட்டுச் சிற்சில நேரங்களில் தாமும் உலகில் மக்கட் பிறவி எடுத்து (அவதாரம் செய்து) மக்களோடு வாழ்ந்து மக்களுக்காகப் பல இன்னல்களையும் துய்க்கிறார் என்பது ஒருவகைக் கருத்து.

கடவுள் உயிர்களைப் படைத்துக் காத்து அழித்து மறைத்து அருளி ஐந்தொழில் (பஞ்ச கிருத்தியம்) புரிகிறார். அஃது அவருக்கு ஒருவகைத் திருவிளையாடல் ஆகும் என்பது ஒரு கருத்து.

சிந்தனைக்கு வாய்ப்பு :

இவ்வாறு பலர் பலவிதமாகக் கூறுவனவாகப் பல்வேறு கருத்துகள் சொல்லிக் கொண்டே போகலாம். இனிச் சிந்தனைக்கு வாய்ப்பு தர வேண்டும்.

முன்னோர்கள் எழுதி வைத்துள்ள நூல்களையெல்லாம் மறந்து, அந்நூல்களை அடிப்படையாகக் கொண்டு இப்போது பலரும் கூறும் பல்வேறு கோட்பாடுகளை யெல்லாம் மறந்து, நாம் நம் விருப்பத்தில் சொந்தமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்; தன்னுரிமையுடன் சுதந்திரமாக-ஆராய்ந்து பார்க்க வேண்டும். அந்த ஆய்வுத் துளிகளுள் சில வருமாறு;

கடவுள் உயிர்களுக்காக ஏன் உலகத்தைப் படைக்க வேண்டும்? தனு கரண புவன போகங்களை ஏன் தர வேண்டும்? கடவுள் உயிர்களைப் பிறப்பிக்கவில்லையெனில் தனு கரண புவன போகங்களைத் தரவேண்டிய தில்லையே? நனைத்துச் சுமப்பது ஏன்?

கடவுள் தன்னைப் பிறப்பிக்க வேண்டும் என்று எந்த உயிர் அவரிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டது?-எந்த உயிர் அவரிடம் முறையிட்டுக் கொண்டது? தன்னைப்
பிறப்பிக்கவில்லையென்று எந்த உயிர் அவரிடம் சினந்து கொண்டது?

‘சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி’ என்பது போல, வாளா கிடந்த உயிர்களைப் பிறப்பிப் பது ஏன்? பின் காப்பதும் அழிப்பதும் ஏன்? சிலவற்றை நரகத்தில் தள்ளுவதும் சிலவற்றைச் சொர்க்கத்திற்கு அனுப்புவதும் சிலவற்றைத் தம்மோடு சேர்த்து இணைத்துக் கொள்வதும் ஏன்? இந்த நாடகம் எதற்கு?

குடும்பக் கட்டுப்பாடு

கடவுள் உயிர்களைப் பிறப்பிக்கிறார் என்றால், எத்தனை வகை உயிர்களைப் பிறப்பிப்பது? மக்கள் மட்டும் போதாதா? கண்ணுக்குத் தெரியாத அணு உயிர்கள் முதற் கொண்டு யானை, ஒட்டசகம், மலைப் பாம்பு, திமிங்கலம், திமிங்கில கிலம், இன்னும் பெரிய உயிர்கள் வரை எத்தனை வகைகளைப் பிறப்பிப்பது? இவ்வளவு வகை உயிரிகளுள் ஒவ்வொன்றுக்கும் பேரேடு போட்டுக் கடவுள் கணக்கு வைத்துக் கொண்டுள்ளாரா? கோடி – கோடி – கோடி – கோடிக் கணக்கான உயிரிகள் உள்ளனவே! ஒருவர் வீட்டுக் கணக்கை எழுதவே பதின்மர் போதவில்லையே! இவ்வளவு உயிரிகளின் வரவு செலவு நடைமுறைக் கணக்குகளை எழுதிவைத்து அவற்றிற் கேற்பப் பயன் அளிக்கக் கடவுள் என்ன மிக மிக மிகப் பெரிய கம்ப்யூட்டரா?

