="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

10 நலங்கிள்ளி

9
நலங்கிள்ளி

காடழித்து நாடு கண்டவன் கரிகாலன். வாணிகம் வளர்த்து வளங்கொழித்தவனும் அவனே. வாணிகத்தால் வளம் பெற வேண்டுமாயின், கடல் வாணிகத்தில் கருத்துன்ற வேண்டும் எனக் கருதிய கரிகாலன், அது வளர்வதற்கு வழி செய்வான் வேண்டிக், கடற்கரைக்கண் அமைத்த பெருநகரே புகார். கடல் வாணிகத்தால் வளம் பல பெற்ற புகார் நகரத்தைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியைக் காத்து இருந்தவன் நலங்கிள்ளி.

நலங்கிள்ளி நாட்டாசை கொண்டவன்; தன் போலும் வேந்தர்கள் தனியரசு செலுத்துவதை அவன் உள்ளம் பொறாது. அவ்வேந்தர்களின் வெண் கொற்றக் குடைகளெல்லாம் தாழ்ந்து பின்னே நிற்கத் தன் குடை ஒன்றே உயர்ந்து முன்னிற்றலை விரும்புபவன். வேந்தர்களின் வெற்றிப் புகழ் விளங்க விடியற்காலையில் முழங்கும் வெண்சங்கு, தன் அரண்மனை ஒன்றில் மட்டுமே முழங்குதல் வேண்டும்; பிற வேந்தர்கள்பால் உள்ள வெண் சங்குகளெல்லாம்
முழங்கப் பெறாமல், வறிதே அவர் அரண்மனையின் ஒருபால் கிடத்தல் வேண்டும் என்ற விழைவுடையான்.

அத்தகைய நாட்டாசையும், போர் வேட்கையும் உடைய அவன்பால், அவற்றைக் குறைவற நிறைவேற்றித் தரவல்ல, நனிமிகப் பெரிய நாற்படையும் இருந்தது. நலங்கிள்ளியின் நாற்படைப் பெருமை அதை நேரிற் பார்த்தார்க்கல்லது, பிறர் கூறக் கேட்டார்க்குத் தெரியாது. அப்படை, பகைவர் நாடு நோக்கிச் செல்லுங்கால், ஒரு பனந்தோப்பின் இடையே நுழைந்து செல்ல வேண்டி நேரின், அப்படையின் முற்பகுதியில் செல்வார் பனை நுங்கு உண்டு செல்வர். படை வரிசையின் இடைப் பகுதி ஆண்டு வருங்கால், பனங்காய் முற்றிப் பழமாய் மாறிவிடும். ஆதலின், அவ்விடைப் பகுதியில் வரும் வீரர், பனம்பழம் உண்டு செல்வர். படை வரிசையின் ஈற்றில் நிற்பார் ஆண்டு வருங்கால், பழக்காலம் பழங்காலமாய்க் கழிய, கிழங்குக் காலமாம்; ஆக, படையின் ஈற்றுப் பகுதியில் வருவார் பனங்கிழங்கு உண்டு களிப்பர். நலங்கிள்ளியின் நாற்படை அத்துணைப் பெரியது. அவன் படை பெரிது என்பது மட்டுமன்று; ஆண்மையில், ஆற்றலில், போர் வேட்கையில், அது, அவனிற் குறைபாடு உடையதன்று. பகைவர் நாடு, காடும் மலையும், ஆறும் ஊரும் இடையே கிடக்க, மிக மிகச் சேய்மைக் கண் உளது; அவ்விடம் சென்று சேர்வது எவ்வாறு எனச் சோர்ந்து போகாது, போர் என்றவுடனே உள்ளம் பூரிக்கும் ளைக்கம் உடையது. வெற்றிப் புகழ்பால் வேட்கையும்,
அதைக் குறைவற நிறைவேற்றும் நாற்படையும் உடைய நலங்கிள்ளி, படைகளோடு வாழும் பாசறை வாழ்வினையே எப்போதும் விரும்புவான்; நகர வாழ்வில் அவன் நாட்டம் செல்வதில்லை. நலங்கிள்ளியின் நாட்டாசையினையும், அவன் படைப் பெருமையினையும் நன்கு அறிந்த பிற அரசர்கள், அவன் எந்நேரத்தில் தம் நாட்டின்மீது படைதொடுத்து விடுவானோ என்ற அச்சத்தால் உறக்கம் அறியாது உறுதுயர் உற்றுக் கிடப்பர்.

