3 சங்க இலக்கியம்
தமிழ் மொழி, நிலநூல் வானநூல் போலும் நூல்களைப் பெரு அளவில் பெறவில்லை என்பது உண்மையே. ஆனால், பண்பாடுணர்த்தும் இலக்கிய நூல்களைப் பெறுவதில், அஃது எம் மொழிக்கும் பின் தங்கிவிடவில்லை. தமிழ் இலக்கிய நூல்கள் உயர்ந்த பண்பாடுணர்த்தும் இயல்புடைமையால் மட்டும் சிறந்தன என்பதில்லை. எண்ணிக்கையாலும் அது சிறந்ததாம்; தமிழ் இலக்கியம் கரை காணாப் பெருங்கடலுக்கு ஒப்பாம்.
தமிழ் நாட்டு மன்னர்களும், அறிஞர்களும் தமிழ் இலக்கியச் செல்வத்தைச் சங்கம் அமைத்து வளர்த்தனர். கடலால் கொள்ளப்பட்ட மதுரையிலும், கபாடபுரத்திலும், மதுரையிலும் முறையே, முதல், இடை, கடைச் சங்கங்களை அமைத்துத் தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து, அழகுடையவாக்கி வளர்த்தார்கள். அகத்தியனார், இறையனார், முருகவேள், முரஞ்சியூர் முடிநாகராயர், நிதியின் கிழவன் முதலாம் புலவர் ஐந்நூற்று நாற்பத்தொன்
பதின்மர் முதற் சங்கத்தில் இருந்தனரெனக் கூறுவர். அகத்தியனார், தொல்காப்பியனார், இருந்தையூர்க் கருங்கோழி, மோசி, வெள்ளூர்க் காப்பியன், சிறு பாண்டரங்கன், திரையன், மாறன், துவரைக் கோமான், கீரந்தை முதலாம் புலவர் ஐம்பத்தொன்பதின்மர் இடைச் சங்கத்தில் விளங்கினர் என்பர். சிறு மேதாவியர், சேந்தம், பூதனார், அறிவுடையரனார், பெருங் குன்றுார்க் கிழார், இளந்திருமாறன், நல்லந்துவனார், மருதன் இளநாகனார், நக்கீரனார் முதலாம் புலவர் நாற்பத்தொன்பதின்மர் கடைச் சங்கத்திலிருந்து தமிழ் வளர்த்தனர் என்பர்.
காய்சினவழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாகவுள்ள அரசர் எண்பத்தொன்பதின்மர் தலைச் சங்கப் புலவர்களையும், வெண்டேர்ச்செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாகவுள்ள அரசர் ஐம்பத்தொன்பதின்மர் இடைச் சங்கப் புலவர்களையும், முடத்திருமாறன் முதலாக, உக்கிரப் பெருவழுதி ஈறாக உள்ள அரசர் நாற்பத்தொன்பதின்மர் கடைச் சங்கப் புலவர்களையும், உணவும், உடையும், உறையுளும் அளித்துப் பேணி, அவர்கள் இலக்கியம் வளர்க்க அருந்துணை புரிந்தனர்.
தலைச் சங்கப் புலவர்கள் பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்களையும், இடைச் சங்கப் புலவர்கள் கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை யகவல் முதலிய நூல்களையும், கடைச் சங்கப் புலவர்கள் நெடுந்தொகை குறுந்தொகை,
நற்றிணை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நூற்றைம்பது கலி, எழுபது பரிபாடல், கூத்து, வரி, பேரிசை, சிற்றிசை முதலிய நூல்களையும் ஆக்கி ஆராய்ந்து, அழகிய தமிழ் வளர அருந்தொண்டு புரிந்தனர். தமிழில்க்கியச் செல்வங்களை ஆக்கியும், ஆராய்ந்தும் வளர்த்தற் பொருட்டுத் தோன்றிய சங்கங்கள் இருந்த தென் மதுரையும், கபாடபுரமும் கடல் கோள்களால் அழிவுற்றன. இக் கடல் கோள் நிகழ்ச்சியைச் சிலப்பதிகாரம் பாடிய சேரர் குல இளங்கோ,
“பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள”
எனக் குறிப்பாகக் கூறினர்.
