="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

2 ஏழு வள்ளல்கள்

எழு பெரு வள்ளல்கள்

ஏழு வள்ளல்கள்

ஏழு என்ற கணக்கைக் கொண்ட பொருள்கள் பலவற்றைப் பற்றி நாம் கேள்விப் படுகிறோம். கீழ் உலகம் ஏழு, மேல் உலகம் ஏழு என்று ஒரு கணக்கு உண்டு. ஏழு முனிவர்கள் என்று சேர்த்துச் சொல்வது ஒரு வழக்கம். ஏழு தீவுகள் என்பது ஒரு வகையான கணக்கு. ஏழு சுரங்கள் சங்கீத உலகத்துக் கணக்கு. வாரத்தில் ஏழு நாட்கள் உண்டு என்பதை உலகில் உள்ள எல்லோருமே அறிவார்கள்.

தமிழ் இலக்கியங்களைப் படித்தவர்களுக்கு ஏழு வள்ளல்கள் என்றால் நன்றாகத் தெரியும், அவர்கள் மிகப் பழைய காலத்தில் வாழ்ந்தவர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வோரிடத்தில் வாழ்ந்தவர். அவர்களிடம் வேறு நல்ல குணங்கள் பல இருந்தாலும், பிறருக்குப் பொருளை அளித்து இன்புறும் பண்பிலே அவர்கள் சிறந்திருந்தார்கள். தம்மை அணுகினவர்களுக்கு வேண்டியதைக் குறிப்பறிந்து மனம் உவந்து வழங்குபவர்களை வள்ளல் என்று கூறுவார்கள். அவர்கள் தடை சிறிதும் இல்லாமல் கொடுப்பதனால் பொருளைப் பெறுகிறவர்கள் இன்பம் அடைந்தார்கள்; கொடுத்த வள்ளல்களும் கொடுப்பதனால் இன்பத்தை அடைந் தார்கள். ஒரு நாள் யாருக்கும் எதுவும் கொடுக்க முடியாதபடி நேர்ந்துவிட்டால் அன்று அவர்களுக்கு உள்ளமும் உடம்பும் வாடும் ஏதோ நோய் வந்தவர் களைப் போல இருப்பார்கள்.

கொடுக்கும் வள்ளல்களிடம் இசையிலே வல்ல பாணர்கள் வந்து இசை பாடிப் பரிசு பெறுவார்கள். கூத்தர்கள் அணுகிக் கூத்தாடி மகிழ்வித்துப் பல பொருள்களைப் பெறுவார்கள். பாட்டுப் பாடியும் ஆடியும் தம்முடைய கலைத் திறமையைக் காட்டும் பெண்களாகிய விறலியர்களும் பரிசு பெறுவதுண்டு. தடாரி என்ற தோல் கருவியை வாசித்துப் பரிசு பெறும் பொருநர் என்ற கலைஞர்களும் உண்டு. இவர்களேயன்றி வறுமையால் வருந்துவோரும் பிணியால் துன்புறுவோரும் கண்காது இல்லாமையால் உழைத்து வாழ முடியாதவர்களும் வேண்டியவற்றைப் பெற்றுச் செல்வார்கள். புலவர்கள் பாடிப் பரிசில் பெறுவார்கள். இத்தனை பேர்களுக்கும் பண்டமும் பொருளும் தந்து அவர்கள் துன்பத்தைப் போக்கும் உயர்ந்த பண்பை வள்ளல்களிடம் காணலாம். இவ்வளவு பேரும் தாம் பெற்ற நன்மையை எண்ணி மனமார வள்ளல்களை வாழ்த்துவார்கள். அவர்கள் பெற்ற பொருள்களும், அவர்கள் கூறிய வாழ்த்துக்களும் நெடுநாள் நிற்பவை அல்ல. அவர்கள் எவ்வளவுதான் மனமுருகி வாழ்த்தினாலும் அது அப்போதே காற்றோடே போய்விடும்; அவர்கள் பெற்ற பண்டமோ பொருளோ சில நாட்கள் அவர்களுக்குப் பயன்படும்; பிறகு செலவாகிவிடும். ஆகவே அந்த வள்ளல்களையோ அவர்களால் நலம் பெற்றவர்களையோ உலகம் சிலகாலம் நினைத்திருக்கும். அவர்கள் மறைந்தவுடன் அவர்கள் நினைவும் மறந்துபோகும். இவ்வாறு ஆகாமல் பிறருக்கு அளிப்பதிலே இன்பங் கண்ட பெருமக்களை உலகம் என்றும் எண்ணி வாழ்த்தும்படி செய்தார்கள் புலவர்கள். வள்ளல்களிடம் நலம் பெற்றவர்கள் பல வகையினராக இருந்தாலும், மற்றவர்கள் யாவரும் தம்முடைய வாழ்த்தையும் நன்றியறிவையும் சில காலம் சிலர் காதில் போட்டிருப்பார்கள். புலவர்களோ வள்ளல்களின் சிறப்பையும் அவர்கள் செயல்களையும் விரிவாகப் பல செய்யுட்களில் அமைத்துப் பாராட்டினார்கள். அதனால் அந்த வள்ளல்கள் மறைந்தாலும், அவர்களால் நலம் பெற்ற மக்கள் மறைந்தாலும், அவர்கள் பெற்ற பொருள்கள் அழிந்தாலும் வள்ளல்களின் புகழ் மாய்வதில்லை. புலவர்களுக்கு ஈந்த ஈகை வள்ளல்களின் பெயரை மங்காமல் வைத்திருக்கிறது. அவர்களின் வரலாற்றைப் புலப்படுத்தும் பாடல்கள் இலக்கியமாக வழங்கி வருகின்றன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த மக்களைப் பற்றிய செய்திகளை அந்தக் காலத்தில் உண்டான நூல்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. அந்த நூல்களை இப்போது சங்க நூல்கள் என்று பெயரிட்டு வழங்குகிறோம். மதுரையில் பாண்டிய மன்னர்களின் ஆதரவு பெற்றுப் பல புலவர்கள் ஒன்றுகூடித் தமிழ் ஆராய்ச்சி செய்தார்கள். புதிய நூல்களை இயற்றினார்கள். தமிழ் நாட்டில் யாரேனும் புதிய நூல் இயற்றினால் அந்தப் புலவர்களிடம் வந்து காட்டி நன்றாக இருந்தால் மதிப்புப் பெற்றார்கள். இத்தகைய செயல்களைப் புலவர்கள் கூடிச் செய்த இடமே தமிழ்ச் சங்கம். பல நூறு ஆண்டுகள் தொடர்ந்து சங்கம் நடந்து வந்தது. அந்தக் காலத்தில் வாழ்ந்த புலவர்கள் பாடிய பாடல்கள் யாவும் இப்போது கிடைக்கவில்லை. கிடைத்தவற்றை யெல்லாம் பிற்காலத்தில் வந்த மன்னர்கள், புலவர்களைக் கொண்டு சேர்த்து ஒழுங்குபடுத்தச் செய்தார்கள். புலவர்கள் தொகுத்ததளால் அந்தப் பாடல்களின் கூட்டத்தைத் தொகை என்று சொன்னர்கள். பாட்டின் வகையைக் கொண்டும், பொருளைக் கொண்டும், அளவைக் கொண்டும் சில சில நூல்களாகப் பிரித்தார்கள். அவற்றில் பத்துப்பாட்டு என்பது ஒன்று. அந்தத் தொகை நூலில் பத்து நீண்ட பாடல்கள் இருக்கின்றன. அதனோடு எட்டு வேறு நூல்கள் உள்ளன. அவற்றை எட்டுத் தொகை என்பார்கள். ஒவ்வொரு தொகையும் பல பாடல்கள் சேர்ந்த தொகுதி. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்ற எட்டும் எட்டுத்தொகையாகும்.

