6 கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
சோழன் கரிகாலன் முன்னோர், காற்றின் இயல்பறிந்து கடலில் கலம் ஒட்டக் கற்றிருந்தனர். கரிகாலன், கலம் செலுத்திக் கடல் கடந்து சென்று, ஈழநாட்டை வென்றான். இமயவரம்பன் நெடுஞ்சேர லாதன் கடலிடையே வாழ்ந்து நெருக்கித் திரிந்த கடம்பு மரக் காவலரை வென்று அழித்தான். பழந்தமிழ்ப் பாண்டியன் ஒருவன் உரோம் நாட்டு அரசன் அவைக்கு அரசியல் தூதுவனை அனுப்பியிருந்தான். பண்டைத் தமிழர்கள், மேற்கே எகிப்து, கிரீக், உரோம் முதலாம் நாடுகளோடு வாணிக உறவு மேற் கொண்டிருந்தனர். கிழக்கே சுமத்ரா, ஜாவா, சீனம் முதலாம் நாடுகட்கும் வாணிகம் கருதிச் சென்று வந்தனர். தமிழ் நாட்டுக் கடற்கரைப் பட்டினங்களில் வந்திருந்த யவனர் முதலாம் பிற நாட்டு மக்கள் எண்ணற்றவராவர். இவ்வாறெல்லாம் பழந்தமிழ் நூல்கள் பகரும் சான்றுகளால், கடலில் கலம் செலுத்தி வாழும் வாழ்க்கையினைப் பழந்தமிழ் மக்கள் பண்டே மேற்கொண்டிருந்தனர் என்பது உறுதியாம்.
இவ்வாறு, வெற்றி குறித்தும், வாணிகம் கருதியும் கடல் கடந்து செல்லுங்கால் இடைவழியில் கலம் சில கவிழ்ந்து போதலும், அவற்றில் சென்ற மக்கள் ஆண்டே ஆழ்ந்து அழிந்து போதலும் உண்டு. கடலிடையே கலம் கவிழ்ந்த காட்சிகளைத் தம் பாட்டிடை வைத்துப் பாராட்டிய புலவர்களும் உளர்.
அத்தகைய கடற்செலவு ஒன்றில், கலங் கவிழ, அழிந்துபோன அரசருள் இவ்வழுதியும் ஒருவனாவன். ஆதன், இரும்பொறை, குட்டுவன் எனும் பெயர்கள் சேரரைக் குறிக்கவும், கிள்ளி, சென்னி, வளவன் எனும் பெயர்கள் சோழரைக் குறிக்கவும் வழங்குவதேபோல், செழியன், மாறன், வழுதி எனும் பெயர்கள் பாண்டியரைக் குறிக்க வழங்கும். ஆகவே, வழுதி எனும் பெயருடைய இவன், பாண்டியர் குடியில் பிறந்தவனாவன் எனத் தெரிகிறது. பாண்டியர் குடியிற்பிறந்து, கடலில் கலங் கவிழ மாண்டு மறைந்து போனமையால், “கடலுள் மாய்ந்த வழுதி” என அழைக்கப் பெற்ற இவன், இளமைக் காலத்திலேயே கற்பன எல்லாம் கற்றுக் கல்விக் கருவூலமாய், பேரருள் பெற்ற பெரியார்களும் பாராட்டத் தக்க அறிவுக் களஞ்சியமாய் விளங்கினமையால், அக்கால மக்கள், அவன் ஆண்டின் இளமையும், அறிவின் பெருமையும் ஒருங்கே தோன்றுமாறு கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி எனப் பெயரிட்டு அழைத்தனர்.
பண்டு, கண்ணிற் கண்ட உயிர்களைக் கொன்று தின்னும் கொடுமையே நிறைந்த மக்களைக்
கொண்டிருந்த உலகம், இன்று ஒன்று கூடி உள்ளம் கலந்து, அன்பு காட்டி வாழும் மக்களைப் பெற்றுக் காட்சியளிக்கிறது; அந்நல் வாழ்வு மேலும் மேலும் வளர்தல் வேண்டும்; உலக மக்கள் இறவா இன்ப நெறி பற்றி வாழ்தல் வேண்டும் என எண்ணிய பெரியார் களுள் நம் பெருவழுதியும் ஒருவன். பெருவழுதி அவ்வாறு எண்ணியதோடு நில்லாது, உலகின் நிலை இது அவ்வுலகிற்கும் பெரியார்க்கும் உள்ள தொடர்பு இது அப்பெரியாரின் இயல்பு இது எனக் கூறுவான் போல், எல்லாரும் பெருமை உடையவராகுங்கள், பெருமை உடையவராகி உலகியல் வாழ உறுதுணை புரியுங்கள் என உலக மக்கட்கு ஒர் அரிய அறவுரை அளித்துள்ளான்.
உலகம் தோன்றிய நாள் முதலாக, இன்று வரை அவ்வுலகில் பிறந்து வாழ்ந்து இறந்த உயிர்களை எண்ணிக் காணல் எவர்க்கும் இயலாது. எத்தனையோ உயிர்கள் தோன்றின; எத்தனையோ உயிர்கள் மறைந்தன. பிறந்து இறந்த மக்கள் எத்துணையரோ! இவ்வாறு, பலகோடி உயிர்கள், பலகாலும் பிறந்து பிறந்து அழியவும், அவ்வுயிர்கள் பிறந்து இறத்தற்கு நிலைக்களமாய இவ்வுலகியல் மட்டும் மறையாது தொன்று தொட்டே வாழ்ந்து வருகிறது. உயிர்கள் அழிய, உலகியல் அழியாது இருப்பது எவ்வாறு? அதை அழியாவண்ணம் நின்று காப்பார் யாவர்? அதன் அழியாமைக்குக் காரணமாயது எது?