தமிழ் வளர்த்த சங்கங்களின் நிலைக்களமாகிய நகரங்கள் இரண்டும் கடல் கோளால் அழிவுறவே, அந்நகரங்களில் இருந்த தமிழிலக்கியச் சுவடிகள் பலவும் அக்கடல் வாய்ப்பட்டு அழிந்தன. அதனால் அம்முதல், இடைச் சங்கங்களில் ஆக்கப் பெற்ற அந்நூல்களைக் காணும் நற்பேறு இக்கால மக்களுக்கு இல்லாமற் போயிற்று. அவ்வாறு அழிந்தன போக, இன்று எஞ்சி நிற்பன பத்துப் பாட்டும், எட்டுத் தொகையும் ஆய பதினெட்டு இலக்கியங்களும், தொல்காப்பியம் என்ற இலக்கணமும், திருக்குறள் போன்ற சில நூல்களுமே யாம். திருமுருகாற்றுப் படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை, பெரும் பாணாற்றுப் படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம்
என்ற பத்து இலக்கியங்களும் பத்துப்பாட்டு எனப் பெயர் பெறும் நற்றிணை, குறுந்தொகை ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்ற இவ்வெட்டு இலக்கியப் பெரு நூல்களும் எட்டுத் தொகை எனப் பெயர் பெறும். எட்டுத் தொகை, பத்துப்பாட்டு என்ற இவ்வரிசைக்கண் வந்த நூல்கள் மட்டும் நானூற்று அறுபத்தெண்மர்க்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள் பாடிய இரண்டா யிரத்து நானூற்றுப் பத்துப் பாக்களைக் கொண்டுள்ளன.
மக்கள்பால் கிடந்து மாண்பு தரும் பண்பாடு களைப் பார்த்துப் பாராட்டி, அப்பண்பாடுகளைப் பிற நாட்டாரும், பிற்காலத்தில் வாழ்வாரும் அறிந்து மேற்கொள்ளுதல் வேண்டும் என்ற வேட்கையின் விளைவால், பாட்டிடை அமைத்து இசைப்பனவே இலக்கியங்களாம். ஆதலின், சங்க கால இலக்கிய வளர்ச்சியின் இயல்புகளை ஆராய்ந்து காண்பதன் முன்னர், அவ்விலக்கியம் தோன்றற்காம் வாழ்க்கை யினை மேற்கொண்டு வாழ்ந்த பழந்தமிழ் மக்களின் பண்பாட்டியல்பினை ஆராய்ந்து காண்பதே அமைவுடைத்து. ஆகவே, இலக்கிய வளர்ச்சியின் இயல்புகளை, அவ்விலக்கியச் செல்வங்கள் எழுவதற்குக் காரணமாய மக்களின் மாண்புகளோடு ஒருங்கு வைத்து ஆராய்தலை மேற்கொள்ளுவோமாக.
சங்க காலம், தமிழக வாழ்வில் தலை சிறந்த காலம். தமிழ் நாட்டு வாணிகம், தமிழகத்தோடு
நில்லாது, கடல் கடந்த நாடுகளிலும் சென்று பரவித் தமிழகத்து வளத்தை, வாழ்வை வனப்புடையதாக்கிய காலம். சோழ நாட்டுப் புகாரிலும், பாண்டிய நாட்டுக் கொற்கையிலும், சேர நாட்டு முசிறியிலும் வாணிகம் கருதி வந்த யவனர் முதலாம் பிற நாட்டு மக்கள் பெருந்திரளாக வாழ்ந்த காலம்.