பெரும் படையும், பேராண்மையும், போர் வேட்கையும் உடையவனாய் நலங்கிள்ளி நாடாண் டிருந்தான். அக்காலை, உறையூரைத் தலைநகராகக் கொண்ட சோழ நாட்டின் ஒரு பகுதி, அரசிழந்து விட்டது. அஃதறிந்த நலங்கிள்ளி உறையூர் அரியணை யில் அமரும் ஆர்வம் உடையனாயினான். நலங்கிள்ளி நாடாண்டிருந்த காலத்தே, அச்சோழர் குடியிற் பிறந்த நெடுங்கிள்ளி என்பானொருவன் ஆவூர்க்கோட்டைக்கு உரியோனாய் ஆட்சி புரிந்து கொண்டிருந்தான். உறையூர், அரசனை இழந்து அல்லல் உறுகிறது என்பதறிந்த அவனும், அதன் ஆட்சித் தலைமையினைத் தனதாக்கிக் கொள்ளத் துணிந்தான். அஃது அறிந்தான் நலங்கிள்ளி. பகைவன் படை திரட்டிப் பலம் பெறுவதற்கு முன்னர் அவனைப் பாழ் செய்வதே போர் துணுக்கமாம் என உணர்ந்தவன் நலங்கிள்ளி. பகைவரை நெருங்க விடாது, நெடுந் தொல்ைவிலேயே நிறுத்தி அழித்து விடுவதே ஆண்மைக்கு அழகாம்
என்பதை அறிந்த அவன், நெடுங்கிள்ளி உறையூர் செல்லாவாறு, அவனை அவன் வாழும் ஆவூர்க் கோட்டையிலேயே அழித்துவிடத் துணிந்தான். அவ்வாறே, பெரும்படை யொன்றும் புகாரினின்றும் புறப்பட்டுச் சென்று, ஆவூர்க் கோட்டையினைத் திடுமென வளைத்துக் கொண்டது. நலங்கிள்ளியின் நினைப்பறியாத நெடுங்கிள்ளி, அவன் படை எதிர்பாரா நிலையில் தன் ஆவூர்க் கோட்டையினை முற்றிக் கொண்டதறிந்து, செய்வதறியாது திகைத்தான்: நலங்கிள்ளியின் நாற்படையினை எதிர்த்து நிற்பது தன் படைக்கு இயலாது என்பதறிந்த அவன், ஆவூர்க் கோட்டையினுள்ளே அடங்கியிருந்தான். உள்ளிருப் பார்க்கு நெடுநாளைக்கு வேண்டும் உணவு முதலாம் இன்றியமையாப் பொருளைப் பெற மாட்டாது நெடுங்கிள்ளி வெளிப்படுவன் என நலங்கிள்ளி எதிர் நோக்கி முற்றியிருந்தான். அவன் எதிர்பார்த்தது எய்தி விட்டது. உள்ளிருப்போர்க்கு ஒன்றும் கிடைத்திலது. உணவும், உண்ணும் நீரும் பெறாது யானைகள். வருந்தின. பால் கிடைக்கப் பெறாது குழந்தைகள் கதறின; மகளிர் மகிழ்ச்சி அற்றனர்; வறுமை வாட்டிற்று; மக்கள் மனம் குன்றினர். இந்நிலையினை அறிந்தார் கோவூர்க் கிழார் என்ற புலவர். அரணுள் புகுந்து அரசனைக் கண்டார். “அரசே! ஆற்றல் இருந்தால் பகைவனை அழித்து வெற்றி கொள்; அதற்கு வாய்ப்பு இல்லையேல், வந்தானுக்கு வழிவிட்டு வெளியேறு; இரண்டும் செய்யாது இங்குள்ளார் வருந்த
அடைத்திருத்தல் ஆண்மையோ, அறமோ ஆகாது!” என்று அறவுரை கூறினார். புலவர் நல்லுரை கேட்ட நெடுங்கிள்ளி, அரணைக் கைவிட்டு வெளியேறினான். அழிவு சிறிதும் நேராதே, ஆவூர்க் கோட்டை நலங்கிள்ளியின் உடைமையாயிற்று.

