="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

4 அறிவுடை நம்பி

3
அறிவுடை நம்பி

பாண்டிய நாடு முத்துடைத்து என்ற பெருமைக்குரிய பெருநாடு. சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த பெருமையும் அந்நாட்டிற்கே உரித்து. அந்நாடாண்ட பாண்டிய மன்னர் பலராவர். அவருள் அறிவுடை நம்பி என்பானும் ஒருவன். அறிவுடை நம்பி, கற்க வேண்டிய அறிவு நூல்களை யெல்லாம் பிழையறக் கற்ற பேரறிவுடையான். கற்றதோடு அமையாது, கற்றுவல்ல பெரியோர்களைப் பேணி, அவர் உரைக்கும் அறிவுரைகளைப் பலகாலும் கேட்டுக் கேட்டுப் பெற்ற கேள்விச் செல்வமும் உடையவன். அவன் அரசவை இருந்து, அவனுக்கு அறம் உரைத்து வந்தார் பலராவர். அவனுக்கு அவர் உரைத்த அறங்களோ மிகப் பலவாம்.

அவ்வாறு, அவன் அரசவை இருந்து அறம் உரைத்தாருள் ஒருவர் பிசிராந்தையார். பாண்டி நாட்டில் உள்ள பிசிர் என்னும் ஊரிற் பிறந்தவர்; ஆந்தை எனும் இயற்பெயருடையவர்; பெரும் புலவர். அரசன் அவைக்கு நாள்தோறும் சென்று, அவனுக்கு அறவழி காட்டிவரும் அவர் அவனுக்கு உரைத்த
அறவுரை பலவற்றுள்ளும், அரசன் ஒருவன் அவன் குடிகளிடத்தில் வரி வாங்கும் வகை குறித்துக் கூறிய அறவுரை அருமையும் பெருமையும் வாய்ந்த அறிவுரையாகும்.

“நெல் விளையும் நிலம், மா எனும் அளவினதாகி நனிமிகச் சிறிதாயினும், அச்சிறு நிலத்தையும் நன்கு பயிரிட்டு, அது தரும் நெல்லைப் பேணி வைத்து, நாளொன்றிற்கு இவ்வளவு என முறை வகுத்துக் கொண்டு பங்கிட்டுத் தரின், அச்சிறு நிலத்தில் விளைந்த சில நெல்லே, ஒரு யானையின் பல நாள் உணவாய் அதன் பசி போக்கத் துணை புரியும். ஆனால், அளந்து காண இயலாது, பயிர்வேலி எனக் கூறத்தக்க பரந்த நிலத்தில் நெற் பயிரை விளைவித்துவிட்டு, அது நன்கு வளர்ந்து நிற்கும் காலத்தில் அப் பயிரினிடையே யானையொன்றை அவிழ்த்துவிட்டு, அது தன் விருப்பம்போல் உண்ணுமாறு செய்து விடின், பல யானைகளுக்குப் பல ஆண்டுகட்கு உணவாகப் பயன் அளிக்கவல்ல அப்பரந்த நிலத்தின் நெற்பயிரெல்லாம், ஒரே நாளில் ஒரே நாழிகையில் பாழாகிவிடும். யானையின் வாயுட் புகுந்து உணவாகிப் பயன்படும் நெல்லிலும் அதன் காற்கீழ்ப் பட்டுப் பாழாகும் நெல் நனிமிகப் பலவாம். அதைப் போலவே, நாடாளும் அரசர், அரசியல் அறிவுடையராகித் தம் குடிகளின் பொருள் நிலை அறிந்து, எவ்வளவு பொருள்களை அவர்களால் தர இயலும், அப் பொருள்களை அவர் வருந்தாவாறு பெறுவது எவ்வாறு என்பனவற்றை
எண்ணிப் பார்த்து, ‘ஆறில் ஒன்று’ என்பதுபோல் ஒரு வரையறை வகுத்துக் கொண்டு, அவ்வொழுங்கு முறையில் பிறழாது, வரி வாங்குவாராயின், நாட்டு மக்கள், அரசர்க்குத் தாம் தர வேண்டிய வரிகளைத் தவறாது தருவர்; தந்து தாமும் வாழ்வர்; தம் அரசர்க்கும் வாழ்வளிப்பர். இவ்வாறன்றி, அரசர் தாமும் கொடுங்கோலராய்க், குடிமக்களிடம் உள்ள எல்லாப் பொருள்களையும் தமக்குப் பொருள் வேண்டும் போதெல்லாம், அக் குடிகள் அழ அழக் கொள்ளையடித்து வாழ்வதே கோமகன் செயலாம் என, வரி பல வாங்குவதை வழக்கமாகக் கொள்வராயின், அந்நாட்டுக் குடிகள், வரிச் சுமை தாங்க மாட்டாது வருந்துவர். ஆகவே, மக்கள் நிலை அறிந்து, அவர் அளிக்கத் தக்கன பெற்று வாழ்வதே பேரரசாம்; பெருமைசால் நல்லரசாம்.” அறிவுடை நம்பிக்குப் பிசிராந்தையார் அளித்த அரசியல் அறிவு இது. அறிவுடை நம்பி கேட்ட அரசியல் அறங்கள் இவைபோல் எண்ணற்றனவாம்.