தமிழ் நாட்டு அரசர்கள், தமிழகத்தின் பெருமை யினைப் பிற நாட்டாரும் உணருமாறு வெற்றி கண்டு வாழ்ந்த காலம் சேரருள் சிறந்த செங்குட்டுவனும், சோழருள் சிறந்த கரிகாற் பெருவளத்தானும், பாண்டியருள் சிறந்த நெடுஞ்செழியனும் ஆட்சி புரிந்த காலம் அது. தமிழ் வேந்தர் கொண்டாடிய விழாவிற்கு இலங்கைவாழ் அரசன் கயவாகுவும், வடநாடு வாழ் நூற்றுவர் கன்னரும் வந்து சிறப்பித்த வளமார் காலம். காவிரியில் கரிகாலன் கட்டிய கரையாலும், கல்லணையாலும், “சோழ வளநாடு சோறுடைத்து” என்ற சொல் பிறக்க வளம் பெருகிய காலம். ஆட்சி நலமும், அரும் பொருள் வளமும், வேலி ஆயிரமாக விளைந்த விளைவுச் சிறப்பும் பெற்றமையால், மக்கள் பசியும், அது காரணமாய்ப் பிணியும், அது காரணமாய்ப் பகையும் அற்று வாழ்ந்த காலம். அன்பும் ஆண்மையும், அருளும் ஆற்றலும், காதலும் கடமையும், உரனும் உடையார் பேரொழுக்கமும் உடையராய் வாழ்ந்த வனப்புமிக்க காலம். ஆன்றவிந்தடங்கிய சான்றோர் பலர், அரசனும், அவன்கீழ் வாழ் மக்களும் அறவழி நடவாது, மறவழி செல்லாது வாழ்வதற்காய
அறிவுரை பல வழங்கி, வழிகாட்டிகளாய் வாழ்ந்த காலம்.
கண்ணாரக் கண்ட காட்சிகளும், காதாரக் கேட்ட நிகழ்ச்சிகளும், அவற்றைக் கண்டதாலும், கேட்டதாலும் எழுந்த உணர்ச்சிகளுமே, கருத்து நிறைந்த கவிகளாக வெளிப்படும். ஆதலின், அன்று பாடிய புலவர்கள் எல்லாரும், தம் பாடற் பொருளாகத் தமிழகக் காட்சிகளையும், நிகழ்ச்சிகளையுமே மேற் கொண்டனர். அதனால், அன்று தோன்றிய தமிழ்ப் பாக்கள் தாயன்பு, தந்தை கடன், கன்னியர் கற்பு, காளையர் கடமை, அரசர் செங்கோல், அமைச்சர் நல்லுரை, ஆன்றோர் அறம், வீரர் வெற்றி என இவை பொருளாகவே தோன்றியுள்ளன.
வணிகர் வேளாளர் வழியிலும், குயவர் கொல்லர் குலத்திலும், மருத்துவமும், நெசவும் அறிந்தார் மனைகளிலும், மறவர், எயினர் மரபிலும் பிறந்த ஆடவர் பெண்டிர் ஆய இருபாலரிலுமாக்ப் புலவர் பலர் தோன்றித் தமிழ்ப் பாக்களைப் பாடியுள்ளனர். எஞ்ஞான்றும் புலவரொடு வாழ்ந்த புரவலரும் கல்வியறிவில் சிறந்தவர்களாகத் திகழ்ந்தனர். புலவர் கூறும் பொருளுரைகளைப் பொன்னேபோற் போற்றி வந்தனர். எனவே, தமிழ் மன்னர்கள் கல்வியின் பெருமையுணர்ந்து, அதனைப் போற்றினர். பொருளின் சிறப்புணர்ந்து, அதை நல்வழியில் ஈட்டி, அறவழியில் செலவழிக்க வேண்டுமென அறிந்திருந்தனர். மானத்தின் பெருமையினையும் அம்மானம் இழந்தவழி வாழாமையால் வரும் உயர்வையும் உணர்ந்திருந்தனர்.
சுருங்கக் கூறின் அக்கால மன்னர்கள் அறிய வேண்டுவன வெல்லாம் அறிந்திருந்தனர்.
அறிவு நலத்திற் சிறந்த தமிழ் மன்னர்கள் புலமை நலமும் சிறப்பாகப் பெற்றுப் பாவல்ல காவலராயும் திகழ்ந்தனர். அவர்கள் பல தமிழ்ப் பாக்களைப் பாடி யுள்ளனர். அப் பாக்கள் சங்க காலத் தமிழ் நூல்களில் இடம் பெற்று இறவாப் புகழுடையனவாக விளங்கு கின்றன. அம் மன்னர்களிற் சிலருடைய வரலாறு களையும், அவர்தம் பாக்களில் கூறிய விழுமிய கருத்துக்களையும் இந்நூலில் அறிந்து கொள்வோமாக.