2 தமிழ் இலக்கியத்தின் தொன்மை
தமிழ்மொழி இனிமை வாய்ந்தது என எல்லாரும் ஒப்பக் கூறுகின்றனர். அது செந்தமிழ், தீந்தமிழ், தமிழ் எனும் இனிய தீஞ்சொல் என்றெல்லாம் பாராட்டப் பெறுகிறது. தமிழ் எனும் சொல்லே இனிமை எனும் பொருள் தருவதாம். “தேமதுரத் தமிழ்” என ஒருவர் அதைப் பாராட்டியுள்ளார். தமிழ்மொழி இவ்வளவு இனிமை வாய்ந்திருப்பதற்குக் காரணம் யாது? அம்மொழி . அறிந்த பெரியார்கள், அவ்வப்போது ஒன்றுகூடி, மொழியை இனிமை நிறைந்ததாக ஆக்குவது எவ்வாறு என்பதை ஆராய்ந்து ஆராய்ந்து, அதை அவ்வாறு ஆக்கியுள்ளனர். இவ்வாராய்ச்சி ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வந்துள்ளது. அறிவிற் சிறந்த சான்றோர்களின் உள்ளங்களில் தோய்ந்து தோய்ந்து, தமிழ்மொழி இனிமை நிறைந்த மொழியாகிய பெருமையுற்றுள்ளது.
தமிழ் மொழி, அவ்வாறு பெற்ற அவ்வினிமைப் பண்பை, இன்று பெறவில்லை; சங்க காலத்திற்கும் முற்பட்ட காலத்திலேயே, அது அந்நிலையை
அடைந்துவிட்டது. கடைச் சங்க காலமே, இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பர். அதற்கு முன்னே, ஒவ்வொரு சங்கத்திற்கும் இடையே எத்தனையோ ஆண்டுகள் கழிந்து விட்டன. அவ்வாறு நோக்கியவிடத்துத் தமிழ்மொழி, தன் இனிய பண்பை எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெற்றுவிட்டது என்பது உறுதியாம்.
மக்கள், தங்கள் உள்ளத்தே எழுந்த எண்ணங்களைத், தாங்கள் எண்ணியவாறே, ஏனையோரும் உணருமாறு எடுத்துரைக்க வல்ல சொல் வளமும், கேட்போர் விரும்பிக் கேட்குமாறு அமைந்த சொல்லின்பமும் உடையவாய் அமைந்த ஒரு மொழியில், அழகிய இலக்கியங்கள் பல தோன்றுவதும் இயல்பே. இலக்கியமாவது உயர்ந்த கருத்துக்களைச் சிறந்த சொற்களால் திறம்பட உரைப்பதாம். இனிய பல சொற்களைக் கொண்ட ஒரு மொழி, நாகரிகமும் நற்பண்பும் இல்லா நாட்டு மக்களிடத்தில் தோன்றி விடுவதில்லை. தக்க இன்ன, தகாதன இன்ன என உணரும் உணர்வு தகுதியுடையவரிடத்து மட்டுமே உண்டாம். தகுதியாவது யாது என்பதை உணராதார், ஒலியிலும் மொழியிலும் தகுதியைக் காண இயலாதவர். சிந்தையும் செயலும் சிறந்தனவாகப் பெற்ற மக்கள், தம்மோடு தொடர்புடைய எவையும் சிறந்தனவாக இருத்தலை விரும்புவர்; தாம் வழங்கும் மொழியும் சிறந்ததாதல் வேண்டும் என்ற எண்ணம் அவர்பாலே உண்டாம். ஆகவே, ஒரு மொழியும், அம்மொழியில்
தோன்றிய இலக்கியமும் சிறந்தனவாயின், அம்மொழி வழங்கும் மக்கள். அதாவது, அவ்விலக்கியத்தால் உணரப்படும் மக்கள், சிறந்த செயலும், சீரிய பண்பும் வாய்ந்தவராவர் என்பது உறுதி.
“உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்,
வாக்கினிலே ஒளி உண்டாகும்”
என்றார் பாரதியார்.
உள்ளம் தூயதாயின், சொல்லும் தூயதாம், செயலும் துயதாம். உள்ளம் தூயர், துய்மையின் நீங்கிய சொல் வழங்கலும், தூய்மையின் நீங்கிய செயல் புரிதலும் செய்யார். தீய சொல்லும், தீய செயலும் உடையாரின் உள்ளம் மட்டும் தூயதாதல் இயல்பன்று. சொல்லும் செயலும் உள்ளத்தை உணர்த்தும் உயர்ந்த கருவிகளாம். ஆகவே, உள்ளமும், உரையும், உற்ற தொழிலும் ஒன்றோடொன்று உறவுடையன. ஒன்று நன்றாயின், ஏனைய இரண்டும் நன்றாம்! ஒன்று தீதாயின், ஏனைய இரண்டும் தீதாம். ஆகவே, உயர்ந்த மொழியும், சிறந்த இலக்கியங்களும், உயர்வும் சிறப்பும் ஒருங்குடையாரிடத்து மட்டுமே உளவாம் என்ற உண்மைகளை உறுதி செய்கின்றன. கரும்பு தோன்றுவது கழனியில், களர் நிலத்தில் அன்று.
செந்தமிழ் மொழி சிறந்த இலக்கியங்களையும், அவ்விலக்கியங்களின் பண்பினை இனிதெடுத் துரைக்கும் இலக்கணங்களையும் பெற்றுளது. ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்’ என்பது விதி.
இலக்கியம் முற்பட்டது; இலக்கணம் பிற்பட்டது. நாய் என்ற பொருளைக் கண்ட ஒருவனே, நாய் என்பது யாது என்பதை அறிந்து கூற முடியும். அதை அறியாத ஒருவன் அப்பொருள் பற்றிக் கூறுதல் பொருந்தாது; பொருந்தாது என்பது மட்டுமன்று: அஃது அவனால் இயலவும் இயலாது. மேலும் நாய் என்ற பொருளே இல்லாதவிடத்து, அப்பொருள் பற்றிப் பேசுபவரோ, அதற்கு இலக்கணம் கூறுபவரோ இரார். ஆகவே, இலக்கணம் என்பதொன்று உளது என்றவுடனே அவ்விலக்கணத்தை உடைய ஒரு பொருள், அஃதாவது அவ்விலக்கணம் தோன்றுவதற்குக் காரணமாய ஒரு பொருள் உளது என்பது தானே பெறப்படும். தமிழ் மொழி, தலை சிறந்த இலக்கணமாகத் தொல் காப்பியத்தைப் பெற்றுளது. ஆகவே, அப்பேரிலக்கணப் பெருநூல் தோன்றுவதற்குக் காரணமாய் இலக்கியங்கள் பலவற்றையும் அம்மொழி பண்டே பெற்றிருத்தல் வேண்டும் என்பது தெளிவு.
