9 நல்லுருத்திரன்
சோழர் குடியிற் பிறந்து, செந்தமிழ் வளர்த்த அரசர்களுள் நல்லுருத்திரனும் ஒருவன். “கற்றறிந்தார் ஏத்தும் கலி” எனப் போற்றிப் புகழப்படும் கலித்தொகைக்கண், முல்லைத் திணை குறித்த பாக்கள் பதினேழு பாடிய புலவன், நம் நல்லுருத்திரன். அதில், காடும் காடு சார்ந்த நிலமுமாகிய முல்லை நிலத்து மக்களாகிய ஆயர்களின் அகவாழ்க்கையினை அழகுறப் பாடிப் பாராட்டியுள்ளான்.
ஆயர்கள் ஆடு, மாடு, எருமை முதலாயின காத்தல், வரகு போன்ற புன்செய்ப் பொருள்களைச் செய்தல் ஆய தொழில்களை மேற்கொள்வர். ஆயர்கள் தம் வாழ்க்கையினை வகுத்துரைப்பார்போல், அவ்வாயர் மகளிர் தம் கற்பு மாண்பினைக் காவியப் பொருளாக்கிப் பாடுவதே முல்லைத் திணையாம். முல்லைத் திணையைப் பாடிய உருத்திரன் மரம் பல செறிந்த முல்லை நிலக் காட்சியைக் காட்டுகின்றான். தந்தை நிரை மேய்ப்பான்; தாய் தினை கொய்வாள்; அண்ணன் பயிர் செய்வான்; மகள் நிரை மேய்க்கும்
தந்தைக்குக் கறவைக் கலம் கொண்டு செல்வாள்; புனத்துள மகனுக்கு உணவு கொண்டு செல்வாள்; தினை அரிதாள் மேயும் கன்றும் காப்பாள் என்று அவ்வாயர் மேற்கொள்ளும் தொழில்களை அழகு படக் கூறியுள்ளான்.
ஆயர் மகளிரின் கற்பு நெறியின் திறம் வியந்து, அவர் கற்பு நிற்க, அவ்வாயர் மேற்கொள்ளும் ஏறு தழுவற் பெரு விழாவினை விரிவாகக் கூறியுள்ளான். ஏறு தழுவல் ஆயர் குலத்திற்கே உரிய ஒரு விழா. ஆயர் ஆடு, மாடு, எருமைகளோடு வாழ்பவர். இவற்றுள் ஆணேறு மிகவும் ஆற்றலுடையது. ஆனேற்றை அடக்கி ஆள்தல் அரியதொரு செயலாகும். அதனால் உயிர் துறந்தாரும் உளர். ஆகவே மகளைப் பெற்ற ஆயன், எத்துணைக் கொடிய காளையையும் அடக்கியாளும் ஆற்றல் தன் மகளை மணப்போனுக்கு உண்டா என அறிந்தே மணம் செய்து தருவான். அம் மணமகனைத் தேர்ந்தெடுக்கும் விழாவே ஏறு தழுவல் விழாவாகும். நல்லுருத்திரன் பாடிய கலிப்பாக்கள் ஏறு தழுவலை நன்கு விளக்குகின்றன.
நல்லுருத்திரன், நாட்டு மக்கட்கு அளித்த நல்ல அறவுரை ஒன்று உளது. “ஊக்கம், உயர்வே உள்ளள் ஆகிய விழுமிய குணங்கட்கு நிலைக்களமாய் நின்றவன் நல்லுருத்திரன்; அவன் உயர்ந்தோர் போற்றும் உரன் மிகு உள்ளம் உடையான்!” என்ற உண்மையினை உணர்த்தி நிற்கும் உயர்வுடையது.
மக்கள், ஒருவரோடொருவர் கூடி வாழும் இயல்புடையவர். பழக்கத்தின் விளைவால், ஒருவர் பால் காணலாம் ஒழுக்கத்தினைத் தாமும் மேற்கொள்ளும் இயல்புடையவர். மக்கள் அனைவரும் ஒத்த பண்புடையவர் அல்லர், நற்பண்பு நிறைந்த நல்லோரை ஒரு சிலராகவும், தீயொழுக்கம் மிக்க தீயோரை மிகப் பலராகவும் கொண்டு இயங்குவதே உலகின் இயற்கை நல்லோரும், தீயோரும் கலந்துறையும் உலகில், தனித்து வாழ இயலாது, கூடி வாழ வேண்டியவராய மக்கள், மிகவும் விழிப்புடையராதல் வேண்டும். நல்லோர் கூட்டுறவால் தீயோர் நல்லவராதல் அரிது; ஆனால் தீயோர் கூட்டுறவால் நல்லோர் தீயராதல் எளிது. ஆகவே, ஒருவரை நண்பராக மேற்கொள்வதன் முன், அவர் தம் உண்மை இயல்புகளை உள்ளவாறு அறிந்து கொள்ளுதல் வேண்டும். நண்பன் ஒருவனை நாடிச் செல்லும் ஒருவனுக்கு, நண்பனாகத் தேர்ந்தெடுக்கத் தக்கவன் யாவன் தகாதவன் யாவன்? என்பது குறித்து நல்லுருத்திரன் கூறும் நல்லுரை அரிய பெரிய அறவுரையாகும்.