அறிவுடை நம்பி அறநூல்கள் பல கற்றதோடும், அறிவுரைகள் பல கேட்டதோடும் நின்றானல்லன். ‘கற்றபின் நிற்க அதற்குத் தக’ என ஒதியதற்கிணங்க, கற்ற நூல்களும், கேட்ட அறவுரைகளும் அறிவித்த வழியே வாழ்ந்து வழிகாட்டியாக விளங்கினான். ஆடவர்க்கு அமைய வேண்டிய அருங்குணங்கள் பலவும் அவன்பால் அமைந்து கிடந்தன. இவ்வாறு, அவன் பேரறிவும் பெருங்குணமும் பெற்று வாழ்ந்தமையால்,
அவன் கால மக்கள், அவனுக்கு அறிவுடை நம்பி என்ற அழகிய பெயரளித்துப் போற்றினர். இறுதியில், அவன் பெற்றோர் அவனுக்கு இளமையில் இட்டு வழங்கிய இயற்பெயர் மறைந்து போக, மக்கள் அளித்த அம் மாண்புடைப் பெயரே, அவன் பெயராய் வழங்கலாயிற்று.

அறிவுடை நம்பி ஆண்ட நாடு அமைதி நிலவும் நல்லாட்சியுடைய நன்னாடாம் என அக்காலப் பெரியோர் பலர் பாராட்டியுள்ளனர். அவன் நாடு வளம் பல நிறைந்திருந்தது; அதனால், வறுமை அவன் நாட்டில் வாழமாட்டாது மறைந்து போயிற்று. வறுமை இன்மையால், மக்கள் வயிறார உண்டு பசியறியாப் பெருவாழ்வுடையராயினர். வயிற்றில் பசித் தீ இன்மையால், மக்கள் ஒருவரோடொருவர் பகைத்து வாழ்வதை அறியாராயினர். பகையில்லாமையால், அது காரணமாகத் தோன்றும் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் முதலாம் கொடுமைகளும், அக்கொடுங் குணங்களையுடையாரும் அவன் நாட்டில் இலராயினர். இவற்றிற்கு மாறாக அன்பும், அருளும், அறமும், ஒழுக்கமும் அங்கு நிலவின. அவன் நாட்டு மக்கள் அனைவரும் அக் குணங்களால் நிறைந்த ஆன்றோராயினர். நாடு செல்வத்தால் செழித்துச் சிறப்புற்றதோடு, அறிவுடை நம்பியும், அறமல்லன. எண்ணாது ஆண்டான். அந்நாட்டிற்குத் தன் அண்டை நாடுகளால் அழிவு நேராவண்ணம் நின்று காக்கும் ஆண்மையும் உடையவனாயினான். அதனால்,
பகைவரால் உண்டாம் தீங்கும் அவன் நாட்டார்க்கு இல்லையாயிற்று. எனவே, அவன் நாட்டில், எங்கும், எக்காலத்தும் அமைதியே நிலவிற்று. அவன் நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் அமைதி நிலவிற்று. வீட்டில் உள்ளார் அனைவரும் ஒத்த உளம் உடைய ராயினர். ஒருவர் எண்ணுமாறே ஏனையோரும் எண்ணுவராயினர். அவரவர், அவரவர் கடன் அறிந்து வாழத்தொடங்கினர். மனைவியர் மனைமாண்புகளால் மாட்சிமையுற்று விளங்கினர். மக்கள் மனையறத்தின் நன்கலங்களாய்த் திகழ்ந்தனர். இதனால், அவன் நாட்டில், மக்கள் தம் மனத்தில் கவலையில்லாது வாழ்ந்தனர். கவலையற்ற அவர்கள், பிணியற்றவ ராயினர். பிணியற்ற வாழ்வுடைமையால், ஆண்டு முதிர்ந்த பெரியோர்களும் ஆற்றல் மிக்க இளைஞர்கள் போல் காட்சியளித்தனர். மக்கள் நரை திரை பெறா நல்லுடல் பெற்று நீண்ட பெருவாழ்வுடையராய் விளங்கினர். அறிவுடை நம்பியின் அரச அவைக்கு நாள்தோறும் சென்று நல்லறம் உரைத்து வாழும் இயல்பினராய பிசிராந்தையாரே அவன் நல்லாட்சி யின் இந்நனி சிறப்பினைத் தாம் பாடிய பாட்டொன்றில் நாவாரப் பாராட்டியுள்ளார்.