ஒரு பொருளுக்கு இலக்கணம் கூறுவது, எளிதில் எண்ணியவுடனே இயலுவதன்று. மாடு என்ற பொருளுக்கு இலக்கணம் கூற முன் வந்த ஒருவன், முதலில் நான்கு கால்கள் உடையது மாடு என்றான். நான்கு கால்கள் குதிரைக்கும் உளவே என்ற தடை எழுந்தவுடனே, நான்கு கால்களையும் இரண்டு கொம்புகளையும் உடையது மாடு என்றான். அந்நிலையில், அவ்வியல்பு ஆட்டிற்கும் உண்டே என்று ஒருவன் கூற, நான்கு கால்களையும், இரண்டு
கொம்புகளையும், நீண்ட வாலையும் உடையது மாடு என்றான். அவ்வியல்பு யானைக்கும் பொருந்தும். ஆகவே, கூறிய இலக்கணம் நிரம்பாது என்று ஒருவன் சொல்ல, பிளவுண்ட குளம்புகளைக் கொண்ட நான்கு கால்களையும், இரண்டு கொம்புகளையும், நீண்ட வாலையும் உடையது மாடு என்றான். அதுவும் அமையாது என்று கண்டவிடத்துக் கூறிய இலக்கணங்களோடு, கன்று ஈன்று, அக்கன்று உண்டு எஞ்சிய பாலை, மக்கள் பயன்கொள்ள அளிப்பது மாடு என்றான். இவ்வாறு இறுதியில் கூறிய நிரம்பிய இலக்கணத்தைக் கூற, அவனுக்கு எத்தனையோ ஆண்டுகள் ஆகியிருக்கும். மாடு ஒன்றை மட்டும் கண்ட காலத்திலிருந்து, அவன் வாழ்வில், குதிரையும், ஆடும், யானையும், பிறவும் குறுக்கிட்ட பல ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டி வந்த பின்னரே, அவ்விலக்கணத்தை அவனால் காண முடிந்தது. இலக்கண நூல்கள் எழுந்த முறை இதுவே.
தமிழ் மொழியின் தலையாய இலக்கணமாம் தொல்காப்பியம், தமிழ் மொழியின் எழுத்துக்களுக்கும், சொற்களுக்கும் இலக்கணம் கூறுகிறது; தமிழ் மக்களின் வாழ்க்கைக்கு இலக்கணம் வகுக்கிறது. பார்ப்பு பறழ் போலும் சொற்கள் இளமை உணர்த்தும் பெயர்களாம் எனச் சொல்லளவிலேயே இளமைப் பொருள் உணர்த்தும் சொற்களைக் குறிக்கின்றது. ஏறு, ஏற்றை போலும் சொற்கள் ஆண்மை உணர்த்தும் பெயர்களாம் எனச் சொல்லளவிலேயே ஆண்மைப் பொருள்
உணர்த்தும் சொற்களை வரையறுத்துள்ளது. பிடி, பெடை, பெட்டை போலும் சொற்கள் பெண்மை உணர்த்தும் பெயர்களாம் எனச் சொல்லளவிலேயே பெண்மைப் பொருள் உணர்த்தும் சொற்கள் இவை என்று கூறுகின்றது. இவற்றோடு அமையாது,
“பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை”
என இளமை உணர்த்தும் பெயர்களுள், இன்ன பெயர் இன்னின்ன உயிர்களின் இளமைகளை உணர்த்தும் என்றும் குறித்துள்ளது.
“பன்றி, புல்வாய், உழையே, கவரி
என்றிவை நான்கும் ஏறெனற்குரிய”
என ஆண்மை உணர்த்தும் பெயர்களுள், இன்ன பெயர் இன்னின்ன உயிர்களின் ஆண்மைகளை உணர்த்தும் என்று உரைக்கின்றது.
“பிடிஎன் பெண்பெயர் யானை மேற்றே”
எனப் பெண்மை உணர்த்தும் பெயர்களுள் இன்னபெயர், இன்னின்ன உயிர்களின் பெண்மைகளை உணர்த்தும் என்றும் கூறியுள்ளது. இவ்வாறு பொருள் களுக்கும், சொற்களுக்கும் உள்ள தொடர்பினை உணர்ந்து தொல்காப்பியம் வரையறுத்து வழங்கி யுள்ளது.