“உழவர்கள், நிலத்தை உழுது பயிர் செய்ய, நெல் விளைந்து முற்றிக் கதிர் வளைந்து நிற்கும் காலத்தை எதிர்நோக்கியிருந்தும், அவ்வுழவர் அறியாவண்ணம், தன் வளையினின்றும் இராக்காலத்தே வெளிப் போந்து, அக்கதிர்களைச் சிறுகச் சிறுகக் கடித்துக்கொண்டுபோய் வளையினுள்ளே சேர்த்துவைக்கும் இயல்புடையது எலி.
தன்னை வருத்தும் பெரும் பசியைப் போக்கிக் கொள்வான் வேண்டிக் கொழுத்த காட்டுப் பன்றி யொன்றை எதிர்த்துத் தாக்க, அது தன் இடப் பக்கத்தே வீழ்ந்து, இறந்தது கண்டு, இடப்பக்கம் வீழ்ந்ததனை உண்ணாத உறுதி, உள்ளத்தை உரன் செய்யப் பசி தன் வயிற்றைக் கொடுமை செய்யவும், அதைப் பொருட்படுத்தாது, வீழ்ந்த பன்றியை உண்ணாதே விட்டுச் சென்று, மறுநாள் தன்முழையினின்றும் வெளிப்பட்டுப் பெரிய ஆண் யானை ஒன்றை எதிர்த்துத் தாக்கி, அதை வலப்பக்கத்தே வீழுமாறு வீழ்த்தி உண்டு, தன் பசி போக்கும் பேராண்மை யுடையது புலி.
“உலகில் வாழும் மக்களிலும் எலிபோல இழிவுள்ளம் உற்றாரும், புலிபோலப் பேருள்ளம் பெற்றாரும், ஆகிய இருவகையினர் உளர். எலி யொத்த இயல்புடையார், தம் தோள்வலியால் வாழ எண்ணாது, அதன் வண்மையில் நம்பிக்கையற்றுப் பிறர் பெரும் பாடுபட்டுச் சேர்த்து வைக்கும் பொருளை அவர் அறியாவாறு சிறிது சிறிதாகக் களவாடிக் கொண்டுபோய், அதையும் தம் வயிறார உண்டு வாழ எண்ணாது, உண்ணாதே சேர்த்து வைப்பர். புலிநிகர் மாந்தரோ என்றால், தாம் அரிதின் முயன்று ஈட்டிய பொருளையன்றிப் பிறர் தேடி வைத்த பொருளை மனத்தாலும் தீண்டா மாண்புடையராவர். பொருள் தேடும்பொழுதும், தம் புகழ் கெட வரும் செல்வம், அளவிடற்கரியதாம் பெருஞ்செல்வமே யாயினும்,
அதைப் பொருளென மதியாது, அறநெறி வரும் பொருளையே போற்றும் பெருமைசால் உள்ளமுடைய ராவர். இவ்விருவகை மாந்தருள், எலியனையார், உள்ள உயர்வும், ஊக்கமும் அற்றவர்; ஈட்டிய பொருளை இழக்காமல் காக்கும் ஆற்றலும் அற்றவர். அத்தகையார் பெரும் பொருள் உடையார்போல் தோன்றினும், அவரோடு உறவு கொள்வதை உயர்ந்தோர் மேற்கொள்ளார்; பழியும், பாவமும் பண்ணிச் சேர்த்த பெரும் பொருளினும், பழி, பாவம் அறியா வறுமை வாழ்வே விழுமிய வாழ்வு ஆதலின், புலியன்னார், பெரும் பொருள் இலராயினும், அன்று அன்று வேண்டும் பொருளை அன்று அன்று தேடிப் பெறும் வறுமை வாழ்வினரே யாயினும், ஊக்கமும், உரனும், உயர்ந்த நோக்கமும் உடைய அன்னார் நட்பினையே, அறிவுடையார் நாடுவர். ஆகவே, உலகீர்! எலி யன்னார் இல்லம் புகாது, புலி யன்னார் தொடர்பினைப் போற்றிக் கொள்ளுமின்! உழைக்காது, பிறர் உழைப்பை அவர் அறியாது கவர்ந்து உண்ண எண்ணன்மின்! உள்ளத்தே ஊக்கம் கொள்ளுமின்! பெரும்பழி விடுத்து உறுபுகழ் தேடுமின்!” என அவன் உரைக்கும் அறவுரையினை நாமும் கடைப்பிடித்து, ஊக்கமும், உரனும், உயர்ந்த உள்ளமும் கொண்டு உய்வோமாக!