பூவுலகில் நானூறு-ஐந்நூறுகோடி மக்கள் உள்ளனர் என்றால், ஒரே புற்றில் இவ்வளவு மக்கள் தொகைக்கும் மிகுதியான எறும்புகள் உள்ளனவே! எறும்புகள் போல இன்னும் பல்வேறு வகை உயிரிகள் கோடிக் கணக்கில் உள்ளன. சுமார் பத்துநூறாயிரம் வகை (பத்து இலட்சம் 10,00,000) உயிரி இனங்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்
டுள்ளது. இவற்றுள் ஒவ்வோர் இனத்திலும், ஆயிரக் கணக்கான-நூறாயிரக்கணக்கான – கோடிக்கணக்கான உயிரிகள் உள்ளன. இத்தனை வகை உயிரிகள் உலகுக்குத் தேவையா? இவ்வளவையும் ஏன் படைக்க வேண்டும்? வீட்டில் குழந்தைகள் மிகுதியாகப் பிறந்தால்-நாட்டில் மிகுதியாகப் பிறந்தால்-நாட்டில் மக்கள் தொகை பெருகினால் கட்டுபடியாகவில்லை – சமாளிக்க முடியவில்லை என்பதால் மக்கள் இனத்தார் குடும்பக்கட்டுப்பாட்டைத் (Birth Control) கடைப்பிடிக்கின்றனரே! கடவுள் குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைப் பிடிக்கலாகாதா? இவ்வளவு உயிரிகளை இம் மண்ணுலகில் படைத்து. உண்டி, உறையுள் முதலியன போதாமல் இன்னலுறச் செய்ய வேண்டுமா?

ஒன்றை ஒன்று

இங்கே பல்வேறு உயிர்களைப் படைப்பதால் என்ன நன்மை? ஆனால் ஒரு நன்மை கூறலாம்! உயிர்கள் ஒன்றை ஒன்று கொன்று தின்கின்றன; தம்மினும் சிறிய உயிரிகளைப் பெரிய உயிரிகள் கொன்று தின்கின்றன. இது சிறிய உயிரிகள் முதல் பெரிய உயிரிகள் வரை எல்லாவற்றுக்கும் பொருந்தும். பகுத்தறிவு உடையவர்கள் என்று தம்மைப் பெருமைப்படுத்திக் கொள்கின்ற மக்களே, தமக்குள் ஒருவரை ஒருவர் விழுங்கி ஏப்பம் விடுகின்றனரே! ஒன்று மற்றொன்றைக் கொன்று தின்பதற்காகத்தான், இத்தனை வகை உயிரிகளைக் கடவுள் படைத்தாரா? இறக்கப் போகும் உயிரிகளைப் பிறப்பிப்பதேன்?

கவுளுக்கு எல்லா உயிர்களும் குழந்தைகள்-கடவுள் முன் எல்லா உயிர்களும் சமமானவை – என்பதாக ஒரு கருத்து கதைக்கப்படுகிறது. அங்ஙனமெனில், தம் பிள்ளைகளுக்குள்ளேயே ஒரு பிள்ளை மற்றொரு பிள்ளை
யைக் கொன்று தின்னும்படி கடவுள் ஏன் அமைத்தார்? இஃது அறிவுள்ள செயலா?