அம்மட்டோ! தொல்காப்பியம் மலை, காடு, வயல், கடல் என நால்வகைப்படும் நிலத்தின் இயல்பை அறிவிக்கின்றது. ஞாயிற்றின் வெங்கதிர், வானின் தண்பெயல் என்ற இவற்றின் இயல்புகளுக்கு ஏற்ப, கார், கூதிர், முன்பணி, பின்பணி, இளவேனில், முதுவேனில் எனப் பிரிவுண்டு நிற்கும் காலத்தின் இயல்பைச் சுட்டிக் காட்டுகின்றது. அவ்வந் நிலங்களில் அவ்வக் காலங்களில் பூத்தும் காய்த்தும் பயன்தரும் மரம் செடி கொடிகள், நிலத்தில் ஊர்ந்தும் தவழ்ந்தும், ஒடியும், நடந்தும், நீரில் நீந்தியும் வானத்தில் பறந்தும் வாழும் பல்வேறு உயிர் வகைகளையும், அவ்வுயிர்களின் உணவு, உறையுள் ஒழுக்கம் ஆகியவற்றின் இயல்புகளையும் தெரிவிக்கின்றது. அவ்வுயிர்களுள் ஆறறிவு படைத்த மக்கள், மணந்து மக்களைப் பெற்று மனையறம் காக்கும் மாண்புடையதாய அகவொழுக்கத்தினை விளக்குகிறது; ஊராரும், உலகோரும் ஒன்று கூடி, அவ்வக வாழ்வு அமைதி நிறைந்த நல்வாழ்வு ஆதற்கு நற்றுணையாம் பொருளீட்டு முயற்சிகளையும், அம் முயற்சி இனிது நடைபெற நின்று துணை புரியும் அரசியற் சிறப்புக் களையும் அழகாகக் கூறுகின்றது. அவ்வரசியலை அறம் பிறழாது காக்கும் அரசர்கள் மேற்கொள்ளும் போர் நிகழ்ச்சிகளை உணர்த்தும் புற ஒழுக்கத்தினையும் இனிது எடுத்துக் கூறுகின்றது.
இவ்வாறு தமிழ் மொழிக்கும், அம் மொழி வழங்கும் தமிழ் நாட்டிற்கும், அந்நாட்டில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கும் இலக்கணம் வகுக்கும் தொல்காப்பியம் தோன்றி இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆயினும், அன்று கூறிய இலக்கணம், இன்றும் பொருந்துவதாகவே உளது. அவ்விலக்
கணத்தைச் சிறிதேனும் மாற்றி அமைக்க வேண்டும் என்ற நிலை, இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்த இன்றும் உண்டாகவில்லை. தான் கூறிய இலக்கணத்தை அந்நூல் அவ்வளவு தெளிவாகக் குறையேதும் காணாவாறு முற்ற உணர்ந்து கூறியுள்ளது. நேற்றுக் கூறிய இலக்கணம் இன்று இல்லை என்ற நிலையற்ற இவ்வுலகில், இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகியும், மாற்றிக் கூற வேண்டிய நிலை உளது என்ற குறை கூறாவாறு நிரம்பிய இலக்கணத்தை உணர்த்தியுளது தொல்காப்பியம். இவ்வியல்பு உலக மொழிகள் எதற்கும் இல்லாத தமிழ் மொழி ஒன்றற்கே உள்ள தனிச் சிறப்பாம்.
தொல்காப்பியர், தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியங்களுக்கும் கூறிய இலக்கணத்தைத் தாம் ஒருவரே, தம் வாழ்நாள் காலத்திற்குள்ளாகவே அறிந்து உரைத்தாரல்லர். அவருக்கு முன்னர், எத்தனையோ ஆசிரியர்கள், அவை பற்றி எவ்வளவோ கூறி யுள்ளார்கள். அவ்வாறு அவர்கள் கூறிய அவ்விலக் கணங்களுள், அக் கால வளர்ச்சியோடு நோக்கப் பொருந்தாதனவற்றை விலக்கி, கூறாதனவற்றைக் கொண்டு கூறியதே தொல்காப்பியம். “என்மனார் புலவர் “இயல்பென மொழிப” என அவர் ஆளும் தொடர்கள் இதை உறுதி செய்ய வல்லனவாம்.
