="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

3 நூல் முதல்

கடவுள் வழிபாட்டு வரலாறு

1. நூல் முதல்

நூல் முதல் என்னும் இந்தப் பகுதி, இந்த நூலின் எழுச்சிக்கு உரிய காரணத்தை விளக்கும் பகுதியாகும்.

சைவ சிந்தாந்தப் பற்று

இளமையில் யான் முறுகிய கடவுள் பற்று உடையவனாக இருந்தேன் : திருப்பாதிரிப்புலியூர் அருள்மிகு ஞானியார் மடத்தில் கல்வி பயின்றேன்; புலவர் பட்டம் பெற்றதும், மயிலம் அருள்மிகு பாலய சுவாமிகள் கல்லூரியில் பத்தொன்பதாம் வயதுத் தொடக்கத்திலேயே பிரிவுரையாளனாக அமர்ந்து பணியாற்றினேன் ; இந்த இரண்டு மடங்களின் தொடர்பினால் சைவப்பற்று-சைவ சித்தாந்தப் பற்று உடையவனாக இருந்தேன் ; சைவ சித்தாந்தக் கொள்கையைப் பல இடங்களிலும் சொற்பொழிவாற்றிப் பரப்பும் முயற்சியில் முனைப்புடன் ஈடுபட்டிருந்தேன்.

பொய்ம்மையும் போலித் தன்மையும்

நாள் ஆக ஆக, அகவை (வயது) ஏற ஏற யான் ஒரு வகைச் சிந்தனையில் ஈடுபடலானேன். இதற்குக் கார
ணம், பல துறைகளிலும் மெய்ம்மைக்குப் பதிலாகப் பொய்ம்மையும் போலித்தனமும் இருப்பதைக் கண்டதே யாகும். திருமணம் ஆகி வாழ்க்கையில் ஈடுபட்டதும் மேலும் உலகியலைப் புரிந்து கொள்ள முடிந்தது; மேலும் சிந்தனை ஈடுபாடு வளரலாயிற்று. விழுந்து விழுந்து கடவுளை வணங்குபவர்கள் துன்புறுவதையும் ஐம்பெருங்குற்றங்கள் (பஞ்சமகா பாதகங்கள்) புரிவோர் இன்புற்று வாழ்வதையும் கண்டு வியப்படைந்தேன். இதற்குக் காரணம் பழைய ஊழ்வினை எனக் கூறப்படும் ‘நேரப் பேச்சை’ (சந்தர்ப்பவாதப் பேச்சைக்) கேட்டுக் கேட்டு அலுத்துப்போய் இதன் உண்மைக் காரணத்தை ஆராயத் தொடங்கினேன்.

மூட நம்பிக்கைகள்

பல செயல்கள் காரண காரியத் தொடர்பு இன்றியே மக்களால் செய்யப்படுவதைக் கண்டேன். ஒரு கத்தரிக் காய் செடி போட்டால் கத்தரிக்காய் கிடைக்கிறது ஆனால் கடவுளை வணங்குவதால் நேர்ப்பயன் ஒன்றும் கிடைக்காமையை உணர்ந்தேன். ஒரு சிலரின் வாழ்க்கையில், அவர்கள் கடவுளை வணங்க வணங்க மேன் மேலும் துன்பம் பெருகுவதையும், அவர்கள் அதற்காக அலுப்பு-சலிப்பு அடையாமல் மீண்டும் மீண்டும் கடவுள் வழிபாடு செய்து கொண்டிருப்பதையும் கண்டு வியப்பு எய்தி அதைத் தொடர்ந்து வெறுப்பும் வேதனையும் அடைந்தேன். இவ்வாறு எந்தத் தொடர்பும் இன்றி மூட நம்பிக்கையின் காரணமாகச் செய்யப்படும் பல்வேறு சடங்குகளையும் செயல்களையும் கண்டு – கண்டு அதற்குரிய காரணத்தை மீண்டும் மீண்டும் ஆராயலானேன். ஊழ்வினை-மறுபிறவி – மறு உலகம் – வீடுபேறு (மோட்சம்) என்பன உண்மையில் உண்டா? என்ற ஆராய்ச்சியிலும் காலத்தைச் செலவிட்டேன். சமுதாய ஏற்றத் தாழ்வுகள்

அடுத்தபடியாக. சமுதாய வாழ்க்கையில் பலதுறைகளிலும் உள்ள பல்வேறு ஏற்றத் தாழ்வுகளைக் கண்டு எண்ணத்தில் ஈடுபடலானேன்.

