="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

7 ஓரிஓரி

கொல்லி மலையைச் சார்ந்த நாட்டை ஆண்ட ஓரியைப் பற்றி முன்பே ஓரளவு அறிந்திருக்கிறோம் அல்லவா? அவன் வள்ளன்மையும் வீரமும் உடையவன். அவனை ஆதன் ஓரி யென்றும் சொல்வார்கள். வல்வில் ஓரி என்று அவனுக்கு ஒரு பெயர் வந்தது. ஓர் இலக்கை எய்தால் அந்த அம்பு பல பொருள்களைத் துளைத்துக்கொண்டு செல்லும்படி எய்வது அந்த வில்லாளியின் விறலைக் காட்டும். அவ்வாறு அம்பை எய்யும் வில்லை வல்வில் என்பர். இராமன் தாடகையின்மேல் எய்த அம்பு அவள் மார்பைத் துளைத்து மலையைத் துளைத்துப் பின்பு மரத்தைத் துளைத்து அப்பால் மண்ணுக்குள் சென்றது. அதனால் இராமனை வல்வில் இராமன் என்று சொல்வதுண்டு. அவ்வண்ணமே ஓரியும் அம்பு விடும் திறமையுடையவன். அவனுடைய வல்வில்லின் பெருமையை வன்பரணர் என்ற புலவர் பாடியிருக்கிறார். அந்தப் பாடலை, மலைச்சாரலில் ஓரி வேட்டையாடுவதைக் கண்ட பாணன் ஒருவன் சொல்லும் முறையிலே அமைத்திருக்கிறார்.

அந்தப் பாணன் தன் மனைவியாகிய விறலியோடும் பலவகை இசைக்கருவிகளை வாசிக்கும் சுற்றத் தோடும் தனக்கு உதவிபுரியும் கொடையாளிகளை நாடிப் போய்க் கொண்டிருந்தானாம். அப்போது அங்கே ஒரு வீரனைக் கண்டான். வீரன் மிகவும் வியக்கத் தக்க வேட்டையை ஆடிக் கொண்டிருந்தான். அவன் தன் வில்லை வளைத்து ஒரு யானையின்மேல் அம்பை எய்தான். மற்றவர்கள் எய்திருந்தால் அந்த யானையைப் புண்படுத்தி அதன் உடலிலே தங்கியிருக்கும். ஆனால் இந்த வீரன் எய்த அம்போ அந்த யானையைக் கீழே வீழ்த்தியது. அந்த யானைக்குப் பின்னாலே அதன்மேல் பாய்வதற்காக ஒரு புலி ஆவென்று வாயைத் திறந்துகொண்டு நின்றது. அம்பு புலியின் வாய்க்குள்ளே சென்று அதையும் மாய்த்து அதன் உடம்பையும் துளைத்துப் புறப்பட்டது. அங்கே நின்றிருந்த ஒரு கலைமான ஊடுருவி அதை உருட்டியது. பிறகு உரல் போன்ற தலையையுடைய காட்டுப் பன்றி ஒன்றின் உயிரை வாங்கியது. அதற்கு அப்பால் இருந்த புற்றுக்குள்ளே நுழைந்து அங்கிருந்த உடும்பைத் தொலைத்தது. இந்த வல்வில் வேட்டையைப் பார்த்துப் பாணனும் பிறரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

“இத்தனை விலங்குகளையும் ஒரேயடியாகக் கொல்லும் இவ்வீரன் யாரோ தெரியவில்லையே! இவன் கூலிக்கு வேட்டை ஆடுபவனாகத் தோன்ற வில்லை. உருவத் தோற்றத்தைப் பார்த்தால் நல்ல செல்வனென்றே தோன்றுகிறது. மார்பிலே முத்து மாலை வேறு இருக்கிறது. இவன்தான் கொல்லி மலைத் தலைவனாகிய ஓரியோ!’ என்று சிறிதே அந்தப் பாணன் சிந்தனை செய்தான்.