நெடுங்கிள்ளி, ஆவூர்க் கோட்டையினைக் கை விட்டுச் சென்றானேனும், உறையூர்க் கோட்டைபால் அவன் உள்ளம் கொண்ட வேட்கையினை விட்டானல்லன். உடனே விரைந்து சென்று, வேண்டும் பொருள்களோடு உறையூர்ப் புகுந்து, வாயிற் கதவடைத்துக் கொண்டு உள்ளிருப்பானாயினன். நலங்கிள்ளி, உறையூர் அரியணைபால் சென்ற உள்ளமுடையேனேயன்றி ஆவூர்க் கோட்டைபால் ஆசையுடையானல்லன். அதனால், ஆவூர்க் கோட் டையை விடுத்து அடங்கியிருப்பான்போல நடந்து, உறையூர்க் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்ட நெடுங்கிள்ளியின் செயல் கண்டு கடுஞ்சினம் கொண்டான். உடனே, பெரும் படையோடு, ஆவூர் விட்டெழுந்து, உறையூர் அடைந்து அரணைச் சுற்றி வளைத்துக் கொண்டான்.

நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும் மீண்டும் பகைத்தெழுந்ததைக் கோவூர்க் கிழார் கண்டார். ஆவூர்ப் போரைத் தடுத்து அழிவு நிகழாவண்ணம் காத்து வெற்றி பெற்ற அவர், உறையூர்ப் போரையும் ஒழித்து உயர்வு பெற எண்ணினார். உறையூருக்கு விரைந்து சென்றார். கோட்டையை முற்றி நிற்கும்
நலங்கிள்ளியைக் கண்டார். “நலங்கிள்ளி! நீ வளைத்து நிற்கும் இவ்வரணுள் வாழ்வோனைச் சென்று கண்டேன். அவன் கழுத்தில் சேரனுக்குரிய பனை மாலையோ, பாண்டியனுக்குரிய வேம்பு மாலையோ இருக்கக் கண்டிலேன்; ஆத்தி மாலையினையே அவன் கழுத்தில் கண்டேன். அவன் அகத்திருக்க, வளைத்து நிற்கும் நின்னைக் கண்டேன்; நின் கழுத்தில் இருக்கும் மாலை, உள்ளிருக்கும் சோழனின் பகைவருக்குரிய பனை மாலையாகவோ, வேம்பு மாலையாகவோ இருக்கும் என எதிர் நோக்கினேன். ஆனால், நின் கழுத்திலும் அவ்வாத்தி மாலையே இருக்கக் காண்கின்றேன். இதனால் நீங்கள் இருவருமே சோழர் குடியில் வந்தவர் என்பது விளங்கிற்று. ஆக, இப்போது ஒரு குடியிற் பிறந்தார்களே பகை கொண்டுள்ளீர்கள். இஃது உங்கட்குப் பெரும்பழியாம். மேலும் இருவர் போரிடின், இருவரும் வெற்றி கோடல் இயலாது. ஒருவர் வெற்றி பெறின் பிறிதொருவர் தோற்றல் வேண்டும். உங்கள் இருவரில் யார் தோற்பினும், தோற்றவன் சோழர் குடியிற் பிறந்தவனே! தோற்றது சோழர் குடியே! தோற்றது சோழர் குடி என்ற சொல் உங்கட்குப் பழியும், உங்கள் பகைவர்க்குப் பெருமிதமும் தருமன்றோ? பிறந்த குடிக்குப் பழி தேடித் தருவதோ உங்கள் பிறவிக் கடன்? ஆகவே நலங்கிள்ளி! உறையூர்க் கோட்டைபால் கொண்ட உன் ஆசையை விட்டு அகல்வாயாக!” என்று எத்துணையோ எடுத்துக் கூறினார்.