“கல்லானே யானாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங்கு எதிர்கொள்வர்-இல்லானை
இல்லாளும் வேண்டாள்மற்று ஈன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன்வாயிற் சொல்”
(34)

என்னும் ஒளவையாரின் நல்வழிப் பாடலின் கருத்தை நடைமுறையில்-எனது சொந்த வாழ்க்கையிலும் கண்டு சரிபார்த்துக் கொண்டேன். யான் மயிலம் கல்லூரியில் ஆசிரியனாய்ப் பணியாற்றிக் கொண்டிருந்த போது என் தமையனார் குடும்பத்துக்கு எவ்வளவோ பொருள் உதவி புரிந்தேன். இடையில் ஒராண்டு காலம் கடுமையாய் நோயுற்று வருவாய் இன்றி அல்லலுற நேர்ந்தது. திருமணத்துக்கு முன்பே பெற்றோரை இழந்து விட்ட யான், இந்த வருமானம் இல்லாத நோய்க் காலத்தில் என் அண்ணன் வீட்டில் சிறிது காலமும் என் மாமனார் வீட்டில் சிறிது காலமுமாக இருந்து வந்தேன். அப்போது, என் அண்ணன் மனைவியாகிய என் அண்ணியால் யான் எய்திய இன்னல்களும், என் மாமனார் வீட்டில் எனக்கு நேர்ந்த இழிவுகளும், என்னைச் சிந்தனையில் ஆழ்த்திப் பெரிய தத்துவ வாதியாக மாற்றிவிட்டன: உலகின் உண்மை நிலையை நன்கு உணர்ந்து கொண்டேன்.

நிலையாமை உணர்வு
அடுத்த படியாக உலக நிலையாமை உணர்வும் என்னை அடிமைப்படுத்திக் கொண்டது. எங்கள் பெற்றோர்க்கு யாங்கள் பன்னிரண்டு பிள்ளைகள். அவர் களுள், யானே, பன்னிரண்டாவது கடைக்குட்டிப் பிள்ளை. எனது முப்பத்தைந்தாவது வயது காலத்துக்குள்ளேயே என் பெற்றோரையும் உடன் பிறந்தவர்களையும் இழந்து வருந்தி, நிலையாமை உணர்வின் கொடும் பிடியில் சிக்கித் தவித்தேன். உலகியலில் நடை பெறும் எந்த இன்ப நிகழ்ச்சியைக் கண்டாலும் எனக்குத் துன்ப உணர்வே தோன்றத் தொடங்கியது. உலகில் பேரரசர், பெருந் துறவியர், பெருஞ்செல்வர், பேரறிஞர், பெரிய தத்துவ வாதிகள் முதலியோருள் எவர் வரலாற்றைப் படித்தாலும், இறுதியில் ‘காலமானார்’ என்று முடிவதைக் கண்டு யான் சிந்தனையில் ஆழ்ந்து போவது உண்டு. சாவுச் செய்தியைக் கேட்டாலும் பிண ஊர் வலத்தைக் கண்டாலும் பெரிதும் அதிர்ச்சி அடைவேன். அதிர்ச்சியின் காரணம் அச்சம் அன்று-நிலையாமை உணர்ச்சியே!

பிண ஊர்வலத்தின்போது முழக்கும் பறைக்கு ‘நெய்தல்’ பறை என்பது பெயர். பிண ஊர்வலத்துக்கு முன்னால் முழங்கிக் கொண்டு போகும் இந்த நெய்தல் ஒசை, உலகில் இறக்காமல் இன்னும் எஞ்சியிருப்பவர் கட்குச் சுடுகாடு என ஒன்றுள்ளது-வாழ்க்கையில் நேர்மையாய் இருங்கள்-என்று நினைவு செய்து நெஞ்சை நடுங்கச் செய்யுமாம். இதனைச் சாத்தனாரின் மணிமேகலை நூலிலுள்ள –

“எஞ்சியோர் மருங்கின் ஈமம் சாற்றி
நெஞ்சு நடுக்குறு உம் நெய்தல் ஓசை.”

(சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை : 70-71)-

என்னும் பாடல் பகுதியால் அறியலாம். இந்த நெய்தல் பறை என் நெஞ்சை நடுங்கச் செய்து என்னை நினைவில் ஆழ்த்துவது உண்டு.
யான் புதுச்சேரியில் வாழும் பகுதி, பிண ஊர்வலம், மண ஊர்வலம், அரசியல் ஊர்வலம் முதலிய எல்லா ஊர்வலங்களும் போகும் மையப் பகுதியாகும். எங்கள் பகுதியில் நாடோறும் மாலையில் ஓரிரு பிண ஊர்வலம் போய்க் கொண்டேயிருக்கும். சில நாளில் பிண ஊர் வலம் சென்ற ஒரு மணி நேரமோ-இரண்டு மணி நேரமோ கழித்து மண ஊர்வலம் செல்வதுண்டு. இந்த இரண்டையும் மாறி மாறிப் பார்க்கும் யான் ஒருவகை மயக்கத்தில் ஆழ்ந்து போவேன். இந்த மயக்க உணர்வின் போதே, ‘பக்குடுக்கை நன்கணியார்’ என்னும் புலவர் பாடிய புறநானூற்றுப் பாடல் ஒன்று நினைவுக்கு வருவதுண்டு. அதன் கருத்தாவது:-‘ஓர் இல்லத்தில் சாப்பறை கொட்டவும், மற்றோர் இல்லத்தில் மிகவும் குளிர்ந்த மணமுழவின் இனிய ஓசை எங்கும் ததும்பவும், கணவருடன் வாழும் மகளிர் மலரும் அணிகலன்களும் அணிந்து மகிழவும், கணவரைப் பிரிந்த பெண்டிரின் துன்பம் தோய்ந்த கண்களில் நீர் உகுந்து துளிக்கவும், இவ்விதம் ஏறு மாறாகப் பண்பில்லாத கடவுள் உலகைப் படைத்து விட்டான். அம்மவோ! இவ்வுலக வாழ்வு மிகவும் கொடியது-துன்பமானது; ஆதலின் இவ்வுலக இயற்கையை உணர்ந்தோர், அல்லனவற்றை நீக்கி நல்லனவற்றையே-இனியனவற்றையே செய்வாராக!” என்பது அப்பாடற் கருத்து. இனிப் பாடல் வருமாறு:—

“ஒரில் நெய்தல் கறங்க, ஒரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்,
புணர்ந்தோர் பூ அணிஅணியப், பிரிந்தோர்
பைதல் உண்கண் பணிவார்பு உறைப்பப்
படைத்தோன் மன்ற அப்பண்பு இலாளன்:
இன்னாது அம்ம-இவ்வுலகம்:
இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தேரோ” (194)

என்பது பாடல். நிலையாமையுணர்வின் போதும், யான், இப்பாடலில் உள்ள பொருட் சுவையோடு சொற்சுவை
யினையும் சுவைக்கத் தவறுவதில்லை. சுவை ஒருபுறம் இருக்க, இறக்கப் போகின்றவர் பிறப்பது எதற்கு? எல்லாரும் இன்பமாயிருக்கும்படி கடவுள் படைத்தால் என்ன?-என்ற மாதிரியான எண்ணங்கள் என் மனத்தை எப்போதும் வாட்டிக் கொண்டேயிருக்கும்.

துன்பமே வாழ்க்கை

மற்றும், எனக்கு மூளையில் கட்டி (Brain Tumour) ஏற்பட்டதால், அடிக்கடி நோயுற்றுத் தொல்லைப்படுவதுண்டு. அடிக்கடிச் சம்பள இழப்பு விடுமுறை எடுத்து வருந்துவதுண்டு. என்னைப் போன்ற இன்னும் பலரது நிலையையும் எண்ணிப் பார்ப்பதுண்டு. உலக மக்கள் படும் பல்வேறு இடுக்கண்களையும் நோக்குவதுண்டு. இதனால், உலக வாழ்க்கையில் துன்பமே மிகுதி-போலியான இன்பம் ஒரு சிறிது நேரம் இருந்து மறையக் கூடியது-என்ற கருத்து என் உள்ளத்தில் ஆழ்ந்தபதிவை உண்டாக்கியது.

போரும் பூசலும்

இம் மட்டுமா? மக்கள் தம் நலம் காரணமாக ஒருவரையொருவர் ஏய்த்து ஏப்பம் விடுவதும், தம் நலத்துக்காகக் கொள்ளையோடு நில்லாது கொலையும் புரிவதும், எல்லாத் துறைகளிலும் ஒழுங்கு இன்றிப் பல வகை ஊழல்கள் மலிந்து கிடப்பதும் என் உள்ளத்தை உறுத்திக் கொண்டுள்ளன. தம் நலம் காரணமாகத் தனி மாந்தர் ஒருவரோடொருவர் பூசல் புரிவது ஒரு புறம் இருக்க, உலக நாடுகள் ஒன்றோடொன்று பொருது கொண்டு, உலக மக்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் இழப்பு ஏற்படுத்திக் கொண்டிருப்பதும் என் உள்ளத்தை உலுக்கிக் கொண்டுள்ளன.
சீர்திருத்த உணர்வு