அந்த நூல்களில் நூற்றுக்கணக்கான புலவர்களின் பாடல்கள் இருக்கின்றன. எத்தனையோ கொடையாளிகளின் வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. பல மன்னர்கள், வீரர்கள், பெரியவர்கள் முதலியவர்களைப் பற்றிய செய்திகளையும் அறிந்துகொள்ள முடிகிறது.

கொடையாளிகள் பலரைப் புலவர்கள் பாடியிருக்கிறார்கள். யாவருமே வள்ளல்களானலும் அவர்களுக்குள் ஏழு பேரை மிகச் சிறந்த வள்ளல்கள் என்று பாராட்டியிருக்கிருர்கள். அதனால் ஏழு வள்ளல்கள். என்று ஒரு கணக்கே ஏற்பட்டுவிட்டது.

பாரி, பேகன், அதிகமான், காரி, ஓரி, ஆய், நள்ளி என்ற ஏழு பேர்களையும் எழு பெரு வள்ளல்கள் என்று புலவர்கள் போற்றுகிறார்கள். இவர்கள் தமிழ்நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து புகழ் பெற்றவர்கள். இவர்கள் யாவரும் சிறிய நாடுகளுக்குத் தலைவர்களாக இருந்தவர்கள்; குறுநில மன்னர்கள்; சில காலத்துக்கு முன்வரையில் சமீன்தார்கள் என்று பலர் இருந்தார்களே, அவர்களைப் போன்றவர்கள். சேர சோழ பாண்டியர்கள் என்னும் மூன்று அரசர்களும் முடியை அணியும் பெரிய மன்னர்கள். அவர்களை முடியுடை மன்னர்கள் என்று சொல்வது வழக்கம். அவர்களின் கீழ்ப் பல சிறு அரசர்களும் நாட்டுத் தலைவர்களும் அங்கங்கே இருந்தார்கள்; தனியாகவும் இருந்தார்கள். குறுநில மன்னர்கள், வேளிர் என்று அவர்களைச் சொல்வார்கள். ஏழு வள்ளல்களும் அத்தகைய சிறிய தலைவர்களே. அவர்களுடைய ஆட்சியில் பெரிய நாடுகள் இருக்கவில்லை; ஆனாலும் தம்முடைய கொடையினால் அவர்கள் புலவர்கள் உள்ளத்தைக் கவர்ந்தார்கள். பல பெரிய மன்னர்களும் சக்கரவர்த்திகளும் பெறாத பெரும் புகழை அவர்கள் அடைந்திருக்கிறார்கள்.

அவர்கள் வரலாற்றை நாம் தெரிந்துகொள்வது இன்றியமையாதது. தம் நலனுக்காக வாழாமல் பிறருக்கு நலம் செய்வதற்காக வாழ்ந்த பெருமக்களைக் கடவுளுக்கு ஒப்பாக மதிப்பது தமிழ்நாடு. ஆதலின் அந்த வள்ளல்களுடைய புகழ்க்குரிய செயல்களைத் தெரிந்துகொள்வதனால் நாம் பெருமை அடையலாம். இனி ஒவ்வொருவராக நாம் தெரிந்துகொள்ளலாம்.

License

ஏழு வள்ளல்கள் Copyright © by கி வ ஜெகநாதன். All Rights Reserved.

Share This Book