“நல்லார் ஒருவர் உளரேல், அவர் பொருட்டு, எல்லார்க்கும் பெய்யும் மழை,” என்ப. உலகியல்
அழியாது இயங்குவது, உலகில் பண்புடைப் பெரியார்கள், நல்ல பல குணங்களான் நிறைந்த ஆன்றோர்கள், அவ்வப்போது தோன்றித் தோன்றி, மறம் அழித்து, அறம் வளர்த்து வந்தமையினாலேயே ஆகும்.
உலகியல் அழிவுறாவண்ணம், அரணாய் அமைந்து காக்கவல்ல அச்சான்றோர் யாவர்? அவர் பண்பு யாது? அவர்பால் காணலாம் அருங்குணங்கள் யாவை? இல்லிருந்து நல்லறமாற்றுதல், வருவிருந் தோம்பி வாழ்வதற்கேயாகும். விருந்தினர் வயிற்றுப் பசியால் வருந்தியிருக்க, வயிறார உண்பான் வாழ்க்கை வனப்புடையதாகாது. வளம் கெட்டு அழியும். ஆதலின், அவ்விருந்தினரை உண்பித்தன்றித் தாம் உண்டல் கூடாது. உண்ணும் உணவு கிடைத்தற்கு அரியதாய், ஒருவர்க்கே போதுமானதாயினும், அதையும், அவரோடு இருந்து பகிர்ந்துண்டலல்லது, தாமே தனித்துண்டல் தகாது. இந்தப் பண்பினைத் தலைமை சால் பண்பாகக் கொண்டு போற்றுவார் யாரோ அவரே பெருமையுடையவர்.
தினை விதைத்தால் தினை விளையும். ஆகவே, தினை வேண்டுவோர் தினையே விதைத்தல் வேண்டும். தன்பால் யாவரும் அன்பு காட்ட வேண்டும் என்று விரும்புவான், எல்லாரிடத்தும் தான் அன்பு காட்டுதல் வேண்டும். மாறாகப் பிறர்பால் வெறுப்புக் காட்டின், அவரும் அவனை வெறுப்பார். ஆகவே, எவரையும், எப்பொருளையும் வெறுக்காது விழைவு காட்டும் பண்பு, பெரியோர்க்கு மிக மிக வேண்டுவதாம்.
அஞ்ச வேண்டிய பழிபாவங்களைக் கண்டு அஞ்சாமை அறிவுடைமையாகாது. ஆகவே, அறமல்லாச் செயல் கண்டு அஞ்சும் உள்ளம், அவ்வான்றோர்க்கு இன்றியமையாது வேண்டும். உலக வாழ்விற்கும், தாழ்விற்கும் தம் வாழ்வு தாழ்வுகளையே காரணமாக உடையார் பெரியர். அன்னார் ஊக்கம் குன்றி, உறக்கம் கொண்டு விடுவராயின், உலகம் அழியும். ஆகவே, அவ்வான்றோர்பால், மடியும் சோம்பலும் நில்லாது மடிதல் வேண்டும்.
உயிர், பொருள், புகழ், பழி இவற்றுள் உயிரும் பொருளும் அழியும் தன்மைய நிலையா இயல் புடையன. புகழும் பழியும் அழியா இயல்புடையன; நிலைபேறுடையன. அழிவன கொடுத்து அழியாதன பெறுதலே அறிவுடைமை. ஆகவே நிலையற்ற உயிர் கொடுத்து, நிலைபேறுடைய புகழ் பெறுதலைப் பேண வேண்டும். அதுவே அறிந்தார் செயலாம்; அவர் அறிவிற்கு அழகு தருவதாம். நிற்க. அழியாத் தன்மை யுடைமையால் பழியும் புகழும் ஒத்த இயல்பினவே என்றாலும், பழி பாராட்டத்தக்க பண்புடையதன்று: பேணத்தக்க பெருமையுடையதன்று. ஆகவே, அதைப் பெறுதல் பெரியார் செயலாகாது. அதிலும் நிலையற்ற பொருளிற்காக, உலகம் உள்ளளவும் அழியாது நிலை பெற்று நிற்கும் பழியை மேற் கொள்ளுதல், அறிவின்மை யினும் அறிவின்மையாம். அஃது ஆன்றோர் அறமாகாது. – –
பிறர் உழைக்கத் தான் பயன் துய்த்தல் அறநெறி யாகாது. உழுது உழைத்து ஊரார்க்கு உணவளித்து உழவெருதே போல், தான் உழைத்துப் பிறரைப் பேணலே பேராண்மையும் பேரறமும் ஆம்.
“பல்லார் பயன்துய்க்கத் தான்வருந்தி வாழ்தலே
நல்லாண் மகற்குக் கடன்.”
ஆகவே, மக்கள் ஒவ்வொருவரும், தமக்கென வாழாது, பிறர்க்கென வாழும் பேருள்ளம் உடையராதல் வேண்டும்.
ஈண்டுக் கூறிய ஒவ்வொன்றும் மிக உயர்ந்த உண்மையாம். அவற்றுள் ஒன்றையோ, ஒரு சிலவற்றையோ உடையோராகாது, அவை அனைத் தினையும் ஒருங்கே கொண்ட உரவோர், உலகோர் போற்றும் உயர்ந்தோராவர். அத்தகைய உயர்ந்தோர் வாழ்வதனாலேயே உலகியல் அழியாது உயிர்பெற்று இயங்குகிறது! இந்த அரிய அறவுரையினை, அழகிய செய்யுள் வடிவில் அமைத்து ஆக்கித் தந்துள்ளான், கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி. கடலுள் மாய்ந்தும், கருத்தில் மாயாத அவன் உரைத்த அறம் வாழ்க! வளர்க!