தமிழ் மொழி தோன்றிய காலத்திற்கும், அதற்கு நிரம்பிய இலக்கணம் உரைக்கும் தொல்காப்பியம் தோன்றிய காலத்திற்கும் இடையே, பல ஆசிரியர்கள்
பல்வேறு காலங்களில் தோன்றித் தம் தம் காலத்தே தமிழ் ஒலிகளிலும், தமிழ்ச் சொற்களிலும், தமிழ் மக்களின் வாழ்க்கையிலும் தாம் கண்ட குறைகளையும் திருத்தங்களையும் நீக்கியும் கொண்டும் இலக்கணம் கூறிச் சென்றனர். இறுதியாக அவர் கூறிய இலக்கணங் களில் செப்பம் செய்து, சிறந்த தம் நூலை அளித்தார் தொல்காப்பியனார். காடுகளில் காட்டுமிராண்டி களாய் வாழ்ந்த தமிழ் மக்களிடையே தோன்றி, அவர் நாகரிக நெறியில் வளர வளர, அவரோடு தானும் வளம் பல பெற்று வளர்ந்து, இனியும் வளர வேண்டா இனிய நிலைபெற்ற தமிழ் மொழியின் இறவாப் பேரிலக்கியங்களுக்குத் தொல்காப்பியர் கூறும் இலக்கணங்களும் அவ்வாறு வந்தனவே.
இலக்கியம் என்பது, அவ்விலக்கியத்தைப் பெற்ற மக்கள் வாழ்க்கையோடு இரண்டற இணைந்து நிற்பதாம். சிறந்தது எனத் தாம் கண்ட நிகழ்ச்சிகளைச் சிறந்த சொற்களால் சிறப்பாக எடுத்துரைப்பதே இலக்கியமாம். ஊக்கமும், உரமும், உள்ள உயர்வும், உயர்ந்த ஒழுக்கமும் உடைய மக்கள் வாழும் நாடே சிறந்த நாடாகும். அந்நாட்டில், அன்னார் வாழும் காலத்தில் தோன்றிய அறிஞர்கள் நாட்டின் நன்னிலை கண்டு, நாட்டு மக்களின் நற்பண்பு கண்டு, அகம் மிக மகிழ்வர். எந்நாடும் அந்நாடு போலாயின, எந்நாட்டு மக்களும் அந்நாட்டு மக்களே போல்வராயின், உலகில் அமைதி நிலவும்; உலக மக்கள் உயர்நிலை பெறுவர் என அவர் கருதுவர். ஆகவே, பிற நாடுகளும், பிற நாட்டு மக்களும், இந்நாட்டையும், இந்நாட்டு
மக்களையும் அறிந்து அவர் வழி செல்லுமாறு, இங்குள்ள நிலையினை எடுத்துக் காட்டுவதைக் கடமையாகக் கொள்வர். தம் காலத்தே, தம் நாட்டைச் சூழ உள்ள நாடுகளுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் காட்டுவதோடு, தமக்குப் பின் வாழும் தம் நாட்டு மக்களுக்கும் காட்டுதல் வேண்டும் எனக் கருதுவர். கருதிய அவ்வான்றோர் தாம் வாழும் தம் நாடு, அந்நாட்டு நல்லாட்சி, அந் நல்லாட்சிக்குரியோனாய அரசன், அவன் ஆட்சி மாண்பு, அந்நாட்டு மக்கள், அவர் மனவளம், அவர் தம் வாழ்க்கை வனப்பு ஆகிய அனைத்தையும் பாட்டில் இசைத்துப் பாராட்டிச் செல்வாராயினர். அவ்வாறு அவர் பாடிய அப் பாக்களே இலக்கியங்களாம். ஆதலின், இலக்கியம், அவ்விலக்கியத்தைப் பெற்ற மக்களோடு ஒன்றி நிற்கும் இயல்புடையதாயிற்று.