இவ்வாறு அறிவன அறிந்தும், ஆன்றோர் காட்டிய அறவழி நின்றும் நாடாண்ட நம்பி, அறநெறிகளைத் தான் மட்டும் அறிந்திருப்பது போதாது; அவற்றைத் தன் ஆட்சியின் கீழ் வாழும் குடிமக்கள் அனைவரும் அறிந்திருத்தல் வேண்டும்; அவர்களும் அறம் நிறைந்த
உள்ளத்தவராதல் வேண்டும்; அது தன் ஆட்சிக்குப் பெருந்துணையாம் என எண்ணினான். எண்ணிய தோடு நின்றானல்லன்; அவர்க்கு அறம் பல உரைத்தற்கு ஆவன மேற்கொண்டான்; அறம் உரைக்கும் அப்பணியினை அறிவுடை நம்பி, பிறர்பால் ஒப்படைத்தானல்லன். அதைத் தானே மேற் கொண்டான். அவ்வாறு அவன் உரைத்த அறங்கள் அளவிறந்தனவாம். அவை இலக்கியத்தில் இடம் பெற்றுச் சிறப்புடன் திகழ்கின்றன. அவற்றுள் ஒன்று, மக்கள் பேற்றின் மாண்புபற்றி அவன் உரைத்ததாகும்.

மக்கட் பேற்றின் மாண்பினை உணர்ந்தவர் பழங்கால மக்கள். கருத்தறிந்த கணவனும், மனையற மாட்சிமிக்க மனைவியும் கூடி நடாத்தும் இல்லறத்திற்கு நல்ல அணிகலனாய் அமைந்து, அழகு தருவது நன்மக்கட் பேறே என்றார் ஆன்றோர் ஒருவர். அறிவறிந்த மக்கட்பேறல்லாது, பொருள், புகழ் முதலாம் பிற பேறுகள் உண்மைப் பேறுகள் ஆகா. ஆகவே தன் பொருள் என்று, தாம் பெற்ற மக்களையே மதிப்பர் மாண்புடையோர். மக்களைப் பெறாத வாழ்வு மாண்புடைய வாழ்வாகாது; மக்கள்தம் மழலை மொழி கேட்டு மகிழாதார் மக்கட் பண்புடையராகார். கொடுவாள் பிடித்துக் கொலைத் தொழில் மேற்கொண்ட கொடியோனையும் குழைவிக்கும் ஆற்றல் குழந்தைகட்கு உண்டு. அவர் அன்பு முகம் கண்டு மகிழாதார், அவர் அழுகுரல் கேட்டு உள்ளம் அசையாதார் உலகத்தில் இலர் பற்றறத் துறந்த
முனிவரும் மக்கள்பால் மாறா அன்பு காட்டுவர். அம் மக்களைப் பெறுதற்கு உலகோர் மேற்கொள்ளும் அறநெறிகள், அம்மம்ம ! நம்மால் எண்ணிக் காணமாட்டா அத்துணைப் பலவாம்.

“மக்கட்பேறு மாநிதிப் பேற்றினும் மாண் புடைத்து! மக்களைப் பெறாதார் மாண்புடையராகர், ஆகவே மக்களைப் பெறாமுன் மாண்டு மறைந்து போகாதீர்; போர்க்களம் புகும் வீரருள் மக்கட் பேறிலாதார் யாரேனும் இருப்பின், படைத் தலைவர்காள்! அவர்களைப் போர்க்களம் போக்கன் மின்,” எனப் பறையறைந்து மக்கட் பேற்றினைப் போற்றினர் அக்கால அரசர்கள். பகைத்துப் படைகொண்டு புகும் பகையரசனும், “பகைவர்காள்! தும்மிடையே மகப் பெறாதார் உளரேல், எம் படைக்கலம் வந்து பாய்வதன் முன்னர்க் களம் விட்டு அகலுங்கள்.