ஆனால், அந்தோ! இவர் உரைத்த அறவுரை அதற்குரிய பயனைப் பெறாது போயிற்று. நலங்கிள்ளி புலவர் தம் பொருள் பொதிந்த அறவுரைகளைப் பொன்னே போல் போற்றும் இயல்புடையனே யாயினும், உறையூர் அரசுரிமையினை அடைவதில் அவன் கொண்டிருந்த ஆர்வத்தால், புலவர் சொல்லை. ஏற்க மறுத்து விட்டான். உறையூர்க் கோட்டையை விடாது முற்றி, உள்ளிருப்போனை வென்று அழித்து விட்டு உறையூர் அரியணையில் அமர்ந்து உள்ளம் அடங்கினான்.

இவ்வாறு பேரரசுகள் எல்லாம் பணிந்து திறைதரப் பாராண்ட பெருவேந்தனாய நலங்கிள்ளி, பெற்ற பேரரசைப் போற்றிக் காக்க வல்ல ஊக்கமும் உரனும், அப்பேரரசில் வாழ்வார் அனைவரும், “அறநெறி பிறழா அன்புடையான் எம் அரசன்!” எனப் போற்றிப் புகழ நாடாளும் நன்னெறியும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற நல்லோனாவன். நாட்டவர் போற்ற நெடிது ஆண்ட அவன், அவ்வாறு, ஆளற்காம் நல்லறிவும் நன்கு வாய்க்கப் பெற்றிருந்தான். அத்தகைய நல்லறிவினைத் தான் பெற்றிருந்ததோடு, அதை நாடாளும் உரிமை பெற்றார் ஒவ்வொருவரும் உணர்ந்து உயர்வடைதல் வேண்டும் எனும் உள்ளமுடையனாய்த் தான் பெற்ற அந்நல்லறிவினை நயமிக்க பாட்டொன்றில் அமைத்து அளித்துள்ளான்.

உழைத்துப் பொருள் தேடி உண்ண எண்ணாது, தலைமுறை தலைமுறையாகத் தன் முன்னோர் ஈட்டி
வைத்த பொருளை இருந்து உண்ண ஒருவன் எண்ணு வானாயின், அவ்வாறு உண்டல் நீண்ட நாள் நிகழாது. நீண்ட நாள் உண்டல் நிகழாது என்பது மட்டுமன்று; இறுதியில் உள்ளது அற்று, ஊறுபல உற்று, உயிர்க் கேடுறுவது உறுதி உழைக்காது உண்டு வந்தமையால் உள்ளது குறைந்து போம். உழைத்து அறியாதவன் ஆதலாலும், உண்டு பழகியவன் ஆதலாலும், உள்ளது அற்ற விடத்துப், பிறர் உழைப்பைப் பறித்துத் தின்னத் துணிவான். அதனால், அவன் உயிர் வாழ்விற்கே ஊறு நேர்த்துவிடும்.

அத்தகையான் ஒருவன், தன் முன்னோர் போற்றிக் காத்து வந்த பேரரசை அடைவானாயின், வருவாய் வளர்தற்காம் வழிவகைகளைக் காண எண்ணாது, வாழும் மக்களிடம் வரி பல வாங்கி வாழ எண்ணுவான். வரி மேல் வரியென வழங்கி வழங்கி, மேலும் வழங்க மாட்டாது, வறுமையுற்ற மக்களை வாட்டி, அவர்பால் உள்ளன பெற்று உண்ணத் துணிவான். அந்நிலையில், செய்வதறியாது சினங் கொண்ட மக்கள் அவன் ஆட்சியையே எதிர்த்து எழுவர். மக்கள் எழுச்சியை அடக்கமாட்டாது அடங்கி, அம்மக்கள் மன்றத்தில் மண்டியிட்டு மடிவான்.