இலக்கியத்தைக் காணின், அவ்விலக்கியத்திற் குரிய மக்களைக் காணலாம்; மக்களைக் காணின், அம் மக்களிடையே அம் மக்களின் இலக்கியங்களைக் காணலாம். அதனால் மக்கள் வளர வளர, இலக்கியமும் வளரும்; அவர் வளம் குன்றக் குன்ற, அவர் இலக்கியமும் வளங் குன்றித் தோன்றும் என்பது உறுதி. மக்களுக்கும் இலக்கியங்களுக்கும் உள்ள இவ்வுறவினை உட்கொண்டு தமிழ் இலக்கியங்களின் இயல்பினை ஆராய்தல் வேண்டும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தொல்காப்பியம் தோன்றியது. அது தோன்றுவதற்குக்
காரணமாய பல இலக்கண நூல்கள், அதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியிருத்தல் வேண்டும். அவ்விலக்கண நூல்கள் தோன்றுவதற்குக் காரணமாய எண்ணற்ற இலக்கியப் பெரு நூல்கள், அவ்விலக்கண நூல்கள் தோன்றுவதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியிருக்கும். அவ்விலக்கியங்கள் தோன்றுவதற்குக் காரணமாய்த் தம் வாழ்வை வளம் நிறைந்ததாக ஆக்கிக் கொண்டிருப்பாராயின், அத் தமிழ் மக்களும், அம் மக்களின் இலக்கியங்களும் எத்துணைப் பழைமை உடையராதல் வேண்டும் என்பதை உய்த்துணர்வதல்லது, அந்தக் காலம் இந்தக் காலம் என வரைந்து காட்ட இயலுமோ? அக் காலத்தின் பழைமையினை அறிய மாட்டாமை யாலன்றோ புலவர் ஒருவர், அத்தமிழ்க் குடியின் பழைமையினை வரைந்து கூறாதே,
“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முன்தோன்றி மூத்த குடி”
என்று கூறிச் சென்றுள்ளார்! நிற்க.
ஒரு மொழி தோன்றி வளர்ந்தவுடனே, அம்மொழி யில் இலக்கியங்கள் தோன்றிவிடும். இலக்கியம் காலந்தோறும் தோன்றிக் கொண்டே யிருக்கும். இலக்கிய ஆசிரியர்கள் எக்காலத்திலும் தோன்றுவர். இலக்கியம் தோன்றும் காலம் இது, அது தோன்றாக் காலம் இது என்ற வரையறை வகுப்பது இயலாது.
இலக்கிய ஆசிரியன், தான் இயற்றும் இலக்கியத்திற்குத் தன் காலத்து மக்களின் வாழ்க்கை நிலைகளையே பின்னணியாகக் கொண்டு இயற்றுவன். இலக்கியம் அது தோன்றும் கால நிலையைத் தன் அடிப்படையாகக் கொண்டெழும் என்பது உண்மை. அதுவே இலக்கியப் பண்பும் ஆம் ஆனால் அவ்வாறு இலக்கிய அடிப்படையாக அமையும் மக்கள் வாழ்க்கை நிலை, என்றும் நடுநிலையில் இருப்பதில்லை. அது காலந்தோறும் மாறிக் கொண்டே இருக்கும்; நாடுதோறும் மாறிக் கொண்டே இருக்கும். இனந்தோறும் மாறிக் கொண்டே இருக்கும். இன்று தோன்றி விளங்கும் இலக்கியங்கள் அனைத்தையும் நோக்கின், அவை பல்வேறு வாழ்க்கை முறைகளை அடிப்படையாகக் கொண்டிருப்பது புலனாம்.