மற்றவர்களை அழைத்து, “நான் பாடுகிறேன்; நீங்களெல்லாம் இசைக் கருவிகளை வாசியுங்கள்” என்றான். அந்த இடத்தில் ஓர் அரிய பாடலாங்கு நிகழ்ந்தது. யாழை ஒருவன் வாசித்தான். முழவை ஒருவன் அடித்தான். பெரிய குழலை ஒருவன் ஊதினான். மற்றவர்கள் வேறு கருவிகளை வாசித்தார்கள். எல்லோருக்கும் தலைவனாக நின்று பாணன் பாடினன்; ஓரியின் பெயர் வரும் பாடலை இன்னிசையுடன் பாடினான். தன் பெயராதலால் அதைக் கேட்டு ஒரி நாணினான். “நாங்கள் எவ்வளவோ நாடுகளையெல்லாம் பார்த்துக்கொண்டு வருகிறோம். உன்னைப் போலத் திறமையையுடைய வேட்டுவன் எங்கும் இல்லை” என்று புகழ்ந்தான் பாணன். அதிகமாகப் புகழ இடம் கொடுக்காமல், தான் வேட்டையாடிய விலங்கின் ஊனைத் தந்து நிறையத் தேனையும் வழங்கினான் ஓரி. அவனே ஓரி யென்பதை அறிந்து கொண்டான் பாணன். அந்தப் பாணன் நிகழ்ந்ததையெல்லாம் சொல்வது போலப் பாடலை அமைத்திருந்தார் வன்பரணர்.

ஓரியினிடம் வரும் இசைவாணர்கள் அவன் உள்ளத்தைத் தம் இசையால் கொள்ளை கொண்டனர். அவர்களுக்கு யானைகளைப் பரிசிலாகக் கொடுத்தான். வெள்ளி நாரிலே நீல மணியினால் செய்த குவளை மலர்களைத் தொடுத்து அவர்களுக்கு வழங்கினான். பொற் பூ முதலிய பிற அணிகலன்களையும் அளித்தான்.

இசைப் புலவர்கள் அவனை நாடி வந்தால், “நீங்கள் பாடுங்கள்” என்று அவன் சொல்வதில்லை. அவர்களுக்கு அறுசுவை உண்டியை வயிறு நிரம்ப அளிப்பான். உறங்க மெத்தென்ற படுக்கையைக் கொடுப்பான். யாதொரு குறையுமின்றி அரசகுமாரர்களைப் போல அவர்கள் இன்பம் துய்ப்பார்கள். அவர்களாக மகிழ்ந்து பாடினால் அதைக் கேட்டு மகிழ்வான். “குயிலைப் பாடு என்று சொல்லிக் கேட்க முடியுமா? இளவேனில் வந்தால் மாஞ்சோலையில் அது மாந் தளிரைக் கோதி இன்புற்றுப் பாடும்போது எவ்வளவு இனிமையாக இருக்கிறது! அப்படி இசைவாணர்கள் மனம் குளிர்ந்து தாமாகவே பாடும்போது வருவது தான் இனிய பாட்டு. அதைக் கேட்பதற்கு எவ்வளவு காலமாயினும் காத்திருக்கலாம்” என்பான்.

வந்த பாணர்கள் பல காலம் வறுமையிலே வாடினவர்களாதலின் இங்கே கிடைக்கும் விருந்துணவை ஆவல் தீர உண்பார்கள்; அளவுக்கு மிஞ்சி உண்பார் கள். அதனால் உண்டான களைப்பை ஆற்றிக்கொள்வார்கள்; உறங்குவார்கள். இப்படி உண்பதும் உறங்குவதுமாகப் போது கழியுமே யொழியப் பாடுவதோ ஆடுவதோ அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. இந்த நிலையை வன்பரணர் எடுத்துக் கூறினார்.

இப்படிக் கொடையாளியாக வாழ்ந்த ஓரியின் கொல்லிக் கூற்றத்தின்மேல் கணவைத்தான் சேரமான், அதனை அறிந்து காரி படையெடுத்து வந்தான். ஓரியென்னும் தன் குதிரையில் ஏறிப் போராடினன் ஓரி, போர் செய்வதையே தம் வாழ்க்கைத் தொழிலாகவுடைய காரியின் படைவீரர்களின் முன் ஓரியின் படை நிற்க முடியவில்லை. காரியின் வாளுக்கு அவன் இரையானான். கொல்லிக் கூற்றத்து மக்கள் அவனுடைய அருங்குணங்களில் ஈடுபட்டவர்க ளாதலின் அவன் இறந்ததற்காக மிகவும் வருந்தினார்கள். வெற்றி பெற்ற காரி அந்த நாட்டின் தலைநகர் வழியே சென்ற போது ஊரில் இருந்த மக்களெல்லாம் அவனை எள்ளி இரைந்தனர். இதைப் பரணர் என்ற புலவர் ஒரு பாட்டில் சொல்லியிருக்கிறார்.

ஓரி போர்க்களத்தில் வீழ்ந்தாலும் ஏழு வள்ளல்களில் ஒருவகை இலக்கியங்களில் வீழாமல் நிற்கிறான்.

License

Icon for the Public Domain (No Rights Reserved) license

To the extent possible under law, manarkeni has waived all copyright and related or neighboring rights to ஓரி, except where otherwise noted.

Share This Book