உழைத்துப் பெற்ற உணவன்றிப் பிற உண்டறியா உரவோன் ஒருவன், பிறரை எதிர்நோக்கி வாழ்வதோ, எதிர் நோக்கியது எய்தாது போக, இழிவு தரும் வழிகளால் வாழ எண்ணுவதோ, அதனால் இடர் பல உறுவதோ இலன், அதற்கு மாறாக ஓயாத உழைப்பால்
உறு பொருள் பல சேர்த்து, உயர்ந்தே விளங்குவான். அவனுக்கு வாழ்வு ஒரு பாரமாகத் தோன்றுவது மில்லை.

அத்தகையன்பால், ஒரு நாட்டின் அரசுரிமை செல்லின், அவன் உள்ளது போதும் என அடங்கி யிராது, தன்னாட்டு வளம் வளர்தற்காம் வழிபல வகுப்பான். ஆதலின், அவன் நாடு வளம் அறுவதோ, அதனால் மக்கள் வாடுவதோ, வாடிய மக்கள் மன்னனை எதிர்த்து எழுவதோ நிகழா. மாறாக, நாட்டு வளம் வளர்தலின், நாட்டு மக்கள் நல்வாழ்வு வாழ்ந்து, தமக்கு அந்நல்வாழ்வு நல்கும் அரசன் நெடிது நாள் ஆள வாழ்த்துவர். அத்தகையானுக்கு அரசியல் ஒரு பாரமாகத் தோன்றாது. கோடையால் உலர்ந்து ஒடிந்து வீழ்ந்த சிறு சுள்ளியைப் போல் நனிமிக எளிமை யுடையதாம்.

ஆகவே, பிறர் உழைப்பில் பெருவாழ்வு வாழ எண்ணும் பேதையோன்பால் ஒரு நாட்டின் ஆட்சிப் பொறுப்பினை ஒப்புவிக்காது, உழைத்து உறுபயன் காணும் உரவோனிடத்திலேயே ஒப்புவித்தல் வேண்டும். இவ்வாறு நலங்கிள்ளி நாடாளும் திறம் குறித்துச் சிறந்த அறவுரை நல்கினான்.

நலங்கிள்ளி கொடைத் திறமும், படைத் திறமும் உடையவன். அவன் பாடிய புறப்பாடலொன்று அவன் உள்ளத்தின் உயர்வையும், வீரத்தையும், புலமையின் சிறப்பையும் நன்குணர்த்துகின்றது.

“என் அரசைப் பெற விரும்பும் என் பகையரசன் மெல்ல வந்து, என் அடி பணிந்து, நின் அரசுரிமை யினைத் தந்தருள்க! என்று இரந்து நிற்பானாயின், அவற்கு இவ்வரசையே யன்றி என் உயிரையும் தருவேன். அவன் தூங்கும் புலியைக் காலால் இடறிய குருடனைப் போல, ஆற்றல் மிக்க என் அமைச்சர், படைத் தலைவர் முதலாயினோரை மதியாது, என் உள்ளத்தின் ஊக்கத்தையும் இகழ்வானாயின், அவன் அழிந்து போதல் உறுதி. அன்னோன் யானையின் காலால் மிதியுண்ட மூங்கில் முனையைப் போல் அழியுமாறு அவன் நாடு சென்று வெற்றி கொள்வேன்!” என்று வீரவுரை கூறியிருக்கின்றான்.

License

Icon for the Public Domain (No Rights Reserved) license

To the extent possible under law, manarkeni has waived all copyright and related or neighboring rights to நலங்கிள்ளி, except where otherwise noted.

Share This Book