நாகரிகம் வளர வளர, நாட்டு மக்களிடையே புதுப் புதுப் பொருள்கள் இடம் பெறும். அப் புதுப் பொருள்களைக் குறிக்க வழங்கும் புதுப் புதுச்சொற்கள், அம் மக்கள் மொழியில் இடம் பெறுவதும் நிகழும். மேலும் காலம் செல்லச் செல்லப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களும், பல்வேறு மொழி வழங்கும் மக்களும், பல்வேறு சமயங்களைச் சேர்ந்த மக்களும், பல்வேறு பழக்க வழக்கங்களையுடைய மக்களும் ஒன்று கலந்து வாழ்வர். அம் மக்களின் பழக்க வழக்கங்களும், அம் மக்களின் மொழிகளைச் சேர்ந்த சொற்களும், அம் மக்களின் சமயக் கொள்கைகளும் ஒன்றில் ஒன்று கலந்து போவதுண்டு. அவ்வாறு கலந்த அக் கலவைக்
காட்சிகள் ஒவ்வொருவர் இலக்கியத்திலும் இடம் பெறுவதும் இயல்பாம். அதைத் தடை செய்தல் இயலாது. வேண்டுமானால், அப் பொருள்களையும், அப் பொருள்களைக் குறிக்கும் பிற மொழிச் சொற்களையும், அம் மக்களின் கொள்கைகளையும் தம் மொழிக்கும் தம் பண்பாட்டிற்கும் ஏற்பத் திருத்தி மேற்கொள்வதையே செய்தல் இயலும்; அவற்றை அறவே விடுத்து வாழ்தல் இயலாது.
புதிய பொருள்களும், புதிய சொற்களும், புதிய பழக்க வழக்கங்களும் ஒருபால் இடம் பெற, தேவையற்றுப் போன பொருள்களும், அவற்றைக் குறிக்க வழங்கும் சொற்களும், பழக்க வழக்கங்களும் ஒருபால் வழக்கற்றுப் போதலும் நிகழும். உலகிய லுக்கும், உலகில் வழங்கும் இலக்கியங்கட்கும் உள்ள இவ்வுறவு முறையினை உணர்ந்தன்றோ,
“பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே”
என்ற விதி வகுப்பாராயினர் இலக்கண ஆசிரியர்கள்.
ஒரு மொழியில், பல்வேறு காலங்களில் தோன்றிய இலக்கியங்களை நோக்கின், பழையன கழிதலும், புதியன புகுதலும் ஆகிய இப்பண்பு இடம் பெற்றிருத் தலை உணரலாம். இவ்வாறு பழையன கழிந்து, புதியன புகுந்து தோன்றுவதையே, ஒரு சாரார் இலக்கிய வளர்ச்சி எனக் கொள்வர். பழையன எல்லாம் பழிக்கத் தக்கன; புதியன எல்லாம் போற்றற்குரியன என் எவரும்
எண்ணுதல் கூடாது. அவ்வாறே, பழையன எல்லாம் பாராட்டற்குரியன; புதியன எல்லாம் பழித்தற்குரியன என்று எண்ணுதல் கூடாது. இரு திறத்தாரும் பிழையுடையாரே யாவர். பாராட்டற்குரியனவும், பழித்தற்குரியனவுமாய பண்புகள், பழையன புதியன ஆக இரண்டிலும் உள. ஆகவே, இலக்கியங்கள் தோன்றிய கால நிலை கண்டு, அவற்றைப் பாராட்டுவதும் பழிப்பதும் செய்யாது, அவ்விலக்கி யங்கள் போற்றும் பொருள் நிலைகண்டு, அப்பொருள் களை அவை உணர்த்தும் நெறிமுறை கண்டே, அவற்றிற்கு உயர்வு தாழ்வு கற்பித்தல் வேண்டும்.
இலக்கியங்கட்கும் அவ்விலக்கியங்கள் தோன்றிய காலங்கட்கும் உள்ள தொடர்பு இஃதாகவே, ஓர் இலக்கியத்தின் உண்மை இயல்பினை உள்ளவாறு உணர்ந்து மதிப்பிடல், அவ்விலக்கியம் தோன்றிய காலத்தின் சூழ்நிலையினை உணர்ந்தார்க்கல்லது இயலாது. ஆகவே, செங்கோலாட்சி புரிந்து இறவாப் புகழ் பெற்று விளங்கிய மூவேந்தர் ஆட்சிக் காலம் முதலாகத் தமிழ் நாட்டில் தோன்றி வழங்கும் இலக்கியங்களின் இயல்புகளை, அவை தோன்றிய காலங்களின் சூழ்நிலையோடு ஒருங்கு கண்டுணர்தலே சிறப்புடைத்தாம்.