மிகச் சிறிய பூச்சியைப் பாசிப் பூச்சி தின்கிறது – பாசிப் பூச்சியைக் கரப்பான் பூச்சி தின்கிறது-கரப்பான் பூச்சியைப் பல்லி விழுங்குகிறது-பல்லியைப் பூனை விழுங்குகிறது – இப்படியே மற்ற-மற்ற உயிரிகளும் செய்து கொண்டிருக்கின்றன. மலைப்பாம்பு, புலி,கரடி, சிங்கம் முதலியன மற்ற உயிர்களை உண்பதல்லாமல், மக்களையே கொன்று பசியாறுகின்றன. மக்களோ எல்லாவற்றையும் ஒரு கை பார்க்கிறார்கள். இந்தப் பொல்லா முரண்பாடு அமைப்பு ஏன்? பிற உயிரிகளைக் கொன்று தின்னக்கூடாது என்று மக்களுக்கு அறிவுரைகள்-உபதேசங்கள் வாரி வாரி வழங்கப்படுகின்றன; ஆனால், பிற உயிரிகளைக் கொன்று தின்னக் கூடாது என்று மக்கள் அல்லாத மற்ற உயிர்களுக்கு யார் அறிவுரை கூறித் திருத்த முடியும்! மக்களே இன்னும் திருந்த வில்லையே! கீழே ஊர்வனவற்றில் வண்டி வகைகளைத் தவிர-மேலே பறப்பவற்றில் காற்றாடி, வான ஊர்தி, இராக்கெட் போன்றவற்றைத் தவிர – மற்ற யாவற்றையும் மக்கள் தீர்த்துக் கட்டுகின்றனரே!

ஒன்றை ஒன்று கொன்று தின்னக் கூடாது என்று கடவுள் உயிர்களுக்கு அறிவுரை பகரக் கூடாதா? அவர் அவ்வாறு அறிவுரை பகர்ந்தால், ‘எங்களைப் படைத்து விட்டீர்களே-யாங்கள் எவ்வாறு உயிர் வாழ்வது?’ என்று உயிரிகள் திருப்பிக் கேட்டால் கடவுள் என்ன பதில் பகரக் கூடும்? அவருடைய திருவிளையாடல் தானே இது? உயிரிகளின் இயல்பை நோக்குங்கால், உயிர் என்ற சொல்லுக்கு, தன்னலம் உடையது-மற்றதை ஏய்ப்பது மற்றதைக் கொன்று தின்பது-என்றெல்லாம் பொருள் கூறலாம் போல் தோன்றுகிறது.
படைப்புக் கொள்கை

நிலைமை இவ்வாறிருக்க, படைப்புக் கொள்கையினர் கூறுவது வியப்பாயுள்ளது. அவர் கூற்று வருமாறு:- கடவுளே எல்லா உலகங்களையும் (அண்டங்களையும்) எல்லா உயிர்களையும் படைத்தார். ஓர்உயிர் இனத்துக்கும் மற்றோர் உயிர் இனத்துக்கும் தொடர்பில்லை. கடவுளே ஒவ்வோர் உயிர் இனத்தையும்தனித்தனியாகப் படைத்தது மட்டுமல்லாமல், இடையிடையேயும் புதிது புதிதாகப் படைத்துக் கொண்டிருக்கிறார்; அஃதாவது, ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றவில்லை; தொடக்கக் காலத்தில் ஒன்று தோன்றுவதற்கு எது முதற்காரண மாய் இருந்ததோ, அம்முதற்காரணமே பின்னரும்பின்னரும் பல்வேறு வகை உயிர்கள் தனித்தனியே தோன்றுவதற்குக் காரணமாயுள்ளது. உயிர்களின் நன்மைக்காகவே எல்லாம் உள்ளன-என்றெல்லாம் படைப்புக் கொள்கையினர் (Creationists) கூறி வருகினறனர். இவர்கள் வேறுயாருமல்லர்; உலகில் உள்ள பல்வேறு மதங்களின் தலைவர்களும் அவர்களைப் பின் பற்றுபவருமேயாவர்.

டார்வின் (Darwin) போன்றோர் கூறுகின்ற-ஒன்று திரிந்து வேறொன்றாக மாறும் திரிபு மாற்றக் கொள்கை-அதாவது, ‘பரிணாமக் கொள்கை’ (Evolutionism) படைப்புக் கொள்கையினும் வேறுபட்டது. எனவே, எது உண்மை என்பதைக் காணப் ‘படைப்புக் கொள்கை’ பற்றி இந்நூலுள் விரிவாக ஆராய்வோமாக!

License

உலகமும் உயிர்களும் Copyright © by manarkeni. All Rights Reserved.