     பொன்போற் புதல்வர் பெறாஅ தீரும்
     எம்அம்பு கடிவிடுதும், நும்அரண் சேர்மின்,”

எனக் கூறி, அவரை அழிக்காது விடுத்தனன் என்றால், அக்கால அரசர்கள் மக்கள் பேற்றினை எத்துணை இன்றியமையாததாகக் கருதினர் என நோக்குங்கள்.

மக்கட் பேற்றின் மாண்பினை, அக்கால அரசர்கள் அறிந்திருந்ததைப் போன்றே, அறிவுடை நம்பியும் அறிந்திருந்தான். அதைத் தான் அறிந்ததோடு நின்றானல்லன். தன் நாட்டு மக்கள் எல்லாரும் அதை
அறிதல் வேண்டும் அறிந்து அதன் வழி நடக்க வேண்டும் என விரும்பினான். உடனே தன் நாட்டு மக்களிடையே சென்றான். “அறிவாண்மையற்று, மதிக்கத்தக்க மாண்பிலாதாரையும், மதிக்கச் செய்யும் பேராற்றல் வாய்ந்தது பொருள் என்றும், மணந்து மனையறம் மேற்கொள்ளும் இல்லற வாழ்க்கை விருந்தினரை வரவேற்று, அவருக்கு அன்போடு அறுசுவை உணவளித்துப் போற்றுவதனாலேயே பொலிவுறும் என்றும் கூறுவர் பெரியோர்; அவ்வாறே கோடி கோடியளவான பொருளைக் குவித்து வைத்து, நாள்தோறும் விருந்தினர் பலரோடு இருந்து உண்ணும் பெருவாழ்வு பெற்ற பேறுடையான் ஒருவனுக்கு, மக்கட் பேறு இல்லையாயின், அவன் பெற்ற பெரும் பொருளும், பெருவாழ்வும் பயனுடையவாகா. அத்தகையான் வாழ்வு பெரு வாழ்வு எனப் போற்றப்படுவதில்லை; பயனிலா வாழ்வு என்றே பழிக்கப்பெறும்,” என அம்மக்கட்பேற்றின் மாண்பினை, அவர் உணரும்வகை எடுத்து உரைத்தான்.

“பெற்ற தம் மக்கள், பையப் பைய அடியெடுத்து வைத்துக் குறுகக் குறுக நடந்து சென்று, சிறிய தம் கைகளை உண்ணும் கலத்துள் இட்டு, உணவை எடுத்துத் தரையில் இட்டும், அவ்வுணவினைத் தாமே தோண்டித் தோண்டிப் பிசைந்தும், தம் வாயிலிட்டுக் கவ்வியும், மறுவலும் கலத்திலிட்டுத் துழாவியும், மீண்டும் வழித்தெடுத்துத் தம் உடலெலாம் பூசிக் கொண்டும் நிற்பதைக் கண்டு பேரின்பம் கொள்ளாத
பெற்றோரும் உளரோ? அம் மக்கள் தம் அழகால், அவர்தம் ஆடலால், அவர்தம் மழலையால் மனம் மகிழ்ந்து அம்மகிழ்ச்சியின் மிகுதியால் அறிவு மயங்காப் பெற்றோரும் உளரோ?” எனக்கூறி, மக்கட் பேற்றின் மட்டிலா மகிழ்ச்சியினையும் அவர்க்கு அறிவித்தான். இவ்வாறு மக்கட் பேற்றினால் உண்டாம் மாண்பு, அதனால் அடையும் மகிழ்ச்சி ஆகியவற்றைத் தெளிவாகத் தெரிவித்து, அறிவுடை நம்பி எழுதிக் காட்டிய ஓவியம் எக்காலத்திலும் எந்நாட்டு மக்களும் போற்றும் நல்லதோர் இலக்கிய ஓவியமாய் அமைந்திருத்தலை அறிந்து அகமகிழ்வோமாக!

License

Icon for the Public Domain (No Rights Reserved) license

To the extent possible under law, manarkeni has waived all copyright and related or neighboring rights to அறிவுடை நம்பி, except where otherwise noted.

Share This Book