இந்நிலையில், மேற் குறித்துள்ள குறைபாடுகள் இல்லாத உலகம் இருக்க முடியாதா? இவ்வளவு குறைபாட்டுடன் கடவுள் ஏன் இவ்வுலகத்தைப் படைக்க வேண்டும்?-என்றெல்லாம் என் சிந்தனையில் உறுத்தல் ஏற்பட்டது. உலக நன்மைக்காகப் புத்தர், ஏசு பிரான், திருவள்ளுவர் முதலான பெருமக்கள் பலர் பெரிதும் பாடுபட்டுள்ளனர். கைமேல் பயன் கிடைத்ததா? அவர் தம் முயற்சிகள் தோல்வியடைந்தன என்று சொல்ல வேண்டிய நிலையிலேயே உலகம் தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறது. இதைப் பற்றியும் மீண்டும் மீண்டும் ஆழ்ந்து ஆழ்ந்து சிந்தித்தேன். யானும் ஏதேனும் நல்லது செய்யவேண்டும் போலத் தோன்றியது யான் நேர்மையின் கூர்மையிலே நிற்பவன் என்று கூற முடியாதெனினும், நேர்மையின் கூர்மையிலே நிற்க முயலுபவன் என்றாவது என்னைக் கூற முடியும் என நினைக்கிறேன். எனவே, என்னால் இயன்ற அளவு சீர்திருத்த உணர்வை உலகுக்கு ஊட்ட முற்படலானேன்.

வேறு சீர்திருத்தக்காரர்களின் சொற்பொழிவு களைக் கேட்டதாலோ-அவர்தம் நூல்களைப் படித்ததாலோ-வேறு பிறரது தூண்டுதலாலோ எனக்குச் சீர்திருத்த உணர்வு தோன்றவில்லை; எனது ஆழ்ந்த சிந்தனையின் வாயிலாகவே-எனது பட்டறிவின் (அனுபவத்தின்) வாயிலாகவே-எனது மனச் சான்றின் வாயிலாகவே எனக்குச் சீர்திருத்த உணர்வு தோன்றி வளரலாயிற்று.

நெஞ்சு பொறுப்பதில்லை

இளமைப் பருவத்திலிருந்தே எனக்கு ஒரு வழக்கம் உண்டு, எங்கேனும் யாரேனும் தீயது ஏதேனும் செய்வதைக் கண்டால், நமக்கு என்ன-யாராவது எப்படி
யாவது போகட்டும்-என வறிதே செல்வது கிடையாது. அங்கு நின்று அதைக் கவனித்துத் தொடர்புடையவரைக் கண்டிப்பது எனது வழக்கம். இந்த வழக்கத்தால் யான் சில எதிர்ப்புகளையும் இழப்புகளையும் பெற்றிருக்கிறேன்.

“நெஞ்சு பொறுக்கு தில்லையே- இந்த


நிலை கெட்ட மாந்தரை நினைத்து விட்டால்”

என்னும் சுப்பிரமணிய பாரதியார் கூற்றை யான் நடை முறையில் கடைப்பிடித்து வந்தேன். எங்கே சண்டை என்றாலும் அங்கே போய் விலக்கி விடுவேன்- எங்கே தகராறு என்றாலும் அங்கே என்னைப் பார்க்கலாம். தகராறு செய்பவனாக என்னைப் பார்க்க முடியாது-தகராறைத் தீர்த்து வைப்பவனாகவே அங்கு என்னைப் பார்க்கலாம்.

உள்ள முயற்சியின் உருவம்

வயது ஏற ஏற, உடல்நலம் குன்றக் குன்ற, உடலால் ஒன்றும் பணிசெய்ய முடியாமற் போய்விட்டது-உள்ளத்தாலேயே ஏதேனும் செய்ய முடிகின்றது. இத்தகைய உள்ளத்தின் ஊக்க முயற்சியே, இப்போது, “கடவுள் வழிபாட்டு வரலாறு’ என்னும் இந்த நூல் வடிவம் பெறலாயிற்று. இந்நூலில், கடவுள் தோற்றுவிக்கப்பட்ட வரலாறும், கடவுள் வழிபாடு தோன்றிய வரலாறும் பல கோணங்களில் விளக்கப்பெறும். கடவுள் உண்மைப் பொருளா? என்பதும் ஆராயப்பெறும்.

License

நூல் முதல் Copyright © by manarkeni. All Rights Reserved.